பல கால பந்தம் இது..!

குறுகிய காலத்தில் மிக அதிக வீடுகளில் குடியேறிய சாதனைக்கு கின்னஸ் ரெக்கார்டில் இடம் இருக்குமானால், தாராளமாக நான் அதற்குத் தகுதி உள்ளவன். ஆறு ஆண்டுகளுக்குள் பன்னிரண்டு வீடுகள் மாறிய கதையை வலைப்பூவில் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் திடீரென்று தற்போது குடியிருக்கும் வீட்டைப் பற்றியும், இதன் உரிமையாளர் முகம்மது இஸ்மாயீல் பற்றியும் எழுத நேர்ந்தது.

நான் அடிக்கடி வீடுகள் மாறியபோது என் சிநேகிதியும், மங்கையர் மலர் பொறுப்பாசிரியருமான திருமதி அனுராதா சேகர் சிரித்துக் கொண்டே, “நீங்க ஒண்ணு ரெண்டு வீடுகள் மாறியிருந்தா, வீட்டுக்காரங்க சரியில்லைன்னு சொல்லலாம். இப்படிப் பத்துப் பன்னிரண்டு வீடுகள் மாறுறீங்கன்னா, நீங்கதான் ரவி, சரியில்லை!” என்றார் கேலியாக.

நான் ஆண்டுக்கொரு வீடு... ஏன், இரண்டு மூன்று முறை ஆறு மாதத்துக்குள்ளாகவே கூட வேறு வீடு மாறியிருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரத்யேக காரணம் உண்டு. அவற்றை நான் அனுராதா சேகருக்குச் சொல்லவில்லை. அவர் நட்பு ரீதியில் உரிமையோடு கேலி செய்தபோது, அதை ஆமோதிப்பது போல் சிரித்துக்கொண்டே பேசாமல் இருந்துவிட்டேன். ஆனாலும், எப்போதாவது அவற்றை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். விரைவில் எழுதுவேன்.

ஆண்டுக்கொரு முறை வீடு மாறிய நான், இங்கே பெரியவர் முகம்மது இஸ்மாயீல் வீட்டுக்குக் குடி வந்ததிலிருந்து, இடையில் ஒரு மூன்று மாத காலம் நீங்கலாக, தொடர்ந்து இவர் வீட்டிலேயேதான் பன்னிரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கிறேன்.

1998-ன் ஆரம்பத்தில் நான் நெசப்பாக்கத்தில் குடியிருந்தேன். அதற்கும் முன்பு அசோக் நகர் CPWD குவார்ட்டர்ஸில் குடியிருந்தேன். அச்சமயம்தான் எங்களுக்குப் பெரியவர் முகம்மது இஸ்மாயீல் குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது மளிகைக் கடையில்தான் மளிகைச் சாமான்கள் வாங்குவோம்.

கடையில் பல சமயம் பெரியவர் இருப்பார்; அவரது மகன்கள் இருவரும் மாறி மாறிக் கவனித்துக் கொள்வார்கள். அவர்களின் அம்மாவும் சில சமயம் உட்கார்ந்திருப்பார். மருமகள்களும் சில வேளைகளில் இருப்பதுண்டு. பெரியவரின் மருமகப் பிள்ளையும் சில சமயம் அங்கே இருப்பார். இப்படி, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் எங்களுக்குப் பழக்கம் உண்டானது.

தொடர்ந்து அவரது கடையிலேயே மளிகைச் சாமான்கள் வாங்கி வந்தோம். திடீரென்று குவார்ட்டர்ஸை உடனடியாகக் காலி செய்துவிட்டு வேறு வீடு குடி போக வேண்டிய கட்டாயம். நெசப்பாக்கத்தில் வீடு பார்த்துக் குடி போய்விட்டோம்.

அங்கேயும் சரி, அருகில் உள்ள கே.கே.நகரிலும் சரி... நிறைய கடைகள் உண்டு. பெரிய பெரிய மளிகைக் கடைகள் உண்டு. ஆனாலும் நாங்கள், பெரியவர் முகம்மது இஸ்மாயீல் கடையில் தொடர்ந்து பொருள்கள் வாங்கிய பழக்கத்தாலும், அவர் குடும்பத்தினரோடு நன்கு பழகிவிட்ட காரணத்தாலும், நெசப்பாக்கம் போன பின்பும் அங்கிருந்து அசோக் நகர் வந்து, அவர் கடையிலேயே தொடர்ந்து மளிகைப் பொருட்கள் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம்.

