வைரமுத்து எழுதுகிறார்...

காக்கா-வடை-நரி கதையை எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பாதங்கதுரை, கண்ணதாசன் எனச் சிலர் அவர்கள் பாணியில் எழுதினால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து,14.11.1980 தேதியிட்ட தினமணி கதிர் இதழில், ‘இவர்கள் எழுதினால்...’ என்னும் தலைப்பில் எழுதியிருந்தேன். (அந்தக் கட்டுரையை ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூவில் 2009 ஜூலையில் பதிவு செய்துள்ளேன்.)

சமீபத்தில், விகடன் பொக்கிஷம் பகுதிக்காக 1989-ஆம் ஆண்டு விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, அதே காக்கா-வடை-நரி கதையை கவிஞர் வைரமுத்து எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒருவர் கற்பனை செய்து, ‘ஹ்யூவேக்’ என்னும் புனைபெயரில் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.

இதோ, அந்தக் கற்பனை:

அந்தக இரவில் கந்தக வடை!

புழுதி படிந்த ஒரு கிராமத்தில், யௌவனக் கிழவி ஒருத்தி, வடை சுட்டு விற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம் கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! ‘சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால், உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்’ எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம், அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போல் பாய்ந்து, அந்தக் கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.

எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!

விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!

நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!

“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.

இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...

“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!

கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...

‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’

- ‘ஹ்யூவேக்’


***
மற்றவர்களைவிடச் சிறப்பாகச் செய்ய வேண்டியதில்லை; நீங்கள் உங்களைவிடச் சிறப்பாகச் செய்தாலே போதுமானது!

15 comments:

SRK said...

இந்த கதையை சுட்டு விவேக் விஜய் டிவியில் ஒரு ப்ரோக்ராம் தந்திருக்கிறாரே! ஆனால் மனுஷன் அருமையாக வைரமுத்துவை இமிடேட் செய்திருப்பார்.

Chitra said...

‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... வாசித்திட்டேன்..... ரசித்திட்டேன்..... சிரித்திட்டேன்......

அன்னு said...

இதே கதைய நடிகர் விவேக் ஏதோ ஒரு டீவீ ஷோல தன்னுடைய முயற்சி மாதிரி காட்டி பேசின நினைவு. எந்த ஷோ எந்த சேனல்னு தெரியலை. அப்ப சந்தோஷமா இருந்தது. இப்ப கவலையா இருக்கு. இப்படி காப்பியடிச்சேதான் எல்லாரும் வாழ்க்கைய ஓட்டறாங்களான்னு. எனிவே, அருமையான பதிவு. உங்களின் மற்றொரு கதைக்கும் லின்க் போட்டீங்கன்னா நல்லா இருக்கும். நன்றி.

கிருஷ்குமார் said...

நடிகர் விவேக் அவர்கள் இதே கான்செப்ட் ஐ விஜய் டிவி ஷோ ஒன்றில் வைரமுத்து குரலிலேயே அசத்தலாக செய்திருந்தார் ..ஒரு வேலை அவரே இதனை அனுப்பி இருக்ககூடும் .. Youtube il antha video irukirathu!

கவிதை காதலன் said...

neutronfixஇது யார் எழுதிய கற்பனையாக இருந்தாலும் நன்றாக இருந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் இதை இமிடேட் செய்து காட்டி இருப்பார். ஒரு தடவை பாருங்களேன். பலவார்த்தைகள் அப்படியே ஒத்துப்போகின்றன,

இதோ அந்த லிங்க்..


http://www.youtube.com/watch?v=dyHkJKAKxjg

கிருஷ்குமார் said...

http://www.youtube.com/watch?v=dyHkJKAKxjg&p=A3F31B2799428FB3&playnext=1&index=35

Link for Vivek comedy with the same concept

Anonymous said...

எழுதியவர் ஹ்யூமர் கிளப் விவேக் எண்று நினைக்கிறேன். -ஆர்

கணேஷ் ராஜா said...

படித்தேன்; ரசித்தேன்! ஆனால், ஒரு கதையை வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையைப் படிப்பது ஒரு ரசனை. வெறுமே வைரமுத்து பாணியில் மட்டும் எழுதுவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது என்று புரியவில்லை. இருப்பினும், ‘ஹ்யூவேக்’க்கின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

ravikumar said...

Your post is good and style of writing is very decent

ரவிபிரகாஷ் said...

திரு.எஸ்.ஆர்.கே. நன்றி! கவிதைக் காதலன் யூ டியூப் லிங்க் கொடுத்திருந்தார். பார்த்தேன்; ரசித்தேன். அதே கதைதான். ஒருவேளை ‘ஹ்யூவேக்’ என்ற புனைபெயரில் எழுதியது நடிகர் விவேக்காகக் கூட இருக்கலாம்.

ரவிபிரகாஷ் said...

நன்றி சித்ரா!

நன்றி அன்னு! கவிதைக் காதலன் லிங்க் கொடுத்திருக்கிறார். பாருங்கள்.

நன்றி கிருஷ்குமார்!

நன்றி கவிதைக் காதலன்! யூ டியூப் இணைப்பு தந்ததற்கு இன்னொரு நன்றி!

ரவிபிரகாஷ் said...

கிருஷ்குமார்! லிங்க்குக்கு நன்றி!

அனானிமஸ்! ஹ்யூமர் கிளப் விவேக் என்று ஒருவர் இருக்கிறாரா? எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்.

ரவிபிரகாஷ் said...

கணேஷ் ராஜா! மாவை இட்டிலி, தோசை, ஊத்தப்பம் என்று விதம் விதமாகச் செய்து சாப்பிடுவது ஒரு ரசனை. வெறும் இட்டிலியாக மட்டுமே செய்து சாப்பிடுவதும் ஒரு ரசனை! இட்டிலி சுவையாக இருக்கிறதா? அதுதான் முக்கியம். வைரமுத்து பாணியிலான கதை நன்றாகவே இருக்கிறது! ரசிக்க முடிகிறது. சரிதானே?

ரவிபிரகாஷ் said...

Thanks a lot Mr.Ravikumar!

padmanabhan said...

பொக்கிஷம் பகுதியில் முன்பு பரபரப்பாக பேசப்பட்ட திருடன்/அரசியல்வாதி கார்டூன் வரும் என எதிர் பார்த்தேன்.