டயரி எழுதலையோ டயரி!

பிளாக் எழுதுவது, கிட்டத்தட்ட டயரி எழுதுவது போன்றதுதான். என்ன ஒன்று... இதுஎல்லோரையும் படிக்க அனுமதிக்கும் டயரி!

தவிர, தினம் தினம் எழுதவேண்டாம்; தினம் தினம் நடப்பவற்றையெல்லாம் பதியவேண்டாம். மனசுக்குத் தோன்றுகிறபோது, தோன்றுகிற விஷயத்தை எழுதி வைக்கலாம். இதனாலெல்லாம்தான் டயரி எழுதுவதை விட, பிளாக் எழுதுவது எனக்குச் சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நான் என் பள்ளிப் பருவத்திலேயே டயரி எழுதத் தொடங்கிவிட்டேன். பள்ளியில் செய்த குறும்பு, வாத்தியாரிடம் அடி வாங்கியது இவற்றையெல்லாம் என் டயரியில் எழுதி வைப்பேன்.

நான் டயரி எழுத ஆர்வப்பட்டதற்குக் காரணம், சிறு வயதில் நான் படித்த துப்பறியும் கதைகள்தான். எல்லாத் துப்பறியும் கதைகளிலும், காவல்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிடும் டயரிகள், சி.ஐ.டி-க்களின் கழுகுப் பார்வையில் மட்டும் வசமாகச் சிக்கிவிடும். போலீஸ், துப்பாக்கி, கத்தி, ரத்தம், பிரைவேட் டிடெக்டிவ் இல்லாமல் துப்பறியும் கதை வந்தாலும் வரும்; டயரி இல்லாமல் வராது! (நல்ல கதையாக இருக்கிறதே... டயரி இல்லையென்றால் அப்புறம் எப்படித் துப்பு கண்டுபிடிப்பதாம்!)

விளிம்புகளில் ஆரஞ்சு வண்ணம் பூசிய அரு.ராமநாதனின் பிரேமா பிரசுர புத்தகங்கள் பலவற்றை நான் என் பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறேன். முக்கியமாக மேதாவி, சந்திரமோகன் எழுதிய நாவல்களை மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன். கல்லறைக்கு வெளியே நீண்ட கை, இறந்தவன் பேசுகிறேன் போன்று தலைப்புகளே மிரட்டும். எல்லாக் கதைகளிலும் ரிவால்வரும் டயரியும் கட்டாயம் இடம்பெறும். யாராவது யாரையாவது கொலை பண்ணியே தீருவார்கள் - இன்றைய மெகா சீரியல்கள் போல! மலைப்பாங்கான இடத்தில் பிளைமவுத் கார் பறக்கும். எந்தவொரு பங்களாவும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு பட்டனைத் தட்டினால் பெரிய சைஸ் வட்டப் படுக்கை மெதுவாகச் சுழலும். பங்களாவுக்குள் பெரிய ஹால் நடுவில் நீச்சல் குளம் இருக்கும். தேடப்படும் பணக்காரக் குற்றவாளி அந்த நீச்சல் குளத்துக்குள் இறங்கி, உள்ளே ரகசிய அறையைத் திறந்துகொண்டு, பங்களா தோட்டத்தில் உள்ள ரகசியக் கதவு வழியாக வெளியேறிவிடுவான். அவன் வெளியேறும் கதவின் மேல் புறம் செயற்கைப் புல் பதித்து, தோட்டத்துப் புல்தரையோடு ஐக்கியமாகி, ஒரு ஈ எறும்பால் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும். கடைசியில், நீள நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு மூச்சிரைக்க போலீஸ் நாய் வந்து, குறிப்பிட்ட இடத்தைக் கால்களால் பிறாண்டிக் காட்டிக் கொடுக்கும்.

ஆயிரம் இருந்தாலும், துப்பறியும் கதைகளில் என்னை ஏனோ கவர்ந்தது டயரிகள்தான். துப்பறியும் கதைகள் அல்லாது, நான் படித்த இதர சிறுகதைகள், தொடர்கதைகளிலும் அவ்வப்போது டயரிகள் இடம்பெறுவது உண்டு. பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகிதான் டயரி எழுதுவார்கள். அல்லது, யாராவது சினிமா நடிகை டயரி எழுதுவாள். வயசாளிகள் யாரும் டயரி எழுதமாட்டார்கள்.