அருகில் இருந்தபோது, மாதக் கணக்கு வைத்துக்கொண்டு மளிகை வாங்கி, முதல் தேதியன்று செட்டில் செய்வது வழக்கம். அவ்வளவு தள்ளிக் குடி போன பிறகு அப்படிக் கணக்கு வைத்துக் கொள்வது சரியாக இருக்காது என்று, வாங்கிய பொருள்களுக்கான தொகையை எடுத்துக் கொடுத்தபோது, “என்ன இது புதுசா... மொத்தமா ஒண்ணாந்தேதி கொடுங்க” என்றார் பெரியவர். “இப்ப நாங்க இங்க இல்லீங்க. நெசப்பாக்கம் போயிட்டோம்” என்றேன். “இருக்கட்டுமே! ஜப்பானுக்கே கூடத்தான் போங்க. அவ்ளோ தூரம் போயும் மறக்காம நம்ம கடையில வந்து சாமான் வாங்கிட்டிருக்கீங்க இல்லே... அப்புறம் என்ன? பணத்தைப் பேசாம எடுத்து உள்ள வைங்க. மொத்தமா சம்பளம் வந்தவுடனே கொடுங்க” என்றார்.

அப்போது நான் டூ-வீலர் வைத்திருந்தேன். அசோக் நகர் வந்து போவது சிரமமாக இல்லை. ஆனால், பின்பு அதை விற்றுவிட்டேன். அசோக் நகர் வரவேண்டுமானால் பஸ் பிடித்துதான் வரவேண்டும். என்றாலும், நானும் என் மனைவியுமாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அசோக் நகர் வந்து, வீட்டுக்கு வேண்டிய சாமான்களை மொத்தமாக வாங்கிச் செல்வோம்.

இதைக் கவனித்துவிட்டுப் பெரியவர் ஒரு நாள், “ஏன் தம்பி, வாராவாரம் இவ்ளோ தூரம் வந்து சிரமப்படணுமா? இதை நீங்க அங்கேயே வாங்கிக்கலாமே? எதுக்கு உங்களுக்கு வீண் அலைச்சல்?” என்றார். “இல்லீங்க... என் பொண்ணு இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் முதல் வகுப்பு படிக்கிறா. பையனையும் எப்படியும் இந்த வருஷம் எல்.கே.ஜி. சேர்க்கணும். இங்கேயே இடம் பார்த்துக் குடி வந்துடலாம்னு இருக்கோம். அப்புறம் எப்படியும் உங்க கடையிலதான் சாமான் வாங்குவோம். இடையில சில மாசங்கள் மட்டும் வேற கடையில வாங்க மனசு ஒப்பலை. அதான்...” என்றேன். அவராகவே, “சரி, நானும் இங்கே அசோக் நகர்ல இடம் ஏதாவது காலியானா சொல்றேன்” என்றார்.

அதன்பின், நாங்கள் அவர் கடைக்கு வரும்போதெல்லாம், “என்ன தம்பி, இடம் ஏதாவது கிடைச்சுதா?” என்று அவர் விசாரிப்பதும், “இடம் ஏதாவது காலியானா சொல்றேன்னீங்களே, ஏதாவது தெரிஞ்சுதுங்களா?” என்று நான் கேட்பதும் வழக்கமாயின.

