வாகனப் பிராப்திரஸ்து!

சைக்கிளைத் தவிர வேறு வாகனம் செலுத்தத் தெரியாதவன் நான். சொல்லிக் கொள்ளக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உண்மை அதுதானே!

ஆனந்த விகடனில் சேர்ந்த புதிதில் எல்லாம் சக நண்பர்கள் என்னை, “ஏன் சார் பஸ்ல வந்துட்டிருக்கீங்க? ஒரு டூ வீலர் வாங்குறதுதானே?” என்று அக்கறையுடன் கேட்பார்கள். டூ வீலர் வைத்திருந்தால் பெட்ரோல் அலவன்ஸ் உண்டு. பஸ்ஸுக்குச் செலவழிக்கும் பைசா மிச்சமாகும் (மாசம் சுமார் 500 ரூபாய் வரை; இப்போது இன்னும் அதிகம் கூட மிச்சமாகலாம்!).

ஆனாலும், நான் எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது என்கிற உண்மையை வெளிக்காட்டாமல், கெத்தாக அவர்களிடம், “ஐயே! டூ வீலர் வெச்சிருந்தா பெரிய தலைவலி சார்! அன்னிக்குப் பார்க்கிறேன், ஜெமினி ஃப்ளை ஓவர் மேல டிராஃபிக் ஜாம். இருபது நிமிஷமா வண்டிகள் நகரலே. கார்த்தால பத்து மணிக்கு வெயில் அடி பொளக்குது. நான் சுகமா பஸ்ஸுக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டு, கூலா புஸ்தகம் படிச்சுக்கிட்டிருக்கேன். ஜன்னல் வழியா பார்த்தா ஆம்பிளைங்க, பொம்பிளைங்க, வயசானவங்க, காலேஜ் பொண்ணுங்கன்னு சுட்டுப் பொசுக்குற வெயில்ல தலையில கர்ச்சீப் கட்டிக்கிட்டு, துப்பட்டாவால போர்த்திக்கிட்டெல்லாம் பாவமா கருகிக்கிட்டு நிக்குறாங்க. வேணாம் சார் எனக்கு இந்த அவதி. வீட்டுக் கிட்டேயே பஸ் ஸ்டாண்ட். ஏறி, சௌகரியமா ஜன்னலோரம் இடம் பிடிச்சு உட்கார்ந்தேன்னா, நேரே ஆபீஸ் வாசல்ல வந்து இறங்கப் போறேன். எனக்கு எதுக்கு டூ வீலர்? அதெல்லாம் நாலு இடம் போய் வர்ற ரிப்போர்ட்டர்களுக்கும் காமிராமேன்களுக்கும் வேணா அவசியமா இருக்கலாம். எனக்குத் தேவையில்லை” என்று மிதப்பலாகப் பதில் சொல்வேன். அவர்களும் அதை நம்பிவிட்டார்கள் என்றுதான் தோன்றியது.

உண்மையில், சென்னை டிராஃபிக்கில் டூ வீலர் ஓட்ட எனக்குப் பயமான பயம். காரணம், பஸ்ஸில் போய் வரும்போது தினம் ஒரு முட்டல் மோதல் தகராறையும், வாரம் ஒரு ஆக்ஸிடெண்ட்டையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன்! தவிர, என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் டிராப் செய்யும் சக நண்பர்கள் சிலரது டூ வீலரில் பின்னால் உட்கார்ந்திருக்கும்போது, இவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் வீட்டில் சேர்க்க வேண்டுமே என்று எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்தது, வண்டியை அவர்கள் செலுத்திய விதம்.

விகடனில் என்னோடு பணியாற்றிய மூவர், பைக் ஆக்ஸிடெண்ட்டில் மண்டை சிதறி இறந்ததும் ஒரு முக்கியக் காரணம், நான் டூ வீலர் வாங்க பயப்பட்டதற்கு!

சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், சைக்கிளில்தான் தினமும் அலுவலகம் போய் வருவேன். அங்கே மேனேஜராகப் பணியாற்றிய துரைக்கும், விளம்பர மேலாளராகப் பணியாற்றிய சீனிவாசகமணிக்கும் (இவர்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக இதழை நடத்தி வருகிறார்) அலுவலக உபயோகத்துக்காக யமஹா பைக் வாங்கித் தந்தார் சாவி சார். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாததால், நான் பைக் வேண்டாம் என்று மறுத்து, தொடர்ந்து சைக்கிளிலேயே போய் வந்துகொண்டு இருந்தேன். சாவி சார் என்ன நினைத்தாரோ, ‘மோஃபா’ என்றொரு வாகனத்தை வாங்கி, எனக்கே எனக்கென்று வைத்துக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தார்.

