ஐயோ பாவம், ஆண்கள்!

‘கல்யாண மாலை’ என்று ஒரு நிகழ்ச்சியை யதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. அதில், தனக்கு வரப்போகிற மனைவி அழகான பெண்ணாக, குடும்பத்துக்கு அடங்கிய மருமகளாக, ஓரளவு படித்தவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மணமகன்கள். மணமகள்களோ தனக்கு வரும் வரன்கள் நல்ல வேலையில் இருப்பவராக, கை நிறையச் சம்பளம் வாங்குபவராக, தன்னைக் கண்ணில் வைத்துக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும் என்கிறார்கள். செய்தித்தாள்களில் ‘மேட்ரிமோனியல்’ பகுதியில் பார்த்தாலும் இப்படித்தான் குறிப்புகள் இருக்கின்றன.

ஆக, பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் அழகாக, குறிப்பாக சிவப்பாக இருக்க வேண்டும்; அடங்கியவளாக, எதிர்க் கருத்து சொல்லாதவளாக இருக்க வேண்டும். மற்றபடி, அவள் பெரிய படிப்பு படித்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில்லை. படித்திருந்தால் எதிர்த்துப் பேசுவாளே! இது உள்ளூரப் படிந்து கிடக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. பெரும்பாலான பெண்கள் ஆண்களின் அழகைப் பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை. கை நிறையச் சம்பாதிக்க வேண்டும்; தன்னை வசதியாக வைத்துக் காப்பாற்ற வேண்டும்.

பெண்ணை எப்படியாவது ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் போதும் என்கிற பதைபதைப்பு மனோபாவம் இன்னமும் நம் சமூகத்தில் பெற்றோர்களிடையே நிலவுவது அவர்களின் பேச்சிலிருந்து புலப்பட்டது. இந்த ‘எப்படியாவது ஒருத்தன் கையில்’ என்கிற துடிப்புதான் வரதட்சணை என்கிற திருமண லஞ்சத்துக்கான ஊற்றுக் கண்.

சாஸ்திரங்களில் எங்கும் வரதட்சணை பற்றிச் சொல்லப்படவே இல்லை. சொல்லப்போனால், தங்கத் தாலி கட்டுவது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. தாலி கட்டுவது என்பது பின்னாளில் தோன்றிய ஓர் அடையாளச் சின்னம்தான். சாஸ்திரங்களில் தாலி கட்டுதல் இல்லை. சப்தபதி என்கிற சடங்குதான் திருமண ஒப்பந்தத்தைக் குறிக்கும் நிகழ்வு. மணமகளின் கால் மெட்டி விரலைப் பிடித்துக் கொண்டு ஏழு எட்டு எடுத்து வைக்கும் நிகழ்வு அது.

என்னுடைய திருமணத்தில் நான் எந்த நிபந்தனையும் போடவில்லை; கல்யாணத்தை ஒரு கோயிலில் மிக எளிமையாக நடத்த வேண்டும் என்பதைத் தவிர! ஆனால், அது நடக்கவில்லை. மேலும், பெண் பார்க்கும் படலம் என்று வரிசையாக ஒரு சுற்றுக் கிளம்பி, ஏழெட்டுப் பெண்களைப் பார்த்து, மார்க்கெட்டில் கத்தரிக்காய் பொறுக்குவது மாதிரி பொறுக்க எனக்கு விருப்பமில்லை. ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்த்தேன். பெண் பார்க்கக் கிளம்பும்போதே என் பெற்றோரிடம், “இப்போது பார்க்கப் போகிற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஒரு பைசா வரதட்சணை கூடாது என்று சொல்லி விடுங்கள். மற்றபடி, அந்தப் பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் முழுச் சம்மதமா என்று கேட்டு விடுங்கள்” என்று சொல்லி விட்டேன்.

