ஒவ்வொரு தலைமுறையுமே கல்வி அறிவிலும் இதர திறமைகளிலும் முந்தின தலைமுறையைவிட மேம்பட்டுத்தான் வந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதுவரை முந்தின தலைமுறைகளைவிட கடந்த தலைமுறைகள் மேம்பட்டு வந்திருப்பதற்கும், சென்ற தலைமுறையைவிட இன்றைய தலைமுறை மேம்பட்டிருப்பதற்கும் உள்ள விகிதாசாரம் மிக அதிகமாகத் தோன்றுகிறது. தகவல் தொழில்நுட்பம் மிக அதிக அளவில் வளர்ந்திருப்பதும், அறிவியல் வளர்ச்சிகள் உடனுக்குடன் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துவிடுவதும்தான் இதற்குக் காரணம்.
இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனத்தைக் கண்டு எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது; மிரட்சியாகவும் இருக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் இன்றைய குழந்தையோடு என் மூன்றாம் வகுப்புப் பருவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நான் எங்கோ படு பாதாளத்தில் இருந்திருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது.
டார்ச் லைட்டில் ஒரு பொத்தானை அழுத்தினால், பல்ப் எரியும்; விட்டால் அணையும். அந்த பொத்தானை அழுத்தியபடியே சற்று முன்னே தள்ளினால், லாக் ஆகி, கையை பொத்தானிலிருந்து எடுத்தாலும் விளக்கு அணையாமல் தொடர்ந்து எரியும். எனக்கு எட்டு வயதாக இருக்கும்போது இரவில் எடுத்துப்போன டார்ச் லைட்டில் என் விரல் யதேச்சையாக அழுத்தி ஸ்விட்சை லாக் செய்துவிட, டார்ச் லைட் தொடர்ந்து எரிந்தது. அந்த சூட்சுமம் தெரியாமல், நான்தான் டார்ச் லைட்டை ரிப்பேராக்கிவிட்டேன் என்று எண்ணி, அப்பாவுக்குத் தெரிந்தால் அடிப்பாரே என்று பயந்துகொண்டு, வெளிச்சம் வெளியே கசியாமல் அதன் மீது ஒரு துணியைச் சுற்றிக் கொண்டு போய் வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிட்டு நைஸாகக் கம்பி நீட்டியதை இப்போது நினைத்தால் சிரிப்பாகவும் இருக்கிறது; வெட்கமாகவும் இருக்கிறது.
இன்றைய குழந்தைகள் நம் காலத்தைவிடப் பல மடங்கு திறமைசாலிகள்; பல மடங்கு புத்திசாலிகள்; பல மடங்கு சிந்தனைத் திறன் உள்ளவர்கள். ஆனால் பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், பெரியவர்களை மதித்தல் போன்றவற்றில் நம் தலைமுறையைவிட ரொம்பவே மோசமாகிவிட்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
என் அப்பா, தன் அப்பா (என் தாத்தா) முன் நாற்காலியிலோ, கட்டிலிலோ உட்காரக்கூட மாட்டார். உட்கார்ந்திருந்தாலும், தாத்தா வந்தால் எழுந்து நின்றுவிடுவார். என் பாட்டியும் அப்படித்தான். ஆனால் நான் அப்படியில்லை; என் அப்பா தரையில் உட்கார்ந்திருக்கும்போது நான் நாற்காலியில் உட்காருகிறேன். என் மனைவியும் அப்படித்தான்; நான் அருகில் நின்றிருக்கும்போது, நாற்காலியில் அமர்ந்திருப்பாள். இதை ஒரு பெரிய தவறாக என்னால் சொல்ல முடியவில்லை. என்றாலும், சென்ற தலைமுறையின் பணிவோடு ஒப்பிடும்போது இந்தச் செயல்கள் சற்று மரியாதைக் குறைவைத்தானே காட்டுகின்றன! கல்வியிலும் இதர திறமைகளிலும் பன்மடங்கு மேம்பட்ட இன்றைய தலைமுறை, ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விஷயத்திலும் நம் தலைமுறையைவிடப் பன்மடங்கு மோசமடைவது இயல்புதானே?
