கலைஞரும் நானும்!

யதாகிவிட்டதற்கான அடையாளங்களில் முக்கியமான ஒன்று... சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருப்பது. நம் வயதுக்கு மரியாதை கொடுத்து, எதிராளி பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். நம் தலை மறைந்ததும், பக்கத்தில் உள்ள நண்பரிடம், “இப்ப இவ்வளவு நேரம் சொன்னாரே, இதை நூத்துப் பதினஞ்சாவது தடவையா என் கிட்டே சொல்றார். யப்பா... சரியான பிளேடு!” என்று கேலி செய்வார்.

சாவி சார் அப்படிப் பல முறை, சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னைப் போரடித்திருக்கிறார். அவரின் அனுபவம் மற்றும் வயதை மனதில் கொண்டு, ஒவ்வொரு முறையும் புதிதாக அதை அப்போதுதான் கேட்பது போல், பிரயத்தனப்பட்டு முகத்தையும் குரலையும் சுவாரசியமாக்கிக் கொண்டு கேட்பேன்.

சமீப காலமாக நானும் அப்படி மற்றவர்களிடம் சொன்னதையே சொல்லி அறுக்கிறேனோ, வயது தன் வேலையை என்னிடமும் காட்டத் தொடங்கிவிட்டதோ என்று... ஊஹூம், நான் அதற்குக் கவலைப்படவில்லை; மரியாதை கருதி, மற்றவர்கள் என் அறுவையைத் தாங்கிக்கொண்டு இருக்கிறார்களோ என்றுதான் கவலைப்படுகிறேன்.

நேற்று ஏதோ பழங்குப்பையைக் கிளறிக்கொண்டு இருந்தபோது, யதேச்சையாக மேலே கொடுத்திருக்கும் போட்டோ கிடைத்தது. (கலைஞருக்கு இடப் பக்கத்தில் சாவி சார், வலப் பக்கத்தில் பின்னால் நான்; என் அருகில் கறுப்புப் பேன்ட்டும் சிவப்புச் சட்டையும் அணிந்திருப்பவர் மோகன் - சாவியில் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்; ஓவியர் ஜெயராஜின் சகோதரி மகன்; அவருக்கு அருகில் இருப்பவர் பெயர் ரமேஷ் - சாவி சாரின் மகன் பாச்சா என்கிற பாலசந்திரனின் வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்தவர்; இப்போதும் இங்கேதான் எங்கேயோ அருகில் இருக்கிறார். அடிக்கடி அவரை வழியில் சந்திக்கும்போது, ஒரு புன்சிரிப்போடு குட்மார்னிங் சொல்லிவிட்டுப் போவார். அவர் அருகில் இருக்கும் சிறுவன், சாவி சாரின் பேரன்; சாவி சாரின் இடப் பக்கத்தில் இருப்பவர் பெயர் துரை - சாவி இதழின் மேனேஜராக இருந்தார். துரைக்கு அருகில், சாவி வீட்டு வாட்ச்மேனாகப் பணியாற்றிய சித்திரை, அவருக்கு அருகில் சாவியில் அட்டெண்டராக இருந்த ஃபிரான்சிஸ் - எங்களோடு நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டுவிட்டுக் கிளம்பிய கலைஞர், அப்போதுதான் ஓடி வந்த ஃபிரான்சிஸுக்கு ஏமாற்றம் தர விரும்பாமல், மீண்டும் ஒருமுறை படியேறி வந்து அவரையும் நிற்கச் சொல்லிப் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெருந்தன்மை பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம் ) உடனே, கலைஞர் கருணாநிதியுடனான என் அனுபவங்களையும் எழுதலாமே என்று தோன்றிவிட்டது. இவற்றை முன்பே என் வலைப்பூக்களில் எழுதிவிட்டேனா, இல்லையா என்று ஞாபகம் இல்லை. ஒவ்வொன்றாகத் தேடிப் பார்க்கவும் பொறுமை இல்லை. எனவே, இங்கே அவற்றை எழுத விழைகிறேன்.

சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆர்-தான் முதல்வர். அவரது மறைவுக்குப் பின்பு, அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்ததில், இடையில் சொற்ப காலம் கலைஞருக்கு முதல்வராகும் வாய்ப்பை அளித்தார்கள் மக்கள்.

அப்போது சாவியில் வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்திருந்தோம். ‘அடுத்த முதல்வர் யார்? கலைஞரா, ஜானகியா, ஜெயலலிதாவா? சரியாக ஊகிப்பவர்களில் குலுக்கல் முறையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்துப் புதிய முதல்வர் கையால் மாலை அணிவிக்கப்படும்’ என்பதே அந்தப் போட்டி!

தேர்தல் முடிவு தெரிவதற்குள்ளாகவே, கழுத்தில் பெரிய மாலை அணிந்த கலைஞர் படத்தை வெளியிட்டு, பொதுஜனம் அந்த மாலையை அணிவித்ததுபோல் அட்டையிலேயே ஒரு கார்ட்டூன் படத்தையும் சேர்த்து, முதல்வர் ஆனதற்குப் பாராட்டுத் தலையங்கம் எழுதி, சனிக்கிழமையன்றே அச்சுக்கு அனுப்பிவிட்டோம். சாவி சாருக்கு மகா தைரியம்; அசாத்திய தன்னம்பிக்கை.

திங்கள்கிழமை மாலையில் புத்தகம் ரெடியாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை காலையில் தேர்தல் முடிவு வெளியாகிற வரையில் எனக்குத்தான் பக்... பக் என்றிருந்தது. ஆனால், சாவியோ சற்றும் தளராமல், “சந்தேகமே இல்லாமல் கலைஞர்தான் இந்த முறை முதல்வர். நீ ஏன் வீணா பயந்து சாகறே?” என்று புன்னகையோடு சொன்னார்.

“ஒருவேளை ஜெயலலிதா முதல்வர் ஆகிட்டா, அவங்க எப்படி சார் பத்து வாசகர்களுக்கு மாலை அணிவிக்க ஒப்புக்குவாங்க?” என்று கேட்டேன்.

“கலைஞர்தான் முதல்வர். அவர் ஒப்புக்குவார். நீ பயப்படறது போல ஜெயலலிதா முதல்வர் ஆகிட்டா, அவங்க கிட்டே இந்தப் போட்டி விஷயத்தைச் சொல்லுவோம். அவங்க ஒப்புக்கிட்டா சரி; ஆனா, அவங்க கண்டிப்பா ஒப்புக்கமாட்டாங்க. நாம பத்திரிகையிலே எழுதிடுவோம்... முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தப் போட்டி பற்றிச் சொன்னோம்; அவங்க ஒப்புக்க மறுத்துட்டாங்க. ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவங்க கொடுக்குற மரியாதை இவ்வளவுதான்னு எழுதி, நம்ம வருத்தத்தை வாசகர்கள் கிட்டேயே பகிர்ந்துக்குவோம்!” என்றார்.

ஆனால், சாவி சார் நம்பியபடியேதான் நடந்தது. கலைஞரே முதல்வர் ஆனார். அடுத்து நாரத கான சபாவில் நடந்த ஒரு பெரிய விழாவில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வாசகர்களுக்குக் கலைஞர் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