அடுத்த ஆறு மாதத்தில் நாங்களாகவே ஒரு இடம் பார்த்து, இங்கே அசோக் நகருக்குக் குடி வந்துவிட்டோம். வந்த பின்புதான் விபரீதம் புரிந்தது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போனால் போதும் என்று ஆகிவிட்டது. தீவிரமாக இடம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

சரஸ்வதி பூஜையின்போது, என் மகனை இங்குள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்தேன். வீடும் சரியில்லை; குழந்தைகளின் உடல்நிலையும் கெட்டுப் போனது. இருவருக்கும் தினம் தினம் முகம் முழுக்கக் கட்டிகள் வந்து, உடைந்து, முகம் பூராவும் ரத்தமாகிவிடும். சட்டையில் ஒரு கர்ச்சீப்பைச் சொருகி அனுப்புவோம், பள்ளியில் கட்டி உடைந்து ரத்தம் வழிந்தால் துடைத்துக் கொள்ள! இருவரும் வீடு திரும்பும்போது, கர்ச்சீப் மொத்தமும் ரத்தக் கறையாக இருக்கும்.

இந்த மாதிரிச் சூழ்நிலையில், ஒரு நாள் வழக்கம்போல் பெரியவர் இஸ்மாயீலின் கடைக்கு வந்து சாமான்கள் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, பெரியவரின் மனைவி எங்களை அழைத்தார். “வீடு பார்த்துட்டீங்களா?” என்றார். “இல்லீங்கம்மா! தேடிக்கிட்டிருக்கோம்” என்றோம். “ஒரு இடம் இருக்கு. உங்களுக்கு சௌகரியப்படுமான்னு தெரியலை” என்றார். “அட்ரஸ் கொடுங்க. போய்ப் பார்க்கிறோம்” என்றோம். “வாங்க” என்று எழுந்தார். பக்கத்தில்தான் எங்காவது இருக்கும்;அவரே எங்களோடு வந்து காண்பிக்கப் போகிறார் என்று கிளம்பினோம். கடைக்குப் பக்கத்திலேயே இருந்த நீண்ட நடையில் நுழைந்து சென்றார் அவர். அவர்களின் வீடு அங்கேதான் இருக்கிறது. செருப்பு மாட்டி வரப் போகிறாரோ என்று நினைத்து நாங்கள் தெருவிலேயே நின்றிருந்தோம். கொஞ்ச தூரம் உள்ளே சென்றவர், திரும்பி எங்களைப் பார்த்து, “உள்ளே வாங்க” என்றார்.

போனோம். கடைக்கு நேர் பின்னால் இருந்த போர்ஷன் அது. ஒரு ஹாலும், சமையலறையுமாக தாராளமான இரண்டு அறைகள். “இதான் அந்த இடம். இங்கே குடியிருக்கிறவங்க, வர ஒண்ணாந்தேதி காலி பண்றாங்க. நாங்க வேற யாருக்கும் இந்த இடத்தை வாடகைக்கு விடறதா இல்லை. மாடியில நாங்க எல்லாருமே ஒண்ணாத்தான் குடியிருக்கோம். இடம் போதலை. அதனால, எங்க சின்ன மகன் குடும்பத்தை இங்கே குடி வைக்கலாம்னு இருந்தோம். நீங்க ரொம்ப நாளா வீடு பார்த்துட்டிருக்கிறது எங்களுக்குத் தெரியும். அய்யாதான் இந்த இடம் உங்களுக்குப் போதுமான்னு கேக்கச் சொன்னாரு” என்றார் அந்த அம்மா.

“தாராளமா போதும். ஆனா...” என்று தயங்கினேன். எனக்கு ஏகப்பட்ட வீடு மாறின அனுபவம் ஒரு பக்கம்; இவர்களோ இடத்தை வாடகைக்கு விடப்போவதில்லை என்ற முடிவிலிருந்து மாறி, எங்களுக்குத் தர முன் வந்திருக்கிற நிலை; இன்னும் ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ அவர்களுக்கு மாடியில் இடப் பற்றாக்குறையாகி எங்களை காலி செய்யச் சொல்லிவிட்டால் மறுபடி வீடு தேடி அலைய வேண்டி இருக்குமோ என்கிற கவலை என எல்லாமாகச் சேர்ந்து கொண்டது.

“சொல்லுங்க தம்பி! என்ன தயங்கறீங்க? நீங்க அய்யரு. நாங்க முஸ்லிம். கறி சாப்புடுவோம். இங்கே எப்படி இருக்க முடியும்னு யோசிக்கிறீங்களா?” என்றார் அந்த அம்மா புன்னகையோடு.