அதேபோல், டயரி எழுதுகிறவர்கள் எல்லாரும் பணக்காரர்களாக இருப்பார்கள்; ஏழை டயரி எழுதியதாக நான் படித்தது இல்லை. இளம் வயதினரின் டயரிகளில் புதுக் கவிதைகள் இடம்பெறும்; எல்லாப் புதுக் கவிதைகளும் காதலைச் சொல்லும்.

நானும் டயரி எழுதவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது கதைமாந்தர் எழுதிய டயரிகள்தான். நிஜத்தில் டயரி எழுதியவர் யாரையும் நான் சந்தித்தது இல்லை. அல்லது, அவர் டயரி எழுதுவது எனக்குத் தெரியாமல் இருக்கலாம். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எழுதுவதுதானே டயரி?

'யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை நான் பாதுகாத்து வருகிறேன்' என்கிற த்ரில்தான் டயரி எழுதுவதில் உள்ள சுவாரஸ்யம். ஆனால், டயரி எழுதவேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு, அப்படியான விஷயங்கள் எழுதக் கிடைக்கவே இல்லை. தினம் தினம் பள்ளிக்குப் போவதும், பாடம் படிப்பதும், வீடு திரும்பி வீட்டுப் பாடம் எழுதுவதையுமே டயரி என்கிற பெயரில் எத்தனை நாள் எழுதிக்கொண்டு இருப்பது? அதிகபட்சம் தொடர்ந்து ஒரு மாதம் எழுதுவேன். அப்புறம் இரண்டு நாளைக்கொரு முறை, நாலு நாளைக்கொரு முறையாக அடுத்த ஒரு மாதம் எழுதுவேன். மார்ச் மாதம் முதல் வாரத்தோடு என் டயரிக் குறிப்புகள் முடிந்துபோகும். அப்புறம் கண்டிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தம்புது டயரியில், 'இந்த ஆண்டு முழுவதும் விடாமல் டயரி எழுதுவேன்' என்கிற புத்தாண்டுத் தீர்மானத்தோடு டயரி எழுதும் படலம் ஆரம்பமாகும்.

இப்படியாக நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து, அதாவது 1972-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு 2008 வரை... சொன்னால் சிரிப்பீர்கள், என்னிடம் முதல் ஓரிரண்டு மாதங்கள் மட்டுமே எழுதப்பட்ட டயரிகள் 36 உள்ளன.

சாப்பிடுவது, படிப்பது, தூங்குவது தவிர வேறொன்றும் அறியாத மாணவப் பருவத்தில் வேண்டுமானால் டயரி எழுத விஷயம் கிடைக்காமல் இருக்கலாம்; பத்திரிகை ஆபீஸ் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுமா அப்படி என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. சாவியில் வேலைக்குச் சேர்ந்த பின்பு எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்திருக்கின்றன! பின்னே ஏன் அவற்றை எழுதி வைக்கவில்லை?

காரணம், குறிப்பிட்ட அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில், அவை எதுவும் முக்கியமானவையாக, சுவாரஸ்யம் நிரம்பியவையாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. நிகழ்காலத்தைவிட கடந்த கால நினைவுகளில் மூழ்கி எழுவதுதான் இனிமையானது. அதனால்தான் கடந்த காலத்தில் நாம் பட்ட அவமானங்கள்கூட சுவையாக இருக்கின்றன. பழைய சம்பவங்களை நினைவுகூர்வதைத்தானே 'மலரும் நினைவுகள்' என்று சொல்கிறோம்?