நான் ஒன்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவனல்ல; கை நிறையச் சம்பளம் வாங்குபவனும் அல்ல (அப்போது!); நம்பிக்கையான அரசு உத்தியோகஸ்தனும் அல்ல. இருந்தாலும், பெண்ணுக்கும் இதில் சம்மதம் இருந்ததால், எங்கள் திருமணம் 1992-ல் நடந்தது.

‘கல்யாணத்துக்கு எனக்கு மணமகள் வீட்டில் பைக் வாங்கிக் கொடுத்தார்கள்’, ‘பெண்ணுக்கு நூறு பவுன் நகை போட்டு அனுப்பினார்கள்’ என்று பெருமையோடு என்னிடம் வந்து சொல்லிக் கொள்ளும் நண்பர்கள் இன்றைக்கும் உண்டு. அவர்கள் பேரில் எனக்கு மரியாதையே ஏற்பட்டதில்லை. கொஞ்சம் அருவருப்புகூட உண்டாகியிருக்கிறது. பெண் வீட்டார் வசதியாக இருந்து, தங்கள் பெண்ணுக்கு அதிகம் சீர் வரிசை செய்து திருமணம் செய்து தருவதே தங்களுக்குக் கௌரவமாக இருக்கும் என்று நினைத்துச் செய்திருக்கலாம். இந்த நண்பர்கள் எந்த டிமாண்டும் வைத்திருக்காமலும் இருக்கலாம். இருந்தாலும், உழைக்காமல் ஓசியில் கிடைத்த ஒரு பொருள் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதேகூட அநாகரிகமாக, அற்பத்தனமாகத்தான் எனக்குப் படுகிறது. நான் இதுவரை ஒரு லாட்டரிச் சீட்டு கூட வாங்கியது கிடையாது.

வரதட்சணைக்கு ஆண்கள்தான் காரணம் என்று மகளிர் கோஷ்டி ஒன்று கூக்குரல் போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால், யதார்த்தம் வேறு. நான் பார்த்த பல திருமணங்களில் பெண் வீட்டார்தான் வலியச் சென்று வரதட்சணை லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். மணமகன்கள், கல்யாண மார்க்கெட்டில் தங்களுக்கு நல்ல விலை இருப்பது தெரிந்து, தங்களுக்கான விலையை முடிந்தவரை ஏற்றியிருக்கிறார்கள் - கிடைத்தவரை லாபம்தானே என்று! பணக்கார மாப்பிள்ளையாக, வெளிநாட்டில் வேலை செய்பவனாக, கை நிறையச் சம்பாதிப்பவனாக இருந்தால் தங்கள் பெண்ணை நல்லபடி வைத்துக் காப்பாற்றுவான் என்று, அந்த மணமகன்கள் கேட்டதைக் கடனோ உடனோ வாங்கிக் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கின்றனர் பெண்ணின் பெற்றோர். மணமகன் ஏழையாக, கை நிறையச் சம்பாதிக்காதவனாக இருந்து, ‘ஆனாலும், நான் ரொம்ப நல்லவன்க. மூட்டை தூக்கியாவது உங்க பெண்ணைக் கண் கலங்காம வெச்சுக் காப்பாத்துவேன்’ என்று சத்தியம் செய்தாலும், யாரும் அவனுக்குப் பெண் தர மாட்டார்கள்.

என்னைத் தேடி வந்த ஒரு பெண் வீட்டாரில் மணமகனின் சகோதரன், எனக்கு பி.எஃப், கிராஜுவிட்டி எல்லாம் எவ்வளவு வரும் என்று கேட்டான். கும்பிடு போட்டு அனுப்பி வைத்து விட்டேன்.