சைக்கிள் போன்ற சின்ன வாகனம் அது. பெட்ரோலில் ஓடுவது. டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. கியர் கிடையாது. ஸ்டார்ட் செய்து ஏறி உட்கார்ந்தால், அதிக பட்சம் 30 கி.மீ. வேகத்தில் தேமே என்று போய்க்கொண்டே இருக்கலாம். வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டாலும், கவலையில்லை. சைக்கிள் போல் சுலபமாக மிதித்து ஓட்டிக்கொண்டு போய்விடலாம். அப்போது அதன் விலை வெறும் 3,000 ரூபாய்தான்! (யமஹா பைக் விலை அப்போது ரூ.20,000-க்குள்!) அதில்தான் நான் சாவி அலுவலகத்துக்கு ஓரிரு ஆண்டுகள் போய் வந்தேன். எனக்கு ரொம்பச் சௌகரியமாக இருந்தது அந்த வாகனம். அப்புறம், சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு ஒருமுறை வேலையை விட்டு நின்றபோது, அந்த வாகனத்தை சாவி ஆபீஸிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். பின்னர் சில மாதங்கள் கழித்துப் போய்ச் சேர்ந்தபோது, அதை மகன் பாச்சாவிடம் பணியாற்றுபவருக்கோ அல்லது வேறு யாருக்கோ கொடுத்துவிட்டிருந்தார் சாவி சார். நானும் அதன்பின் டூ வீலர் பற்றிக் கேட்கவில்லை.

‘மோஃபா’ மாதிரியே அந்நாளில் ‘சன்னி’ என்றொரு வாகனம் வந்தது. இரண்டு சக்கரங்களும், மோட்டாரும் உள்ள மிக மிக சிம்பிளான வாகனம். இதற்கும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. இதன் விலையும் ரொம்பக் குறைவு. ஆனால், அதை வாங்கும் அளவுக்குக்கூட எனக்கு அப்போது பண வசதி இல்லை.

சரி, நான்தான் அப்படி இருந்தேன் என்றால், என் வாரிசுகளையும் அப்படியே வளர்ப்பதா? என் மகள் கல்லூரிக்குப் போகத் தொடங்கிவிட்டாள். மகனும் இரண்டொரு ஆண்டுகளில் கல்லூரி போகத் தொடங்கிவிடுவான். ‘என்னை மாதிரியே பஸ்ஸில் போய் வா’ என்று அவர்களைச் சொல்ல முடியுமா? பஸ்ஸில் போய் வருவது ஒன்றும் தப்பில்லை. ஆனால், காலத்துக்கேற்ப கிடைக்கும் சௌகரியங்களை அனுபவிப்பதில், கற்றுக் கொள்வதில் ஒன்றும் ஆட்சேபணையில்லையே?

எனவே, மூன்று மாதங்களுக்கு முன்பு, என் மகளுக்காக ஸ்கூட்டி ஸ்ட்ரீக் வண்டி ஒன்று வாங்கினேன். என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக வாங்கும் டூ வீலர். அவளுக்கு அதை ஓட்டப் பயிற்சியளித்து, இந்த ஆண்டு இல்லையென்றாலும், அடுத்த ஆண்டிலாவது அவளே அதை கல்லூரிக்கு ஓட்டிச் செல்லவேண்டும் என்பது என் நோக்கம். அதற்கு முன்பு, வண்டியை மிகச் சரளமாகக் கையாள அவள் பழக வேண்டும் என்பதற்காகவே, உடனே டூ வீலர் வாங்கிவிட்டேன்.

சரி, அவள் அதை ஓட்டக் கற்பது ஒருபுறம் இருக்கட்டும்; மற்ற நேரங்களில் வண்டி, வீட்டில் சும்மா இருப்பதா? நான் ஓட்டத் தொடங்கிவிட்டேன்.

