நன்னனானேன் நான்!

Eசல், ஊC, Oட்டகம், Aறும்பு, Iவர், Oணான், Vநாயகர்... இப்படியெல்லாம் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதுவது சின்ன வயதில் எனக்கொரு விளையாட்டு. அதற்காக ஆசிரியரிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன். ஆனால், பள்ளி வயதிலிருந்தே என்னால் தமிழில் தப்பில்லாமல் எழுத முடியும். இலக்கணப் பிழை, வாக்கியப் பிழைகள் இல்லாமல் எழுத முடியும்.

வீட்டுப் பாடம் எழுதி வரும்போது, அதில் தேவையில்லாத ஒரு வாக்கியத்தை எழுதிவிட்டால், அந்த வாக்கியம் என்னவென்றே தெரியாத அளவுக்குப் பேனாவால் பட்டை அடித்து மறைத்தால், எங்கள் தமிழய்யாவுக்குக் கோபம் வந்துவிடும். சிவப்பு மையால் மெல்லியதாக ஒரு கோடு போட்டு அந்த வாக்கியத்தை அடிக்க வேண்டும் என்பார். தேவையில்லாத வாக்கியம்தானே என்று அதைக் கண்டுகொள்ளாமலும் விடமாட்டார். அதைப் படித்துப் பார்த்து, அதில் எழுத்துப் பிழைகள் இருந்தால், அருகே அழைத்துத் தலையில் குட்டுவார். எனவே, தேவையில்லாமல் எழுதிவிட்ட வாக்கியமாக இருந்தாலும், அதில் எழுத்துப் பிழைகள் ஏற்படாதவாறு எழுதிப் பழகியதாலேயே எனக்குத் தமிழில் பிழையின்றி எழுதவும், பேசவும் முடிந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் பேச்சைக் கேட்கும்போது, என் காதுகள் இரண்டும் கருகிப் போகின்றன. பார்த்துக்கொள்ளுங்கள் என்பதை பார்த்துக் கொல்லுங்கள் என்றும், இந்த நாள் என்பதை இந்த நால் என்றும், ஒன்னே ஒன்னு கன்னே கன்னு என்றும் இவர்கள் லகர ளகர, னகர ணகர வித்தியாசமின்றி உச்சரிப்பதைக் கேட்கும்போது, தமிழை ஏன் இத்தனைச் சித்ரவதைப்படுத்துகிறார்கள் என்று வேதனையாக இருக்கும் (சுஜாதா விகடனில் எழுதிய ஒரு தொடர்கதையில், ‘னகர நகர வித்தியாசமின்றிப் பேசும் தொகுப்பாளிகள்’ என்று எழுத, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் அதைச் சுட்டிக்காட்டி, ‘னகரத்துக்கும் நகரத்துக்கும் எழுத்தில்தான் வித்தியாசமே தவிர, உச்சரிப்பில் என்ன வித்தியாசம் இருக்கிறது?’ என்று கேட்டு, பின்பு அதை ‘னகர ணகர’ என்று பிழை திருத்தியது ஞாபகம் வருகிறது.).

இளங் காலை என்றால், அதிகாலை நேரம்; அதுவே இளங் காளை என்றால், இளம் காளை மாட்டையோ அல்லது இளைஞனையோ குறிக்கும். தமிழில் உச்சரிப்புச் சுத்தம் மிகவும் முக்கியம்.

‘கத்தியை எடுத்துக் கொள்’ என்று சொன்னால், எதிராளி கத்தியை எடுத்துக்கொள்வான். ‘கத்தியை எடுத்துக் கொல்’ என்றால், கத்தியை எடுத்துச் சொன்னவன் வயிற்றிலேயே குத்திக் கொன்றுவிட்டுப் போய்விடுவான்.

‘வே’ என்ற எழுத்து வரவேண்டிய இடங்களில் எல்லாம் ‘சே’ என்று தவறாக அச்சானதால் ஏற்பட்ட குளறுபடியை மையமாக வைத்து, முன்பு நான் ஓர் ஏடாகூடக் கதை ஒன்று எழுதியிருந்தேன். ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் மிகவும் ரசித்துப் பாராட்டிய கதை அது.