என் பெரியப்பாவுக்கு மூன்று மகள்கள். என் அத்தைக்கு மூன்று மகன்கள். பெரியப்பா தன் இரண்டாவது மகளை என் அத்தையின் மூத்த மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பினார். என் அத்தையும், அத்தையின் கணவரும் இதற்கு ஒப்புக் கொண்டனர். என் அத்தை மகனுக்கும் சம்மதம்தான். வரதட்சணை ஒரு பைசா வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கிட்டத்தட்ட நிச்சயதார்த்தம் வரை வந்த அந்தத் திருமணம் திடீரென்று கிணற்றில் போட்ட கல் மாதிரி ஆகிவிட்டது. பெரியப்பாவிடமிருந்து இது பற்றி ஏதாவது பதில் வரும், வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது என் அத்தை குடும்பம். ஆனால், வந்தது பெரியப்பா மகளின் திருமணப் பத்திரிகைதான்.

சொல்லாமல் கொள்ளாமல் ஒரு டெல்லி வரனுக்குத் தன் பெண்ணைப் பேசி நிச்சயித்துக் கல்யாணத்தையும் முடித்துவிட்டார் பெரியப்பா. ஏகப்பட்ட லட்சங்கள் (சுமார் 30 வருடங்களுக்கு முன்) வரதட்சணையாகக் கொடுத்தார். அத்தை பையனை நிராகரித்ததற்கு ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். ‘பையன் ரொம்பப் பலவீனமாக இருக்கிறான்’ என்றார்கள்; ‘பையனை விட பெண் அதிகம் படித்திருக்கிறாள்’ என்றார்கள்.

ஆனால், பெரியப்பா மகளின் திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லை. பெண்ணைக் கொடுமைப்படுத்துகிறார் மாப்பிள்ளை என்று குமுறிக்கொண்டு இருந்தார் பெரியப்பா. ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத என் மகளைக் குடம் குடமாய்த் தண்ணீர் இரைக்கும்படி வேலை வாங்குகிறார் மாமியார் என்று பொருமினார். அப்புறம், ‘என் பெண்ணுக்கு டிவோர்ஸ் வாங்கப் போகிறேன்’ என்று குதித்தார். ஆனால், அப்படி எந்த வில்லங்கமும் நிகழாமல் திருமண ஒப்பந்தம் நீடித்தது. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்த ‘ஆரோக்கிய மாப்பிள்ளை’ ஹார்ட் அட்டாக் வந்து, 50 வயது நிறைவதற்குள்ளாகவே இறந்து போனார். ‘பலவீனமான’ என் அத்தை மகனோ வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இரண்டு செல்வங்களைப் பெற்றார். பெரியவளுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். அவள் அமெரிக்காவில் மாப்பிள்ளையோடு செட்டிலாகிவிட்டாள். பையனும் அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறான். அவரும் இப்போது ஒரு குறைவும் இன்றி, தன் ஓய்வுக் காலத்தை மனைவியுடன் நிம்மதியாகக் கழித்து வருகிறார்.

இதனால் இது ஆனது என்று எதையும் இணைத்துப் பேச நான் வரவில்லை. ஆனால், நமது கணக்கு ஒன்றாக இருக்கிறது; இறைவன் போடும் கணக்கு வேறாக இருக்கிறது. இதில் பெண்களுக்கு எதிரான, வரதட்சணை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு ஆண்களை மட்டுமே சாடுவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. எப்படி ஔவையார் ஒரு பெண்பாற் கவிஞராக இருந்தபோதிலும், பெண்களையே மட்டம் தட்டிக் கவிதைகள் எழுதினாரோ, அது போல ஆண்களிலேயே பலர் பெண்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழியென்று, அப்போதுதான் தன்னை ஆணாதிக்கச் சிந்தனை இல்லாதவனாக, முற்போக்குவாதியாக உலகம் கொண்டாடும் என்று ஆண்களை மட்டுமே குற்றம் சாட்டிப் பேசுகிறார்கள்.

‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!’ என்கிற வாக்கியம் என்னைப் பொறுத்தவரைக்கும் சரியாகத்தான் படுகிறது. பெண்கள் மூன்று வகையாக இருக்கிறார்கள். ஒரு வகையினர், தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக் கொண்டு, தன் கணவன் தன்னை விட மேலானவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தாங்களே முடிவு கட்டி, அவனது முட்டாள்தனங்களையும் வன்முறைகளையும் சகித்துக் கொண்டு காலம் தள்ளுபவர்கள்; இன்னொரு வகையினர், தாங்கள் ஆண்களுக்கு எந்த வகையிலும் அடிமைப்பட்டவர்கள் அல்ல; தாழ்ந்தவர்கள் அல்ல. அதனால், எப்படி வேண்டுமானாலும் தறிகெட்டுத் திரியலாம். ஆண்கள் செய்யும் அத்தனைத் தப்புகளையும் தாங்களும் செய்வதற்கு உரிமை உள்ளவர்கள். அதனால், கணவன் சொல்வது நியாயமாகவே இருந்தாலும் அதைக் கேட்டு நடக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்கிற மனோபாவம் உள்ளவர்கள்.

இந்த இரண்டு வகையினரிலும் சேராத, நடு நிலைமையான, மனதில் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காத பெண்கள் சதவிகிதம் மிகச் சொற்பமே! இவர்களால்தான் உலகம் இன்னமும் சீராக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

*****
பெண்களிடம் வாதாட மூன்று வழிமுறைகள் உண்டு; ஆனால், மூன்றுமே பயனற்றவை!

24 comments:

பிரபாகர் said...

சரியாய் பதித்திருக்கிறீர்கள்... உங்களைப்போல் வரதட்சணை வாங்கவில்லை. ஆனால் நான்காவதாய் பார்த்த பெண்ணை தேர்ந்தெடுத்தேன்..

வர்ததட்சனைக்கு காரணம் கண்டிப்பாய் பெண்கள் தான். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை...

பிரபாகர்.

KALYANARAMAN RAGHAVAN said...

//உழைக்காமல் ஓசியில் கிடைத்த ஒரு பொருள் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதேகூட அநாகரிகமாக, அற்பத்தனமாகத்தான் எனக்குப் படுகிறது. நான் இதுவரை ஒரு லாட்டரிச் சீட்டு கூட வாங்கியது கிடையாது.//

சரியாக சொன்னீர்கள் சார்.

இந்த பதிவை படித்தபோது என் திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. ஏற்பாடு செய்திருந்த ஜானவாச கார் வரவில்லை என்ன செய்வது இப்போது என்று பெண் வீட்டார் கையை பிசைந்து கொண்டிருந்தபோது நடந்தே போய்விடலாம் என்று அவர்களிடம் கூறிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால் என்ன குறைந்தா போய்விட்டேன்? " இப்படியும் ஒரு மாப்பிள்ளையா?" என்று அவர்களுக்கெல்லாம் பரம திருப்தி.

அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

Anonymous said...

//இந்த இரண்டு வகையினரிலும் சேராத, நடு நிலைமையான, மனதில் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காத பெண்கள் சதவிகிதம் மிகச் சொற்பமே! இவர்களால்தான் உலகம் இன்னமும் சீராக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

அதே மாதிரி நல்ல தெளிவான சிந்தனை கொண்ட ஆண்களின் சதவீதமும் குறைவுதானுங்க.

Kirubanandhini said...

வரதட்சணைக் கொடுமைக்குக் காரணம் பெண்கள்தான் என்பதை ஏற்க முடியாது. உங்கள் உறவினர் குடும்பத் திருமணம் போன்று ஒரு சில விதிவிலக்காக இருக்கலாம். மற்றபடி, பெரும்பாலான இடங்களில் ஆண்கள்தான் காரணமாக இருக்கிறார்கள். கேட்டால், தங்களுக்கு அதில் சம்பந்தம் இல்லாதது போல் தங்கள் அம்மாவைக் கைகாட்டுவார்கள்; ஏதோ அம்மா சொல்வது அத்தனையும் தப்பாமல் கேட்டு நடப்பது மாதிரி!

K.B.JANARTHANAN said...