அப்பாவுக்கு வயது 80. அம்மாவுக்கு 72. இருவரும் தினமும் மாலையில் பக்கத்துத் தெருக்களில் வாக் போய் வருவார்கள். அங்கே ஒரு தெருவில், அமைதியான ஓரிடத்தில் ஓரமாக உள்ள சிமெண்ட் திண்ணையில் சற்று நேரம் அமர்ந்துவிட்டு வருவார்கள். அப்படி அமர்ந்திருக்கும்போது, அநேகமாக அது பள்ளிகள் விடும் நேரமாக இருக்கும். யூனிஃபார்ம் அணிந்த ஏராளமான மாணவிகளும் மாணவர்களும் அந்த வழியாகக் கடந்து போவார்கள். அவர்கள் பேசுகிற பேச்சும், மாணவிகளும் மாணவர்களும் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்கிற விதமும் மிக ஆபாசமாக இருப்பதாகச் சொல்லி வருத்தப்படுவார் அப்பா. அப்படி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை இங்கே எழுத முடியாது. அத்தனை ஆபாசம்!
இந்தப் பேச்சுக்கள் எதுவும் ஒளிவு மறைவாக இருக்காது; தெருவில் போகிற, வருகிற அத்தனை பேருக்கும் கேட்கிற மாதிரி சத்தமாகவேதான் இருக்கும் - யார் எங்களைக் கேட்பது என்கிற திமிரோடு!
அந்தக் காலத்தில், தெருவில் ஒரு பையன் ஏதாவது தவறு செய்தால், அதைத் தெருவோடு போகிற எந்தப் பெரியவரும் கூப்பிட்டு உரிமையோடு கண்டிப்பார்கள். அதை அந்தப் பையனின் பெற்றோரும் வரவேற்பார்கள். சண்டைக்குப் போக மாட்டார்கள். இன்றைக்கு அப்படியா! மாணவனை ஆசிரியரே அடிக்கக் கூடாது என்று சட்டமே வந்துவிட்டது. சரி, இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோர் சென்ற தலைமுறை ஆசிரியர்களிடம் இருந்த ஒழுக்கம், தகுதியோடு இல்லை என்பதும் உண்மைதான்.
நேற்று என் அப்பாவும் அம்மாவும் வழக்கமான அந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்திருக்கும்போது ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் இரண்டு மூன்று பேர் அருகில் வந்து ஏதோ பழிப்புப் காட்டிக் கேலி செய்தார்களாம். விரட்டியும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப வந்து எரிச்சல் மூட்டுவது போல கேலி செய்தார்களாம். அப்பா கோபமுற்று அவர்களை ஏதோ திட்டிவிட, அவர்கள் சற்றுத் தொலைவுக்குப் போய் கீழே கிடந்த கற்களைப் பொறுக்கி இவர்கள் மீது எறிந்துவிட்டு, “யோவ் பெரிசு! மண்டை உடைஞ்சு போவும், ஜாக்கிரதை!” என்று கத்திவிட்டு ஓடிவிட்டார்களாம். இதைக் கவனித்தபடியே போன ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்தப் பிள்ளைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, “சின்னப் பசங்க கிட்ட ஏன்யா வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டுப் போனாராம். வருத்தப்பட்டுச் சொன்ன அப்பாவும் அம்மாவும் இன்றைக்கு வாக் போகவே விரும்பாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார்கள்.
ஒழுக்கம், பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை இவற்றை எனக்கு என் அப்பா போதித்த விதம் குறித்து இரண்டு நிகழ்வுகள் உடனடியாக என் ஞாபகத்துக்கு வருகின்றன. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட புதுசு. அதுவும் குரங்குப் பெடல் செய்வதிலிருந்து பாருக்கு மேல் காலைத் தூக்கிப் போட்டு சைக்கிள் ஓட்டத் தொடங்கிய புதிது. சட்டென்று பிரேக் பிடித்து இறங்கத் தெரியாது. கால் தரையில் எட்டாது. அப்படி ஒருமுறை சைக்கிள் பழகிக்கொண்டு இருந்த சமயம், குறுக்கே ஆசிரியர் ஒருவர் வந்துவிட்டார். ஆசிரியர் என்றால் எனக்கு ஆசிரியர் அல்ல; அப்பாவுடன் எலிமென்ட்டரி ஸ்கூலில் ஒன்றாகப் பணியாற்றும் ஆசிரியர். அவர் மீது மோதிவிடப் போகிறேனே என்கிற பதற்றத்தில், சைக்கிள் மணியை அடித்தேன் - நகரட்டுமே என்று. அவர் நகர்ந்ததும் கொஞ்சம் சுதாரித்து, சைக்கிளை மெதுவாகச் செலுத்தி, பிரேக் பிடித்து இறங்கிவிட்டேன். இது நடந்தது எங்கள் வீட்டு வாசலில்.
