சிவாஜியின் நிழல் மனைவி!

லம், பலவீனம் இரண்டுமே மனிதர்களுக்கு உண்டு. குணம் மட்டுமல்ல, குறைகளும் எல்லோருக்கும் பொதுவானது. அவன் சாதாரணனாக இருந்தாலும் சரி, சாதனையாளனாக இருந்தாலும் சரி! குற்றமே இல்லாத பரிபூரணன் என்று எவரையும் சொல்லிவிட முடியாது. நற்குணங்களில் அப்பழுக்கு சொல்ல முடியாத தூயோனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே, வானர ராஜன் வாலியை மறைந்திருந்து கொன்றதில் குற்றம் சாட்டப்படுகிறார். வாலியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல ராமனுக்கு வாய் எழவில்லை. பதில் சொல்ல வாயற்றுப் போன நிலையில், அவரின் தம்பி லக்ஷ்மணன்தான் அண்ணனின் சார்பாக வாலிக்குப் பதில் சொல்கிறான். அவன் அண்ணனின் செயலை நியாயப்படுத்த ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும், ராமன் செய்தது குற்றம் குற்றம்தான்! அதற்குத் தண்டனையாகத்தான் அடுத்த யுகத்தில் ராமன் கண்ணனாகவும், வாலி ஒரு வேடுவனாகவும் அவதரித்து, கண்ணனை அந்த வேடுவன் மறைந்திருந்து அம்பெய்து கொன்றான்.

ராமர் தனது வாழ்க்கையில் 18 முறை தவறு செய்திருக்கிறார் என்கிறது வால்மீகி ராமாயணம். வால்மீகி ராமாயணத்தைப் பொறுத்தவரை ராமர் கடவுள் அல்ல; மனிதன். தவறு எதுவுமே செய்யாதவனாக ஒருவன் இருப்பானேயானால், அவன் கடவுளாகிறான். எந்தவொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தபட்சம் 18 முறை தவறு இழைப்பான் என்பது புராண ஐதிகம். ஆகவேதான் வால்மீகி தன் கதாநாயகனான ராமனை, கதைப்படி சரியாக 18 முறை தவறு செய்திருப்பவனாகக் காட்டியுள்ளார்.

மனிதர்களிடத்தில் உள்ள குணத்தையும் குறைகளையும் அலசி ஆராய்ந்து, இரண்டில் எது அதிகமோ அதன்படி அவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று வகைப்படுத்துங்கள் என்கிறார் வள்ளுவர். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் திலகம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். இது அவரின் சாதனைக்கும் பெருமைக்கும் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்திவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், இதுவரை சிவாஜி பற்றி நான் கேள்விப்படாத ஒரு விஷயத்தை முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது என் மனசு சற்றுத் துணுக்குற்றது என்பது உண்மை!

சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? எனக்கு இத்தனை நாள் தெரியவில்லை.

அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா. சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி என்று அறிகிறேன். அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினிகணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை; அது சிவாஜிகணேசனைக் குறிப்பதுதான்.

ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ.வி.சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். “என் தங்கை நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார்” என்று எம்.ஜி.ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப் படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.

‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான். அதே போல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக, ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ்.வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’. ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.

ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல; நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட, அவரா!’ என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப் பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா. ‘அன்னை’ என்றொரு படம்; பி.பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதே போல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள்.

சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.

கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா சமீபத்தில்தான், அதாவது 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76. அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.

(திரையுலகைச் சேர்ந்த, வயதில் மூத்த சில நண்பர்களுடன் பேசியதில் கேள்விப்பட்ட விஷயங்களைத்தான் இங்கே கொடுத்துள்ளேன். இதில் இடம்பெற்றுள்ள தகவல்களில் பிழையான விவரங்கள் இருப்பின், அவற்றைப் பின்னூட்டத்தில் அவசியம் சுட்டிக் காட்டுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)

*****
நாலு பேர் மத்தியில் நீங்கள் முக்கியமானவராக இருப்பது இனிமையானதுதான்; ஆனால், இனிமையானவராக இருப்பது முக்கியமானது!

12 comments:

butterfly Surya said...