அப்படிப் பார்த்தால், பத்திரிகைப் பணியில் மட்டுமல்ல; பள்ளிப் பருவத்திலும் எனக்குப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழாசிரியருடன் வெளியூருக்குச் சென்று, பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கியது; ஒருமுறை எங்கள் வீட்டிலிருந்து பர்ஸ் திருடிக்கொண்டு போன கிராம முன்சீப்பின் பையனைப் பற்றி வகுப்பில் நான் மற்ற மாணவர்களிடம் சொல்லிவிட, அந்தப் பையன் மறுநாள் தன் அப்பாவையும் இன்னும் பலரையும் அழைத்துக்கொண்டு என் அப்பாவிடம் சண்டைக்கு வரப்போவதாகச் சொல்லி என்னை மிரட்டியது; அப்போது விழுப்புரத்தில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த நான் ராத்திரி பூரா தூக்கம் வராமல், நடுராத்திரி 12 மணிக்குத் தன்னந்தனியாக இருட்டில் எழுந்து போய் என் தமிழாசிரியர் அ.க.முனிசாமியின் வீட்டுக் கதவைத் தட்டி அவரை எழுப்பி, விஷயத்தைச் சொல்லி அழுதது; அவர் என் மீது பரிதாபம் கொண்டு, 'எவன் அவன்? தொலைச்சுப்புடறேன் அவனை! பயப்படாதே. தைரியமாப் போ!' என்று எனக்கு ஆறுதல் சொல்லி, தன் பையனைத் துணைக்கு அனுப்பி, என்னை வீடு வரை கொண்டு விடச் செய்தது;

என் சீனியர் ஒருவன் என்னிடம் ஒரு கவரைக் கொடுத்து, அதை எங்கள் பள்ளியிலேயே மிக அழகாக இருந்த சுஜாதா என்ற பெண்ணிடம் கொடுக்கச் சொன்னபோது, நானும் அது என்னவாக இருக்கும் என்கிற யோசனையே இல்லாமல் கொண்டுபோய்க் கொடுக்க, அதை அந்தப் பெண் அங்கேயே பிரித்துப் படித்து 'ஓ'வென்று கூச்சல் இட்டு, தன் பெற்றோரிடம் சொல்லி, ஸ்கூலை விட்டே என்னை டிஸ்மிஸ் செய்வதற்காக அழைத்து வந்தது; தலைமை ஆசிரியர் டேவிட்ராஜ், தமிழ் ஆசிரியர் முனிசாமி, கணித ஆசிரியர் ராஜாப்பிள்ளை மூவரும் எனக்கு சப்போர்ட்டாக நின்று, 'ரவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கமாட்டான். ரொம்ப நல்ல பிள்ளை அவன்' என்று எனக்காக வாதாடியது; விசாரணையில் நான் அந்த சீனியர் மாணவனின் மிரட்டலுக்குப் பயந்து, அந்தக் காதல் கடிதத்தைக் கொடுக்கச் சொன்னது அவன்தான் என்று காட்டிக்கொடுக்காமல் இருந்தது;

என் அப்பாவிடம் சண்டைக்கு வரப்போவதாகச் சொன்ன கிராம முன்சீப்பின் மகன் முரளிதரன் அப்படி வராததோடு, அடுத்த சில நாட்களில் தன் வீட்டிலேயே நிறையப் பணத்தைத் திருடிக்கொண்டு, வீட்டை விட்டு எங்கோ கண்காணாமல் ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டது; இரண்டு மாதமாக அவன் ஸ்கூலுக்கு வராததால் அவன் பெயரை அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் இருந்து நீக்கியது; என் கையெழுத்து அழகாக இருக்கும் என்பதால், வகுப்பு ஆசிரியர் உத்தரவுப்படி மாதாமாதம் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் நான்தான் பெயர்களை எழுதித் தருவேன் என்பதால், முரளிதரன் பெயரை அடித்தபோது உள்ளூர சந்தோஷப்பட்டது; பெண்களின் பெயர்களை மட்டும் சிவப்பு மையில் எழுதும்போது இனம்புரியாத சந்தோஷம் உண்டானது; 'என் பெயரை அழகா எழுதுடா ரவி!' என்று அந்தப் பெண்கள் என்னிடம் கெஞ்சியது;