வண்டியை டெலிவரி எடுக்கும்போது நண்பர் ராஜாவும் கூட வந்தார். “வண்டி ஓட்டுவீங்க இல்லே?” என்று சந்தேகத்தோடு கேட்டார். அப்போதும் உண்மையைச் சொல்லாமல், “ஓட்டுவேன். பழக்கம் விட்டுப் போச்சு. வேற ஒண்ணுமில்லே! இதை எப்படி ஓட்டணும்?” என்று அவரிடம் கேட்டேன். இங்கே சாவி போடணும், இப்படி ஸ்டார்ட் பண்ணணும், இப்படி ஆக்ஸிலரேட்டரை முறுக்கணும், இது பிரேக் என்று சொல்லிக் கொடுத்தார். ‘ப்பூ... இவ்வளவுதானே!’ என்று திருகியதுதான் தாமதம், வண்டி விலுக்கென்று முன்னால் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போனாலும், பிரேக் பிடித்துச் சமாளித்துவிட்டேன்.

“என்ன, பத்திரமா வீடு வரைக்கும் போய்ச் சேருவீங்களா?” என்றார் ராஜா, பயத்துடன். “அதெல்லாம் தாராளமா போயிடுவேன். என்ன, கொஞ்சம் டச் விட்டுப் போயிடுச்சு. அதான்...” என்று சமாளித்துவிட்டு, விடைபெற்று, வண்டியைச் செலுத்தத் தொடங்கினேன்.

என் வாழ்க்கையிலேயே முதன்முதலாக, இந்த 52 வயதில், டூ வீலரை நான் ஓட்டத் தொடங்கிய முதல் நாளிலேயே, இரவில் ஹெட் லைட் போட்டுக்கொண்டு, திருப்பங்களில் சிக்னல் விளக்குகளை எரியவிட்டு, அணைத்து, நல்ல டிராஃபிக்கில் செலுத்த நேர்ந்தது என் அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. பத்திரமாக வீடு வந்து சேருவதற்குள், மனசுக்குள் உதறலாகத்தான் இருந்தது.

அடுத்த இரண்டு மூன்று நாட்களிலும் வண்டியை அலுவலகம் எடுத்துப் போய் வந்தேன். நாலாம் நாளிலிருந்து வண்டி ஓட்டுவது கொஞ்சம் பழகி, மன உதறல் நின்றுவிட்டது. இருந்தாலும், தெளிவாக ஓட்டுகிறேனா, கான்ஃபிடெண்ட்டாக ஓட்டுகிறேனா என்பது எனக்கே சந்தேகமாக இருந்தது. சிக்னலில் காலூன்றி நிற்கச் சிரமப்பட்டேன். கால் சரியாக ஊன்றாமல் சறுக்கியது. வேகமாக ஓட்டும்போதுகூடப் பரவாயில்லை; டிராஃபிக்கில் சிக்கி, மெதுவாக ஓட்டும்போதுதான் சிரமமாக இருந்தது.

எப்படியோ... இதோ, மூன்று மாதங்களாக நானும் டூ வீலர் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. முன்னிலும் திருத்தமாகவே ஓட்டுகிறேன். எனக்கே தைரியமும் தன்னம்பிக்கையும் வந்திருக்கிறது. சாலையில் சக டூ வீலர் பயணிகள் பலர் ஓட்டும் அழகைப் பார்க்கும்போது, நான் ரொம்பவே மேல் என்று தோன்றுகிறது. கொட்டும் மழையிலும், மேடு பள்ளங்களிலும், கடுமையான டிராஃபிக் நெரிசலிலும் தெளிவாகவே ஓட்டி வந்திருக்கிறேன். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக என் மகளை உட்கார வைத்து ஓட்டிச் சென்று கல்லூரியில் இறக்கிவிட்டு, அப்படியே என் அலுவலகம் சென்று, மாலையில் கல்லூரிக்குப் போய் அவளையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறேன்.

நான் வண்டி ஓட்டத் தொடங்கிய இந்த மூன்று மாதத்துக்குள்ளாக கோடம்பாக்கம் மேம்பாலத்தில், கே.கே.நகர் நூறடி ரோட்டில், ஜெமினி பிரிட்ஜில், மவுண்ட் ரோடில் எங்கள் அலுவலத்துக்கு அருகில் என ஏழெட்டு ஆக்ஸிடெண்ட்களைப் பார்த்துவிட்டேன். என்றாலும், நான் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பாக எனக்குள் இருந்த பயம் இப்போது இல்லை.

