சிம்மக்குரலோன் சிவாஜி!

க்டோபர் 1 என்றதும், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சட்டென்று நினைவில் எழும் பெயர் ‘சிவாஜி கணேசன்’.

எனக்கு நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் ‘சரஸ்வதி சபதம்’. என் அப்பா சிவாஜி ரசிகர் என்பதால், நாங்கள் ரொம்பக் காலம் வேறு எந்த நடிகருடைய படங்களையும் பார்த்ததே இல்லை. பார்த்தால் சிவாஜி படம்; இல்லாவிட்டால் இல்லை. இதனால், இயல்பிலேயே நான் சிவாஜி ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அதாவது, சிவாஜியின் நடிப்புத் திறமை என்ன, பெருமைகள் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியாமலேயே சிவாஜி ரசிகனாக ஆகிவிட்டேன். அதில் சொல்லத் தெரியாத ஒரு பெருமையும் கர்வமும்கூட இருந்தது அப்போது.

பிறகு, விழுப்புரத்தில் என் மாமா வீட்டில் தனியே தங்கிப் படிக்கும்போதுதான், அதாவது நான் பத்தாம் வகுப்பு படிக்கையில்தான் தனியாக சினிமாவுக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போதும் சிவாஜி படங்கள்தான். ஆனால், கூடவே ஜெய்சங்கர் படங்களும் பார்க்க ஆரம்பித்தேன். சி.ஐ.டி. சங்கர், கங்கா, எங்க பாட்டன் சொத்து, துணிவே துணை போன்ற படங்களையெல்லாம் பார்த்தது அப்போதுதான்.

‘தங்கைக்காக’, ‘தங்கப் பதக்கம்’, ‘மனிதரில் மாணிக்கம்’, ‘என் தம்பி’, ‘அன்னை இல்லம்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘ரோஜாவின் ராஜா’, ‘பாரத விலாஸ்’, ‘உத்தமன்’, ‘எங்கள் தங்க ராஜா’, ‘ராஜா’, ‘பாபு’, ‘வியட்நாம் வீடு’, ‘ஞான ஒளி’, ‘வசந்தமாளிகை’, ‘சிவகாமியின் செல்வன்’ என நான் தனியாகப் பார்த்து ரசித்த சிவாஜி படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்போதெல்லாம் சிவாஜியின் நடிப்புத் திறமை எனக்குப் புரிபடத் தொடங்கிவிட்டது. நான் அதிகம் ரசித்தது ‘ராஜபார்ட் ரங்கதுரை’, மற்றும் ‘கௌரவம்’ ஆகிய இரண்டு படங்களை.

எந்தப் படத்தையுமே நான் இரண்டாவது தடவை பார்த்தது கிடையாது. சிவாஜியின் மிக நல்ல படங்களைக்கூட இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே - அதுவும், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு - பார்த்திருக்கிறேன். ஆனால், ராஜபார்ட் ரங்கதுரை மற்றும் கௌரவம் ஆகிய இரண்டு படங்களையும் 25 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். கால இடைவெளியிலும், அடுத்தடுத்த நாளிலுமேகூட! (இந்த இரண்டு படங்களுக்கு அடுத்தபடியாக நான் அதிகம் முறை பார்த்து ரசித்தது ‘ரத்தக் கண்ணீர்’. சுமார் 15 தடவை!)

அப்போதெல்லாம் சிவாஜி ரசிகர்களுக்கும், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் தனித்தனியாகப் பத்திரிகைகள் இருந்தன. சிவாஜி பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து எழுதியிருப்பார்கள்; எம்.ஜி.ஆர். பத்திரிகையில் சிவாஜியைக் கேலி செய்து எழுதியிருப்பார்கள். படிக்கப் படிக்க ஆத்திரமாக வரும். சிவாஜியைக் கஞ்சன் என்றும், எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டார் என்றும் என்னென்னவோ எழுதியிருப்பார்கள். அதைப் படிக்கும்போது வேதனையாக இருக்கும். அடுத்து வெளியாகும் சிவாஜி பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரை மோசமாகத் திட்டி எழுதியிருப்பார்கள். ‘அப்படிப் போடு’ என்று பழி தீர்த்துக் கொண்ட சந்தோஷம் கிடைக்கும்.