பார்த்துக்கொண்டே இருந்த அப்பா, விறுவிறுவென்று அருகில் வந்து என் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். “ராஸ்கல்! வாத்தியாருக்கே மணி அடிச்சு நகரச் சொல்றியா நீ? அவ்வளவு திமிர் ஏறிப்போச்சா உன் உடம்புல?” என்றார். “அப்... அப்பா... பிரேக் பிடிக்கத் தெரியலே! அதான்...” என்றேன் பொங்கி வரும் அழுகையோடு. “விழு! பிரேக் பிடிச்சு இறங்கத் தெரியலேன்னா கீழே விழு! பரவாயில்லே. அதுக்காக, பெல் அடிச்சு வாத்தியாரை நகரச் சொல்றதுதான் மரியாதையா?” என்றார்.
இன்னொரு முறை, எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் எதற்கோ என்னை அழைத்தார். ஏதோ கேட்டார். நான் அதற்கு ஏதோ பதில் சொன்னேன். அவர் உடனே, “அறிவிருக்காடா உனக்கு! முட்டாள், முட்டாள்!” என்று திட்டினார். அவர் ஏன் திட்டினார் என்று புரியாமல், நான் என் வீட்டுக்குப் போனபோது, வாசலில் அப்பா நின்றிருந்தார். முன்பு போலவே பளாரென்று என் கன்னத்தில் அறைந்தார். பிறகு, “அவர் எதுக்குடா உன்னைத் திட்டினாரு?” என்று கேட்டார். “தெரியலை” என்றேன். மீண்டும் ஓர் அறை! “ராஸ்கல்! ஒரு பெரியவர் உன்னைத் திட்டறாருன்னா, நீ ஏதாவது தப்பு பண்ணியிருக்கணும். என்ன பண்ணே சொல்லு?” என்றார். “நான் ஒண்ணுமே பண்ணலையே!” என்றேன். “வா!” என்று என்னை இழுத்துக் கொண்டு எதிர் வீட்டுக்குப் போனார். அந்தப் பெரியவரிடம் ஏதோ விசாரிக்கத் தொடங்கினார்.
அதற்குள் அந்த வீட்டுக்குள்ளிருந்து வந்த ஒரு அம்மாள், அந்தப் பெரியவருக்குத் தெரியாத விதத்தில் மெதுவாக, “ஐயோ! அவர் கிட்டே எதுவும் கேட்காதீங்க. அவருக்குக் கொஞ்சம் மூளை சரியில்லை. ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசுவாரு. யாரு என்னன்னு பார்க்காம ஏதாச்சும் கன்னா பின்னானு திட்டிடுவாரு!” என்று சொன்னார்.
அவருக்காக என்னை அறைந்தது பற்றி அப்பா பின்னர் வருத்தப்பட்டாலும், அதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்: பெரியவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையில் எந்த விதத்திலும் அணுவளவுகூடக் குறையக்கூடாது!
இன்றைய இளைய தலைமுறை இந்த அளவுக்குப் பணிவு காட்ட வேண்டாம்; இதில் பத்தில் ஒரு பங்காவது மரியாதையோடு நடந்துகொள்கிறதா என்பதே என் கேள்வி; கவலை!