“ஐயையோ... அதெல்லாம் இல்லீங்கம்மா! நாங்க வருஷா வருஷம் வீடு மாறி மாறி ஓய்ஞ்சு போயிட்டோம். இனிமே எங்கேயும் இடம் மாறாம, எங்க பசங்க இங்கே ப்ளஸ் டூ படிச்சு முடிக்கிற வரைக்கும் ஒரே இடத்துல குடியிருக்கணும்னு பார்க்கிறோம். நாளைப்பின்ன உங்களுக்கு இடம் தேவைப்பட்டு, காலி பண்ணச் சொல்லிட்டீங்கன்னா என்ன பண்றதுன்னுதான் யோசிச்சேன்...” என்றேன்.

“அதெல்லாம் சொல்ல மாட்டோம். அப்படியே இடம் தேவைப்பட்டாலும், நாங்க வேற ஏற்பாடு பண்ணிக்கிறோம். உங்களுக்கு சௌகரியமானா ஒண்ணாந்தேதி இங்க குடி வரலாம்” என்றார்.

அப்படியே 1998 நவம்பர் முதல் தேதியன்று பெரியவர் முகம்மது இஸ்மாயீல் வீட்டுக்குக் குடி வந்துவிட்டோம். ரூ.1,500 வாடகை; ரூ.15,000 அட்வான்ஸ்.

இத்துடன் முடியவில்லை; இனிமேல்தான் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதையும் சொல்லி முடித்து விடுகிறேன்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பாங்க் லோன் போட்டு, 2000-வது ஆண்டில் சாலிகிராமத்தில் நான் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். புது ஃப்ளாட் வாங்கின மகிழ்ச்சியை பெரியவர் முகம்மது இஸ்மாயீல் குடும்பத்துக்கு ஸ்வீட் கொடுத்துச் சந்தோஷமாகத் தெரிவித்துவிட்டு, 2000 ஜனவரி முதல் தேதியிலிருந்து எங்கள் சொந்த ஃப்ளாட்டுக்குக் குடி போகிறோம் என்று சொல்லி விடைபெற்றோம்.

அப்போதும் அங்கிருந்து அசோக் நகர் வந்து, பெரியவர் கடையில்தான் சாமான் வாங்கிச் சென்றோம். எங்கள் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட வேன் ஏற்பாடு செய்தேன். வீட்டை அடையாளம் காண்பிப்பதற்காக ஒரு நாள் நானும் அவர்களோடு வேனில் வந்தேன். மாலை நான்கு மணிக்குக் கிளம்பிய வேன் அடுத்ட பத்து நிமிட நேரத்தில் சாலிகிராமம் வீட்டை அடைவதற்குப் பதிலாக, நேர் எதிர்த் திசையில் கிளம்பி, மாம்பலம், ரங்கராஜபுரம், யுனைட்டெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், ட்ரஸ்ட்புரம், நூறடி ரோடு, எம்.எம்.டி.ஏ காலனி என்று சுற்றி வளைத்துக்கொண்டு (காரணம், அங்கங்கே மாணவர்களை வேன் இறக்கிவிட வேண்டியிருந்தது) சாலிகிராமத்தை அடைந்தபோது மணி 6. வேன் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டதில், உடம்பெல்லாம் விண்டு போகிற மாதிரி வலி!

இது சரிப்படாது என்று மறுநாளே வேனை கேன்சல் செய்துவிட்டேன். ரெகுலர் ஆட்டோவுக்கு ஏற்பாடு செய்வதென்று முடிவெடுத்தேன். அதுவரை நானே தினமும் ஒரு ஆட்டோ பிடித்துக் குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு வந்து விட்டு ஆபீஸ் போனேன். மாலையில் சீக்கிரமே கிளம்பி ஏழு மணி போல் அசோக் நகர் வந்து, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேறு ஆட்டோவில் வீடு திரும்பினேன். நான் வரும் வரையில் என் குழந்தைகள் பெரியவர் முகம்மது இஸ்மாயீலின் வீட்டில், அவரின் பேரக் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களும் அதே பள்ளியில்தான் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். (நடிகர் விவேக்குடன் இருப்பவர்கள் என் இரு குழந்தைகளும், பெரியவர் முகம்மது இஸ்மாயீலின் பேரக் குழந்தைகளும்தான்!)