தமிழ்ப் பத்திரிகைக்குத் தப்பில்லாத தமிழ் ரொம்ப முக்கியம். எழுத்துப் பிழைகள், வார்த்தைப் பிழைகள் அறவே இருக்கக்கூடாது. அர்த்தம் அனர்த்தமாகிவிடக் கூடாது. மாணவப் பத்திரிகையாளர்களுக்கு விகடன் கற்றுக் கொடுக்கும் அரிச்சுவடி, பிழைகளற்ற தமிழ்தான்.

இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பத்திரிகையாளர்களுக்கான கூட்டம், தியாகராய நகரில் சிவாஜிகணேசன் வீட்டுக்கு எதிரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில், சென்ற மாதம் நடந்தது. பல ஆண்டுகளாகவே இதே மண்டபத்தில்தான் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது.

எழுத்தில் இயல்பாக ஏற்படும் பிழைகள், வாக்கிய அமைப்பில் ஏற்படும் குளறுபடிகள், அவற்றைத் தவிர்த்து எழுதும் முறை பற்றியெல்லாம் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு அந்தக் கூட்டத்தில் நான் விளக்கிச் சொன்னேன். ஒரு மணி நேரப் பேச்சில் முழுமையாக எல்லாவற்றையும் புரிய வைத்துவிட முடியாது. எழுத எழுதத்தான் மொழி நம் வசமாகும். இருந்தாலும், இப்படியெல்லாம் தவறுகள் வரலாம் என்று நாம் அடிக்கடி சந்திக்கும் வாக்கிய, எழுத்துப் பிழைகள் பற்றி மாணவர்களுக்கு அன்று நான் கோடி காட்டினேன்.

அவற்றில் சிலவற்றை இங்கே சொன்னால், உங்களுக்கும் அது உபயோகமாகவும், படிக்க சுவாரசியமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

அவைகள் என்று பலரும் எழுதுகிறார்கள். அவை என்பதே பன்மைதான். அதற்கு மேலும் ஒரு கள் விகுதி தேவையில்லை. சுயேச்சைதான்; சுயேட்சை அல்ல! அருகில் என்பதன் எதிர்ப்பதம்தான் அருகாமையில். அதாவது, அருகாமையில் என்றால், தொலைவில் என்றே பொருள். ஆனால் காலப்போக்கில், அருகில் என்பதைக் குறிப்பிட அருகாமையில் என்ற சொல்லையே பலரும் பயன்படுத்தி, அதுவே சரியானது போன்று வழக்கத்தில் வந்துவிட்டது. என்றாலும், தெரிந்தே அந்தத் தவற்றைச் செய்யாமல், நாம் அருகில் என்றே குறிப்பிடுவோமே!

மேல் வரியில் தவற்றை என்று எழுதியிருக்கிறேன். இதுவே சரி. ‘தவறைச் செய்யாமல்’ என்று பலரும் எழுதி, தவற்றைச் செய்கிறார்கள். மெய்ஞ்ஞானம் என்பதே சரி. மெய்ஞானம் அல்ல. அதேபோல், மனச்சாட்சிதான்; மனசாட்சி அல்ல!

ரஜினியின் ‘அருணாச்சலம்’ படம் வந்ததிலிருந்து பலரும் அருணாச்சலம் என்றே எழுத ஆரம்பித்துவிட்டனர். சினிமா சென்டிமென்ட்டுக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். ஆனால், அருணாசலம் என்பதே சரி. அசலம் என்றால் குன்று; மலை என்று பொருள். அருணா+அசலம்= அருணாசலம்; அதாவது, நெருப்பு மலை. வேங்கடாசலபதியையும் பலர் வெங்கடாஜலபதி என்று எழுதுகிறார்கள்.

கீழ்க்கண்ட பாராவைப் படியுங்கள்.

‘சகாரா நிறுவன அதிபர் சுப்ரதோ ராய் வீட்டு விழாக்கள் எதுவும் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் நடக்காது. தன் மனைவியோடு வந்து ஆஜராவார் டெண்டுல்கர். அதேபோல்தான் கபில்தேவும்! குடியரசு தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவார் இவர். அதில் வந்து கலந்துகொண்டு டான்ஸ் ஆடுவார் அமிதாப் பச்சன். இப்படி உலகையே ஆட்டுவித்தவரின் ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?!’