ஏற்கெனவே சைக்கிள் ஓட்டிய அனுபவம் இருப்பதால், டூ வீலர், அதிலும் ஸ்கூட்டி போன்ற சுலபமான வாகனம் ஓட்டுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. ஆனால், வாகன ஓட்டிகள் சில விஷயங்களில் கவனக்குறைவாக இருப்பதால்தான் விபத்துக்கள் நேர்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது எனக்கு, இந்த மூன்று மாத அனுபவத்தில்.

டூ வீலரை சைக்கிள் ஞாபகத்தில் சாய்ந்து காலூன்றி நிறுத்தக்கூடாது. சைக்கிளின் எடை குறைவு. டூ வீலரின் எடையை (95 கிலோ) நம் கால்கள் தாங்காது. அதிலும் ஓட்டி வந்த அதே வேகத்தில் நின்று, காலூன்றி நிற்பது சிரமம். நிற்க வேண்டிய இடத்துக்கு முன்பே வேகத்தைக் குறைத்து மெதுவாக ஓட்டிப் போய், எந்தப் பக்கமும் சாயாமல் இரண்டு பக்கமும் கால்களைத் தரையில் ஊன்றினால், நிற்பது மிகச் சுலபமாக இருக்கிறது.

மெதுவாக ஓட்டுவது பாதுகாப்பு என்று, டூ வீலரில் சைக்கிள் வேகத்தில் போகக்கூடாது. அதுவும் விபத்துக்கு வழிவகுக்கும். அந்தந்த வாகனத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான வேகம் இருக்கிறது. அந்த வேகத்துக்கும், நமது இயல்புக்குத் தோதான ஒரு வேகத்துக்குமான சராசரி வேகத்தை நம் அனுபவத்தில் கண்டுணர்ந்து, அந்த வேகத்தில் சீராகச் செல்வதே சரியானது.

சில குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில் சற்றுக் கூடுதலான வேகத்தில் செல்லவேண்டியிருந்தாலும் தப்பில்லை. ஆனால், தொடர்ந்து அதே வேகத்தில் செல்லாமல், மீண்டும் நமது பழைய சீரான வேகத்துக்குத் திரும்பிவிடுவதே நல்லது.

இடம், வலம் திரும்பும்போது, மறக்காமல் சிக்னல் விளக்கை எரியவிட்டுத் திரும்புவதே நல்லது. பின்னால் வருபவர்கள் அதற்கேற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, நமக்கு வழிவிடுவார்கள்; நம்மைக் கடந்து போவார்கள். நான் சாலையில் காணும் பலர் சிக்னல் விளக்கை எரியவிடாமல் திரும்புவதால்தான், பின்னால் வரும் வாகனங்கள் அவர்களின் மேல் மோதுவது போல் கிட்டே வந்து சுதாரிப்பதை நான் தினமும் காண்கிறேன். அதே போல், திரும்புவதற்குச் சற்று முன்னதாக சிக்னல் விளக்கை எரியவிடுவதே சரி; நாலாவது தெருவில் திரும்புவதற்கு முதல் தெருத் திருப்பத்திலேயே சிக்னல் விளக்கை எரியவிட்டால், பின்னால் வருபவர்களுக்குக் குழப்பம் வரும்.

சரி, போதும்! நிறுத்திக் கொள்கிறேன். மூன்றே மாதங்கள் டூ வீலர் ஓட்டிவிட்டு, இத்தனை உபதேசம் செய்யக்கூடாது!

***
தைரியம் என்பது பயமின்றி இருப்பதல்ல; பயந்த பின், அந்த நிகழ்வை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது!

12 comments:

வடுவூர் குமார் said...

ந‌ன்றாக‌ இருக்கு உங்க‌ அனுப‌வ‌ம்.கியர் வ‌ண்டி முத‌லில் ப‌டுத்தும்,பிற‌கு ப‌ழ‌க்க‌மாகிவிடும்.சென்னைக்குள் ஸ்கூட்டியே போதும்.

பத்மா said...

நல்ல பதிவு சார்..நானும் இதுவரை ஆட்டோவிலே அலுவலகம் சென்று வந்தேன் ..இப்போது மாற்றல் ஆகி உள்ளதால் வண்டி வாங்க முடிவு செய்துள்ளேன் ..எனக்கும் ஓட்ட பயம் . உங்கள் பதிவு ஒரு தைரியத்தை தந்திருக்கிறது ..நன்றி

உங்கள் பொக்கிஷம் தான் என் main விருப்ப பகுதி ஆ வி இல்

ஹுஸைனம்மா said...

