பணக்காரப் பிச்சைக்காரர்கள்!


ந்தப் பிச்சைக்காரருக்கும் மனசறிந்து நான் பத்து பைசா தர்மம் செய்தது இல்லை. இதற்குப் பல காரணங்கள். அவர்கள் உழைக்காத சோம்பேறிகள் என்கிற எண்ணம் மனதில் விழுந்திருப்பது முதல் காரணம். வெளியேதான் அவர்கள் பிச்சைக்காரர்கள்; நிஜத்தில் ஒவ்வொருத்தரும் மாசத்துக்கு 8,000 ரூபாய், 10,000 ரூபாய் கல்லா கட்டுகிறார்கள் என்று சினிமாக்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் அறிந்தது மற்றொரு காரணம். நானே அப்படியான பணக்காரப் பிச்சைக்காரர் ஒருவரை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அவருக்கு இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்குகூட இருந்தது. பிச்சை போடாமல் நகர்பவர்களை சில பிச்சைக்காரர்கள் கேலி செய்தும், சபித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் இருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இதனாலேயே எந்தப் பிச்சைக்காரர் மீதும் எனக்குச் சற்றும் இரக்கம் உண்டானதே இல்லை. எனவே, யாருக்கும் நான் தருமம் செய்தது இல்லை. அது ஊனமுற்றவராக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி!

பஸ்களில் குழந்தைகள் பிச்சை கேட்டுக் கையேந்தி நிற்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும்தான். ஆனாலும், தருமம் செய்தது இல்லை. அவர்களைப் பிச்சையெடுக்கக் கருவிகளாகப் பயன்படுத்துபவர்கள் மீதுள்ள கோபம்தான் காரணம். அதுவே, கைக்குட்டை போன்ற மஞ்சள் நிறத் துணி விற்கும் குழந்தைகளிடம், சுதந்திரக் கொடி விற்கும் குழந்தைகளிடம், அவை எனக்குத் தேவைப்படாவிட்டாலும் வாங்கிக் கொள்வதுண்டு.

ஏதோ ஒரு பதிவில் நான் லாட்டரிச் சீட்டே வாங்கியது கிடையாது என்று எழுதியிருந்தேன். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது; ஒரே ஒரு முறை வாங்கியிருக்கிறேன். 1982-ல் நான் பாண்டிச்சேரியில் ஒரு பழைய பேப்பர் கடையில் வேலை செய்தபோது, கந்தலும் அழுக்குமாய் உடையணிந்த ஓர் ஏழைச் சிறுவன் வந்தான். தன்னிடமுள்ள லாட்டரிச் சீட்டுகளைக் காட்டி, என்னை வாங்கிக் கொள்ளச் சொன்னான். வேண்டாம் என்று மறுத்தேன். “ஒரு சீட்டாவது வாங்கிக்குங்க அண்ணே!” என்று கெஞ்சினான். “இல்ல தம்பி! எனக்கு வேணாம்” என்றேன். “நீங்க சீட்டு வாங்கினீங்கன்னா எனக்கு ஒரு சீட்டுக்கு பத்து காசு கமிஷன் கிடைக்கும்ணே! வாங்கிக்குங்கண்ணே!” என்றான் மீண்டும். நான் அவனிடம் ஒரு ரூபாய் நீட்டி, “இந்தா! வெச்சுக்க. எனக்கு சீட்டு வேண்டாம். ஆளை விடு!” என்றேன். நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை, அந்த ஏழைச் சிறுவனுக்கு அத்தனைக் கோபம் வருமென்று!