சில நாட்களுக்கு முன்னால், ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு போன கல்லூரிப் பெண் ஒருத்தி தேவையே இல்லாமல் தன்னைப் பார்த்து, “ஏய் கிழவா!’ என்று கத்திச் சிரித்துக்கொண்டே போனதாகச் சொன்னார் அப்பா. நானும் ஒரு முறை பஸ்ஸில் வந்துகொண்டு இருந்தபோது, ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்த, ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும் சிறுவன் ஒருவன் தன் சக நண்பர்களிடம், “எங்கப்பனுக்குச் சுத்தமா அறிவே இல்லடா! ‘நோட்டு வாங்கணும், பத்து ரூபா கொடுப்பா’ன்னா, ‘எதுக்கு, ஸ்கூல்லயே தரமாட்டாங்களா? அதான் ஃபீஸ்லயே சேர்த்துக் கட்டியாச்சே’ங்கிறான். சே... ஆஃப்ட்ரால் ஒரு பத்து ரூபாய்க்கு இவன்கிட்டே கையேந்தி நிக்க வேண்டியிருக்கு” என்று சொல்லிக்கொண்டு இருந்ததைக் கேட்டு அதிர்ந்து போனேன்.
எங்கே போகிறது இளைய தலைமுறை?
*****
அனுமதிக்கவில்லையெனில் உங்கள் குழந்தைகள் தவறான காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; அனுமதிக்காதவரை சரியான காரியங்களையும் செய்ய மாட்டார்கள்!
அனுமதிக்கவில்லையெனில் உங்கள் குழந்தைகள் தவறான காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; அனுமதிக்காதவரை சரியான காரியங்களையும் செய்ய மாட்டார்கள்!
13 comments:
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. இன்றைய இளைய தலைமுறை எல்லா விஷயங்களிலும் படுவிவரமாய் இருக்கிறார்கள். ஒப்பிட்டு பார்த்தால் நமக்குத்தான் தலை சுத்தும்....
நல்ல ஓர் இடுகை...
பிரபாகர்.
உங்கள் கட்டுரை இரண்டு எக்ஸ்ட்ரீம்களைப் பற்றி பேசுகிறது. அனாவசியமான மரியாதைகளை எதிர்பார்த்து அடக்கி ஒடுக்கிய தலைமுறை. பொறுப்பற்ற இன்றைய தலைமுறை. சினிமாவையும், டிவியையும் தடை செய்தால் இதெல்லாம் சரியாகி விடும். பெரியவரிலிருந்து சிறியவர் வரை எல்லோருக்குமே இவையிரண்டும்தானே இப்போது ஆக்சிஜனும், தண்ணீரும்! சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
//பெரியவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையில் எந்த விதத்திலும் அணுவளவுகூடக் குறையக்கூடாது!//
எல்லோரும் இதை உணர்ந்து நடந்துகொண்டாலே போதும் பல சங்கடங்களை தவிர்த்து விடலாம். இந்த காலத்துக்கு தேவையான பதிவு .
ரேகா ராகவன்.
முறையற்ற வழியில் தலை தெறிக்க ஓடும் இளைய தலைமுறைக்கு புத்தி சொன்னால் முறைத்தலைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மனம் முதிர்ந்த நாம் பொறுத்திருப்போம். காலமும் கடவுளும் அவர்களுக்கும் ஓர் திருப்பு முனையை வைத்திருப்பார்கள். --கே.பி.ஜனா.
பேருந்திலும் இது போன்று பல நிகழ்வுகள் வருத்தம்டைய செய்ததுண்டு..
இளைய தலைமுறைக்கு அட்வைஸ் வேப்பங்காயாக இருக்கிறது.
சில நேரங்களில் என்ன செய்வதென்றே புரியவில்லை. சரவண குமார் சொல்வது போல சகித்து கொள்ளதான் வேண்டுமோ..???
எஸ் ஆர். கே கருத்துடன் உடன்படுகிறேன். டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் வடிவேலு, விவேக், கவுண்டமணி இன்னபிறர் பேசும் வசனங்கள் இப்படித்தான் அமைகிறது (பெரும்பாலும்) - பெரியவர்களையும், மற்றவர்களையும், ஊனமுற்றவர்களையும் கிண்டல் செய்வது போல. அதைப் பார்த்து பார்த்து - நமது இளைய தலைமுறையும் அதையே பின்பற்றுகிறது.
