அனும்மாவிடம் ஒரு கேள்வி!

ன் பெரியப்பாவின் மரணத்துக்காக பெங்களூர் சென்றுவிட்டுச் சென்னை திரும்புவதற்காக பெங்களூர் கன்டோன்மென்ட் ஸ்டேஷனில் காத்திருந்த சமயத்தில், நண்பர் ராஜாவிடமிருந்து வந்த தொலைபேசிச் செய்தி என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.

“அனுராதா ரமணன் இறந்துவிட்டார்..!”

என்னால் நம்ப முடியவில்லை. அவர் மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று தெரியும். ஆனால், மருத்துவமனைகளுக்குப் போய் வருவது அவருக்கு ஊட்டி, கொடைக்கானல் போய் வருவது மாதிரிதானே! எனவே, அதை ஒரு பெரிய விஷயமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு முறையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குணமாகி வீடு திரும்பியதும் எனக்குப் போன் செய்வார். தமது உடல் உபாதைகளையும், எடுத்துக்கொண்ட சிகிச்சைகளையும், மருத்துவமனை அனுபவங்களையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்வார். கேட்கும்போதே பகீர் என்றிருக்கும். அதே சமயம், அதைப் பற்றிய அனுராதா ரமணனின் வர்ணிப்பு என்னைச் சிரிக்கத் தூண்டும். சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில், “என்னங்க... கேட்கவே பயங்கரமா இருக்கே! இதை இப்படித் தமாஷா சொல்றீங்களே?” என்றால், அதற்கும் கலகலவென்று சிரிப்பார் அனுராதா ரமணன். “அவ்ளோதான் ரவி, வாழ்க்கை! பயந்து உட்கார்ந்துட்டிருந்தா மட்டும் சனியன் நம்மை விட்டுப் போயிடுமா சொல்லுங்க?” என்பார்.

தான் பெரிய எழுத்தாளர் என்கிற பந்தாவோ, கர்வமோ சிறிதும் இல்லாதவர் அனு. திடீரென்று போன் செய்வார். “பிஸியா இருக்கீங்களா ரவி? ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லை. சும்மா பண்ணணும்னு தோணித்து. வேணா அப்புறமா போன் பண்றேன்” என்பார். “ஒரு பிஸியும் இல்லை. சொல்லுங்க” என்பேன். அதற்கடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல், தன் மகள்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தது பற்றியோ, தன் பேரக் குழந்தைகளின் சுட்டித்தனங்களைப் பற்றியோ, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்ற அனுபவம் பற்றியோ, ஜெயேந்திரர் பற்றியோ, வீட்டில் அடை செய்தது பற்றியோ, தஞ்சாவூரில் ரங்கோலிக் கோலப் போட்டியைப் பார்வையிடச் சென்றிருந்தது பற்றியோ, ஷாப்பிங் போய் புடவைகள் வாங்கிய அனுபவம் பற்றியோ, சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போய் வந்தது பற்றியோ, ஒரே நாளில் நாலைந்து கச்சேரிகளை அட்டெண்ட் செய்த சாமர்த்தியம் பற்றியோ, கவுன்சலிங்குக்கு வந்த ஒரு பெண் சொன்ன உருக்கமான கதை பற்றியோ, தன் தாத்தா பற்றியோ, (அனுராதா ரமணனின் தாத்தா ஆர்.பாலசுப்பிரமணியன் அந்தக் காலத் திரைப் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். பெரிய மீசையும், ஆகிருதியான உடம்புமாக பீமசேனன் போல இருப்பார் என்று அனுராதா அவரைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்), வீட்டில் மணித்தக்காளி வத்தக் குழம்பு செய்தது பற்றியோ, தனது சின்ன வயது அனுபவங்கள் பற்றியோ... சகலமான விஷயங்களைப் பற்றியும் கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். ரொம்ப வெகுளியான மனுஷி. இன்னாரிடம் இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்பதே தெரியாமல் சகலத்தையும் ஓட்டை வாயாக இப்படிக் கொட்டிவிடுகிறாரே என்று நான் நினைப்பதுண்டு. ஒருவேளை, தன் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் மட்டும் அவர் பேசும் விதமே இப்படித்தானோ என்னவோ!