//இந்த ‘எப்படியாவது ஒருத்தன் கையில்’ என்கிற துடிப்புதான் வரதட்சணை என்கிற திருமண லஞ்சத்துக்கான ஊற்றுக் கண்.// மிகச் சரியாக உற்றுப் பார்த்துச் சொல்லியிருக்கிறீர்கள் காரணத்தை! -- கே.பி.ஜனா

ரவிபிரகாஷ் said...

நன்றி பிரபாகர்!

ஆச்சரியம் ராகவன்! வளர்ந்த ஊர் விழுப்புரம் என்பதில் தொடங்கி நம் இருவருக்கும் பல விஷயங்கள் பொருந்தியிருக்கின்றன. என் கல்யாணத்தில் கார் வர நேரமாகும் போலிருந்ததால், சிம்பிளாக நடந்தே ஜானவாசத்தை முடித்தேன். பின்னூட்டத்துக்கு நன்றி!

ஒப்புக்கொள்கிறேன் குந்தவை! நான் மறுக்கவில்லை. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

இருக்கலாம் கிருபாநந்தினி! அது உங்கள் பார்வை. எனக்குப் பட்டதை, நான் அனுபவித்ததை, நான் உணர்வதைத்தானே நான் எழுத முடியும்? பின்னூட்டத்துக்கு நன்றி!

நன்றி கே.பி.ஜனா!

Butterfly Surya said...

நல்ல பதிவு.

அன்பால் இணைவோம் என் இந்த பதிவையும் பார்க்கவும்.

http://mynandavanam.blogspot.com/search/label/Marriage

ரவிபிரகாஷ் said...

திரு.சூர்யா, உங்கள் பின்னூட்டத்தை publish கொடுத்தும் ஏனோ இதில் பதிவாகவில்லை. திரும்பவும் முயன்றபோது, ஏற்கெனவே பதிவாகிவிட்டது என்று காட்டியது. என்ன பிரச்னை என்று புரியவில்லை. எனவே, இ-மெயிலில் வந்த உங்கள் கருத்தை நானே எடுத்து இங்கே போட்டுள்ளேன். பின்னூட்டத்துக்கு நன்றி! நீங்கள் கொடுத்திருந்த உங்கள் பதிவையும் உடனே பார்த்துவிட்டேன்.

செல்வேந்திரன் said...

இரண்டு அண்ணன்களுக்கும் வறிய குடும்பத்தில் பெண் எடுத்தார். இரண்டு பெண்களையும் கஷ்டத்தில் இருந்த இளைஞர்களுக்கு கட்டிக் கொடுத்தார் அப்பா. நம்மகிட்ட இருக்கிற பணம் கஷ்டத்துல இருக்கிறவனை கரை சேர்க்க உதவனும்டே. கஷ்டப்பட்ட பொண்ணுங்க நம்ம வீட்டுல சந்தோஷமா வாழனும். இதாம்டே நம்ம பாலிசிம்பார்.

ரவிபிரகாஷ் said...

வருகைக்கு நன்றி செல்வா! பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் இரண்டுக்கும் அற்புத உதாரணமாகத் திகழும் உங்கள் தந்தையாரை வணங்குகிறேன்!

Karthick Krishna CS said...

//பெண்கள் மூன்று வகையாக இருக்கிறார்கள்//

super. எனக்கு தெரிந்தவர் அவரது மகன்களுக்கு பெண் தேடிக்கொண்டிருக்கார். அவர் படும் கஷ்டங்களை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பெண்கள் போடும் கண்டீஷன்கள் பார்ர்த்து தலை சுற்றுகிறது. ஒரு வேளை, இது காலச் சக்கரம் செய்யும் வேலையாக இருக்கலாம். ஒரு காலத்தில், சில மணல் கயிறு ஆண்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாகவே இது எனக்கு தோன்றுகிறது. நல்லப் பதிவு

மணி said...

நல்ல பதிவு , உண்மைகளை நன்றாக எடுத்துரைக்கிறீங்க

புலவன் புலிகேசி said...

super thala...

பா.ராஜாராம் said...

