இங்கேயும் சில ராஜபக்‌ஷேக்கள்!

னிதாபிமானம், இரக்கம், உதவும் மனப்பான்மை, முதியோரை மதித்தல், துயரப்படுவோருக்குக் கை கொடுத்தல் போன்றவை எல்லாம் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் இயல்பாகவே அமைந்திருக்க வேண்டிய குணங்கள். இத்தகைய குணங்கள் இல்லாதவரெல்லாம் மனிதரில் சேர்த்தியா என்பதே கேள்விக்குரியது. ஹார்ட் டிஸ்க், மதர் போர்டு இன்ன பிறவெல்லாம் இருந்தால்தானே அது கம்ப்யூட்டர்? இல்லாவிட்டால் வெறும் டப்பாதானே?

சென்ற நூற்றாண்டில் இத்தகைய குணங்கள் ஏதோ விசேஷ குணங்களாக, நற்குணங்களாகச் சிறப்பித்துப் பேசப்பட்டன. அத்தகைய குணங்களைக் கொண்டிருப்போர் பெரிய மனிதர்கள், உயர்ந்தவர்கள், உத்தமர்கள் என்று போற்றப்பட்டனர். அந்த ‘நற்குணங்கள்’ இல்லாதவர்கள் சாதாரண மானுடர்களாகச் சொல்லப்பட்டனர். “நான் ஒண்ணும் மகாத்மா கிடையாது. சாமானியன்!” என்கிற டயலாகுகளெல்லாம் பிறந்தன.

காலப்போக்கில், ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டிய குணங்களெல்லாமே ஏதோ அபூர்வ குணங்கள் போலாகி, “அத்தகைய ‘மேன்மையான’ குணங்கள் மகான்களுக்கு மட்டுமே உரித்தானவை; நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கு இல்லை” என்று எல்லோருமே கருதத் தொடங்கிவிட்டார்கள். இன்று உலகில் நூற்றுக்குத் தொண்ணூறு பேரிடம் சுயநலமே மிஞ்சியிருக்கிறது. தன்னலத்தைப் பார்த்துக் கொள்ளாதவன் இளிச்சவாயன் என்கிற எண்ணம் பரவியிருக்கிறது. அடுத்தவரை அலைக்கழிப்பதும், ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், முடிந்தவரையில் சுரண்டுவதும்தான் சாமர்த்திய குணங்களாக ஒவ்வொருவர் மனத்திலும் படிந்திருக்கிறது. அதனால்தான் கவியரசு, ‘யாரடா மனிதன் அங்கே... கூட்டி வா அவனை இங்கே...’ என்று பாடி வைத்துவிட்டுப் போனார்.

சமீபத்திய இரண்டு நிகழ்வுகளில் நான் சந்தித்தவர்கள் அனைவருமே சுயநலவாதிகளாகவும், அடுத்தவருக்கு உதவும் மனோபாவம் சிறிதும் அற்றவர்களாகவும்தான் காணப்பட்டார்கள்.

முதல் நிகழ்வு, என் மாமியாரின் இறுதிச் சடங்கு. நேரில் வந்து அவரின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் கொடுக்கும்படி எங்கள் தெருவிலேயே உள்ள ஒரு டாக்டரை அணுகினேன். இறந்தவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்ததா, டயபடீஸ் இருந்ததா என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருந்தார் அவர். “சார், முதல்ல வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணுங்க!” என்றேன். “உங்களுக்கு டெத் சர்ட்டிஃபிகேட் வேணும். அதுக்காகத்தானே வந்திருக்கீங்க?” என்றார். “ஆமாம் சார்!” என்றேன். “என் லெட்டர்ஹெட்ல தந்தா, அதை ஏத்துக்க மாட்டாங்க. அதுக்குன்னு குறிப்பிட்ட ஃபாரம் இருக்கு. எங்கே எரியூட்டப் போறீங்கன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்றார். “அநேகமாகப் பக்கத்துல கண்ணம்மாபேட்டையிலதான் சார் இருக்கும்” என்றேன். “அப்போ அங்கே போய் டெத் சர்ட்டிஃபிகேட் ஃபாரம்னு கேளுங்க. கொடுப்பாங்க. அதை வாங்கி ஃபில்லப் பண்ணி எடுத்துட்டு வாங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்” என்றார்.

வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன். பின்னர்தான் என் பெரிய சகலை, சின்ன சகலை இருவரும் வந்தனர். “டாக்டர் கன்ஃபர்ம் பண்ணாம நாம மேற்கொண்டு எதுவும் பண்ண முடியாது ரவி!” என்றார் பெரியவர். உடனே கூப்பிட்டால் வேறு டாக்டர் யாராவது வருவார்களா என்று அருகில் உள்ள கிளினிக்குகளில் எல்லாம் ஏறி இறங்கினோம். யாரும் இல்லை. நர்ஸுகளைக் கூப்பிட்டால், “ஐயோ! நாங்க வரக் கூடாதுங்க. டாக்டர்தான் வந்து பார்த்துச் சொல்லணும்” என்று மறுத்துவிட்டார்கள். கடைசியில் பழையபடி முன்னே நான் போய்ப் பார்த்த அதே டாக்டரின் வீட்டுக்கே மூணு பேருமாகப் போனோம்.

“என்ன இப்ப வந்து கூப்பிடறீங்க? இப்பவே மணி ரெண்டு ஆகுது. ரெண்டரைக்கெல்லாம் நான் கிளினிக்ல இருந்தாகணும். மத்தவங்க மாதிரி இல்லை நான். ரெண்டரைன்னா ஷார்ப்பா ரெண்டரைக்குக் கிளினிக்ல இருப்பேன். ஸாரி, வேற யாரையாவது கூப்பிட்டுக்குங்க!” என்று பிகு செய்தார். “கொஞ்சம் தயவு பண்ணுங்க!” என்றோம். “முன்னேயே வந்தாரு இவரு. சர்ட்டிபிகேட்டுக்குதானே வந்திருக்கீங்கன்னேன். ஆமான்னாரு. இல்லை, வந்து பார்த்து உறுதிப்படுத்தினீங்கன்னா போதும்னு சொல்லியிருந்தாருன்னா உடனே கிளம்பி வந்திருப்பேன். கடைசி நிமிஷத்துல வந்து தொல்லை பண்ணினீங்கன்னா எப்படி?” என்று சொல்லிவிட்டு ஓர் அறைக்குள் புகுந்துகொண்டுவிட்டார்.

நாங்கள் காத்திருப்பதா, கிளம்புவதா என்று தெரியாமல் சில நிமிடங்கள் வரை அங்கேயே நின்றிருந்தோம். ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தார். “என்ன?” என்றார். “கொஞ்சம் கூட வந்து... சார், தூரம் அதிகமில்லை. எதிர்ச் சாரியில் பத்துப் பன்னிரண்டு வீடுகள் தள்ளி... என்கிட்டே பைக் இருக்கு. ரெண்டே செகண்ட்ல போயிட்டுத் திருப்பிக் கொண்டு வந்து விட்டுடறேன்” என்று பவ்வியமாகக் கேட்டுக் கொண்டார் சின்ன சகலை. “புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க. நான் குளிச்சு முடிச்சு ஃப்ரெஷ்ஷா கிளினிக்குக்குப் போறேன். நடுவுல இந்த மாதிரி சாவு வீட்டுக்கு வந்துட்டுப் போனேன்னு என் பேஷண்ட்ஸுக்குத் தெரிஞ்சா ஃபீல் பண்ண மாட்டாங்களா? ப்ச..!” என்று சலித்துக் கொண்டார். பின்னர், “சரி, போங்க வரேன்!” என்று முறைப்பாகச் சொன்னவர், தன் பைக்கில் வந்தார். நான் நடந்து வீடு வந்து சேர்வதற்குள் அவர் வந்து மாமியைப் பார்த்து, மரணத்தை உறுதிப்படுத்திவிட்டு, தன் லெட்டர்ஹெட்டிலேயே சர்ட்டிஃபிகேட்டும் எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார். எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டன.

