ஒரு நூறு கொலை!

நேத்து ராத்திரி யம்மா... தூக்கம் போச்சுடி யம்மா..!

ஏதோ ஜாலியாகப் பாடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நிஜமாகவே நேற்று இரவு முழுக்கவே எனக்குத் தூக்கமில்லை. மூட்டைக்கடியில் படுத்திருந்தால் எப்படித் தூக்கம் வரும்?

மூட்டைக்கு அடியில் என்று பிரித்துப் படிக்காதீர்கள். மூட்டைக்கு அடியில் படுத்தால் மூச்சு முட்டியிருக்குமே என்று யோசிக்காதீர்கள். மூட்டைப் பூச்சிக் கடியில் படுத்திருந்தேன் என்று சொல்கிறேன். இங்கே கடி, அங்கே கடி என்று கை, கால், தோள்பட்டை என சகல பாகங்களிலும் மூட்டையார் கடித்துக் குதறினார். சொறிந்து சொறிந்து கால்களிலும் தோள்களிலும் சிராய்ப்பு விழுந்து ரணமானதுதான் மிச்சம். காலை 5 மணிக்கு மேல்தான் தூங்கவே செய்தேன்.

சில வாரங்களுக்கு முன்னால், பள்ளியிலிருந்து வந்த என் மகன், ஹாலில் புத்தக மூட்டையை இறக்கி வைத்தான். அதிலிருந்து ஒரு பூச்சி இறங்கி சுறுசுறுப்பாக ஓடியதை ஆச்சரியத்துடன் பார்த்து, ‘என்னப்பா பூச்சி இது, புதுசா இருக்கே?’ என்றான். பார்த்தேன். ‘அடப்பாவி! மூட்டைப் பூச்சிடா!’ என்று அலறினேன்.

கடந்த பத்தாண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறோம். கரப்பு இருக்கிறது; பல்லி இருக்கிறது; எலிகள் துள்ளி விளையாடுகின்றன. ஆனால், மூட்டை என்பது இல்லை. அரிசியைக் கூட மூட்டையாக வாங்குவதில்லை நாங்கள். அப்படியிருக்க மூட்டையைத் தன் பள்ளியிலிருந்து இறக்குமதி செய்துவிட்டான் என் மகன்.

ஒரு மூட்டையைக் கொன்றால் அதன் ரத்தத்திலிருந்து ஆயிரம் மூட்டைப் பூச்சிகள் உருவாகும் என்று சொல்வார்கள். தெரிந்தே, ஓடிய மூட்டைப் பூச்சியைக் கால் கட்டை விரலால் அழுத்திக் கொன்றேன். பீட்ரூட் சாறு நிறத்தில் ரத்தம் தரையில் தீற்றியது. அப்புறம் மறந்து போனேன்.

நடுநடுவே ராத்திரிகளில் ஏதோ கடிக்கத்தான் செய்யும். மூட்டைப்பூச்சி ஞாபகத்துக்கு வரவில்லை. பழியைக் கொசு மீது போட்டு, குட்நைட் மேட் வாங்கி வைத்தேன்; ரெப்பெல்லர் வாங்கி வைத்தேன். நாளுக்கு நாள் கடி அதிகமாகி, நேற்றைக்கு உச்சகட்டம்.