சில வருடங்களுக்குப் பின்பு ஜெயலலிதா முதல்வராக ஆனார். அவரது ஆட்சியில்தான், சாவி அட்டைப்படத்தில் ஒரு ஜோக் வெளியிட்டதற்காக, படமும் ஜோக்கும் ஆபாசமாக இருந்தது என்று மகளிர் அமைப்புகள் புகார் கொடுத்ததன்பேரில், சாவி சார், நான், பிரஸ் மணி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டோம். இந்தச் சம்பவத்தை விரிவாக முன்பு எழுதிய ஞாபகம்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான், அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில்தான் கலைஞருடன் நெருக்கமாகச் சற்று நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, “என்ன தம்பி, கைதுன்னதும் பயந்துட்டீங்களா? பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம். ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க அய்யாவும் (சாவி) நீங்களும் எந்தப் பிரச்னையும் இல்லாம வெளியே வரலாம். நான் பார்த்துக்கறேன்!” என்றார் கலைஞர், என் தோளில் கைவைத்து ஆறுதல் படுத்தும் விதமாக.

பின்பு, சூழ்நிலையைக் கலகலப்பாக்கும்பொருட்டு, அந்த ஜோக்கை அட்டைப் படத்தில் போட்டது குறித்துப் பேசினார். முதலிரவு அறையில் கணவன் அமர்ந்திருக்க, அவனுக்கு ஒரு சொம்பில் பால் எடுத்து வருகிறாள் மனைவி. அவள் முழு நிர்வாணமாக இருக்கிறாள். அதிர்ச்சியாகிற கணவனைப் பார்த்து, “உங்களுக்கு ஆடையில்லாத பால்தான் பிடிக்கும்னு அம்மா சொன்னாங்க” என்கிறாள். அதுதான் ஜோக்! படத்தில், பெண்ணின் முதுகுப்புறத்தைதான் வரைந்திருந்தார் ஓவியர் ஜெயராஜ்.

ஆசிரியர் சாவி வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், சாவி அட்டைப் படத்தில் நான் வெளியிட்ட ஜோக் இது. மூன்று மாத காலம் அமெரிக்காவில் இருந்துவிட்டு, மேற்படி சாவி இதழ் வெளியான இரண்டாவது நாள், சனிக்கிழமையன்று சென்னைக்கு வந்துவிட்டார் சாவி. அன்றைய தினமே சாயந்திரம் நாங்கள் கைது.

“எனக்குத் தெரியாது. நான் இந்த அட்டைப்படத்திற்குப் பொறுப்பில்லை. என் கவனம் இல்லாமல், நான் ஊரில் இல்லாதபோது சாவி பொறுப்பாசிரியர் செய்த வேலை இது” என்று என்னைக் கழற்றிவிடவில்லை சாவி சார். சாயந்திரம் சாவி சார் வீட்டின் முன் வந்து சாவி இதழ்களைக் கிழித்துப் போட்டு, சாவி சாரை ஏக வசனத்தில் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்த மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்களை உள்ளே அழைத்து, மன்னிப்புக் கேட்டார் சாவி.

“அதெல்லாம் முடியாது! வெளியே வந்து அத்தனை பேரிடமும் மன்னிப்புக் கேள்” என்று வெளியே இருந்தவர்கள் கோஷம் இட்டார்கள். அதன்படி சாவி சார் வெளியே வந்து, “அது ஒரு சாதாரண ஜோக்தான். அதில் எந்த ஆபாசமும் எனக்குத் தெரியவில்லை. வெகுளித்தனமாக உள்ள மனைவியைப் பற்றிய ஜோக் அது. அதில் உள்ள நகைச்சுவைதான் எனக்குப் பட்டது. ஆனால், உங்களுக்கு அது ஆபாசமாகத் தெரிந்தால், உங்கள் மனதை அது புண்படுத்தியிருந்தால், உங்கள் அத்தனை பேரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கைகூப்பி மன்னிப்புக் கேட்டார் சாவி.

பிறகு அவர்கள் கலைந்து சென்றார்கள். இது நடந்தது மாலை 4 மணிக்கு. எங்களைக் கைது செய்து அழைத்துப் போனது 5:30 மணிக்கு. கலைஞர் எங்களை வந்து பார்த்தது இரவு 12:30 மணிக்கு.