போரூர் மின்மயானத்திற்குப் போன் போட்டபோது, “ஆறரைக்குள்ள கொண்டு வந்தா வாங்க! இல்லாட்டி பெசன்ட் நகர் கொண்டு போயிடுங்க. இங்கே ஈவினிங் ஆறரை மணி வரைக்கும்தான் உடலை எரிக்கலாம்!” என்றார்கள். ஆனால், வீட்டில் சடங்குகள் முடியவே ஆறரை மணி ஆகிவிட்டது. உடனே அவசரமாக எடுத்துப் போனோம். அங்கே போய்ச் சேரும்போது மணி ஆறே முக்கால். வேறொரு பிணம் எரிந்துகொண்டு இருந்தது. காத்திருக்கச் சொன்னார்கள். அங்கே இருந்த அறிவிப்புப் பலகையில் ‘உடலை எரிக்கக் கட்டணம் ரூ.1,500/- அதற்கு மேல் ஒரு பைசா தர வேண்டாம். மீறி யாராவது கேட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவும். உங்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது!’ என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கட்டணத் தொகை போக, மூன்று ஊழியர்களுக்கும் தலா ரூ.500 கொடுத்த பிறகுதான் போன வேலை முடிந்தது.

அடுத்து சாஸ்திரிகள்! அவரும் தன் பங்குக்குத் தனக்கு அவசர ஜோலி இருப்பதாகவும், போய்விட்டு மறுநாள் வந்து மீதிக் காரியமான ‘சஞ்சயன’த்தை முடித்துத் தருவதாகவும் பரபரத்தார். “இங்கே மின்மயானத்துக்குக் கொண்டு வந்ததே கையோடு எல்லாக் காரியங்களையும் முடிச்சுடலாம்னுதானே! ஒரு அரை மணி இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுங்க” என்று கெஞ்சினோம். “ஆட்டோக்காரன் வெயிட்டிங்ல இருக்கான்...” - “இருக்கட்டும். நாங்க ஆட்டோ சார்ஜ் என்ன உண்டோ, அதைக் கொடுத்து உங்களை அனுப்பி வைக்கிறோம்!” - “அது சரி, அவன் 300 ரூபா கேப்பான். கொடுப்பீங்களா? ம்ஹூம், அதெல்லாம் சரியா வராது.” - “கொடுக்கிறோம். போதுமா? அவன் ஆயிரம் ரூபா கேட்டாக் கூட கொடுக்கிறோம். இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போங்க!” - “சரி, அப்படியே எனக்கும் என் அசிஸ்டெண்ட்டுக்கும் பேசினதுல தலா ஐந்நூறு சேர்த்துக் கொடுங்க!” என்று சொல்லிவிட்டுப் பையைத் திறந்தார் சாஸ்திரிகள். மீதிக் காரியத்துக்குத் தேவையான அப்பம், பொரி முதலானவை அதில் தயாராக இருந்தன!