இதுவரை அறியாத தகவல்..

பொன்னியின் செல்வன் said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை... ர.சு நல்ல பெருமாள் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில் இவ்வாறாக வரும் ;"சமூகத்துக்கு ஒருவனால் நன்மை இருக்குமானால், அவனுடைய தனிப்பட்ட விஷயங்களில் நாம் கொஞ்சம் தாராளம் காட்டுவதில் தவறில்லை. இதனால் மேதைகளுக்கு ஒழுக்கம் தேவையில்லை என்று பொருளில்லை. மேதைகளிடத்தில் அதை ஓர் அளவு கோலாகப் பயன் படுத்த வேண்டாம்.
" சிவாஜிக்கு இது சாலப் பொருந்தும்.

KALYANARAMAN RAGHAVAN said...

//உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்//

படித்து நெகிழ்ந்த வரிகள். புதிய தகவல் என்றாலும் சரியான ஒப்பீடு.

ரேகா ராகவன்

Kirubanandhini said...

மிக அருமையான பதிவு! ‘போகாதே’பாடலைத் தெரியாதவர்களும் இருக்க முடியாது. ஆனால், அதைப் பாடியது ஏ.பி.கோமளா என்றுதான் நான் இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். மிக அபூர்வமான தகவல்களுடன் ஓர் அற்புதமான பெண்மணியைப் பற்றிப் பதிவிட்டமைக்கு நன்றி!

கே.ஈஸ்வரி said...

//நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை// சமீபத்திய ஒரு நடிகரின் வாழ்க்கையில் குறுக்கிட்ட ஒரு நடிகை நினைவுக்கு வருகிறார். ரத்னமாலா எங்கே, இவர் எங்கே? ஹூம்..!

செல்வேந்திரன் said...

தகவலை விடவும்... ஆளுமையின் மாண்பைக் குலைத்துவிடாமல் எழுதிய உங்கள் எழுத்தின் திறன் என்னை மீள்வாசிப்பு கொள்ளச் செய்கிறது...

Anonymous said...

ரவிபிரகாஷ்,

சிவாஜி பற்றிய வெளியே தெரியாத ஒரு தகவல். பதிவுக்கு நன்றி. (அவரது இலங்கை தொண்டு பற்றிய படமும் பதிவும் அருமை)

ஒரு வேண்டுகோள்.

சமீபத்திய உங்களது பதிவுகளில் (சிவாஜி, ரமேஷ் வைத்யா..) பிரபலமானோரின் மற்றொரு முகம் பற்றி எழுதும்போது அவர்களது நெகடிவ் பக்கத்தை எழுதாமல் பாசிடிவ் பக்கம் மட்டுமே எழுதலாமே ?

ஜெயமோகன் "தொப்பி, திலகம்" என பதிவில் எழுதியதை விகடனில் கட்டுரையாக வந்தபோது நடந்த அமர்க்களம் நினைவிருக்கலாம்.

விகடனின் பொறுப்பாசிரியரே அதுபோல பதிவு போடுவதை திரையுலகம் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறதோ. அதுவே எனக்குக் கவலை. அதுவும் 'விகடன் டயரி' என்ற பெயரில்.

உங்களுடைய பல்வேறு பதிவுகளிலும் பல நல்ல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. விகடனில் உங்கள் எழுத்துக்களைப் படிக்க முடிவதில்லை. இங்காவது படிக்கக் கிடைக்கிறது. இது போல நெகடிவ் சமாச்சாரங்களை எழுதி, அதனால் வரும் அக்கப் போர்களை சமாளிக்கப் போய், இங்கு எழுதுவது குறையக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த வேண்டுகோள்.

நன்றி.
மகேஷ்.

ஆர். முத்துக்குமார் said...

உங்கள் வார்த்தைகளில் நாசூக்கு, பொறுப்புணர்வு இரண்டும் சிறப்பாக வந்துள்ளன. நல்ல பதிவு. வாழ்த்துகள்

ரவிபிரகாஷ் said...

பட்டர்ஃப்ளை சூர்யா! நன்றி!