காலையில் எழுந்து நடுநிலைமையோடு ஆராய்ந்து பார்த்தபோதுதான், கொசு அப்பிராணி என்பதும், குற்றவாளி மூட்டையார் என்பதும் தெரிய வந்தது. உடனடியாகக் கடைக்குப் போய் மூட்டைப்பூச்சிக்கு ஹிட் உண்டா என்று கேட்டேன். மூட்டைப் பூச்சிக்கென பிரத்யேகமாக எதுவும் வருவதில்லை என எல்லாக் கடைக்காரர்களும் ஒன்றுபோல் கையை விரித்தார்கள். ஒரு கடைக்காரர், ‘என்ன, மூட்டைப் பூச்சியா?’ என்றார் ஆச்சரியத்தோடு. அவர் ஆச்சரியம்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்றொரு கடைக்காரர், ‘இப்பல்லாம் ஏதுங்க மூட்டைப் பூச்சி. முந்தியெல்லாம் அதுக்குன்னு ஸ்பெஷலா ஹிட் போட்டுக்கிட்டிருந்தாங்க. இப்ப வர்றதில்லை. பேகான் ஸ்ப்ரே வாங்கிட்டுப் போய் அடிங்க. இது கொசு, கரப்பான் உள்பட எல்லாத்துக்கும் பொதுவானது’ என்று பரிந்துரைத்தார். வாங்கி வந்து வீடு முழுக்க இண்டு, இடுக்கு எல்லாவற்றிலும் அடித்தேன். தலையணைகளையும் பாய்களையும் கொண்டு போய் மொட்டை மாடியில் வெயிலில் காய வைத்தேன்.

என் சின்ன வயதில், கிராமத்தில் வசிக்கும்போது வீடு முழுக்க சுவர் இடுக்குகளில் மூட்டைப் பூச்சிகள் இருக்கும். சுவர்கள் எல்லாம் மண் சுவர். நாங்கள் எல்லாம் ஆளுக்கொரு கிண்ணத்தில் மண்ணெண்ணெய் சிறிது ஊற்றிக்கொண்டு, சுவர் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மூட்டைப் பூச்சிகளை ஒரு துடைப்பக் குச்சியால் கெரஸின் கிண்ணத்தில் தள்ளுவோம். யார் நிறைய மூட்டைப் பூச்சி சேகரிக்கிறார்கள் என்று ஒரு போட்டியே நடக்கும்.

அப்போதெல்லாம் டிக்-20 என்று மூட்டைப்பூச்சிக்கென பிரத்யேகமாக ஒரு மருந்து வந்ததாக ஞாபகம். அந்த ஆங்கில ‘டிக்’ வார்த்தையின் ‘கே’ எழுத்தின் கீழ் முனை நீண்டு வந்து ஒரு மூட்டைப் பூச்சியைக் குத்திச் சாகடித்திருப்பதாக அந்த மருந்தின் மீது படம் வரையப்பட்டிருக்கும். இந்த மருந்து நிச்சயம் மூட்டையைச் சாக அடித்துவிடும் என்று ஒரு நம்பிக்கையை அந்தப் படம் எனக்கு அப்போது தந்தது. அது ரொம்ப வீர்யமுள்ள மருந்து. அதை ஸ்ப்ரே செய்வதற்கென எங்கள் வீட்டில் ஒரு பிரத்யேக பம்ப் உண்டு. டார்ச் லைட் மாதிரியான ஒரு சிலிண்டரோடு இணைந்த ஒரு சின்ன கேனில் அந்த மருந்தைக் கொஞ்சம் ஊற்றிக்கொண்டு, வீடு முழுக்க ஸ்ப்ரே செய்துவிட்டு, கதவை மூடிக் கொண்டு எல்லோரும் வெளியே போய்விடுவோம். ஒரு மணி நேரம் கழித்துக் கதவைத் திறந்து பார்த்தால் பல்லி, கரப்பு, சிலந்தி, மூட்டைப் பூச்சிகள், வண்டுகள் எனச் சகலமானதும் செத்துக் கிடக்கும். அம்மா பெருக்கித் தள்ளி, முறத்தில் கொண்டு போய்க் கொட்டுவார். அதிக வீர்யமுள்ள மருந்தாக இருந்ததால் பின்னர் அது தடை செய்யப்பட்டுவிட்டதாக ஞாபகம்.

பின்னர் விழுப்புரத்தில் இருந்தபோது, அங்கே அதிகம் மூட்டை இல்லை. ஆனால், ஆண்டுக்கொரு முறை பம்பாயிலிருந்து என் தாய் வழித் தாத்தா வருவார். வந்ததும் முதல் காரியமாக அவர் ஹோல்டாலைப் பிரித்துப் போர்வை, தலையணைகளைக் கொண்டு போய் மொட்டை மாடியில் போடுவோம். நூற்றுக்கணக்கில் மூட்டைப் பூச்சிகள் இறங்கி மொட்டை மாடி பூராவும் ஓடும்.