ரண்டாவது நிகழ்வு - இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்கில் நிகழ்ந்தது. என் அப்பாவின் பென்ஷன் பணம் அங்கே உள்ள அவர் சேமிப்புக் கணக்கில்தான் சேரும். அவருக்கு வயது 80. பொதுவாகவே அங்குள்ள ஊழியர்கள் சரிவர பதில் சொல்வதில்லை என்று அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார் அப்பா. லோன் வாங்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் பென்ஷன் புத்தகத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார். போன மாதம் லோன் முடிந்துவிட்டது. பென்ஷன் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். அடுத்த மாதம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். சரியென்று இந்த மாதம் முதல் வாரத்தில் போய்க் கேட்டிருக்கிறார். அவர்கள் ஒரு ஃபாரத்தைக் கொடுத்து, “இதைப் பூர்த்தி செய்து அடுத்த வாரம் கொண்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து பார்த்தால், அதில் எந்த ஒரு தகவலையும் பூர்த்தியே செய்ய முடியாத மாதிரி, சம்பந்தமில்லாத கேள்விகள். ஏதேதோ ஜி.ஓ. எண்கள், ரிட்டையரான தேதி, முதல் முறை பெற்ற பென்ஷன், உயர்வு போட்ட வருடங்கள், அந்த உத்தரவு எண்கள் எனக் கேட்கப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, அந்த ஃபாரம் முதன்முறையாக பென்ஷன் புத்தகம் பெற விரும்புகிறவர்களுக்கானது என்றே தோன்றியது. கொடுத்த புத்தகத்தைத் திரும்பப் பெறுவதற்கானது அல்ல!

இரண்டு நாட்களுக்கு முன்னால், கொட்டும் மழையில் அதை எடுத்துக்கொண்டு பாங்குக்குப் போனார் அப்பா. “இந்த ஃபாரத்தைப் பூர்த்தி செய்யவே முடியவில்லை; உத்தரவு எண்கள் கேட்டுள்ளீர்கள். இதுவரை எனக்கு எந்த உத்தரவும் வந்ததே இல்லையே! பென்ஷன் பணம் வங்கி வைப்புக் கணக்கில் சேரும். அவ்வளவுதான்!” என்று திருப்பிக் கொடுத்துள்ளார். “இவங்கள்ளாம் பூர்த்தி பண்ணிட்டு வந்திருக்காங்களே, எப்படி? வாத்தியாரா இருந்திருக்கீங்க, நீங்களே தெரியலைன்னு சொன்னா நாங்க என்னத்தைப் பண்றது?” என்று கேலியும் கடுப்புமாகச் சொல்லியிருக்கிறார்கள். “அவங்க எப்படிப் பூர்த்தி பண்ணாங்கன்னு எனக்குத் தெரியாது. சம்பந்தமில்லாததையெல்லாம் கேட்டு பூர்த்தி பண்ணச் சொன்னா, எப்படிப் பண்றது?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அப்பா. “அதுசரி, பெயர்னு இருக்கிறதைக் கூட உங்களாலே பூர்த்தி பண்ண முடியாதா? உங்க பேர் கூட உங்களுக்குத் தெரியாதா? அதைக் கூட நாங்கதான் எழுதிக்கணுமா?” என்று கேட்டிருக்கிறார்கள். “அட, என் பேரு எனக்கு நல்லாவே தெரியும் சார்! இந்த ஃபாரமே சரியா இல்லைங்கிறப்போ, என் பேரை மட்டும் எழுதிட்டு வந்தா, ஃபாரத்தை வீணாக்கிட்டேன்னு சொல்ல மாட்டீங்களா?” என்றிருக்கிறார். இப்படியே வாக்குவாதம் முற்றி, அப்பாவுக்கு பிபி எகிறிவிட்டது. சத்தம் போட்டிருக்கிறார்.

“போய் அடுத்த வாரம் வாங்க!” என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிவிட்டார்கள். “இல்லை. என் புத்தகத்தை வாங்கிட்டுதான் போவேன். எண்பது வயசுக் கிழவனை இப்படியா அலைக்கழிப்பீங்க?” என்று கேட்டிருக்கிறார் அப்பா. அப்புறம் அங்கேயே வேறு ஒரு அலுவலரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரிடம் போனால், “உங்க பழைய பென்ஷன் புத்தகமா? அது எங்க கிட்டே எப்படி இருக்கும்? நீங்கதானே வெச்சிருக்கணும்?” என்றார் அவர். “இல்லை சார், சில வருஷத்துக்கு முன்னே லோன் வாங்கினேன். அப்போ பென்ஷன் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னீங்க. கொடுத்தேன்” என்றார் அப்பா. “இல்லையே! பென்ஷன் புத்தகத்தை வாங்கிக்கிட்டுதான் லோன் தரணும்னு புரொசீஜர் ஒண்ணும் இல்லையே! வீட்டுலேயே போய் நல்லா தேடிப் பாருங்க!” என்றிருக்கிறார் அவர்.

