சிரித்தார் சிநேகிதி; அழுதேன் நான்!

ருபது ஆண்டுக் காலமாக என் நட்பு வட்டத்துக்குள் இருக்கும் நெருங்கிய சிநேகிதி ஒருவர் (ப்ளீஸ், பெயர் வேண்டாமே!) இன்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வந்ததற்கான முக்கியக் காரணம், மறைந்த என் மாமியார் பற்றித் துக்கம் விசாரிப்பது.

மாமியார் மறைந்த அன்றைக்கே தொலைபேசி மூலம் அவருக்குச் செய்தி சொல்லியிருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குள் வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. பிறகு நானும் மறந்துவிட்டேன். நேற்று வேறு ஒரு விஷயத்துக்காக யதேச்சையாக போன் செய்திருந்தார். பேச்சோடு பேச்சாக, “வரேன்னு சொன்னீங்க... அப்புறம் எங்கே ஆளையே காணோம்?” என்றேன், கொஞ்சம் கேலி தொனியில். “வரணும் சார், ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் வரணும்னு நெனைச்சுப்பேன். முடியாம போயிடும். நாளைக் காலையில் கண்டிப்பா வரேன்” என்று தன்மையான குரலில் சொன்னார்.

காலையில் அவர் வரவில்லை. மதியம் மூன்றரை மணி வரையிலும் வரவில்லை. நான் ஓவியர் மாயா வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டேன். அங்கிருந்து நண்பர் மார்க்கபந்து வீட்டுக்குப் போய்ப் பேசிக்கொண்டு இருந்தபோது, வீட்டிலிருந்து போன்கால் வந்தது, அந்தச் சிநேகிதி வந்து எனக்காகக் காத்துக்கொண்டு இருப்பதாக. உடனே கிளம்பிப் போனேன் வீட்டுக்கு.

அவரின் தோற்றமே வித்தியாசமாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் பார்த்ததைவிட குண்டாக இருந்தார். தலைமுடி வழக்கத்துக்கு மாறாக ஏதோ போல் இருந்தது. அவரின் பருமனை நட்பு ரீதியில் சகஜமாக கேலி செய்து பேச, வாய் வரை வார்த்தை வந்துவிட்டது. ஆனால், கிளம்பிப் போகிறபோது கேட்கலாம் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

என் மாமியார் பற்றி என் மனைவியிடம் இதற்கு முன் நெடு நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் அவர். நான் போனதும் என்னிடம் ஓரிரு வார்த்தைகள் அது பற்றிப் பேசிவிட்டு, குழந்தைகளின் படிப்பு பற்றி விசாரித்துவிட்டு, தான் வந்த வேறொரு வேலை சம்பந்தமாக என்னிடம் அரை மணி பேசிவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார். அதுவரையில் அவரின் தோற்றத்தைத் தவிர, அவரின் நடையுடை பாவனைகளிலோ, கலகலப்பான பேச்சிலோ, சிரித்த முகத்திலோ எந்தவொரு மாற்றமும் எனக்குத் தெரியவில்லை.

விடைபெறுகிற சமயத்தில், “உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். நான் நாளைக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகப் போறேன். ஒரு சின்ன ஆபரேஷன்” என்றார் அதே சிரித்த முகபாவத்தோடு. நான் வழக்கமாகப் பெண்களுக்கு நடக்கும் டி-அண்ட்-சி ஆபரேஷனாகவோ அல்லது ஹிரண்யா (குடலிறக்கம்) ஆபரேஷனாகவோ இருக்கும் என்று எண்ணியபடியே அது பற்றி விசாரித்தேன்.

“எனக்கு பிரெஸ்ட்ல கான்சர். ஆபரேட் பண்ணி ரிமூவ் பண்ணலேன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதான்” என்றார் கொஞ்சமும் பதற்றமில்லாத குரலில். அவர் சொல்கிற தொனியைப் பார்த்தால், வழக்கமாக அவர் சும்மா பொய் சொல்லி விளையாடுகிற மாதிரி, ஏதோ ஏப்ரல் ஃபூல் செய்கிற மாதிரிதான் இருந்ததே தவிர, கொஞ்சம்கூட நம்புகிற மாதிரியே இல்லை. “என்ன சொல்றீங்க?” என்றேன் புரியாமல்.