இதில் இரண்டு முக்கியமான தவறுகள் உள்ளன. கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். விடையைக் கடைசியில் சொல்கிறேன்.

2. ‘நாதா மல்லிக் என்பவருக்கு வயது 82. பரம்பரையாகத் தூக்கு போடும் தொழில். மூன்று வாரங்களில் தனஞ்செய் என்பவருக்கான தூக்குத் தண்டனையை அவர் நிறைவேற்ற வேண்டும். இதுவரை மல்லிக் மொத்தம் 24 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளார். ஆக, தனஞ்செய் அவருக்கு இருபத்தைந்தாவது இரை!’

3. ‘வெடி அதிர்ச்சியில் வீட்டின் கூரை அப்படியே சரிந்து விழ, உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த வீட்டின் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக இறந்துபோனார்கள். உடல்களில் சிறு காயம்கூட இல்லாமல் நான்கு சடலங்களும் மீட்கப்பட்டபோது, சோகம் நெஞ்சை அடைத்தது.’

4. இளைஞன் பரத் என்ன ஆனான், எங்கு போனான் என்று யாருக்குமே தெரியவில்லை. பதினைந்து நாட்களுக்குப் பிறகு, யாரோ ஒருவர் கொடுத்த தகவலை நம்பி, திருவண்ணாமலை சென்று, அங்கே ஒரு சத்திரத்தின் வாசல் திண்ணையில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பரத்தை கண்டுபிடித்தோம்.’

இவை போன்று இன்னும் பலப் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். சரி, மேலே உள்ள பாராக்களில் என்ன தவறு என்று பார்க்கலாமா?

நகைச்சுவையாக ஒன்று சொல்வார்கள்... ஓர் அலுவலகத்தில் பாபு, கோபு என்கிற சக நண்பர்கள் தங்கள் மனைவிமார்களுடன் உல்லாசப் பயணம் செல்வதெனத் தீர்மானித்தார்கள். சாயந்திரம் பாபு, கோபு இருவரும் பாபுவின் வீட்டுக்குச் சென்றார்கள். பாபுவின் மனைவியைப் பார்த்து, உல்லாசப் பயணம் போகவிருக்கும் தகவலைச் சொன்னான் கோபு. ‘யார் யார் போகிறீர்கள்?’ என்று பாபுவின் மனைவி கேட்க, ‘நீ என் மனைவி, நான் உன் கணவன்’ என்று சொன்னானாம் கோபு. அதிர்ந்துவிட்டாள் பாபுவின் மனைவி. ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று அவள் பதற, கோபு நிதானமாக, ‘உல்லாசப் பயணம் போகப்போவது யார் யார் என்று கேட்டியே தங்கச்சி! அதான்... நீ, என் மனைவி, நான், உன் கணவன் ஆகிய நாலு பேரும் போகப் போகிறோம் என்றேன்’ என்று சொன்னானாம் சிரித்துக்கொண்டே.

நகைச்சுவைக்கு இது சரி. ஆனால், கேட்பவர் சரியாகப் புரிந்துகொள்ளும்படி சொல்ல வேண்டும், படிப்பவர்கள் சரியாக அர்த்தப்படுத்திக்கொள்ளும்படி எழுத வேண்டும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

இன்னொரு ஜோக்கும் உண்டு. ஒரு பையன் சொன்னானாம், ‘எங்கப்பா போலவே எனக்கும் படிச்சுப் பெரிய டாக்டர் ஆகணும்னு ஆசை!’ ‘அட, உங்கப்பா பெரிய டாக்டரா?!’ என்று நண்பன் கேட்க, இந்தப் பையன் சொன்னான்: ‘இல்லடா! எங்கப்பாவும் படிச்சுப் பெரிய டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டவர்!’