என் தந்தையாரும், தாயாரும் அனுராதா ரமணனின் எழுத்துக்குப் பரம ரசிகர்கள். இதை அனுராதாவிடம் ஒரு முறை பேச்சுவாக்கில் சொன்னபோது, மற்ற பெரிய எழுத்தாளர்கள் போன்று கெத்தாக, ‘அப்படியா! நைஸ்!’ என்றெல்லாம் பந்தாவாகச் சொல்லாமல், தன் மகிழ்ச்சியை வெள்ளந்தியாக வெளிப்படுத்தினார். அவரது சிறுகதைகள் அனைத்தும் மூன்று கனமான தொகுதிகளாக வந்திருந்தன. அந்த மூன்று புத்தகங்களையும் என் பெற்றோருக்குப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அவை வந்த ஓரிரு மாதங்களுக்குள், அவற்றில் இருந்த மொத்தச் சிறுகதைகளையும் படித்துவிட்டார்கள் என் பெற்றோர்.

போன வருட நவம்பரில், ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருந்த ’நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு’ வரிசையில் வெளியிடுவதற்காக இவரிடம் ஒரு கதை கேட்டேன். அப்போது, இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகச் சிறந்த எழுத்தாளர், ‘நாவல்களின் ராணி’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்தவர், (இவரது பல நாவல்கள் திரைப்படமாகியுள்ளன; பல கதைகள் தொலைக்காட்சி மெகா சீரியல்கள் ஆகியுள்ளன). ஆனாலும், அந்தக் கர்வம் சிறிதும் தலைக்கு ஏறாமல், இப்போதுதான் அறிமுகமான புதிய எழுத்தாளர் போல மகிழ்ந்து, “அப்படியா! என் சிறுகதையா! நீங்க கேட்டதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா எழுதித் தரேன், ரவி” என்றார். அடுத்த மூன்றே நாட்களில் அற்புதமான ஒரு சிறுகதையை எழுதித் தந்தார். அது ’இரவல் தொட்டில்’ என்னும் தலைப்பில், 18.11.09 தேதியிட்ட விகடன் இதழில் வெளியாயிற்று.

நேற்று எழுதத் தொடங்கிய புது எழுத்தாளருக்கும், தன் கதையைப் பத்திரிகையாளர்கள் சுருக்கினால், மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். சிலர், “எவ்வளவு குறைக்கணும்னு சொல்லுங்க. நானே குறைச்சுத் தரேன்” என்பார்கள். அது எழுத்தாளரின் உரிமை என்கின்ற போதிலும், ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கு இது கடுப்பாக இருக்கும். “இங்கே வேலை செய்யறவங்க எல்லாம் என்ன சும்பனா? எங்கே எடிட் பண்ணிக் குறைக்கணும்னு கூடத் தெரியாமயா வந்து வேலை செய்துட்டிருக்கோம்?” என்று மனசில் வெறுப்பு மூளும். அனுராதா ரமணனைப் பொறுத்தமட்டில், அவரது கதையை எத்தனைச் சுருக்கினாலும் கோபப்படவே மாட்டார். சொல்லப்போனால், “நானே புதுசா ஒரு வாசகியா படிக்கிறப்போ, க்ரிஸ்ப்பா இருந்துது ரவி! எனக்கு வாய் மட்டுமில்லே, கையும் கொஞ்சம் நீளம். வளவளன்னு எழுதிக்கிட்டே போயிடுவேன். எழுத்துக்கு லகான் போடத் தெரியாது. நீங்க கரெக்டா எடிட் பண்ணி, வேண்டாத குப்பையெல்லாம் தூக்கியிருந்தீங்க. தேங்க்ஸ்!” என்று பாராட்டவும் செய்வார். “நானே ஒரு சில பத்திரிகைகளுக்கு ஆசிரியரா இருந்திருக்கேன்கிறதால, ஒரு பத்திரிகை ஆசிரியருடைய பொறுப்பு பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்பார்.

என் வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்துத் தன் அபிப்ராயங்களைச் சொல்வார். சில மாதங்களுக்கு முன் சில நல்ல வலைப்பூக்களைத் தனக்கு அறிமுகப் படுத்தும்படி கேட்டிருந்தார். நான் அதிகம் படிக்கும் ஏழெட்டு வலைப்பூக்களின் லின்க்கை அவருக்கு இ-மெயிலில் அனுப்பியிருந்தேன். கூடவே, “நீங்களே ஒரு பிளாக் தொடங்கி எழுதலாமே?” என்றேன். உடனே, பிளாக் ஆரம்பிப்பது எப்படி, அதற்கு ஏதாவது பணம் கட்ட வேண்டுமா என்று எல்லாவற்றையும் விசாரித்தார். “உங்க பிளாக் டிஸைன் நல்லாருக்கு ரவி” என்றார். “எனக்கு எதுவும் தெரியாது மேடம்! எல்லாம் என் பசங்க பண்ற வேலை. நான் வெறுமனே கம்போஸ் பண்ணி, போஸ்ட் பண்றதோட சரி! என் பையனையும் பெண்ணையும் உங்க வீட்டுக்கு ஒரு நாள் அழைச்சுட்டு வரேன். உங்க விருப்பப்படியே ஒரு பிளாக் ஆரம்பிச்சுக் கொடுக்கச் சொல்றேன்” என்றேன். “முதல்ல எழுத்துக்களைக் கம்போஸ் பண்ணி, எப்படி ஸேவ் பண்றதுன்னு கத்துக்கறேன். அப்புறம் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க” என்றார்.

சென்ற ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, என் மாமியார் இறந்த சில மணி நேரத்துக்குள், அனுராதா ரமணன் வழக்கம்போல் எனக்கு போன் செய்திருந்தார். கலகலப்பாக ஏதோ பேசத் தொடங்கிய அவர் பேச்சில் குறுக்கிட விரும்பாமல், மாமியார் இறந்த செய்தியைக் கடைசியில் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போல் பேசியிருப்பார். முடிக்கப்போகிற நேரத்தில் என் செல்போனில் சார்ஜ் தீர்ந்துபோய் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதை அத்தோடு மறந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து, மீண்டும் அனுராதா ரமணனிடமிருந்து போன். “என்ன ரவி, உங்க மாமியார் இறந்துட்டாங்களா? உங்க பிளாகைப் படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் அன்னிக்குப் பார்த்து வளவளன்னு என் சுய புராணத்தை அத்தனை நேரம் சொல்லிட்டிருந்தேனே... நீங்களாவது குறுக்கிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கக்கூடாதா? எனக்கு ரொம்ப கில்ட்டியா இருந்துது” என்று ஆதங்கப்பட்டார். “இல்லை மேடம்! நீங்க பேசும்போது எனக்குக் குறுக்கிடத் தோணலை. முடிக்கும்போது சொல்லிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள கட்டாயிடுச்சு!” என்றேன். அதன்பிறகு அவர் என் மனைவியிடம் செல்போனைக் கொடுக்கச் சொல்லி, ஒரு தாய் போன்று அத்தனைக் கரிசனமாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக்கொண்டு இருந்தார்.

சமையல் செய்வதில் அனுராதா ரமணன் எக்ஸ்பர்ட்! தனக்கு நெருக்கமான நண்பர்களையெல்லாம் ஒரு கெட்-டு-கெதர் போல அடிக்கடி தன் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்குத் தன் கையால் சமைத்து, உணவு பரிமாறி மகிழ்வதில் அத்தனை ஆனந்தம் அவருக்கு. நவராத்திரி, புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் என்னைக் குடும்பத்தோடு தன் வீட்டுக்கு விருந்துண்ண வரும்படி அன்போடு அழைப்பார். “ஒருநாள் கண்டிப்பாக வருகிறேன், மேடம்!” என்று நானும் சொல்லிக்கொண்டு இருந்தேன். போன மாதமும் அவர் அப்படி அழைத்தார்.

சாவி சாரும் இப்படித்தான் எங்களை விருந்துக்கு அழைத்துக்கொண்டே இருந்தார். நானும் வரேன் சார், வரேன் சார் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது சார், “ஒரு நாள் போகலாம், ஒரு நாள் போகலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தா ஒருநாளும் போக முடியாது ரவி. என்னிக்குன்னு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அப்பத்தான் உனக்குப் போகணும்னு தோணும்” என்று சொல்லி, சாவி சாரே ஒரு தேதியைக் குறிப்பிட்டு, ”அன்னிக்கு வரியா?” என்று கேட்டார். “சரி சார்” என்று ஒப்புக்கொண்டு, அன்றைக்குக் குடும்பத்தோடு அவர் வீட்டுக்குப் போனேன். எங்களை அழைத்துக்கொண்டு ஒரு ஸ்டார் ஓட்டலுக்குச் சென்றார். பலமான விருந்து அளித்தார். பின்னர் அவர் காரிலேயே அவர் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் என் குழந்தைகளுக்கு நிறைய ஃபாரின் சாக்லெட்டுகளையும், விளையாட்டுப் பொருள்களையும் பரிசளித்தார். தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் கழற்றி “என் ஞாபகார்த்தமா வெச்சுக்கோ” என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். நாங்கள் பேசிக்கொண்டு இருக்க, என் குழந்தைகள் அவர் வீட்டு கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தன. மாலை 3 மணியளவில் அவர் காரிலேயே பீச்சுக்குப் போனோம். ஒரு மணி நேரம் போல் அங்கிருந்துவிட்டுப் பின்னர் அவர் வீட்டுக்கு வந்தோம். பின்பு எங்களைத் தன் காரிலேயே எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதை அனுராதா ரமணனிடம் சொல்லி, “அது போல் நாம ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணிப்போம் மேடம்! அப்பத்தான் எனக்கும் வரத் தோணும்” என்றேன். அதற்குள் என் மனைவிக்கு அறுவைச் சிகிச்சை அது இது என்று நாட்கள் ஓடிவிட்டன. கடைசி வரைக்கும் அனுராதா ரமணன் கையால் அன்போடு பரிமாறி, சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை எங்களுக்கு.