“என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சுட்டீங்களா! எனக்கு வேண்டாண்ணே உங்க காசு. ஓசியில வாங்கித் தின்னா உடம்புல ஒட்டாதுண்ணே! நீங்க சீட்டு வாங்கினா வாங்குங்க, வாங்காட்டிப் போங்க” என்று ரோஷமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. “டேய் தம்பி, கொஞ்சம் நில்லுடா! ஒரு சீட்டு வாங்கினா உனக்கு பத்து காசு கமிஷன் கிடைக்குமா? சரி, அப்ப எனக்குப் பத்து சீட்டு கொடு!” என்றேன். “தமிழ்நாடா, பூட்டானா?” என்றான். “உன் இஷ்டம். ஏதோ ஒண்ணு கொடு!” என்றேன். ஆக, பத்து ரூபாய்க்குப் பத்து லாட்டரிச் சீட்டுகள் வாங்கினேன். அன்றைக்கு என் ஒரு நாள் சம்பளமே அதில் பாதிதான்!

அந்தப் பையனுக்கு மகா குஷி! “அண்ணே! எங்கிட்டே சீட்டு வாங்கின ரெண்டு பேருக்கு 500 ரூபா பிரைஸ் அடிச்சிருக்குதுண்ணே! பாருங்க, உங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். சிரித்துக்கொண்டே அவனை வழியனுப்பிவிட்டு, அவன் தலை மறைந்ததும் அத்தனைச் சீட்டுக்களையும் கிழித்துப் போட்டுவிட்டேன்.

சரி, எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய்விட்டேன்.

பிச்சைக்காரர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன் அல்லவா? அந்த நாளில், நாங்கள் கிராமத்தில் வசித்தபோது, ராப்பிச்சைக்காரர்கள் என்று ஒரு கோஷ்டி உண்டு. முறை போட்டுக்கொண்டு வருவார்கள். திங்கள் கிழமை ராத்திரி வருகிற பிச்சைக்காரர் மற்ற கிழமைகளில் வர மாட்டார். வெள்ளிக் கிழமை ராத்திரி வருகிற பிச்சைக்காரி இதர நாட்களில் வர மாட்டாள். தவிர, பகல் பொழுதுகளில் எந்தப் பிச்சைக்காரரையும் பார்க்க முடியாது. எல்லாரும் ராத்திரி எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள்தான் வருவார்கள். அவர்களுக்கென தயாராகக் கொஞ்சம் சாதம், குழம்பு, மோர் எல்லாம் வைத்திருப்பார் எங்கள் அம்மா. ஒரு நாள் யாராவது ஒரு பிச்சைக்காரர் வரவில்லை என்றால், மறு வாரம் அதே கிழமையில் அவர் வரும்போது, “என்னப்பா, போன வாரம் உன்னைக் காணோமே?” என்று கேட்பார். சிலருக்கு வாசல் திண்ணையில் இலை போட்டுப் பரிமாறியும் இருக்கிறார்.

ஒரு முறை (இது வேறு ஒரு ஊரில்), இரவு நாங்கள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்திருந்தோம். மொத்தமாக ஒரு பெரிய கிண்ணத்தில் சாதம் போட்டுக் குழம்பு விட்டுப் பிசைந்து, எங்கள் எல்லார் தட்டிலும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக்கொண்டே வந்தார். அப்போது வாசலில் ராப்பிச்சைக்காரர் ஒருவர் குரல். வெள்ளைச் சோறு மீதி இல்லை. சரியென்று, பிசைந்த குழம்பு சாதத்திலேயே, ஒருவர் வயிறு நிறையும் அளவுக்குக் கிண்ணத்தில் போட்டுக்கொண்டு எழுந்தார் அம்மா, அந்தப் பிச்சைக்காரருக்கு அளிக்க. அப்பா தடுத்தார். ‘பிசைந்த சாதமாக இருப்பதைப் பார்த்து அவன் ஏதாவது தப்பாக நினைக்கப் போகிறான்’ என்றார்.