எனக்கு நன்றாகப் படமும் வரைய வரும் என்பதால், ஓவிய ஆசிரியர் தனது 'நோட்ஸ் ஆஃப் லெஸன்' நோட்டில் என்னைப் படங்கள் வரைந்து தரச் சொன்னது; எனக்கு முழுப்பரீட்சை நடந்துகொண்டு இருந்த சமயம், விழுப்புரத்துக்குப் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி, திருவண்ணாமலை போகும் சாலையிலிருந்து ஒதுங்கி ஒத்தையடிப்பாதையாக இரண்டு மைல்களை நடந்தே அடையவேண்டியிருந்த அதனூர் என்கிற கிராமத்தில் ஆசிரியராக இருந்த என் அப்பா, அங்கே பள்ளிக்கு எதிரே இருந்த மைதானத்தில் மேடை போட்டு பள்ளி மாணவர்களை வைத்தே டிராமா போட ஆயத்தமாக, அதில் கதாநாயகனாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்கவேண்டிய என்னை, அப்பாவின் கிராமத்துப் பள்ளிப் பையன் ஒருவன் என் பரீட்சை முடியும் வரை காத்திருந்து, மாலை ஐந்து மணி சுமாருக்கு வியர்க்க விறுவிறுக்க சைக்கிள் கேரியரில் என்னை வைத்து விழுப்புரத்திலிருந்து மிதித்துக்கொண்டு போனது; அங்கே போனதும் அவசர அவசரமாக மேக்கப் போட்டு டிராமா நல்லபடியாக நடந்து முடிய, ஊர்ப்பெரியவர் (நாட்டாமை மாதிரி ஒரு பெரிய மனிதர்) மேடை ஏறி வந்து மைக் பிடித்து என் நடிப்புத் திறமையைத் தனது கிராமத்துப் பேச்சுமொழியில் பாராட்டி, என் அப்பாவிடம் ஒரு சின்ன மூட்டை முழு வேர்க்கடலைப் பயிறை தனது பரிசாகக் கொடுத்தது;

ஒரு முறை மாமாவின் வீட்டில் எதற்காகவோ கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என்று முடிவு கட்டி, துணைக்கு ஹான்சன் சௌந்திரபாண்டியன் என்கிற சக தோழனையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, திருட்டு ரயில் ஏறிவிடும் உத்தேசத்தில், பள்ளி விட்டதும் வீட்டுக்கு வராமல் இருவருமாக விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனது; அங்கே எந்த ரயிலும் இல்லாமல் காலியான பிளாட்பாரத்தில் சுற்றிக்கொண்டு இருந்தபோது, அங்கே டி.டி.ஆராக இருந்த ஹான்சனின் உறவினர் ஒருவர் எங்களை மடக்கி, அதட்டி, 'இங்கே என்ன சுத்திட்டிருக்கீங்க? ஒழுங்கா வீட்டுக்குப் போங்க' என்று விரட்டி அனுப்பியது;

விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோயிலுக்கு என் அபிமான பாடகர் டி.எம்.எஸ். அவர்கள் கச்சேரி செய்ய வருகிறார் என்று கேள்விப்பட்டுப் போய், முண்டியடித்துக்கொண்டு முன்வரிசையில் இடம்பிடித்தது; 'எம்.ஜி.ஆர் பாட்டுதான் பாடணும், சிவாஜி பாட்டுதான் பாடணும்' என்று இரண்டு ரசிகர்களுக்குள்ளும் அடிதடி எழுந்து, டி.எம்.எஸ். மூட் அவுட் ஆகிப் பாதியிலேயே கிளம்பிவிட, ரகளையாகி எக்கச்சக்கமான கூட்டத்தில் நான் அடிபட்டு, மிதிபட்டு 'இன்னிக்குச் செத்தோம்' என்கிற அளவுக்கு உயிர்பயத்தில் மிரண்டது...

இப்படியாக என் பள்ளி வாழ்க்கையிலும் பல நிகழ்ச்சிகள் டயரியில் எழுதிவைக்கத் தோதாக நடந்திருக்கின்றன.

ஆனால், முன்பே சொன்னது போல, அவை எதுவும் அந்தச் சமயத்தில் முக்கியமானதாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. அவ்வளவு ஏன்... பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு, கட்டுரை, தனி நடிப்புப் போட்டிகளில் பெருந்தலைவர் காமராஜர் கையால் (அவர் அப்போது தமிழக முதலமைச்சராக இல்லை) புத்தகங்களைப் பரிசாகப் பெற்றபோது, அவர் அருமை தெரியாதவனாக அல்லவா இருந்தேன்! அதனூர் கிராமத்தில் வேர்க்கடலை பரிசாகக் கொடுத்த கிராமத்துப் பெரியவருக்கும் காமராஜருக்கும் இடையில் அப்போது எனக்குப் பெரிய வித்தியாசம் எதுவும் தோன்றவில்லை.