எப்போதும் முழு மேக்கப்பில் காணப்படுவார் அனுராதா ரமணன். நாம் உற்சாகமாக இருக்கிறோம் என்பதைப் பிறருக்கு வெளிப்படுத்துவது மட்டுமின்றி, எதிராளியையும் உற்சாகப்படுத்துகிற மந்திரம் இந்த மேக்கப்தான் என்பது அவரது நம்பிக்கை. இறந்த பின்னரும் அதே போல அழுத்தமான உதட்டுச் சாயம், கண் மை, நெற்றித் திலகம், வகிட்டுக் குங்குமம் என முழுமையான மேக்கப்பில், கண்ணாடிப் பெட்டிக்குள் அனுராதா ரமணன் படுத்திருந்ததைப் பார்த்தபோது, சும்மா கண் மூடிப் படுத்து ஓய்வு எடுக்கிறவர் போன்றுதான் இருந்ததே தவிர, அவர் இப்போது நம்மிடையே இல்லை என்றே நம்ப முடியவில்லை.

தன் உடலைக் கண்டு யாரும் முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காகவே அனுராதா ரமணன், தான் இறந்த பின்பு தன் முகத்துக்கு மேக்கப் போடவேண்டும் என்பதைத் தனது கடைசி விருப்பமாகச் சொல்லியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

மறைந்த அனுராதா ரமணன் பற்றி விகடனுக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தார் இணையாசிரியர் திரு.கண்ணன். கனத்த நெஞ்சோடு எழுதித் தந்துள்ளேன். மேலே சொன்ன பர்சனல் சம்பவங்கள் எதுவும் அற்ற, நினைவாஞ்சலி அது!

மேற்படி விகடன் இதழ் வெளியான பிறகு, ‘அனும்மா’ என்ற தலைப்பில் நான் எழுதித் தந்த அந்த நினைவுக் கட்டுரையை இதே வலைப்பூவில் பதிவிடுகிறேன்.

அதிருக்கட்டும்... அனும்மாவிடம் ஒரு கேள்வி!

அனும்மா! போனை எடுத்தா சளைக்காம எல்லாத்தையும் வெளிப்படையா, நேரம் போறது தெரியாம கலகலப்பா பேசிட்டே இருப்பீங்களே அனும்மா! நீங்க பிரியா விடை பெறப் போறீங்கன்றதை மட்டும் சஸ்பென்ஸா வெச்சிருந்து, ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலே போயிட்டீங்களே, ஏன் அனும்மா? சாப்பிட வரேன், சாப்பிட வரேன்னு சொல்லிக் கடைசி வரைக்கும் உங்க வீட்டுக்கு வராமலே இருந்துட்டேனே, அந்தக் கோபமா அனும்மா?

***

உங்கள் வார்த்தை, உங்கள் வேலை, உங்கள் நண்பர் - மூவரிடமும் உண்மையாக இருங்கள்!

20 comments:

MinMini.com said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

ஜெய்லானி said...

:-(((

Anonymous said...

ஒப்புக்கு எழுதப்பட்ட பதிவு அல்ல. இழைந்து நெகிழ்ச்சியோடு எழுதி இருக்கிறீர்கள்.
குங்குமத்தில் டிசம்பர் சீஸன் இசை விமர்சனத்தை தன் பெயரைப் போட்டுக்கொள்ளாமல் எழுதியதை நான் மிகவும் ரசித்துப் படித்து. மிகவும் கஷ்டப்பட்டு எழுதியது யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவற்றில் நகைச்சுவை பிரமாதமாக இருந்தது.
அவர் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.
-- பி. எஸ்.ஆர்

Kolipaiyan said...

