வாழ்க வள்ளல் சிவாஜி!

ருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார்.

“சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால், நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார்.

“அதென்ன செய்திங்க?” என்றேன்.

“சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார்.

தொடர்ந்து, “விகடன் பொக்கிஷம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும், அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பே, அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம்.

உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.

சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜி, நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார்.

சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போது, “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால், அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை.

“இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது.

(மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடு, மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.)

நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

வாழ்க வள்ளல் சிவாஜி!

*****
திறமை உங்களை உயரே கொண்டு செல்லும்; ஆனால், நற்குணம்தான் உங்களை அங்கே உட்கார்த்தி வைக்கும்!

4 comments:

Rekha raghavan said...

சிவாஜியைப் பற்றிய பல அரிய தகவல்களை அளித்த தருமகுலசிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு அளித்த தகவல்களை திரட்டி அதை சுவைபட பதிவாக்கி போட்ட உங்களுக்கும் நன்றி.

ரேகா ராகவன்.

கிருபாநந்தினி said...

சிவாஜி செய்த பல தான, தருமங்கள் வெளியுலகுக்குத் தெரியாமலே போய்விட்டன. அவற்றில் இதுவும் ஒன்று. உங்களைப் போலவே நானும் சிவாஜி ரசிகைதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

கே. பி. ஜனா... said...

சிவாஜியின் 'இடது கைக்கே அது தெரியாத'போது நமக்கு தெரிந்திருக்காததில் ஆச்சரியமில்லையே?
1953- இல் 25000 ரூபாய் என்பதன் இன்றைய மதிப்பை நினைத்தால் ஒ, அவர் கொடை வள்ளல் அல்ல, 'கோடி' வள்ளல்!

ENNAR said...

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளிக்கு 1960 ல் கட்டிட நிதியாக அந்த காலத்தில் சிவாஜி அவர்கள் கொடுத்த தொகை ரூபாய்.15,000-