***

பொன்னியின் செல்வன்! இந்தப் பதிவுக்கு மிகப் பொருத்தமான, அருமையான கொட்டேஷன் கொடுத்துள்ளீர்கள். நன்றி! நன்றி!

***

நன்றி திரு.ராகவன்!

***

நீங்கள் கோமளா என்று நினைத்தீர்கள்; நான் ஜிக்கி என்று நினைத்திருந்தேன். பாராட்டுக்கு நன்றி கிருபாநந்தினி!

***

கே.ஈஸ்வரி, பதிவு எழுதும்போது எனக்கும் அது ஞாபகம் வந்தது. அதை இங்கே குறிப்பிடுவானேன் என்று தவிர்த்தேன். நீங்கள் சரியாக அதைச் சுட்டிக்காட்டிவிட்டீர்கள்!

***

உண்மைதான் செல்வா! நான் சிவாஜி ரசிகன். எனவே, எந்தவிதத்திலும் அவர் பெருமைக்கு ஊறு விளைவித்துவிடக் கூடாது; அதே சமயம் கேள்விப்பட்ட தகவலையும் சரியாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் கவனமாகத்தான் இதை எழுதினேன். அது உங்கள் மனதுக்குப் புரிந்தது எனக்குச் சந்தோஷம் தருகிறது!

***

அக்கறையுடன் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி மகேஷ்! நண்பர் ரமேஷ் வைத்யா மீதுள்ள ஆதங்கத்தில் எழுத முற்பட்டு, சக பதிவர் ஒருவர் சுட்டிக் காட்டியதும் அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். சிவாஜி தகவலைப் பொறுத்தவரை, அது சிவாஜியின் பெருமைக்கு எந்த விதத்திலும் குந்தகம் ஏற்படுத்தாது என்று நம்பியதால்தான் எழுதினேன். இருப்பினும், தங்கள் இதயபூர்வமான ஆலோசனையையும் கவனத்தில் கொள்கிறேன். நன்றி மகேஷ்!

***

ஆர்.முத்துக்குமார்! நீங்கள் எழுதியிருந்ததைத்தான் செல்வேந்திரன் வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைக் கூர்ந்து படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

ரவிபிரகாஷ் said...

தமிலிஷ்-ல் இந்தப் பதிவுக்கு ஓட்டளித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்த கிருபாநந்தினி, அனுபகவான் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

ரவிஷா said...

சிவாஜியின் இந்த மறுபக்கத்தை நான் 25 வருடங்களுக்கு முன்னமேயே கேள்விப்பட்டு இருக்கிறேன்! ஆனால்,
அந்த பெண்மணியின் பெயர் பங்கஜம் என்றும் பார்ப்பனர் என்றும் ஒரு வதந்தி இருந்தது! ஆனால், நீங்கள் சொல்வது போல தி.நகரில் (பசுல்லா ரோட்?) தான் இவர் இருந்தார் என்று கண்டிப்பாக அறிந்து இருந்தேன்!

யாருமே இதுவரைக்கும் சொல்லவில்லையே? நீங்கள் மட்டும் சொல்கிறீர்கள்! பொல்லாப்பு வரப்போகிறது!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சமீபத்திய உங்களது பதிவுகளில் (சிவாஜி, ரமேஷ் வைத்யா..) பிரபலமானோரின் மற்றொரு முகம் பற்றி எழுதும்போது அவர்களது நெகடிவ் பக்கத்தை எழுதாமல் பாசிடிவ் பக்கம் மட்டுமே எழுதலாமே ?//
எல்லாருமே இப்படி இருந்து விட்டால் பல ரகசியங்கள்,ஒரு மனிதரின் நிஜ முகம் தெரியாமலே போய் விடும்..சிறப்பான பதிவு சார்.நீங்களும் மறைத்து எழுதாதீர்கள்...நிஜ முகம் தான் பரபரப்பு ஆகும்,பிரபலமும் ஆகும் பத்திரிகையாளருக்கு தெரியாதது அல்ல..சிவாஜி கட்டுரையில் அவருக்கு மாசு ஏற்படும்படி எந்த பத்தியும் இல்லை.