சமீபத்தில் என் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டிக்கொண்டு இருந்தேன், ஏதாவது முக்கியமான விஷயம் அகப்படுகிறதா என்று. தொடர்ந்து ஒழுங்காக எழுதியிருந்தால் நிச்சயம் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்திருக்கும் - காமராஜரிடம் பரிசு வாங்கிய சம்பவம் போன்று! நான்தான் எந்த வருடமும் முதல் இரண்டு மாதங்களுக்கு மேல் எழுதவில்லையே!

1977-ஆம் ஆண்டு டயரியில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. (டயரி, டயரி என்று இங்கே நான் சொல்லுவதெல்லாம் உசத்தியான பிரின்ட்டட் டயரி அல்ல; நானே ஒரு 200 பக்க நோட்டில் மாதம், தேதியிட்டு எழுதி வைத்த குறிப்புகள்.) அது அத்தனை முக்கியமானது இல்லை என்றாலும், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

அது அடுத்த பதிவில்!

(சில ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் 'ஏடாகூடம்' என்னும் தலைப்பில் நான் ஒரு பிளாக் எழுதி வந்தேன். அப்புறம், வழக்கம் போல் சுவாரசியம் குறைந்து பிளாக் எழுதுவதை நிறுத்தியதோடு, பிளாகையும் க்ளோஸ் செய்துவிட்டேன். 'ஏடாகூடம்' பிளாகில் நான் இட்டிருந்த முதல் பதிவின் மறு பதிப்புதான் இது. பதிவு இன்னும் முடியவில்லை. அடுத்த பதிவில் தொடரும்.)

***
சொன்ன வார்த்தைகள் உனக்கு எஜமான்; சொல்லாத வார்த்தைகளுக்கு நீ எஜமான்!
.

8 comments:

இனியவன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

டைரி பற்றிய உங்கள் டைரிக்குறிப்புகள் அருமை.. இளமைக்கே உரிய பயம், துடிப்பு, , எவ்வித பாசங்கும் இன்றி வெளிவரும் திறமை இவைகளின் சுகம் பின்னர் எப்பொழுதும் கிடைக்காது...

venkat said...

//பதிவு இன்னும் முடியவில்லை. அடுத்த பதிவில் தொடரும்.\\

வாழ்த்துக்கள் .

shafi said...

மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள், நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

/அப்புறம் கண்டிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தம்புது டயரியில், 'இந்த ஆண்டு முழுவதும் விடாமல் டயரி எழுதுவேன்' என்கிற புத்தாண்டுத் தீர்மானத்தோடு டயரி எழுதும் படலம் ஆரம்பமாகும்./
நான் கூட இப்படி இருந்ததுண்டு! நீங்கள் சொல்லிய அத்தனையையும் வைத்து ஒரு வருட blog பக்கங்களை எழுதி விடலாம்!!!ஏடாகூடம் என்ற வார்த்தை நிரம்பப் பிடிக்குமா?போட்டி ஒன்றுக்குப் பரிசாக அனுப்பிய ஏடாகூடக் கதைகள் படித்து அதிசயித்தேன்!ஒவ்வொரு கதையிலும் ஒரு ஏடாகூடம்!!!பூங்கொத்து!

கணேஷ் ராஜா said...

உங்கள் டயரிக் குறிப்புகள் அருமை. பழைய விஷயங்களை அசை போட்டுப் பார்ப்பதில்தான் எத்தனை ஆனந்தம்..! எத்தனை த்ரில்..! இதன் தொடர்ச்சிப் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

யாவரும் கேளிர் said...

நண்பரே...இது தொடர்பான பதிவொன்றை என்னுடைய வலைப்பூ வில் எழுதியுள்ளேன்...நேரம் கிடைக்கும் போது படிக்கவும்

கிருபாநந்தினி said...

டயரி பத்தி ‘என் டயரி’ல எழுதினதும் பொருத்தம்தான்! அந்தப் பழைய ‘ஏடாகூடம்’ பிளாகைப் புதுப்பிக்க முடியும்னு நினைக்கிறேன். முடிஞ்சா அதையும் திரும்பக் கொண்டு வாங்க ரவி சார்! அல்லது, அதுல இது மாதிரி சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தா மறுபதிப்பு போடுங்க.