மன முதிர்ச்சி இல்லாத வயது அது. உண்மையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் எத்தனை நட்பாகவும் பாசத்துடனும் இருந்தார்கள் என்பது வளர வளரத்தான் புரிந்தது. ரசிகர்களை உசுப்பேற்றிப் பத்திரிகைகளை விற்றுக் காசு பார்க்கும் உத்தி அது என்பது பின்னாளில்தான் தெரிந்தது.

சிவாஜி கஞ்சன் என்பதற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஓர் உதாரணம் சொல்வதுண்டு. சிவாஜியின் கார் டிரைவரோ யாரோ, தன் மகள் கல்யாணத்தை நிச்சயம் செய்துவிட்டுப் பத்திரிகையை சிவாஜியிடம் கொடுத்தபோது, அவர் நூறு ரூபாய் அன்பளிப்பு கொடுத்தாராம். அந்த டிரைவர் நொந்து போய், “என்னங்கய்யா! உங்க மகன் பிரபுவே ஆயிரம் ரூபாய் கொடுத்துச்சுங்களே!” என்று சொல்லவும், “அவனுக்கென்னப்பா! கொடுப்பான். அவங்கப்பன் பணக்காரன்; எங்கப்பன் ஏழையாச்சே!” என்றாராம் சிவாஜி. இப்படியாக, உண்மையோ பொய்யோ, பல கதைகளைக் கேட்டுக் கேட்டு, நிஜமாகவே சிவாஜி கஞ்சன்தானோ என்று உள்ளூர எனக்கே ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால், சமீபத்தில் விகடனின் பொக்கிஷம் பகுதிக்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி!

1959-ம் ஆண்டு, அன்றைய கால கட்டத்திலேயே, வேறு எந்த நடிகருமே கொடுக்காத அளவில், மிக அதிகமான தொகையாக ஒரு லட்சம் ரூபாயை ஏழைப் பள்ளி மாணவர்களின் இலவச உதவித் திட்டத்துக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார் சிவாஜி. அதை ஆனந்த விகடன் அன்றைக்கே மிகவும் சிலாகித்துத் தலையங்கமே தீட்டியிருக்கிறது.

12.4.1959 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான அந்தத் தலையங்கத்தை சமீபத்தில் ஜூலையில் சிவாஜி நினைவு நாளின்போது விகடன் பொக்கிஷம் பகுதியில் மறுபிரசுரம் செய்திருந்தோம்.

அந்தத் தலையங்கத்தை அப்போது படிக்காதவர்களுக்காக இங்கே...

நடிகர் திலகத்தின் நன்கொடை!

ண்டைத் தமிழ்நாட்டிலே அரசர்களும் பிரபுக்களும் கலைஞர்களுக்கு வாரி வழங்குவதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. மக்கள் மன்னர்களாக மாறிவிட்டனர்! அதனால், கலைஞர்கள் வள்ளல்களாக மாற முடிந்திருக்கிறது.

சென்ற வாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நகரத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவளிக்கும் திட்டத்துக்கு இதுவரை யாருமே கொடுத்தறியாத பெருந்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்துள்ளார். கட்டபொம்மன் நாடகத்தின் நூறாவது தின விழாக் கொண்டாட்டத்தை ஒட்டி, இந்த நூறாயிரம் ரூபாய் இப் பெரும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆன்மா ஆனந்தமடைகிறது.

தமிழ்நாட்டில் இத்தகைய ஈகையுள்ளம் படைத்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது நமது பாரதப் பிரதமருக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது முதன்மந்திரி, சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதம மந்திரி நேருஜி கையாலேயே அதை நகரசபைக்கு அளிக்கவேண்டும் என்று யோசனை கூறினார்.

நல்ல காரியங்களுக்கு உதவி புரிவதில் எப்போதுமே முன்னணியில் நின்று வருகிறார்கள் நம் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள். புயலடித்தாலும், வெள்ளம் வந்தாலும் அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் அரிய லட்சியத்துக்கு லட்சம் ரூபாய் கொடுத்த சிவாஜி கணேசன் அவர்களைக் குழந்தைகள் கொண்டாடும்; தெய்வம் வாழ்த்தும்; தமிழ்த் தாய் பெருமைப்படுவாள்!

***

சிம்மக்குரலோன் பிறந்த ஊரில் (விழுப்புரம்) வளர்ந்தவன்; அவர் வளர்ந்த ஊரில் (சென்னை) பிறந்தவன் என்கிற முறையில் பெருமிதத்தோடு இந்தப் பதிவை முடிக்கிறேன்.