அந்நாளில் ரயில் பிரயாணிகள் மூலமாகத்தான் மூட்டைப் பூச்சிகள் பரவும் என்று சொல்வார்கள். ‘ஜெயில்களில் மூட்டைக்கடியில் படுத்து உறங்கியவன் நான்’ என்று அந்நாளைய அரசியல்வாதிகள் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். ராஜாஜி திருச்சி ஜெயிலில் இருந்தபோது, மூதறிஞராச்சே என்று பாரபட்சம் பார்க்காமல் அவரையும் மூட்டைப்பூச்சிகள் பிடுங்கித் தள்ளியிருக்கின்றன. அதற்கு மருந்து கேட்டு ராஜாஜி மனு கொடுத்தும், அன்றைய பிரிட்டிஷ் சர்க்கார் அதற்கு செவி சாய்க்கவில்லை.

சென்னைக்கு வந்து செட்டிலான புதிதில், சினிமா தியேட்டர்களில் மட்டும் மூட்டைக் கடி வாங்கியிருக்கிறேன் நான். படம் பார்க்கிற ஜோரில் அவை கடிப்பது தெரியாது. அநிச்சையாக நம் கைகள், கடிக்கும் மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொண்டு இருக்கும். படம் முடிந்து வெளியே வந்து பார்த்தால்தான் உடையிலும் தொடையிலும் ரத்தக்கறைகள் இருப்பது தெரியும்.

‘மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தின மாதிரி’ என்று பழமொழி இருக்கிறது. சமீபத்தில் நிஜமாகவே அப்படி யாரோ மூட்டைப்பூச்சிக்கு பயந்து எதையோ கொளுத்திப் போடப்போக, வீடு பற்றி எரிந்து போனதாக ஒரு செய்தி படித்தேன். இந்தப் பழமொழியை ஆரம்ப வரியாகக் கொண்டுதான் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இப்படி மூட்டைப்பூச்சிக்கு ஒரு பிளாக் எழுதப் போகிறேன் என்று முன்பே தெரிந்திருந்தால், அந்தச் செய்தியை உன்னிப்பாகப் படித்திருப்பேன்.

விக்கிரமாதித்தன் கதை ஒன்றில் மூட்டைப்பூச்சி வருகிறது. தாத்தா சொல்லியிருக்கிறார். கதை ஞாபகம் இல்லை. பழைய இலக்கியங்களிலும் மூட்டைப் பூச்சி இடம்பிடித்திருக்கிறது. கோபாலகிருஷ்ணன் என்ற புலவரை மூட்டைப்பூச்சிகள் நேற்று என்னை இம்சித்ததைப் போலக் கடித்து இம்சித்திருக்கின்றன. நான் பிளாக் எழுதுகிறேன். அந்தக் காலத்தில் இதெல்லாம் இல்லையல்லவா... அதனால், அவர் மூட்டைப் பூச்சி கடி பற்றி ஒரு பாட்டு எழுதிவிட்டார்.

கண்ணுதலான் கயிலையையும் கார்வண்ணன் பாற்கடலையும்
எண்ணும் பிரமன் எழில் மலரையும் நண்ணியதேன்
வஞ்சகமூட் டுப்பூச்சி வன்கொடுமைக் காற்றாதே
அஞ்சியவர் சென்றார் அறி!

என்ன ஒரு கற்பனை பாருங்கள்! சிவனும் விஷ்ணுவும் பிரமனும் மலையிலும் பாற்கடலிலும், மலரிலும் ஏறிக்கொண்டது மூட்டைப்பூச்சிக் கடி தாங்காமல்தானோ என்கிறார் இந்தக் குறும்புக்காரப் புலவர்.

பார்க்கலாம், பரிதாபமாகச் செத்துப்போன நூற்றுக்கணக்கான மூட்டைப்பூச்சிகளின் நினைவையும் மீறி, இன்றைக்கு ராத்திரி எனக்கு உறக்கம் வருகிறதா என்று?

