டி.எம்.எஸ். என்கிற இமயத்துடன்..!

ன் இனிய நண்பரும், பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்த முன்னாள் மாணவருமான இயக்குநர் விஜயராஜைப் பற்றி முன்பே ஒருமுறை இந்த வலைப்பூவில் எழுதியுள்ளேன்.

என் மனம் கவர்ந்த பாடகர் ஏழிசை மன்னர் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மெகா சீரியலாக எடுத்துக்கொண்டு இருக்கிறார் அவர். ரஜினியை பேட்டி எடுத்து முடித்ததும்... ஏ.ஆர்.ரஹ்மானைப் பேட்டி எடுத்து முடித்ததும்... இளையராஜாவை பேட்டி எடுத்து முடித்ததும்... என சீரியலின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என்னோடு உடனுக்குடன் பகிர்ந்து கொள்வார். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் மூன்று நான்கு மணி நேரத்துக்கு மேல் பாடகர் டி.எம்.எஸ்ஸின் பெருமைகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்போம். அதைத் தாண்டி எங்களுக்குப் பேச வேறு விஷயம் இருக்காது; தேவையும் படாது!

சென்ற வாரத்தில் அது போல் ஒரு நாள் போன் செய்திருந்தார். இந்த சீரியலுக்காக இந்தி இன்னிசைக் குயில் லதா மங்கேஷ்கரையும் டி.எம்.எஸ்ஸையும் சந்திக்க வைத்துப் பேச வைத்திருக்கிறாராம். இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லிவிட்டு, “மும்பையிலிருந்துதான் கிளம்பிட்டேன். நாளை சனிக்கிழமை மாலைக்குள் சென்னையில் இருப்பேன். வந்ததும் மறுபடி உங்களோடு தொடர்பு கொள்கிறேன்” என்றார்.

“பிரயாண அலைச்சல்ல வந்திருப்பீங்க. பேசாம போய் ரெஸ்ட் எடுங்க. ஞாயிற்றுக் கிழமை நிதானமா பார்த்துக்கலாம்!” என்றேன்.

“இதிலென்ன அலைச்சல் சார்? நானா மூச்சிரைக்க ஓடி வரப் போறேன்? ரயில்தானே சுமந்துக்கிட்டு வருது! நீங்க டி.எம்.எஸ்ஸின் எத்தனைப் பெரிய ரசிகர்னு எனக்குத் தெரியும். வாங்க, எடுத்த பதிவுகளைப் போட்டுக் காண்பிக்கிறேன்” என்றார்.

அதன்படியே, சென்னை வந்த மறு நிமிஷமே தொடர்பு கொண்டார். “சார், இதை லேபுக்குப் போய் பிரின்ட் போட்டுக்கிட்டு நேரே ஸ்ரீராம் ஸ்டுடியோ வந்துடறேன். நீங்களும் வரீங்களா, எப்படி வந்திருக்குன்னு பார்க்கலாம்!” என்று ஆர்வத்துடன் அழைத்தார். கிளம்பிப் போனேன். கோடம்பாக்கம் பவர் ஹவுஸில் இறங்கிக் கொண்டேன். நல்ல மழை! பைக்கில் வந்திருந்தார். எனக்காக ஆட்டோ தேடினார். “அட, வேணாம் விடுங்க! உங்க பைக்லயே போயிடலாம்! மழையில நனைஞ்சா ஒண்ணும் ஊசிட மாட்டேன்” என்று பில்லியனில் தொற்றிக் கொண்டேன்.

நேரே ஸ்டுடியோ போனோம். எல்லாம் தயாராக இருந்தது. மும்பையில் தான் எடுத்த லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவுகளை ஒரு தொலைக்காட்சியில் போட்டுக் காண்பித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பதிவு. எடிட்டிங் செய்யப்படாத, பின்னணி இசை, கிளிப்பிங்ஸ் எதுவும் சேர்க்கப்படாத ஆரம்ப, புத்தம் புதிய பதிவு. (டி.எம்.எஸ்., லதா மங்கேஷ்கர் சந்திப்பு பற்றி என் இன்னொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிக’னில் எழுதியுள்ளேன். 30.12.09 ஆனந்த விகடன் இதழில் வெளியான கட்டுரை அது!)

விஜயராஜ் என்னைவிட வயதில் 12 வயது இளையவர். ஆனால், என்னைவிட டி.எம்.எஸ்ஸின் அதி தீவிர ரசிகராக இருக்கிறார். இல்லையென்றால், டி.எம்.எஸ். பற்றிய ‘இமயத்துடன்...’ என்கிற இந்த மெகா சீரியலை ஒரு தவம் போல் கடந்த பத்து வருடங்களாக முழு மூச்சுடன் இயக்கிக்கொண்டு இருக்க மாட்டார்.