“அட என்ன சார், இது கூடவா எனக்குத் தெரியாது! போன மாசம் லோன் முடிஞ்சதுமே வந்து கேட்டேன். ‘அடுத்த லோன் போடறீங்களா? போட்டீங்கன்னா உடனே கிளெய்ம் பண்றோம்’னீங்க. வேணாம், புத்தகம்தான் வேணும்னு சொன்னேன். ‘சரி, அடுத்த மாசம் வா’ன்னீங்க. வயசானவனை ஏன் சார் இப்படி அலைக்கழிக்கிறீங்க?” என்று கொஞ்சம் காரமாகவே கேட்டிருக்கிறார் அப்பா.

“அப்படியா!” என்று மேஜை மேலேயே தன் வலது பக்கமாக இருந்த, பழைய காலத்து எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் போன்ற காலிகோ அட்டை போட்ட பென்ஷன் புத்தகக் கட்டை எடுத்து நடுவில் வைத்து அந்த அலுவலர் பிரிக்க, மேலேயே முதலாவதாக இருந்தது அப்பாவின் பென்ஷன் புத்தகம். எடுத்துக் கொடுத்தார் அவர். அப்பா வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

இரண்டு மேஜைகளுக்கு நடுவில் எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் மிகச் சுலபமாக முடிகிற காரியத்துக்கு ஈவு இரக்கமே இல்லாமல், 80 வயதாகும் பெரியவராயிற்றே என்றுகூடப் பார்க்காமல், இரண்டு மாதங்களாக அலைய விட்டிருக்கிறார்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள்.

மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொள்வதற்கு இவர்கள் பே-ஸ்லிப்பில் கையெழுத்துப் போடுவார்களா, அல்லது அதற்குக் கூடச் சோம்பல்பட்டுக்கொண்டு பேசாமலே இருந்துவிடுவார்களா என்று தெரியவில்லை.

‘அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடும் மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே’

என்று திருமூலர் சொல்லி வைத்த திருமந்திரம் ஏதோ மற்றவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் கொஞ்சமாவது அவன் உருப்பட வழியுண்டு! இல்லாவிட்டால் இங்கேயும் ஒவ்வொருத்தருக்குள்ளும் ராஜபக்‌ஷேக்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன, விகிதாசாரம் கொஞ்சம் வேறுபடும். அவ்வளவே!

வேறு என்னத்தைச் சொல்ல?

*****
எந்த உயிரினமும் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு ஜந்துவைக் கண்டு பொறாமைப்படுவதில்லை - மனிதனைத் தவிர!

9 comments:

tamiluthayam said...

மனிதாபிமானம் என்றால் என்ன விலை. உலகமெங்கும் இருக்கிறார்கள் ராஜபக்சேக்கள்.

Rekha raghavan said...

இரு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்ட மனிதர்களின் இருதயங்களை இரும்பால் படைத்துவிட்டானோ இறைவன்? இவர்கள் சாணியில் தோன்றும் புழுவைவிட கேவலமானவர்கள். மனதை மிகவும் பாதித்த பதிவு.

ரேகா ராகவன்.

கிருபாநந்தினி said...

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று சாவில்கூட ஆதாயம் தேடும் கூட்டத்தை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட கண்ணதாசன் பாடலின் அடுத்த வரியான ‘இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே’ என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

கே. பி. ஜனா... said...

ஏதோ சில ஆயிரம் மூச்சுக்களை விட்டு, அதையும் ஒரு நாள் விடப் போகிற இந்த வாழ்வுக்குள் இப்படி நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். என்னவென்று சொல்வது?

Anonymous said...