முதல்வராக இருந்த சமயத்திலும் சரி, கட்சித் தலைவராக மட்டுமே இருந்த சமயத்திலும் சரி, பலமுறை சாவி சார் வீட்டுக்கு வந்திருக்கிறார் கலைஞர். போனிலும் பலமுறை என்னோடு பேசியிருக்கிறார். சாவி சாரைக் கேட்டு போன் செய்வார். சாவி சார் வந்து பேசும் வரையில், அந்த வார இதழில் உள்ள சிறப்புக்கள், லே-அவுட், தலைப்பை வேறு விதமாக வைத்திருக்கலாம், படத்தை இன்னும் சற்றுச் சின்னதாகப் பிரசுரித்திருக்கலாம் போன்ற ஆலோசனைகளை தன்னுடைய அபிப்ராயமாக என்னிடம் சொல்வார். அத்தனையும் சரியாகவே இருக்கும். இத்தனைப் பணிகளுக்கு நடுவிலும் எப்படி இவரால் ஒரு பத்திரிகையை முழுமையாகப் படித்துக் கருத்துச் சொல்ல முடிகிறது என்று எனக்கு வியப்பாக இருக்கும்.

‘சின்னச் சின்ன சந்தோஷங்கள்’ என்னும் தலைப்பில், வாசகர்களின் விருப்பங்களைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்து சாவியில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். அப்போது பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீப்ரியாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஒரு வாசகர் கேட்டார். கவிஞர் வைரமுத்துவுடன் உரையாடி, ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினார். அந்த வகையில் கலைஞர் கருணாநிதியுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு வாசகர் விரும்பினார். அவர் மாம்பலம் ஸ்டேஷன் ரோடில் படக் கடை வைத்திருந்தார். தீவிர தி.மு.க. தொண்டர்.

கலைஞர் தினமும் காலையில் அறிவாலயத்தில் வாக்கிங் செல்வதை அப்போது வழக்கமாக வைத்திருந்தார். சாவி போட்டோகிராபர் ராதாகிருஷ்ணனோடு (ராகி) அந்த வாசகரை அனுப்பி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, கலைஞர் வாக் போகும்போது பார்த்துப் பேசி, அவரோடு அந்த வாசகரை நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்து வந்துவிடும்படி சொன்னேன். சாவி என்றால் கலைஞர் மறுக்காமல் ஒப்புக் கொள்வார் என்று நம்பினேன். அப்படியே கலைஞர் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொள்ள, அவர் பக்கத்தில் அந்த வாசகரை நிற்க வைத்து வெற்றிகரமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார் ராதாகிருஷ்ணன். அந்தப் படம் சாவி பத்திரிகையிலும் பிரசுரமாகியது.

சில மாதங்களுக்கு முன், கட்டுரையாசிரியர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது) என்னைத் தொடர்பு கொண்டு, தான் சில கைது நடவடிக்கைகள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டு இருப்பதாகவும், சாவி கைது பற்றியும், அன்றைய தினம் என்ன நடந்தது என்றும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே சொன்னேன். பின்பு, “என்னைக் கேட்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது? என் மொபைல் நம்பர் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டேன்.

“தலைவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன். அன்றைக்கு அவர் வந்து, ஸ்டேஷனில் சாவி சாரைப் பார்த்துப் பேசியது பற்றியெல்லாம் சொன்னார். பின்பு, ‘இன்னும் விரிவாக இது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட ரவிபிரகாஷ் இப்போது ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டால் மேலும் விவரம் கிடைக்கலாம்’ என்று சொன்னார். அதன்படி விகடனைத் தொடர்புகொண்டு உங்கள் மொபைல் எண்ணைப் பெற்றேன்” என்றார் அவர்.

எனக்கு இது மிக மிக ஆச்சரியமாக இருந்தது. மிகச் சாதாரணனான என் பெயரை நினைவு வைத்துக்கொண்டு கலைஞர் இப்படிச் சொல்லியிருப்பாரா என்று என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. என்றாலும், உடனேயே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு கலைஞரைச் சென்று சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், சந்திக்கவில்லை.