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டான். பசிக்குச் சோறு கிடைச்சா போதாதா?” என்றபடி போனவர், அந்தப் பிச்சைக்காரர் நீட்டிய அலுமினியத் தட்டில், கொண்டு போன குழம்புச் சோற்றைப் போட்டார். அவன் அடுத்த கணம், “என்னங்க எச்சி சோத்தைப் போடுறீங்க?” என்றான் கடுப்பாக. “இல்லேப்பா! எச்சில் சோறைப் போடுவோமா உனக்கு. இது...” என்று அம்மா சொல்ல வந்ததையும் கேட்காமல், “உங்க எச்சி சோத்தை நீங்களே கொட்டிக்குங்க” என்று அங்கேயே தரையில் கொட்டிவிட்டு அவன் விடுவிடுவென்று கிளம்பிப் போய்விட்டான்.

அப்பாவிடம் அம்மாவுக்கு செம டோஸ் - ‘நான்தான் அப்போதே சொன்னேனே, கேட்டியா?’ என்று. பிச்சைக்காரர்களுக்குச் சோறிட்டது எனக்குத் தெரிந்து அதுதான் கடைசி. என்னைத் தருமம் செய்யவிடாமல் தடுத்ததில், அந்தப் பிச்சைக்காரரின் தெனாவெட்டுப் பேச்சு கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

வழக்கமாகப் பேருந்து நிலையத்துக்கு நான் நடந்து செல்லும் வழியில், நாள் தவறாமல் ஒரு பிச்சைக்காரர் உட்கார்ந்திருப்பார். இளம் வயதினர்தான். மிஞ்சிப் போனால் 40 வயது இருக்கலாம். போலியோவால் பாதிக்கப்பட்ட கால்கள். சற்றுத் தள்ளி அவரின் சக்கர நாற்காலி இருக்கும். ஆரம்ப நாட்களில் எல்லாம் ஒவ்வொரு முறை அவரைக் கடந்து போகும்போதும், என் முகத்தை ஆவலோடு ஏறிட்டுப் பார்ப்பார். நான் கண்டுகொள்ளாமல் போய்விடுவேன். தொடர்ந்து பல மாதங்கள் இப்படியே கழிந்ததற்குப் பிறகு, அவருக்கு என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ‘நீயெல்லாம் எங்கே தர்மம் பண்ணப் போறே?’ என்பது போல் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொள்வார்.

அவருக்கு இன்று நான் முழுதாக பத்து ரூபாய்த் தாள் ஒன்றைத் தருமம் செய்தேன். அவர் முகத்தில் ஆச்சரியம் தெரிந்ததைக் கவனித்தேன். அவர் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்வதைக் காண விரும்பாமல் சட்டென்று விலகிப் போய்விட்டேன். காரணம், தருமம் செய்த அந்தப் பத்து ரூபாய் என்னுடையதல்ல. நடந்து வருகிற வழியில் சற்று முன்னதாக அப்போதுதான் கீழே கண்டெடுத்தது.

ஆக, தருமம் செய்தது நானல்ல. பணத்தைத் தவறவிட்ட, யாரோ ஒரு முகம் தெரியாத பேர்வழி. போகட்டும் புண்ணியம் அவருக்கே!

*****
எதை நீ இழந்தாலும், உடனே அதன் மதிப்பு இரண்டு மடங்காகிவிடுகிறது!

6 comments:

Rekha raghavan said...

//தருமம் செய்தது நானல்ல. பணத்தைத் தவறவிட்ட, யாரோ ஒரு முகம் தெரியாத பேர்வழி. போகட்டும் புண்ணியம் அவருக்கே! //

இல்லைங்க. எவ்வளவு பேருக்கு இந்த எண்ணம் வரும்னு நினைக்கறீங்க? இப்படி அப்படி திரும்பி பார்த்துவிட்டு பணத்தை ஜேபியில் போட்டுக்கொண்டு போகும் ஆட்கள் தான் அதிகமாக இருப்பார்கள். நீங்கள் செய்தது உங்களுக்கோ அல்லது அந்த பணத்தை இழந்தவருக்கோ புண்ணியமாக இருக்குமோ என்னவோ தெரியாது. ஆனால் ஒரு நல்ல செயலை செய்திருக்கிறீர்கள் என்ற அளவில் பாராட்ட வேண்டிய செயல்தான்.
ரேகா ராகவன்.