/மூன்றே மாதங்கள் டூ வீலர் ஓட்டிவிட்டு, இத்தனை உபதேசம் செய்யக்கூடாது!//

புதுப்பணக்காரன்!!

:-))))

வாழ்த்துகள் தைரியமான முடிவெடுத்தற்கு!!

பத்மநாபன் said...

எதார்த்தமான பதிவு.

வண்டி விஷயத்தில் `` எனக்கும் ஸ்கூட்டர் லிருந்து பைக் மாற்றத்திற்கு தயங்கினேன்.அப்புறம் எடுத்து ஓட்டியபிறகு
```இது இவ்வளவு தானா, இதுக்கு தான் இவ்வளவு தயக்கமா என்ற நிலையில் எளிதாகி விட்டது.

ஈகோவை விட்டு விட்டு
ஒரு சின்ன முயற்சி இருந்தா போதும் அப்புறம் பயிற்சி எடுத்துகிட்டா விமானம் கூட எளிதில் ஓட்டலாம்.

உங்கள் உபதேசங்கள் அப்படியே ஆர்.டி.ஒ அலுவலகத்தில் ஒட்டிவிடலாம்... முன்று மாதத்தில் இவ்வளவா?

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

' அக்கம் பக்கம் பார்க்காதே..ஆளைக் கண்டு மிரளாதே’ என்ற வாத்தியாரின் பாடல் தான் ஞாபகம் வருகிறது..ம்...


அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

butterfly Surya said...

வழக்கம் போல உங்க டயரி எப்பவும் சுவாராசியம் தான்.

புது வண்டி வாங்கியதற்கு டீரிட் இல்லையா சார்..?

விரைவில் வருகிறேன்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

கணேஷ் ராஜா said...

ஹூம்... நான் 30 வருஷங்களாக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதில் எழுதுவதற்கு எதுவும் இருப்பதாக எனக்கு இதுவரை தோன்றவில்லை. ஆனால், மூன்று மாத காலமே வண்டி ஓட்டிவிட்டு, அந்த அனுபவத்தை இத்தனை சுவாரசியமாக எழுத முடியும் என்று மெய்ப்பித்துவிட்டீர்கள். ஆச்சரியம் ப்ளஸ் பாராட்டுக்கள்! மேலும், உங்களின் அனுபவத்தில், வண்டி ஓட்டுவதில் உள்ள இன்னும் பல நுணுக்கங்களையும் பதிவிட்டால், படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பது என் கருத்து.‌‌

Anonymous said...

மொபட்டுக்கு‍ 40 கிமீ, கியர் வண்டிக்கு‍ 50 கிமீ அதிகபட்ச வேகம் என நிர்ணயம் செய்து‍ அதை கம்பெனி கட்டாயம் தங்களுடைய தயாரிப்பில் கொண்டு‍ வரவேண்டும் என சட்டம் போட வேண்டும். மேற்கண்ட வேகத்திற்கு‍ மேல் என்னதான் முறுக்கினாலும் வண்டி‍ ஸ்பீடு‍ எடுக்கக் கூடாது. தவிர ஹெல்மெட் கட்டாயம் என்பதை தயவு தாட்சண்யம் இன்றி நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மண்டை சிதறல் விபத்துகள் நிகழாமல் இருக்கும். வெளிநாடுகளில் மிதிவண்டி‍ ஓட்டுபவர்கள் கூட தலைகவசம் அணிந்திருப்பது‍ கவனிக்கத்தக்கது.
ஜெ. பாபு,
கோவை / 20

Anonymous said...

கட்டுரைப் பிரமாதம். உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது,

ஆமாம் செல்போன் வைத்திருப்பது யார்? அனுஷ்கா, தமன்னா, பாஜ்வா, நேஹா,,...-- ஆர்

Anonymous said...

15 நாளாவா பேசிகிட்டு இருக்கீங்க. பேச்சை முடிச்சிட்டு கிளம்பிப் போனா தான் அடுத்த பதிவு வ்ரும்னு நினக்கிறேன்.. -- ஆர்

Sunitha said...

நல்ல அனுபவம்.படிக்க‌ ரொம்ப interest ஆக இருந்தது

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/