எனக்கு அப்பாயின்ட்மென்ட் தருவாரோ, மாட்டாரோ என்கிற ஐயமில்லை. பழைய நிகழ்ச்சிகளை ஞாபகமூட்டிக் கடிதம் அனுப்பினால், கண்டிப்பாக என்னை அழைத்துப் பேசுவார் கலைஞர். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த முதிய வயதிலும் சோர்விலாது, சுறுசுறுப்புடன் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அவருடன் செலவிடும் சில நிமிடங்கள் எனக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜியைக் கொடுத்து, இந்த ஜென்மம் முழுக்க நான் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

ஆனால், எந்த முக்கியக் காரணமும் இன்றி, சும்மா போய்ச் சந்தித்து, அவரது பொன்னான நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

“கலைஞர் என்றதும் உங்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருவது என்ன?” என்று ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு சாவி சொன்ன பதில்:

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ என்னும் திருக்குறள்.

சத்தியமான வார்த்தை!

***
உண்மை பேசுவதில் ஒரு சௌகரியம் என்னவென்றால், எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

7 comments:

Anonymous said...

இலட்சம் GB மெமரி கார்டு‍ வந்தாலும் கலைஞரின் நினைவு திறனுக்கு‍ முன் அது‍ கொஞ்சம் குறைவுதான்.
ஜெ.பாபு
கோவை-20

ராஜரத்தினம் said...

ஓ ஜால்ரா கோஷ்டியா நீ? இது தெரியாமல் இங்கு வந்து கடுப்பாயிட்னபா? இதுக்கு பேர்தான் கிளிக் பண்ணி சூன்யம் வெச்சிக்கிறதா?

G.MUNUSWAMY said...

Sir,
Kalaiganarai patri oru nalla thavagal. Silar avarai patri palavithamana karuthugal valaipoovilum thinamalarilum ezhuthuvathai parkira pothu manathu varuthathai alikkirathu. Thangalukkum neengal ezhuthia thagavalukkum en manappoorvamana nal vazthukkal.
Yours
G.Munuswamy

கணேஷ் ராஜா said...

அருமையான கட்டுரை. சாவி கைது பற்றிய விஷயங்களை ஒரு பரபரப்புத் தொடர் போல இரண்டு மூன்று பதிவுகளாகப் பிரித்துப் போட்டிருந்தீர்கள். 'உங்கள் ரசிகன்' வலைப்பூவில் படித்திருக்கிறேன். அவற்றில் இல்லாத பல புதிய தகவல்கள் இதில் இருந்தன. சாவி அனுபவங்களை மேலும் தொடருங்கள்!

பத்மநாபன் said...

வழக்கம்போல் எதையும் விடாமல் எழுதிய கட்டுரை ரசிக்க வைத்தது.எவ்வளவு பெரிய வி.ஐ.பி யின் பழக்கங்கள் இருந்தும், அதை எக்ஸ்ப்ளாய்ட் செய்யாமல் இருப்பது பாராட்டுக்குரியது.

கலைஞரின் நினைவாற்றலும் , உழைப்பு உத்வேகமும் அசாத்தியமானவை.இதை அவரது கொள்கைகளில் மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் எற்றுக்கொண்டவை.

மோகன் குமார் said...

நினைவுகள் சுவாரஸ்யம். ஆனாலும் அந்த ஜோக் ரெண்டுக்கு மேற்பட்ட கெட்ட அர்த்தங்கள் தருது.

ரவிபிரகாஷ் said...

பின்னூட்டத்தின் மூலம் தங்கள் கருத்துக்களைப் பதிந்த ஜெ.பாபு, ராஜரத்தினம்,ஜி.முனுசாமி, கணேஷ் ராஜா, பத்மநாபன், மோகன்குமார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!