கே. பி. ஜனா... said...

பிச்சு உதறிட்டீங்க சார்.. சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள்! --கே.பி.ஜனா

கிருபாநந்தினி said...

உங்கள் கருத்தை ஓரளவு ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம், உடல் ஊனமுற்றவர்களுக்கு நான் தர்மம் அளிப்பதுண்டு. தவிர, புரோகிதர், போலீஸ், டாக்டர், ஆசிரியர் என எல்லாத் துறைகளிலும் ஒரு சில களைகள் இருப்பது போல, பாவப்பட்ட பிச்சைக்காரர்களிலும் ஒரு சில திமிர்ப் பேர்வழிகள் இருக்கலாம். அதற்காக எந்தப் பிச்சைக்காரருக்கும் தர்மம் அளிக்க மாட்டேன் என்பது சரியல்ல!

கே.ராஜேஸ்வரி said...

உங்கள் பதிவில் எழுதியிருப்பது நூற்றுக்கு நூறு சரி! சில வருடங்களுக்கு முன் எங்களூரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். பிச்சை போடவில்லை என்றால், வீட்டு வாசலிலேயே வேண்டுமென்றே வாந்தியெடுத்துவிட்டுப் போய்விடுவான். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் என்று அரசு கொண்டு வந்ததெல்லாம் கடைசியில் என்ன ஆயிற்று? இவர்களுக்குக் கிடைத்து வந்த கொழுத்த வரும்படியை இழக்க விரும்பாமல், எந்தப் பிச்சைக்காரர்களும் அதில் சேர விரும்பவில்லையே?

சத்தியமூர்த்தி said...

நான் பிச்சைப்போடுவது உண்டு. அதற்கு காரணம் பல. அதில் ஒன்று பல சமயங்களில் அந்த முகங்களில் நான் என் உறவினர்களை காண்பது. தவறாக எண்ண வேண்டாம். வயதான மூதாட்டியை பார்க்கும்போது எனக்கு என் பாட்டிகளின் நினைவு வரும். அவர்கள் இருந்தால் அவர்களுக்கு செய்ய மாட்டேனா? இளம் சிறார்களை பார்க்கையில் பாவம் படிக்கும் வயதில் இவர்கள் எந்த காரணத்தால் இதற்கு தள்ளப்பட்டாரோ என்று நினைப்பு வரும்.

நான் அதிகம் செய்வது, எங்கள் அலுவலகத்தில் க்ளினர்களாக வேலை செய்பவர்களுக்கும், ஹோட்டல் செல்லும்போது டிப்ஸ் தருவதை விட அதிகமாக அங்கு தட்டு எடுத்து, மேஜை துடைப்பவர்களுக்கும் தருவது. இது பாவம் என்று தருவதாக வைத்துக்கொண்டாலும் சரி, இருக்கும் திமிறில் செய்கிறேன் என்று கொண்டாலும் சரி, ஒருவருக்கு உதவினோம் என்கிற மனநிறைவு எனக்கு கிடைக்கும் சுயநலம் முக்கிய காரணம் என்பதே உண்மை.

நானும் பிச்சை எடுத்திருக்கிறேன். என் வீட்டில் வெங்கடாஜலபதிக்கு மாவிளக்கு போட வேண்டுதல் காரணமாக புரட்டாசி மாதத்தில் நாமம் இட்டுக் கொண்டு “கோவிந்தா” என்று சொல்லியபடி அக்கம் பக்கம் வீடுகளில் கேட்டிருக்கிறேன்.

இது தவிர, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தபோது, ஏர்போர்ட்டுகளில், கையில் சிகரெட் இல்லாததால் இருப்பவரிடம், “சார், ஒரு சிகரெட் இருக்கா ப்ளீஸ்” என்று கேட்டு. :)

உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பிச்சை கேட்கிறேன் இப்போது.

Vetirmagal said...

அருமை!