“ஆமா ரவி சார், உண்மைதான்! என் தலையைப் பார்த்தா உங்களுக்கு வித்தியாசம் தெரிஞ்சிருக்குமே! ரெண்டு மாசமா கீமோ தெரபி கொடுத்ததுல முடியெல்லாம் கொட்டிப் போச்சு. நல்ல வேலையில இருக்கேன். நாலு பேரைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கு. மொட்டைத் தலையோட எப்படிப் போறது? எனக்குப் பரவாயில்லை; போயிடுவேன். பார்க்கிறவங்க முகம் சுளிப்பாங்களே, அதுக்காகத்தான் என் கணவர் கிட்டே கூடச் சொல்லாம, ஒரு நண்பரைக் கூட்டிக்கிட்டு நேரே வட பழனி போனேன். அங்கே வடபழனி முருகனுக்கு, என் தலையில கொஞ்ச நஞ்சமிருந்த முடியையும் துப்புரவா மொட்டையடிச்சுக் காணிக்கை கொடுத்துட்டேன். அங்கேயே எனக்குத் தெரிஞ்ச தோழி கடையில ஏழாயிரம் ரூபா கொடுத்து விக் வாங்கி வெச்சுக்கிட்டேன்” என்றார்.

“எப்படித் திடீர்னு... போன தடவை வந்திருந்தப்போ கூட இது பத்தி ஒண்ணும் சொல்லலையே?” என்றேன், மனசுக்குள் உருவான என் பதற்றத்தைத் தணித்துக் கொண்டு.

“எனக்கும் அப்ப தெரியாது. ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பண்ற மாமோகிராம் டெஸ்ட்டை ஆயிரம் ரூபாய்க்குப் பண்றதாக ரெண்டு மாசத்துக்கு முன்னே ஒரு லேப்ல ஆஃபர் போட்டிருந்தாங்க. நமக்குத்தான் எதைத் தள்ளுபடியில கொடுத்தாலும் போய் வாங்கற புத்தியாச்சே! உடனே போய் பண்ணிக்கிட்டேன். மார்புக்குள்ள கான்சர் கட்டி ஃபார்ம் ஆகியிருக்கிறதா காட்டிடுச்சு. முதல்ல எனக்கும் பதற்றமாதான் இருந்தது. அதனால என்ன செய்ய முடியும்? ராய் மருத்துவமனைக்குப் போனேன். அங்கே கன்ஃபர்ம் பண்ணி, உடனே ஆபரேட் பண்ணி ரிமூவ் பண்ணிடறதுதான் பெஸ்ட்னு சொல்லிட்டாங்க. அங்கேயே கீமோ தெரபியும் கொடுத்தாங்க. கீமோ தெரபின்னா வேற ஒண்ணுமில்லை. சலைன் வாட்டர் மாதிரி ஏதோ ஏத்தினாங்க. இந்த ரெண்டு மாசத்துல நாலு தடவை அப்படி கீமோ தெரபி பண்ணிக்கிட்டேன். ஒரு தடவை கீமோ தெரபி பண்ணிக்கிட்டா அடுத்த ஒரு வாரத்துக்குச் சோறு திங்க முடியாது. வாய், வயிறு எல்லாம் புண்ணாயிடும். உடம்பெல்லாம் எரியுற மாதிரி இருக்கும். வெறும் எளநி, ஜூஸ் இதுதான் ஆகாரம். தயிர்சாதம் மட்டும் சாப்பிடலாம். உடம்பு பாதியா குறைஞ்சுடும்னாங்க. ஆனா நான் பாருங்க, ரெண்டு சுத்துப் பெருத்துட்டேன். ஒரு தடவை கீமோ தெரபி பண்ணிக்க ரூ.16,000 செலவு. ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்சம்! நாளைக்கு ஆபரேஷன். ஒரு வாரம் அங்கே இருக்க வேண்டியிருக்கும்...”