என்ன செய்வது. உங்களுக்கும் வயதாகிவிட்டது :-) :-) (ரெண்டு சிரிப்பான்)
எனக்கும் வயதாகிவிட்டது :-) நம்மால் இதுபோன்ற போக்குகளை தாங்க முடியவில்லை - அங்கலாய்க்கத் தான் முடிகிறது.
- அலெக்ஸ் பாண்டியன்
திரு.பிரபாகர்,
நன்றி!
திரு.எஸ்.ஆர்.கே.,
சினிமாவையும் டி.வி-யையும் தடை செய்தால்..? ‘ஆக்சிஜனையும் தண்ணீரையும்’ எப்படித் தடை செய்ய முடியும்? கருத்துக்கு நன்றி!
திரு.ராகவன்,
நன்றி!
திரு.கே.பி.ஜனா,
//காலமும் கடவுளும் அவர்களுக்கும் ஓர் திருப்பு முனையை வைத்திருப்பார்கள்// அந்தத் திருப்புமுனை ஆரோக்கிய திருப்புமுனையாக, விரைவிலேயே வந்தால் நல்லது!
திரு.சூர்யா,
உங்களுக்கும் இது போன்ற கசப்பான அனுபவங்கள் நேர்ந்திருக்கிறதா என்ன? அது சரி, அவர் சரவணகுமாரா? சத்யராஜ்குமார் என்றல்லவோ நான் நினைத்தேன்! பின்னூட்டத்துக்கு நன்றி!
திரு.அலெக்ஸ்பாண்டியன்,
தங்கள் வருகைக்கு நன்றி! ‘மூன்று முகம்’ படம் பார்த்ததிலிருந்து அலெக்ஸ்பாண்டியன் என்கிற பெயரில் எனக்குத் தனி கிரேஸ்! எனவே தங்கள் வரவு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி!
தமிழிஷ்-ல் ஓட்டளித்த...
சி.எஸ்.கிருஷ்ணா, ஜாலிஜெகன், ஈஸிலைஃப், கிருபாநந்தினி, ஆட்பாக்ஸ்தினேஷ், பிரபாகர், பார்வை, சுவாசம், இரா.அருண், அனுபகவான், நண்பன்2k9, விமல்-ஐஎன்டி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி!
//அது சரி, அவர் சரவணகுமாரா? சத்யராஜ்குமார் என்றல்லவோ நான் நினைத்தேன்!//
சத்யராஜ்குமார் என்பதுதான் சரி. அவர் என் நீண்ட கால நண்பர் என்பதால் இதை தெரிவிக்கிறேன்.
ரேகா ராகவன்.
திரு.கார்த்திகேயன்,
நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் சொன்னவை அனைத்தும் சரியாகவே இருக்கலாம். ஆனாலும், அதை இங்கே பதிவிட முடியாததற்கு வருந்துகிறேன். இங்கே, இந்தப் பதிவுகளில் நான் எழுதியவற்றுக்கான உங்கள் அபிப்ராயங்களை மட்டுமே பதிவிட இயலும். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், ரவிபிரகாஷ்.
நமது பெரியவர்கள் (உங்கள் தந்தையார் போன்று) நமக்கு எப்படி வழிகாட்டினார்களோ அப்படி நாம் உருவானோம். நாம் எப்படி வழிகாட்டுகிறோமோ அப்படித்தானே நமது வாரிசுகளும் உருவாவார்கள்? அவர்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது? தப்பு நம்மிடம்தான்!
மிகச்சரியாகவே தோன்றுகிறது கிருபாநந்தினி சொல்வது. நாம் தான் இந்தச்சீரழிவிற்கு பொறுப்பு.இந்த தலைமுறையினர் அதிர்ச்சி தான் தருகிறார்கள். என் அம்மா என் பாட்டியுடன் நடந்துகொள்வதைபோல நான் நடப்பதில்லைதான். இருந்தாலும் என் குழந்தை என்னை இந்த அளவுக்கு கூட நடத்துமா தெரியவில்லை. கவலையாகத்தான் இருக்கு சார்.
இந்த கட்டுரை இளைய தலைமுறைகள் சிந்தித்க கூடியதுதான். இது போன்ற தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் இருக்ககூடிய website களை எனது mail idக்கு அனுப்ப வேண்டிகிறேன்
feros_ali@yahoo.co.in
Post a Comment