சீக்கிரமே ரெகுலர் ஆட்டோவுக்கு ஏற்பாடு பண்ணிவிட்டேன். காலையில் ஏழு மணிக்கு வந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய்ப் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் ஆட்டோக்காரரே கொண்டு வந்து வீட்டில் விட்டுவிடுவார். இப்படி இரண்டு மாதம் ஓடியிருக்கும். அதற்குள், வடபழனி பஸ் நிலையம் அருகில், குழந்தைகள் சென்ற ஆட்டோ மூன்று முறை விபத்துக்குள்ளாகிவிட்டது. நல்லவேளையாக, எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

‘இனியும் ரிஸ்க் எடுக்கக் கூடாது’ என்று தீர்மானித்து, பெரியவர் இஸ்மாயீலிடம் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டேன். “மறுபடி உங்களைத் தொந்தரவு பண்றேன்னு நினைக்க வேண்டாம். சொந்த ஃப்ளாட்டுக்குக் குடி போனதிலேர்ந்து மனசே சரியில்லீங்க. அதுக்கேத்தாப்ல ஆக்ஸிடெண்ட் வேற ஆயிடுச்சு. இங்கே எங்கேயாவது இடம் இருந்தா சொல்லுங்க. உடனே குடி வந்துடறேன்” என்றேன்.

அப்போது கடையில் பெரியவரோடு அவரது மூத்த மாப்பிள்ளையும் இருந்தார். அவர் உடனே, “வேற எங்கே போகப் போறீங்க? பேசாம இங்கேயே வந்துடுங்க. நீங்க முன்னே குடியிருந்த போர்ஷனுக்கே குடி வந்துடுங்க” என்றார். பெரியவர் இஸ்மாயீல் லேசான தயக்கத்தோடு, “அங்கே இப்போ என் சின்ன மகன் குடும்பம் இருக்குதேப்பா!” என்றார். மாப்பிள்ளை உடனே, “அதனால என்ன... காலி பண்ணிட்டு மாடிக்கே போகச் சொல்லுங்க. ஏற்கெனவே எல்லாரும் ஒண்ணாதானே இருந்தீங்க” என்று தடாலடியாகச் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “சார்! இன்னும் இருபதே நாள் பொறுத்துக்குங்க. பக்ரீத் வருது. அதுக்கு எல்லாரும் இங்கே கூடுவோம். இடம் தேவைப்படும். அது முடிஞ்சவுடனே, உங்க இடத்தை உங்களுக்கே காலி பண்ணிக் கொடுக்கச் சொல்றேன். நீங்க இங்கேயே வந்துடலாம்” என்றார். ‘உங்க இடத்தை உங்களுக்கே...’ என்னவொரு உரிமை!

என் மனசு நெகிழ்ந்து, கரைந்து போனது. அவருக்குப் பதில் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. வாயைத் திறந்தால் பேச்சே வரவில்லை. வார்த்தைகள் சிக்கிக் குரல் கரகரத்தது. தலையை மட்டும் அசைத்து, நன்றி கூடச் சொல்லத் தோன்றாமல் கிளம்பி வந்துவிட்டேன். நாளேடுகளில் ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ என்று கூசாமல் குறிப்பிடுவது எத்தனை பெரிய அபவாதம்! இனம், மதங்களைக் கடந்த மாமனிதராக விளங்கும் பெரியவர் இஸ்மாயீல் முன்பு நிற்கையில், அப்படியான அடைமொழிகள் ஓர் இந்துவாக என்னைக் கூசச் செய்கின்றன.

பக்ரீத் முடிந்ததும் (அப்போது 20 தேதி வாக்கில் வந்ததென்று ஞாபகம்), முதல் தேதி வரைக்கும் காத்திருக்காமல் மீண்டும் இங்கேயே குடி வந்துவிட்டோம்.

தாய் மடியைத் தஞ்சம் புகுந்த குழந்தைக்கு இருக்கும் உணர்வே எனக்கு அப்போது உண்டாயிற்று.