அவர் சொல்லச் சொல்ல எனக்கு நடுக்கமாக இருந்தது. அவரோ ஏதோ கொடைக்கானல் டூர் போய் வந்த அனுபவத்தை விவரிப்பது போலக் கேஷுவலாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

“ஆபரேஷன் சரி, அதுக்கப்புறம் ஒண்ணும் பயமில்லையே? டாக்டர்கள் என்ன சொல்றாங்க?” என்று கேட்டேன்.

“ஆரம்பத்துலேயே கண்டுபிடிச்சுட்டீங்களே, நீங்க ரொம்ப லக்கின்னாங்க. பெரும்பாலான கேஸ்கள்ல ரொம்ப முத்தின பிறகுதான் தெரியவே தெரியுமாம். ஏன்னா, அதுவரைக்கும் எந்த அறிகுறியும் தெரியாது; வலியும் இருக்காது. அதுக்கப்புறம் ஆபரேட் பண்ணினாலும், அது வேற இடங்களுக்குப் பரவுறதுக்கு வாய்ப்புண்டாம். ஆரம்ப நிலையிலேயே நான் கண்டுபிடிச்சுட்டதால, பிரெஸ்ட்டை ரிமூவ் பண்ணி எடுத்துட்டா, அதுக்கப்புறம் நான் நூறு வயசுகூட வாழ்வேனாம். ஒரு பயமும் இல்லைன்னாங்க” என்று சொல்லிச் சிரித்தார்.

என்னால் பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே அழுதேன்!

என் மனைவியால் தாங்க முடியவில்லை. அவரை அணைத்துக் கொண்டு, “கண்டிப்பா நீங்க நூறு வயசு வாழ்வீங்க. அன்னை கைவிடமாட்டார்” என்று விசும்பினாள். “நீங்க சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்” என்றாள்.

“கவலைப்படாதீங்க உஷா! நூறு வயசு வரைக்கும் நான் அப்பப்போ வந்து உங்களை பிளேடு போட்டுக்கிட்டு இருப்பேன். அடுத்த வாரம் நானே வந்து உங்களை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். வரேன் ரவி சார், உஷாவுக்கு தைரியம் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடி கையசைத்துவிட்டு ஆட்டோவில் கிளம்பிப் போனார் அந்தச் சிநேகிதி.

நான் பேச்சற்று, பதிலுக்குக் கையசத்து வழியனுப்பினேன்.

***
சந்தோஷத்தை வாங்க முயலாதீர்கள்; அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள்; அது சுலபம்!
.

19 comments:

Paleo God said...

என்ன சொல்றதுன்னே தெரியல சார்... நடுமுதுகில் இன்னும் நடுக்கம் தீரவில்லை... அவர் நல்லபடியாய் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ பிராத்திக்கின்றேன்.

பீர் | Peer said...

உங்கள் சிநேகிதியுடைய தன்னம்பிக்கை அவரை நிச்சயம் பல்லாண்டுகள் வாழவைக்கும். எனது பிராத்தனையில் அவரையும் சேர்த்துக்கொள்கிறேன்.

வெற்றி said...

உண்மையாவே நெகிழ வைக்குற பதிவு சார்..I also had a same experience wit my chithi..but she is nomore now..:-(
உங்கள் சிநேகிதி விரைவில் குணமடைவார்...

Chitra said...

மனதில் நெகிழ்வு - மனதில் நம்பிக்கை - மனதில் பிரார்த்தனை - மனதில் சந்தோஷம் - மனதில் படிப்பினை ...... இன்னும் எத்தனையோ ........உங்கள் இடுகையை படித்த பின்.

Unknown said...

ungal nanpi thanampikaigu nall vallthugal!! 100 year valla andavanai vandugeran

பிரேமி said...

உங்கள் சிநேகிதி பூரண குணமடைய ஸ்ரீ அன்னை அவர்கள் ஆசீர்வதிக்கட்டும்.

மகா said...

எல்லாம் நல்லபடியா நடக்க இறைவனை பிரத்திக்கிறேன் .....

பின்னோக்கி said...

2 நாட்களுக்கு முன், கிரிக்கெட் விளையாடப் போய், காலில் அடிபட்டு, லிகமெண்ட் பிராப்ளம் என்று 3 வார பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னதில் வருத்தத்தில், எனக்கு ஏன் இப்படி என்று நினைக்கும் போது, இந்த கட்டுரை. மன உறுதி அவரை வாழ வைக்கும்.