“ஒரு பாடகரின் வரலாற்றை ‘மலரும் நினைவுகள்’ போன்று பதிவு செய்ய இத்தனை நீண்ட, நெடிய காலம் தேவையா?” என்று கேட்டேன்.

“வழக்கமா எல்லாரும் செய்யற மாதிரி இங்கேயே ஏழெட்டு வி.ஐ.பி-க்களைப் பேட்டியெடுத்து, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கருக்கு டி.எம்.எஸ். பாடிய பிரபலமான பாடல் காட்சிகளைச் சேர்த்து, ‘மலரும் நினைவுகள்’னு ஒப்பேத்த நான் விரும்பலை. டி.எம்.எஸ். ஐயா எங்கே பிறந்தார், எந்தக் கோவில் வாசலில் இந்தி டியூஷன் நடத்தினார், முதன்முதல்ல எந்த ஸ்டுடியோவில் பாடினார், எந்தப் படத்துல முதல்ல நடிச்சார்னு ஒண்ணு விடாம ஆதியோடந்தமா அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும், அது தொடர்பான இடங்களுக்கே அவரை அழைச்சுட்டுப் போய் பதிவு செஞ்சிருக்கேன். சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்னு அந்தக் காலத்து சினிமா நட்சத்திரங்கள்லேர்ந்து ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலுன்னு இந்தக் காலத்து ஸ்டார்கள் வரைக்கும், கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல டி.எம்.எஸ்ஸோடு பேச வெச்சுப் பதிவு பண்ணியிருக்கேன். தவிர, வழக்கமா நமக்கெல்லாம் தெரிஞ்ச பாடல்கள் இல்லாம, இதுவரைக்கும் தெரியாத பாடல்களையெல்லாம் இதுக்காகத் தேடித் தேடிப் போய் சேகரிச்சுக் கொண்டு வந்து இதுல சேர்த்திருக்கேன். இதுல ஒரு வேடிக்கையான வேதனை என்னன்னா, இங்கே அருமை தெரியாம நாம தவறவிட்ட பல பாடல்களை சிங்கப்பூர்லயும் மலேசியாவிலயும் உள்ள டி.எம்.எஸ். ரசிகர்கள் பத்திரப்படுத்தி வெச்சிருக்காங்க. ஆகவே, நாலஞ்சு முறை அங்கேயெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு, அதையெல்லாம் பதிவு பண்ணிக்கிட்டு வந்திருக்கேன்.

லதா மங்கேஷ்கரை எப்படியாவது இந்த சீரியலுக்காகப் பேச வெச்சுடணும்னு பாடுபட்டுக்கிட்டிருந்தேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. ஆனா, நடுவுல அவங்களுக்கு உடம்பு முடியாம போச்சு. அவங்க தேறி வந்து, வரலாம்னு க்ரீன் சிக்னல் கொடுத்தப்போ இங்கே நம்ம டி.எம்.எஸ். ஐயா உடம்பு சரியில்லாம நாலஞ்சு நாள் படுத்துட்டாரு. இப்படியே இது தள்ளிக்கிட்டுப் போய், ஒருவழியா முடிச்சுட்டோம். இத்தனை ஆண்டுக் காலம் இழுத்ததுக்கு அதுதான் காரணம்” என்றார் விஜய்ராஜ்.

மும்பையில் லதா மங்கேஷ்கர் வீட்டுக்குப் போவதற்கு முன்னதாக, இந்திப் பாடகர் முகமது ரஃபியின் வீட்டுக்கும் சென்றிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். முகமது ரஃபிக்கு ஒரே ஒரு மகன்; இரண்டு மகள்கள். யாரும் சினிமா துறையில் இல்லை. முகமது ரஃபி வாங்கிய விருதுகளையெல்லாம் ஒரு ஹாலில் கண்காட்சி போல் வைத்துப் பராமரித்து வருகிறார் ரஃபியின் மைத்துனர் பர்வேஷ் அஹமது.

அவரும், ரஃபியின் வாரிசுகளும் டி.எம்.எஸ்ஸை அன்புடன் வரவேற்று அவற்றை யெல்லாம் சுற்றிக் காட்டுகிறார்கள். ரஃபி உட்கார்ந்த நாற்காலி, வாசித்த வீணை, ஆர்மோனியம், அவருக்குக் கிடைத்த பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை விளக்குகிறார்கள். அவர்களோடு அழகான இந்தியில் சரளமாக உரையாடுகிறார் டி.எம்.எஸ். லதா மங்கேஷ்கரோடும் இந்தியில்தான் உரையாடியிருக்கிறார்.

“இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரம்மாவுக்குத் தெரியுது நம்ம டி.எம்.எஸ்ஸோட பெருமை. கேட்டதுமே ஒப்புக்கிட்டாங்க. இங்கேயும் சூப்பர் ஸ்டார் ரஜினி கிட்டே பர்மிஷன் கேட்டவுடனேயே, ‘எப்ப வேணா வாங்க விஜய், ரெக்கார்டிங்கை வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டாரு. அதே போல ஆஸ்கர் நாயகன் ரஹ்மானும் தன் பிஸியான வேலைகளுக்கிடையில டயம் ஒதுக்கி டி.எம்.எஸ். ஐயாவோடு உட்கார்ந்து பேசிக் கொடுத்தாரு. பி.சுசீலாம்மா, ஜானகியம்மா, எஸ்.பி.பி., எம்.எஸ்.வி., வாலி, வைரமுத்துன்னு நான் அணுகிய எல்லாருமே ஆர்வத்தோடு இதுல பங்கெடுத்துக்கிட்டாங்க. ஆனா பாருங்க, சினிமா உலகையே தான்தான் புரட்டிப் போறதா சொல்லிட்டிருக்கிற ஒரு ‘பெரிய’ நடிகர் மட்டும் இப்போ அப்போன்னு அஞ்சாறு வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டிருக்காரு!” என்றார் வருத்தத்தோடு!

“விடுங்க விஜய், அவர் இல்லேன்னா ஒண்ணும் குடி முழுகிடாது! நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க. இதுல பங்கெடுத்துக்கக் கொடுத்து வைக்கலியேன்னு வருத்தப்பட வேண்டியது அவருதான்!” என்றேன்.

எதிரெதிர் துருவங்களாக இருந்த இளையராஜா-டி.எம்.எஸ்., டி.ராஜேந்தர்-டி.எம்.எஸ். இவர்கள் பழையனவற்றையெல்லாம் துப்புரவாக மறந்து, மனம் விட்டுச் சிரித்துப் பேசும் காட்சிகள் இந்த சீரியலில் இடம்பெற்றுள்ளன.

தன் செல்ல மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்து வைத்துவிட்ட தகப்பனார் போன்று பெருமிதத்திலும் பரவசத்திலும் இருக்கிறார் விஜயராஜ். அநேகமாக, ‘இமயத்துடன்’ என்கிற இந்த மெகா சீரியல் வருகிற தமிழர் திருநாளிலிருந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

இதை முடிப்பதற்குள் விஜயராஜ் சந்தித்த சோதனைகள், தடைக் கற்கள் எத்தனை எத்தனையோ! நாலைந்து சினிமா வாய்ப்புகள், இரண்டு மூன்று தொலைக்காட்சி மெகா சீரியல் இயக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும், கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காக மறுத்துவிட்டார். இதனால் நட்பு வட்டாரங்களில் இவருக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று ஒரு பெயர்.

இவரின் தாயார், டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகை. அவரின் ரசனை அப்படியே மகனுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. இந்த சீரியலை இயக்குவதற்குப் பூரண ஆசிகள் வழங்கி, இவர் சோர்ந்து போகும் சமயங்களில் எல்லாம் உற்சாக வார்த்தைகள் சொல்லி ஊக்கம் தந்த அந்தத் தாய் சில மாதங்களுக்கு முன் மறைந்தது விஜயராஜுக்குப் பெரிய இழப்பு. அதையும் தாங்கிக்கொண்டு, இந்த சீரியலை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

சரி, அடுத்து என்ன செய்யப் போகிறார் விஜயராஜ்?

“கோலங்கள் புகழ் இயக்குநர் திருச்செல்வம் என் இனிய நண்பர். அவர் புதுசா இயக்கவிருக்கிற ‘மாதவி’ சீரியல்ல எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கார். ஹீரோயினுக்கு உதவி செய்யுற நண்பன் கேரக்டர். இன்னும் சரியா தெரியலை. அதுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். அடுத்து, சினிமா படங்கள் இயக்கும் வாய்ப்பு ரெண்டொண்ணு இருக்கு. அதைச் செய்வேன். பார்க்கலாம், முதல்ல இந்த சீரியல் வெளியாகி நான் யார்னு காட்டட்டும்!” என்கிறார் விஜயராஜ்.