அதன்பின் மூன்று மாதங்களில், பக்கத்தில் அவர்களுக்கே சொந்தமான இன்னொரு பெரிய போர்ஷன் காலியாக, அதை எங்களுக்கு ஒதுக்கித் தந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை இங்கேதான் குடியிருக்கிறோம்.

என் குழந்தைகள் இருவரும் காலேஜ் சேரும் வரை இங்கே குடியிருப்போம் என்று பெரியவரிடத்தில் சொன்னேன். ஆனால்... சொல்லமுடியாது, அதற்குப் பிறகும்கூட நாங்கள் தொடர்ந்து இங்கே குடியிருப்போமோ, என்னவோ!

இவர்களை விட்டுப் போக எங்களுக்கும் மனசில்லை; எங்களை காலி செய்யும்படி சொல்ல அவர்களுக்கும் விருப்பம் இல்லை!

***
உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலேயே அதன் வாசம் அடிக்கும்!

15 comments:

Rekha raghavan said...

சில பேர்களின் அன்பை பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன் ஆனால் அந்த முஸ்லிம் பெரியவருடனனான உங்களின் "பல கால பந்தம்" பாந்தம்.படித்து முடித்ததும் கண்களில் வழிந்தோடிய நீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

ஷர்புதீன் said...

எல்லோருக்கும் வாய்பதில்லை இந்த மாதிரியான மனிதர்கள்., வாழ்க அவர்களும் , அவர்களின் மனம் விரும்பும்படி நல்ல மனிதர்களாய் இருக்கும் நீங்களும்...

puduvaisiva said...

"உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலேயே அதன் வாசம் அடிக்கும்"

அந்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

CS. Mohan Kumar said...

நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு பிரச்சனைகளை விளக்கும் பதிவு. அந்த நல்ல மனிதர் போன்ற வீட்டு ஓனர்களும் இருப்பது ஆச்சரியமே!

Asiya Omar said...

இந்த மாதிரி மனம் விட்டு சொல்ற அளவுக்கு உங்க பந்தம் இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.இந்த லின்க்கை அநன்யா மஹாதேவன் அனுப்பி வைச்சாங்க.உங்கள் பந்தம் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

படிக்கவே மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கு

அனைவரிடத்திலும் அள்ளிகொள்ளத்துடிப்பது
அன்பைமட்டுமே!

மிக அழகாய் அருமையாய் எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்..

வரதராஜலு .பூ said...

//உன் இதயம் ரோஜா மலராக இருந்தால், உன் பேச்சிலேயே அதன் வாசம் அடிக்கும்!//

அதிர்ஷ்டசாலி நீங்கள். நல்லவர்கள் தொடர்பு கிடைப்பதே இந்த காலக்கட்டத்தில் பெரிய அதிர்ஷ்டம்.

வீடு தொடர்பான வலிகளும் எனக்கு புதியதில்லை. நானும் பிறந்தது முதலே வாடகை வீட்டிலே வசிப்பவன்தான். இன்னும் எனக்கு விடியவில்லை. விடிவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

பத்மநாபன் said...

மனங்கள் ஒன்று கூட ஆரம்பித்து விட்டால் அப்புறம் சச்சரவு என்பதே இருக்காது ... ஒன்று விடாமல் எந்த இகோவும் இல்லாமல் , வசிக்கும் வீட்டிற்கான பிரச்சினைகளையும் , தீர்வுகள் அமைந்த விதத்தையும் சொன்ன விதம் அருமை ...உங்கள் எளிமையும் இனிமையும் படித்து , ஊருக்கு வந்தால் ஒரு நிமிடமாவது உங்களை பார்க்கவேண்டும் என்று தோன்றும் .. இப்பொழுது பெரியவர் இஸ்மாயில் அவர்களும் அந்த லிஸ்டில் .
இதை தட்டும் இந்நேரம் ''அன்பாலே அழகாகும் வீடு '' ,''ஆனந்தம் அதற்குள்ளே தேடு '' இந்த பாடல் என் ஹெட் போனில் தமிழ் உலகம் வலைபதிவிலிரிந்து ஒலிப்பது எதேச்சை யான அற்புதம் .