சரி, முதல் பாராவுக்கு வருவோம். ‘குடியரசு தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவார் இவர்’ என்பதில், இவர் என்பது யாரைக் குறிக்கிறது? கபில்தேவைச் சொல்லிவிட்டு, அடுத்த வரியிலேயே இவர் என்றால், அது கபில்தேவைத்தான் குறிக்கும். ஆனால், கட்டுரையாளர் சொல்ல வருவது சுப்ரதோ ராயைத்தான். எனவே, அங்கே அவர் என்பதற்குப் பதிலாக அவர் பெயரையே போட்டுவிடுவதுதான் உத்தமம்.

அந்த பாராவில் இன்னொரு முக்கியமான தப்பும் இருக்கிறது. ‘ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?!’ என்று எழுதக்கூடாது. சுப்ரதோ ராய் ஏதோ பிரச்னையில் சிக்கிச் சில நாட்களாக அமைதியாக இருப்பதைத்தான் (இது சமீபத்திய செய்தி அல்ல; ஓர் உதாரணத்துக்காகவே தரப்பட்டுள்ளது.) கட்டுரையாளர் குறிப்பிட விரும்புகிறார். ஆட்டம் அடங்கிவிட்டது என்றால், அமரராகிவிட்டார் என்று பொருள் தரும். எனவே, ‘ஆட்டம் ஏன் அடங்கியிருக்கிறது?!’ என்று எழுதலாம்.

2. மல்லிக்குக்கு தூக்குப் போடுவது தொழில்தான். அதை ‘இரை’ என்று வர்ணித்து எழுதுவது அபாண்டம்!

3. படுகாயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தால் சோகம் நெஞ்சை அடைத்திருக்காது என்பது போன்று அர்த்தம் கொடுக்கிறது கடைசி வரி. ஒரே வாக்கியமாக இல்லாமல், ‘உடல்களில் சிறு காயம்கூட இல்லாமல் சடலங்கள் மீட்கப்பட்டன. நான்கு உடல்களையும் பார்த்தபோது நெஞ்சை சோகம் கவ்வியது’ என்று பிரித்து எழுதினால் சரியாக இருக்கும்.

4. சில வார்த்தைகளோடு விகுதிகள் சேரும்போது, அது தனி வார்த்தை போல் ஆகி, அனர்த்தம் விளையும். ஒரு பையனுக்கு ‘ச’ எழுத்தைச் சரியாக எழுதத் தெரியாது. இதை ஒரு ஆசிரியர் அந்தப் பையனின் பெற்றோரிடம், ‘உங்க பையனுக்கு சாவே வரலைங்க’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அது போன்ற ஒரு தப்புதான் நாலாவது பாராவில் உள்ளது. பரத்தை என்பது விலைமகளைக் குறிக்கும் சொல். தவிர்க்க வேண்டும். வாசல் திண்ணையில் பரத் தூங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டோம் என்று எழுதினால் நல்லது.

***
அனுபவம் இருந்தால்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்; ஆனால், தவறான முடிவுகளை எடுக்கும்போதுதானே அனுபவமே கிடைக்கிறது?!
.

13 comments:

Anonymous said...

//வீட்டு விழாக்கள் எதுவும்// - தவறு

வீட்டு விழா எதுவும் - சரி

ஹுஸைனம்மா said...

’ன’ - ‘ண’ இரண்டுக்கும் உச்சரிப்பில் எப்படி வித்தியாசம் காட்டுவது?

nerkuppai thumbi said...