‘இமயத்துடன்’ சீரியலை டி.எம்.எஸ்ஸின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளித்து, மெகா ஹிட்டாக்குவார்கள் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்த சீரியலின் வெற்றி, டி.எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனுக்கான அங்கீகாரம் மட்டுமில்லை; ரசிக உள்ளத்துடன் இதை இயக்கிய ஓர் இயக்குநரின் உண்மையான உழைப்புக்கான அங்கீகாரமாகவும் அமையும்!

***
சோதனைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான், வெற்றியை நீங்கள் எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது!
.

12 comments:

Chitra said...

எங்க பெரியம்மா தீவிர TMS ரசிகை. திரு.TMS சாரை பற்றியும் திரு.விஜய் சாரை பற்றியும் தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள், அருமையானவை. மிக்க நன்றி.

////ஆனா பாருங்க, சினிமா உலகையே தான்தான் புரட்டிப் போறதா சொல்லிட்டிருக்கிற ஒரு ‘பெரிய’ நடிகர் மட்டும் இப்போ அப்போன்னு அஞ்சாறு வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டிருக்காரு!” என்றார் வருத்தத்தோடு!/////// ............. விடுங்க சார்........அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். ஈசல்களை குறித்து நாம் வருத்தப் படக் கூடாது.

Chitra said...

எங்க பெரியம்மா தீவிர TMS ரசிகை. திரு.TMS சாரை பற்றியும் திரு.விஜய் சாரை பற்றியும் தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள், அருமையானவை. மிக்க நன்றி.

////ஆனா பாருங்க, சினிமா உலகையே தான்தான் புரட்டிப் போறதா சொல்லிட்டிருக்கிற ஒரு ‘பெரிய’ நடிகர் மட்டும் இப்போ அப்போன்னு அஞ்சாறு வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டிருக்காரு!” என்றார் வருத்தத்தோடு!/////// ............. விடுங்க சார்........அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். ஈசல்களை குறித்து நாம் வருத்தப் படக் கூடாது.

Rekha raghavan said...

//இமயத்துடன்’ சீரியலை டி.எம்.எஸ்ஸின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளித்து, மெகா ஹிட்டாக்குவார்கள் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது//

அதில் சந்தேகமே வேண்டாம். மெஹா மெஹா ஹிட் ஆக்கிடுவோம்.

ரேகா ராகவன்.

ஜீவன்பென்னி said...

அவருடைய முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கிருபாநந்தினி said...

விகடனில் வெளியான கட்டுரையை உங்க இன்னொரு பதிவுல வெளியிட்டிருந்ததை இப்பத்தான் படிச்சேன். அதுல சொல்லாத பல விஷயங்களையும் புதிய படங்களையும், முகமது ரஃபி குடும்பத்தார் படங்களையும் போட்டுக் கலக்கிட்டீங்க சார்!

ரிஷபன் said...

நம் அதிர்ஷ்டம்.. டி.எம்.எஸ். ஐ ரசிப்பவர்களாக அந்த கால கட்டத்தில் இருப்பது.. தேர்ந்த ரசனையின் சங்கமம்! அருமையான பதிவு.

கே. பி. ஜனா... said...

//இமயத்துடன்’ சீரியலை டி.எம்.எஸ்ஸின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளித்து, மெகா ஹிட்டாக்குவார்கள் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது.//
அதிலென்ன சந்தேகம்? நல்ல முயற்சி. இதுவரை செய்யப்படாததுதான் ஆச்சரியம். காத்திருக்கிறோம் காண! உங்கள் பதிவு ஒரு அழகான ட்ரெய்லர்!

ungalrasigan.blogspot.com said...

சித்ரா! தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! ‘ஈசல்கள்’ என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்! அதற்கு என் ஸ்பெஷல் நன்றி!

ungalrasigan.blogspot.com said...

திரு.ரேகா ராகவன், தங்களின் உற்சாகப் பின்னூட்டத்துக்கு நன்றி!

ungalrasigan.blogspot.com said...

நன்றி ஜீவன்பென்னி! தங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் பலிக்கும்!

ungalrasigan.blogspot.com said...

நன்றி கிருபாநந்தினி! இரண்டு வலைப்பூ பதிவுகளையும் படித்தமைக்கு இரண்டு நன்றிகள்!

ungalrasigan.blogspot.com said...

@ ரிஷபன்! 100 வயது தாத்தா முதல் 10 வயது பாலகன் வரை டி.எம்.எஸ். ரசிகர்களாக இருப்பதை என் குடும்பத்திலேயே கண்டிருக்கிறேன். தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

@ கே.பி.ஜனார்த்தனன்! தங்களின் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!