*****
திறமை குறைந்தவன் பிறரை மிஞ்ச நினைப்பான்; திறமை மிகுந்தவன் தன்னையே மிஞ்ச நினைப்பான்!

5 comments:

பிரபாகர் said...

//சி.ஐ.டி. சங்கர், கங்கா, எங்க பாட்டன் சொத்து,//

பிரகாஷ்...

இந்த படங்களையெல்லாம் டென்ட் கொட்டாயில் பார்த்து விட்டு ஆற்றில் அதே போல் சண்டை போட முயற்சிப்போம்.

கர்ணன்,பாசமலர் இரண்டையும் பார்த்து நான் துண்டு நனைய அழுத கதையை இன்னும் வீட்டில் கிண்டலடிப்பார்கள்.

(கர்ணனில் கிளைமாக்ஸிலும், பாசமலரில் சாவித்ரியை விட்டு தனியே சென்றதற்குப் பின்னும் அழுதேன்)

அப்பாவோடு பயங்கர விவாதம் நடக்கும் சிவாஜி ஓவர் ஆக்டிங் என. இரும்புத்திரை பார்த்து எனது கருத்தை மாற்றிக்கொண்டேன்...

அவரின் இலட்ச ருபாய் உதவி மிகப்பெரிய விஷயம்...

நினைவு கூர்தலுக்கு நன்றி, மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்.

பிரபாகர்.

KALYANARAMAN RAGHAVAN said...

சிவாஜி கணேசன் பிறந்த ஊரில் படித்து வளர்ந்து இருக்கிறீர்கள். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதது அதே விழுப்புரத்தில் பிறந்து, வளர்ந்து படித்த எனக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ம்...பரவாயில்லை அடுத்த பதிவில் இதை நைசா புகுத்தி விடுங்க.

ரேகா ராகவன்.

ரவிபிரகாஷ் said...

திரு.பிரபாகர், இந்த வலைப்பூவில் வழக்கமாகக் கடைசியில் நான் போடும் பொன்மொழியை ‘கோலங்கள்’ பார்த்துவிட்டு வந்து போடலாம் என்று கம்போஸ் செய்தவரையில் அப்லோடு செய்துவிட்டுப் போய், சாப்பிட்டுவிட்டு வந்தால், உங்கள் பின்னூட்டம். மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது தோழர்!

திரு.ராகவன், இடையில் ஒரு மணி நேரமாகுமே என அடித்த வரையில் அப்லோடு செய்துவிட்டு, மிச்சத்தை அப்புறம் வந்து பார்த்துக்கொள்வோமே என்று நினைத்தேன். அதற்குள் படிப்பீர்கள் என்று நான் கனவிலும் கருதவில்லை. அடுத்த பதிவில் என்ன, இந்தப் பதிவிலேயே தாங்கள் சொன்னதை (நான் நினைத்திருந்ததை) சேர்த்துவிட்டேன். உடனடி பின்னூட்டத்துக்கு உங்களுக்கும் பிரபாகருக்கும் மீண்டும் என் நன்றி!

ரிஷபன் said...

சிவாஜி பற்றிய பதிவு படித்ததும் அந்த நாட்களில் நாங்கள் போட்டுக் கொண்ட சண்டைகளும் நினைவில் வந்தன. 'அவர் கஷ்டப் பட்டு சம்பாதிச்சதை எதுக்கு தர்மம் பண்ணனும் உங்காளு மூஞ்சி காட்டி வாங்கறதை தாராளமா தர்மம் பண்ணட்டும்' னு லக லக னு சண்டை போடுவோம். (இப்ப நினச்சா பப்பி ஷேம்) இன் பாக்ட் நம்ம மனசுல எப்பவும் யாராச்சும் ஏதாவது ஓசி தரமாட்டாங்களான்னு எப்பவும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கோ ? அதைத்தான் இப்பவும் அரசியல்வாதிங்க இலவசமா கொடுத்து யூஸ் பண்ணிக்கிறாங்களா! ரிஷபன்

ரவிபிரகாஷ் said...

//யாராச்சும் ஏதாவது ஓசி தரமாட்டாங்களான்னு எப்பவும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கோ?// இருக்கோ இல்லை; கண்டிப்பா இருக்கு ரிஷபன். கீழே ஒரு ரூபாயைக் கண்டெடுத்தா, இன்னும் வேற ஏதாவது சில்லறை விழுந்து கிடக்காதான்னு மனுஷக் கண்கள் தேடுதே! பின்னூட்டத்துக்கு நன்றி!