கே. பி. ஜனா... said...

படித்து முடித்ததும் நானும் பேச்சற்றுப் போனேன். அந்த சிநேகிதி நலம் பெற்று நூறாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பரிசல்காரன் said...

சிலர் பாடமாக வாழ்கிறார்கள். உங்கள் தோழி அந்த வகை! ஹாட்ஸ் ஆஃப் டு ஹர்!

கிருபாநந்தினி said...

என்னை அழ வெச்சுட்டீங்க ரவி சார்! பெயர் தெரியா அந்தச் சகோதரி அறுவைச் சிகிச்சை முடிந்து பூரண குணமடைய எல்லா மதத்துக் கடவுளர்களையும் வேண்டிக்கறேன்! :(

பொன்னியின் செல்வன் said...

// (ப்ளீஸ், பெயர் வேண்டாமே!) // வாழ்க கண்ணியம்.

சார், விரைவில் அவர்கள் குணம் பெறுவார்களாக.

ஜீவன்பென்னி said...

நிச்சயமா அவங்களோட தன்னம்பிக்கையே அவங்கள நலமுடன் வாழவைக்கும்.

கிறிச்சான் said...

கண்டிப்பா அவங்க என் prayer 'ல இருக்காங்க...

May God Bless her !

ungalrasigan.blogspot.com said...

@ பிரார்த்தனைக்குக் கண்டிப்பாகப் பலன் உண்டு பலா பட்டறை! அதிலும் உங்களைப் போன்று முகம் தெரியாதவர்கள் மனமுவந்து செய்யும் பிரார்த்தனைக்கு இரு மடங்கு பலன் உண்டு! நன்றி!

@ பீர்! தங்கள் பின்னூட்டத்தின் முதல் வரி 100 சதவிகித உண்மை! உங்கள் பிரார்த்தனை என் சிநேகிதியை நல்ல முறையில் வாழ வைக்கும்!

@ வெற்றி! தங்களின் வரவுக்கும், வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி!

@ சித்ரா! உங்கள் பின்னூட்டத்தைப் படித்த பின் நன்றி - மனதில்!

@ நன்றி சிதம்பரராஜன்!

@ சந்தோஷி! அனைவரையும் காப்பார் மகாஸ்ரீ அரவிந்த அன்னை!

@ மகா! தங்களின் பிரார்த்தனை மகா சந்தோஷத்தையும், மகா தைரியத்தையும் கொடுக்கிறது. நன்றி!

ungalrasigan.blogspot.com said...

பின்னோக்கி! உங்களின் கட்டுரையைப் படித்தேன். துன்பம் அனுபவித்ததைக்கூட நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீர்கள். இதற்கு உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையுமே காரணம். உங்களின் மன உறுதி என் சிநேகிதியிடமும் உள்ளது. தாங்கள் சொன்னதுபோல் அது அவரைத் துயர்களிலிருந்து விடுவிக்கும். பின்னூட்டத்துக்கு நன்றி!

ungalrasigan.blogspot.com said...

@ பிரார்த்தனைக்கு மிக்க நன்றி திரு.கே.பி.ஜனார்த்தனன்!

@ உண்மைதான் பரிசல்! நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு பாடம் கற்பேன். அந்த வகையில் இந்த சிநேகிதியிடமிருந்து தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பெற முனைவேன்! தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி!

@ மிக்க நன்றி கிருபாநந்தினி!

ungalrasigan.blogspot.com said...

@ நன்றி பொன்னியின் செல்வன்!

@ ஜீவன்பென்னி! தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

@ தங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி ஜெர்ஷோம்!

Ananya Mahadevan said...

சார்,
இவங்க இப்போ எப்படி இருக்காங்க? இவங்க என் பிரார்த்தனையிலும் கண்டிப்பா இருப்பாங்க. இவங்களை மாதிரி மன தைரியமும் determination நும் படைத்த பெண்கள் தான் என் போன்றவர்களுக்கு ஒரு ரோல் மாடல். அவர் நிச்சயம் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பேன்.