தமிழில் எழுதுவதிலும், உச்சச்சரிப்பிலும் உள்ள குறைகளை கண்டு அதைப் பற்றி நினைக்கும், பேசும், எழுதும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என அறிய மகிழ்ச்சி .
தொலைக் காட்சியில் தமிழ் சித்திரவதை செய்யப் படுவது கண்டு தினம் தினம் மனம் வெதும்புபவன் நான். ஒரு முறை தமிழ் திரைப் படம் ஒன்று ஒளி பரப்பாகிக் கொண்டு இருந்தது. கால் மணிக்கு ஒரு முறை ஒரு பெண்மணி " இந்த திரைப்படத்தை "வழங்கியவர்கல் " அல்லது "வளங்கியவர்கல்" என திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருந்ததால் படம் காண்பதையே நிறுத்திவிட்டேன். செய்தி அறிக்கை எழுதுபவர்களுக்கு ஒருமை/பன்மை வேறுபாடு மறந்து விட்டதோ என அடிக்கடி தோன்றும். உ-ம: சட்ட அவையில் வினாக்கள் "எழுப்பப்பட்டன " என்றில்லாமல் "எழுப்பப்பட்டது ".
ஒரு காலத்தில், அதாவது வானொலி மட்டுமே இருந்த காலத்தில், பேட்டி அளிப்பவர் தமிழ் உச்சரிப்பில் தவறு செய்வார்; ஆனால் கேட்பவர் சரியாக உச்சரிப்பார். இப்போது கேட்பவர்கள் கூட உச்சரிப்பை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களாக இருப்பது மோசம்.
தொலைக் காட்சி நிலையத்தினர் குறைந்த பட்சம் செய்தி அறிக்கைகளை சரி பார்க்க தமிழ் அறிஞர்களை நியமிக்க வேண்டும். மேலும், அவர்கள் அலையில் வரும் நிகழ்ச்சிகளை ஒரு தமிழ் அறிஞர் தொடர்ந்து பார்க்க வேண்டும். தமிழில் தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீண்டும் வாய்ப்பு பெறா வண்ணம் செய்ய வேண்டும்.

nerkuppai thumbi said...

தமிழில் எழுதுவதிலும், உச்சச்சரிப்பிலும் உள்ள குறைகளை கண்டு அதைப் பற்றி நினைக்கும், பேசும், எழுதும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என அறிய மகிழ்ச்சி .
தொலைக் காட்சியில் தமிழ் சித்திரவதை செய்யப் படுவது கண்டு தினம் தினம் மனம் வெதும்புபவன் நான். ஒரு முறை தமிழ் திரைப் படம் ஒன்று ஒளி பரப்பாகிக் கொண்டு இருந்தது. கால் மணிக்கு ஒரு முறை ஒரு பெண்மணி " இந்த திரைப்படத்தை "வழங்கியவர்கல் " அல்லது "வளங்கியவர்கல்" என திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருந்ததால் படம் காண்பதையே நிறுத்திவிட்டேன். செய்தி அறிக்கை எழுதுபவர்களுக்கு ஒருமை/பன்மை வேறுபாடு மறந்து விட்டதோ என அடிக்கடி தோன்றும். உ-ம: சட்ட அவையில் வினாக்கள் "எழுப்பப்பட்டன " என்றில்லாமல் "எழுப்பப்பட்டது ".
ஒரு காலத்தில், அதாவது வானொலி மட்டுமே இருந்த காலத்தில், பேட்டி அளிப்பவர் தமிழ் உச்சரிப்பில் தவறு செய்வார்; ஆனால் கேட்பவர் சரியாக உச்சரிப்பார். இப்போது கேட்பவர்கள் கூட உச்சரிப்பை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களாக இருப்பது மோசம்.
தொலைக் காட்சி நிலையத்தினர் குறைந்த பட்சம் செய்தி அறிக்கைகளை சரி பார்க்க தமிழ் அறிஞர்களை நியமிக்க வேண்டும். மேலும், அவர்கள் அலையில் வரும் நிகழ்ச்சிகளை ஒரு தமிழ் அறிஞர் தொடர்ந்து பார்க்க வேண்டும். தமிழில் தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீண்டும் வாய்ப்பு பெறா வண்ணம் செய்ய வேண்டும்.

கணேஷ் ராஜா said...

தமிழில் நான் தப்பு இல்லாமல் எழுதுவேன் என்று எனக்குள் ஒரு கர்வம் இருந்தது. அருகாமையில், மனசாட்சி ஆகிய உதாரணங்களைப் படித்தபோது, தமிழில் நான் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்கிற உண்மை புரிந்தது.

ரவிபிரகாஷ் said...

நன்றி பிரபு! சரியாகச் சொன்னீர்கள். தமிழில் நீங்கள் நூற்றுக்கு நூறு!