அருமையான,நேர்மையான பதிவு ரவி!

திருமணத்திற்கு மகள் இருக்கிறாள்.எழுத்து வயிற்றில் கொஞ்சம் பால் வார்க்கிறது.

(அது சரி,பதிவு விடாமல் தமிழிசில் உங்கள் ஓட்டு இருக்கு!ஒரு பின்னூட்டமும் போடுங்க தல.உங்க பேருல ஒரு அர்ச்சனை பண்றேன். :-)) மிக்க நன்றி ரவி!)

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

மிக மிக சரியாகச் சொன்னீர்கள். நாம் போடும்
கணக்கு ஒன்று..ஆனால் ஆண்டவன் போடும்
கணக்கு வேறு விதமாக அல்லவா இருக்கிறது...

திருமதி ஜெயசீலன் said...

வரதட்ணைக்கு காரணம் பெண்ணும் அல்ல,ஆணும் அல்ல ஆணைப் பெற்றவர்கள் தான்.
என் அப்பா எனக்கு திருமணம் பார்க்கும் போது எவ்வளவு இந்த வரதட்சணை நோயால் திருமணம் தளளிப் போனபோது எவ்வளவு வேதனப்பட்டிருப்பார் என்பது எனக்கு இப்போது நினைத்தாலும் கண்ணீர் எட்டி பார்க்கிறது
என் மகன் பிறந்தபோதெ முடிவெடுத்துவிட்டேன் அவனுக்கு வரதட்சணை வாங்ககூடாதென்று

மகா said...

very nice post sir

கோணங்கி said...

very nice post

thenammailakshmanan said...

கிருஷ்ணா
எனக்கு ஓட்டுப் போட்டுஇருக்கீங்க நன்றி
யாருன்னு பார்க்க வந்தேன்

ஒரு உண்மையான அசத்தலான பதிவை படிச்சேன்

அருமையா எழுதுரீங்க கிருஷ்ணா பிடிங்க என் வாழ்த்துக்கள்

அண்ணாதுரை சிவசாமி said...

என்னைப் பொறுத்தவரை........ உங்களைப்
போன்றவர்களால்தான் உலகம் சீராக
இயங்கிக்கொண்டிருக்கிறது.

rk guru said...

அருமையான பதிவு........வாழ்த்துகள்

Jey said...

//இந்த இரண்டு வகையினரிலும் சேராத, நடு நிலைமையான, மனதில் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காத பெண்கள் சதவிகிதம் மிகச் சொற்பமே! இவர்களால்தான் உலகம் இன்னமும் சீராக இயங்கிக்கொண்டு இருக்கிறது.//

நேர்மையான... நடினிலையான அலசல்...நன்றி.

Jey said...

என் கல்யாணத்தில், வரதட்சனை என்ன, மொய் கூட வாங்கக் கூடாதென்று வாங்கவில்லை... அதற்கு என்னை பகைத்துக் கொண்டவர்கள் பலர். பாதிபேர் சாப்பிடாமல் சென்றுவிட்டார்கள்...

virutcham said...

பெண்களும் காரணமா இருக்காங்க என்பதை மறுப்பதற்கு இல்லை. மாமியார் கணவன் கேட்காத வீடுகளில் அந்த வேலையை சம்பந்தப்பட்ட பெண்ணே செய்து கொள்வார். புகுந்த வீட்டில் தனக்கான மரியாதையை பிறந்த வீட்டில் இருந்து வரும் பொருட்கள் நிலை நிறுத்துவதாக நினைப்பது தான் காரணம். இந்த சீர் வரதட்சணை விவகாரங்களில் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரி செய்ய வில்லை என்றால் பெண்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள். இந்த மாதிரி சொத்து விஷயங்களில் ஆண் பெண் என்று எல்லாம் தனித் தனி குற்றம் சொல்லுவதை விட எல்லாம் பொதுவா ஒரே மாதிரி தான் என்று சொல்லலாம். விதிவிலக்குகள் கொஞ்சம் தான்.