நாகா said...

Very Nice..!

Vetirmagal said...

Yes, you are good, you attract good people. And you are also blessed to be meeting such good people.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா,

நேரமின்மையால் கடந்த ஒரு மாதமாக உங்கள் இடுகைகள் பக்கம் வர முடியவில்லை. விடுபட்ட அத்தனை இடுகைகளையும் இப்பதான் படித்து முடித்தேன்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.இறுதியில் மிஞ்சுவது மனித நேயமும், நமக்காக நமக்குச் சம்மந்தமில்லாதவர்கள் உதிக்கும் ஒரு சொட்டு கண்ணீரும்தான்.


நேரம் கிடைக்கிறப்ப இதையும் படிச்சிருங்க

http://www.mmabdulla.com/2009/03/blog-post_21.html

GANESH RAJA said...

//தாய் மடியைத் தஞ்சம் புகுந்த குழந்தைக்கு இருக்கும் உணர்வே எனக்கு அப்போது உண்டாயிற்று.// என் மனத்தை நெகிழ்த்திய வரி இது. உங்கள் உள்ளத்தை இதைவிடவும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்ட முடியாது. வாழ்க நீங்கள்! வாழ்க உங்கள் வீட்டு உரிமையாளர் பெரியவர் முகம்மது இஸ்மாயில்!

எம் அப்துல் காதர் said...

"SWEET THINGS FROM SWEET PERSONS" இதற்கு மேல் என்ன சொல்வது. அழகாய் எழுதி எங்களை எல்லாம் கரையாய் கரைத்து விட்டீர்கள். பெரியவரின் போட்டோ இருந்தால் போடுங்களேன்!!!

பொன்னியின் செல்வன் said...

அடடே! ஆச்சர்யகுறி ! விவேக் மீது பத்திரிகையாளர்களுக்கு இருந்த கோபம் போனதாய் சொன்னது உண்மைதான் !
நல்லதே நடக்கட்டும் !

/ “அதனால என்ன... காலி பண்ணிட்டு மாடிக்கே போகச் சொல்லுங்க. ஏற்கெனவே எல்லாரும் ஒண்ணாதானே இருந்தீங்க” என்று தடாலடியாகச் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “சார்! இன்னும் இருபதே நாள் பொறுத்துக்குங்க. பக்ரீத் வருது. அதுக்கு எல்லாரும் இங்கே கூடுவோம். இடம் தேவைப்படும். அது முடிஞ்சவுடனே, உங்க இடத்தை உங்களுக்கே காலி பண்ணிக் கொடுக்கச் சொல்றேன். நீங்க இங்கேயே வந்துடலாம்” என்றார். /

காலத்தினாற் செய்த உதவி... கேட்கவே இனிமையாக இருக்கிறது !

ungalrasigan.blogspot.com said...

நன்றி ரேகா ராகவன்!

நன்றி ஷர்புதீன்!

நன்றி புதுவை சிவா!

நன்றி மோகன்குமார்!

மிக்க நன்றி ஆசிய உமர்! (தமிழில் பெயர் உச்சரிப்பு சரியா?!) அனன்யா மஹாதேவனுக்கும் என் நன்றி!

நன்றி மலிக்கா!

நன்றி வரதராஜுலு! தங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிகள் மனதைக் கனக்கச் செய்தது. தங்களுக்கு விரைவில் நல்ல வீடு கிட்ட என் வாழ்த்துக்கள்! பிரார்த்தனைகள்!

நன்றி பத்மநாபன்!

நன்றி நாகா!

நன்றி வெற்றிமகள்! நான் சந்தித்த நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சந்திக்காத தங்களைப் போன்ற நல்லவர்களின் நட்பும் எனக்கு அதிகம்!

நன்றி அப்துல்லா! அண்ணா என்று பாசத்துடன் விளித்துப் பின்னூட்டம் இட்டது நெஞ்சை நெகிழ்த்தியது. அதற்குத் தனியாக நன்றி சொல்லித் தங்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை.

நன்றி கணேஷ்ராஜா!

நன்றி அப்துல்காதர்!

நன்றி பொன்னியின்செல்வன்!