*****
ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும். முட்டையை உடைத்தால்தான் ஆம்லெட்!

15 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

விழுப்புரத்தில் இருந்தவர்களுக்கு மூட்டைப் பூச்சியுடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு கட்டாய விதி போலும். அதில் நீங்களும் நானும் தப்ப முடியுமா? மேலதிக தகவல்களுடன் மிக அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

Kirubanandhini said...

மூட்டைப்பூச்சி கடித்ததற்கே இவ்வளவு அருமையான பதிவா? பாராட்டுக்கள். கூடவே, உங்களை அடுத்தடுத்து தேள், பாம்பு ஆகியவை கடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். :-)

Anonymous said...

//பார்க்கலாம், பரிதாபமாகச் செத்துப்போன நூற்றுக்கணக்கான மூட்டைப்பூச்சிகளின் நினைவையும் மீறி, இன்றைக்கு ராத்திரி எனக்கு உறக்கம் வருகிறதா என்று?//
தவிர்க்கமுடியாமல் உயிர்களைக் கொன்று, பின்பு இறந்த அந்த உயிர்களுக்காக இரக்கப்படும் உங்கள் மனசை போகிறபோக்கில் சொல்லிவிட்டீர்கள். நெகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுகள்.
- கே.ஈஸ்வரி

K.B.JANARTHANAN said...

ஆம்.... முட்டையை உடைத்தால் தான் ஆம்லெட்! மூட்டையை அடித்தால் தான் குட் நைட்! -- கே.பி. ஜனா

butterfly Surya said...

மூட்டை பூச்சி கடியை கூட இவ்வளவு சுவரசியமாக எழுதியதற்கு சபாஷ்..

உங்களிடம் டியூஷன் எடுக்க வேண்டும் சார்...

கிருபா நந்தினியின் ஆசை... அம்மாடி...

Anonymous said...

One of the effective ways people say is to spray Alcohol ( the one we apply our minor cuts in our body).
It seems to effectively control.

We had this problem, and we spray every week to do it, it is effective after 4-5 sprays.

Tamil said...

Same feeling.... :)

வி. நா. வெங்கடராமன். said...

மூட்டைப் பூச்சியை வைத்தே ஒரு பதிவா? பதிவு நல்லா இருந்தது. என்னுடைய அறை நண்பர் ஒருவர் இரவு முழுவதும் விழித்திருந்து மெழுகுவர்த்தித் தீயால் அவற்றை சாகடிப்பார். அதனை நாங்கள் திகிலுடன் பார்த்திருக்கிறோம். ஒரு வாரத்தில் அந்த ஏரியாவிலேயே மூட்டை பூச்சி காலி!!.
--
என்றென்றும் அன்புடன்

வெங்கட், புது தில்லி

பொன்னியின் செல்வன் said...

/காலையில் எழுந்து நடுநிலைமையோடு ஆராய்ந்து பார்த்தபோதுதான், கொசு அப்பிராணி என்பதும், குற்றவாளி மூட்டையார் என்பதும் தெரிய வந்தது. /
:-)

/ராஜாஜி திருச்சி ஜெயிலில் இருந்தபோது, மூதறிஞராச்சே என்று பாரபட்சம் பார்க்காமல் அவரையும் மூட்டைப்பூச்சிகள் பிடுங்கித் தள்ளியிருக்கின்றன./
:-)

அந்த மூட்டை பூச்சிகள் இந்திய தேசிய தொழிலாம் இனப்பெருக்கத்தை, குறைக்கா விட்டால்.
"ஒரு நூறு கொலை!" - பாகம் 2 வர வாய்ப்பிருக்கிறது :-)

Kirubanandhini said...