Heart touching post!

புதுகைத் தென்றல் said...

நெஞ்சைத் தொட்ட பதிவு

Shankar said...

Dear Ravi,
This is my visit to your site. I share your grief.The separation of a loved one will always linger very long. God give you the courage to overcome this tragedy.I like your simple style of writing.A fitting tribute.
Shankar

சீதாம்மா said...

அனும்மா ஒரு குழந்தைப் பெண்.
அன்புக்கு ஏங்கும் அற்புதப் பெண்
ஏமாற்றத் தெரியாத் ஏமாளிப் பெண்.
எதிர் நீச்சல் போட்ட துணிச்சல் பெண்
என்னை அழ வைத்த மட்ல்
சாவி என் நெருங்கிய நண்பர்.
அவர் நினைவையும் எழுப்பிவிட்ட மடல். இழப்புகளைத் தாங்க முடியவில்லை
சீதாம்மா

மஞ்சூர் ராசா said...

ஒரு மனிதாபிமானமுள்ள தைரியம் நிறைந்த மிகச்சிறந்த பெண் எழுத்தாளரை தமிழகம் இழந்துவிட்டது.

உங்களது டைரியின் நினைவுச்சரங்கள் மனதை மிகவும் கனக்க செய்துவிட்டது.

அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே இந்த பதிவை படிக்கவும். உங்களால் ஏதேனும் செய்ய முடியுமா என பார்க்கவும்
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/05/blog-post.html

மஞ்சூர் ராசா said...

மிகவும் நெகிழ்ச்சியான பதிவும்.. மனம் கனத்தது

ஹுஸைனம்மா said...

//மருத்துவமனைகளுக்குப் போய் வருவது அவருக்கு ஊட்டி, கொடைக்கானல் போய் வருவது மாதிரிதானே!//

உண்மைதான் சார்!! அவர் எழுத்துக்கள் அப்படித்தான் இருக்கும்!!

அன்புடன் அருணா said...

அஞ்சலிகள்.

பத்மநாபன் said...

அனும்மா -- துணிச்சல் மிக்க எழுத்தாளர்..இளநர்களின் பிரச்சினைகளுக்கு தெளிவான அறிவுரை வழங்கி வந்தவர்..சமிப காலமாக நகைச்சுவையும் நன்றாக எழுதிவந்தார்.சற்று நாட்களுக்கு உங்கள் ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் பார்த்து, வலையுலகில் தடம் பதிப்பார் என்று எதிர் பார்த்தேன்..இயற்க்கைக்கு அவசரம்.அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்....

எம் அப்துல் காதர் said...

(:-(((

R. Jagannathan said...

அனேகமாக தமிழ் பத்திரிகை வாசிக்கும் அனைவரும் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இன்று இல்லை என்பது ‘நிஜம்’. தன் உடல் நிலையை சகஜமாக எடுத்துக்கொண்டவர் மட்டும் இல்லை, இடுக்கண் வருங்கால் நகுக என்று ஏற்றுக் கொண்டவர். நகைசுவையான, மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் எழுத்துக்களுக்கு அவர் ஒரு உதாரணம். அவர் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். - ஜகன்னாதன்

ரவிபிரகாஷ் said...

மின்மினி டாட் காம் பார்த்தேன். அதில் எப்படி இடம் பிடிப்பது என்று தெரியவில்லையே! காலேஜில் இன்ஜினீயரிங் ஸீட் வாங்குவதைவிட அல்லவா சிரமமாக இருக்கிறது! :)

ரவிபிரகாஷ் said...

குறியீடுகளாலேயே வருத்தத்தை வெளிப்படுத்திய ஜெய்லானிக்கு நன்றி!

ரவிபிரகாஷ் said...

கடுகு சார்! படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி, சார்!

ரவிபிரகாஷ் said...

கோழிப்பையன், மிக்க நன்றி!

நன்றி புதுகைத் தென்றல்!

நன்றி ஷங்கர்!

நன்றி சீதாம்மா!

மஞ்சூர் ராசா! மிக்க நன்றி!

ரவிபிரகாஷ் said...

ஹுசைனம்மா! நன்றி!

அன்புடன் அருணா! நன்றி!

பத்மநாபன்! நன்றி!

நன்றி அப்துல்காதர்!

ஆர்.ஜெகன்னாதன்! நன்றி!