என்ன ஹுசைனம்மா இப்படிக் கேட்டுப்புட்டீங்க? ஆனி என்றால் தமிழ் மாதம்; ஆணி என்றால் சுவரில் அடிக்கும் ஆணி. இரண்டையும் ஒரே மாதிரிதான் உச்சரிப்பீர்களா? கன்னம், கண்ணீர் இரண்டிலும் வரும் உச்சரிப்பும் ஒன்றேதானா? தமிழில் நூற்றுக்கு நூறு வாங்கிய பிரபுஜி! என் சார்பா நீங்களே கொஞ்சம் விளக்குங்களேன்!

நெற்குப்பை தும்பி! நீண்ட பின்னூட்டத்துக்கு என் நன்றி! நல்ல தமிழில் பேச வேண்டும் என்கிற ஆர்வத்திலும் ஒரு சிலர் தமிழ் எழுத்துக்களைத் தப்புத் தப்பாக உச்சரிக்கின்றார்கள். உதாரணம், ரமேஷ் பிரபா. ‘நல்ல’ என்பதை ‘நள்ள’ என்பார்.

நன்றி கணேஷ் ராஜா! எனக்கும் உங்களைப் போன்றே ஒரு கர்வம் இருந்தது - நான் கோட்டை விட்ட ஒரு தப்பை நச்சென்று பிரபு கண்டுபிடித்துப் பின்னூட்டம் இடும் வரை! :)

Anonymous said...

தமாஸா எளுதி இருக்கிறீர்கள். உங்கள் சின்ஸியாரிட்டிக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். - எப்படி, தப்பு இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்று பார்த்தீர்களா?
-- ஆர்

K.B.JANARTHANAN said...

நல்ல தமிழ் எழுதுவது பற்றி உங்கள் பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நன்றி. இரண்டு சந்தேகங்கள். தெளிவு படுத்துங்கள்.
'வீட்டின் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் பரிதாபமாக இறந்துபோனார்கள்' அல்லது 'வீட்டின் உரிமையாளர், அவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக இறந்துபோனார்கள்' என்று எழுதுவது தான் சரி என நினைக்கிறேன். 'மற்றும்' வந்தால் 'ஆகிய' வேண்டாமே?
'பரம்பரையாக அவருக்குத் தூக்கு போடும் தொழில்' என்றல்லவா இருக்க வேண்டும்? 'பரம்பரையாகத் தூக்கு போடும் தொழில்' என்று எழுதும்போது ஒரு பரம்பரையை தூக்குப் போடுவது என்றும் ஒரு பொருள் வராதா சார்?

ரவிபிரகாஷ் said...

அனானிமஸ் ஆர், யார் என்று தெரியாவிட்டாலும், பின்னூட்டத்துக்கு நன்றி!

ரவிபிரகாஷ் said...

அசத்திட்டீங்க கே.பி.ஜனார்த்தனன்! நீங்கள் குறிப்பிட்ட இரண்டுமே சரியான திருத்தங்கள்! எனது அடுத்த மாணவர் திட்ட உரைக்குப் பயன்படும். நன்றி!

பத்மநாபன் said...

நன்னன் - நன்றாகவே வருகிறது - நன்றி

(எனது முந்தய பின்னூட்டம் காணவில்லை.)

Satheesh Kumar said...

மிக பயனுள்ள பதிவு. நன்றி. //வீட்டு விழாக்கள் எதுவும்// - இதைப் போன்றதுதான் 'ஆட்டோக்ராப்' திரைப்படத்தில் வந்த 'ஒவ்வொரு பூக்களுமே' என்று தொடங்கும் அருமையான பாடல்.

என் பின்னூட்டத்தில் எத்தனை தவறுகளோ?! :-(

தீபிகா(Theepika) said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். தொடர்ந்து தமிழ் எழுத்துக்கள் பற்றிய தகவல்களை எழுதினால் பலர் பயன்பெறக் கூடும். இடைவெளி பிரித்து எழுதுவதில் பொருள் மாறுபடுதல், குறியீடுகளால் பொருள் மாறுபடுதல்,ஒருமை பன்மையால் பொருள் மாறுபடுதல் என பல விடயங்களை எல்லோரும் அறிய வேண்டியிருக்கிறது.