நேற்று நீங்கள் பதிவு எழுதி முடித்த கையோடு ஒரு ஆர்வத்தில் உடனே என் கருத்தைப் பதிவிட்டேன். பின்பு யோசித்தபோதுதான் முந்திரிக்கொட்டைத் தனமாக சில வார்த்தைகளை எழுதிவிட்டேனோ என்று கவலையாகிவிட்டது. கமெண்ட்டுகளை ஜாலியாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அது சரி, நேற்றைக்கு மூட்டைக் கடி இல்லாமல் உறங்கினீர்களா? மூட்டைப் பூச்சிகள் ஒழிய ஒரு சுலபமான வழி இருக்கிறது. படிகாரக் கல்லை வாங்கிக் கற்கண்டு போல் பொடி செய்து மூட்டைப் பூச்சி இருக்கும் இடங்களில் போட்டால், மூட்டைப் பூச்சித் தொல்லை ஒழியும். என் அனுபவத்தில் கண்ட யோசனை இது.

ரவிபிரகாஷ் said...

நன்றி ராகவன் சார்!

உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன் கிருபா!

அடடா! அது பதிவு எழுதும்போது ஒரு ஃப்ளோவில் வந்து விழுகிற வரி ஈஸ்வரி. அதற்குப் போய் என்னை வள்ளலார் ரேஞ்சுக்குப் புகழ்ந்து கூச்சப்படுத்த வேண்டாம்!

நன்றி கே.பி.ஜனா!

நன்றி பட்டர்ஃப்ளை! கிருபாவின் ஆசை கொஞ்சம் பேராசைதான்! கடைசியில் ஸ்மைலி போட்டுத் தப்பிச்சுக்கிட்டாங்க!

Thanks for your tips, anonymous! I should try this. And, if you had given your name, I had been pleased!

Hai Tamil, Same feeling... Same pinch?! Ha.. Ha..! :-))

புது தில்லி வெங்கட், தீயாலேயே சாகடிப்பாரா... சொல்லும்போதே திகிலாக இருக்கிறதே!

ரவிபிரகாஷ் said...

பொன்னியின் செல்வனுக்குத்தான் நாலைந்து பாகங்கள் உண்டு! ஒரு நூறு கொலைக்குமா? :-)) நன்றி செல்வா!

நெருப்பென்றால் வாய் வெந்துவிடாது கிருபா! இது சும்மா தமாஷ் என்பதுகூட எனக்குப் புரியாதா? மற்றபடி, உங்கள் யோசனைக்கு நன்றி! அதையும் முயன்று பார்க்கிறேன்.

ரவிபிரகாஷ் said...

‘தமிலிஷ்’ஷில் இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுத் தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்திய கீழ்க்கண்டவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
1.அனுபகவான், 2.சி.எஸ்.கிருஷ்ணா, 3.ஸ்வாசம், 4.கிருபாநந்தினி, 5.தமில்ஸ், 6.சுட்டியார், 7.பூபதி, 8.ரஸாக், 9.கே.பி.ஜனா, 10.யூ.ஆர்.விவேக், 11.ஹிஹி12, 12.ரஜினி2009, 13.இரா.அருண்.

அநன்யா மஹாதேவன் said...

உங்களுடைய போர் பதிவில் சொல்ல விட்டுபோச்சு சார், என்னா ரசனையா எழுதி இருக்கீங்க? அருமை.மூட்டைப்பூச்சியைப்பற்றி கூட இவ்வளவு தகவல்கள் சொல்ல முடியுமா? அதுவும் இவ்வளவு ஸ்வாரஸ்யமாக? அருமை. இன்னொரு சுவையான தகவல், ஒரு செகண்டுஹேண்ட் ஃபர்னிச்சர் கடையில் ஸோஃபா வாங்க முற்பட்ட போது அந்த மலையாளி சொன்ன தகவல்-மூட்டைப்பூச்சி தன் மலம் மூலம் தான் பெருகுகிறதாம்.அதாவது,அதன் மலத்தில் பாப்பா பூச்சிகள் இருக்குமாம்!!! அதனால் அதை அழிக்க முடியாதாம்!!!

sathya said...

bedbug problem contact aqua arthropods pest control pvt ltd .
this company person control of bedbug in one service....