ரவிபிரகாஷ் - உங்களது 'இன்னொரு தாயார்' பதிவு படித்தவுடன் ஏற்பட்ட நெகிழ்ச்சியிலேயே இதைப்பற்றிய கேள்வி எனக்கு வந்தது. நீங்கள் அதை தனிப்பதிவாகவே இட்டு விட்டீர்கள்.

வீட்டிலிருந்தபடியே இறக்கும் மனிதர்களுக்கு எந்த டாக்டரும் வந்து சர்டிபிகேட் கொடுக்க இவ்வாறு தயக்கம் / எரிச்சல் பட்டால் - பொதுமக்கள் என்ன தான் செய்வது ? இதைப்பற்றி விகடனில் விவரமான கட்டுரை போடமுடியுமா ?

இன்னொன்று - ஆண் வாரிசு இல்லாத (அதாவது பெண்கள் மட்டுமெ பெற்ற) தாயோ தந்தையோ இறக்கும் போது அவர்களுக்கு கடைசி காரியம் யார் செய்கின்றனர் தற்காலங்களில் ? 10 அல்லது 13 நாள் காரியங்கள் யார் செய்கிறார்கள் ? பின்னர் வருடாந்திர திதி ?? ஆண் வாரிசு இல்லாத நிலையில், பெற்ற பெண்களால் இதை செய்ய முடியாத / செய்யாத நிலையில் , இறந்த அந்த பெற்றோரின் ஆன்மா என்ன ஆகிறது ?

நன்றி
மகேஷ்.

யுவகிருஷ்ணா said...

பிணம் நடுவீட்டில் இருக்க, நம்மிடம் பிசினஸ் பேசுபவர்கள் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேசுவது அராஜகமானது மட்டுமல்ல, எனக்கு ஆச்சரியம் தருவதுமாக இருக்கிறது.

எல்லோருக்குமே வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவம் தவிர்க்க முடியாத வகையில் அமைந்து விடுகிறது.

SRK said...

நியாயம், நேர்மை, மனிதாபிமானம் எல்லாமே இளிச்சவாய்த்தனம் என்று கற்பிக்கப்பட்டு ஒரு தலைமுறை வளர்க்கப்பட்டாயிற்று. அப்படி வளர்ந்தவர்கள் இப்போது சமூகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். மிகவும் வருந்துகிறேன். நீங்கள் இணைத்துள்ள ஓவியம் கட்டுரையின் சோகத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.

ungalrasigan.blogspot.com said...

+ ஆமாம் தமிழுதயம், ஆமாம்! சரியாச் சொன்னீங்க.

+ இறைவன் இரும்பு இதயங்களை அதிகம் படைக்கவில்லை என்றுதான் இன்னமும் நான் நம்ப விரும்புகிறேன், ரேகா ராகவன்! மனிதம் இன்னமும் மரித்துப் போகவில்லை; போகக் கூடாது!

+ நன்றி கிருபாநந்தினி!

+ நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி மகேஷ்! தங்களின் கடைசி பாராக்களில் கேட்டிருக்கும் கேள்விகளுக்குரிய விடைகள் போலத்தான் அடுத்த இரு பதிவுகளை (ஞானவாபி, ஞானவாபி II) எழுதியுள்ளேன். படித்துவிட்டுத் தங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள்.

+ உண்மைதான் கே.பி.ஜனா! இப்படியும் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது.

+ பிணம் நடுவீட்டில் இருக்க, பாகம் பிரிக்கச் சொல்லிச் சண்டையிடும் பிள்ளைகளும் இருக்கிறார்களே யுவகிருஷ்ணா! அப்படியிருக்க மற்றவர்களைச் சொல்வானேன்! இப்படியானவர்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவே இல்லை. பழகிவிட்டது.

+ நன்றி எஸ்.ஆர்.கே! ஓவியம் பற்றிய தங்கள் ரசனைக்குப் பாராட்டு!

சந்தோஷ் தமிழன் said...

சரி தான். ஆனால் ராஜபக்ஷேவை யாராலும் மிஞ்ச முடியாது.