பஸ்ஸுக்குள் ஓர் தனி உலகம்!

தினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மாநகர பேருந்தில் பயணம் செய்கிறவன் என்கிற முறையில், பஸ் பயணிகளிடையே நிலவும் பொதுவான சில குணாதிசயங்களைக் கவனித்திருக்கிறேன்.

அடுத்த ஸ்டாப்பிங்கிலோ, அதற்கடுத்ததிலோ இறங்கப் போகிறவர் போன்று நுனி ஸீட்டில் அமர்ந்திருப்பார். ஜன்னல் வழியே வெளியே எட்டி எட்டிப் பார்ப்பார். அருகே நிற்கிற நாமும் அவர் எழுந்துகொண்டவுடன், அந்த ஸீட்டைக் கைப்பற்றும் உத்தேசத்துடன் தயாராகக் காத்திருப்போம். ஆனால் பாவி மனுஷன், கடைசி வரை எழுந்திருக்கவே மாட்டார். அவர் தவியாய்த் தவிக்கிற தவிப்பைப் பார்த்து, “எங்கே சார் இறங்கணும் நீங்க?” என்று கேட்டால், இவன் எதற்கு அடி போடுகிறான் என்பதைப் புரிந்துகொண்டவர் போல் அவர் உடனே சுதாரித்து, வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, ‘லாஸ்ட்... டெர்மினஸ்...’ என்பார் நமக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகமே வரக்கூடாது என்று நினைப்பவர் போல்!

இதற்கு நேர்மாறானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கட்டக் கடைசியாய் பஸ் ஸ்டாண்டில்தான் இறங்கப் போகிறவர்கள் போல ஜன்னலில் சாய்ந்து, கண் மூடிச் சயனித்திருப்பார்கள். அல்லது, சரிந்து தளர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். இறங்குகிற உத்தேசமே அவர்கள் முகத்தில் துளியும் தென்படாது. ஸ்டாப்பிங் வந்ததும் எல்லோரும் இறங்கி, ஏறுகிறவர்கள் ஏறிக்கொண்டு இருக்கும்போது, இவர் திடுதிப்பென்று எழுந்து, கூட்டத்தைப் பரபரவென்று விலக்கிக்கொண்டு தடக்கென்று இறங்குவார்.

அடிக்கடி வயதான ஒரு பெரியவரை நான் பஸ்ஸில் சந்திக்கிறேன். ஆர்ப்பாட்டமாகக் கூச்சலிட்டுக்கொண்டு, ‘நகருங்க... அட, நகருங்கய்யா... பெரியவன் வரானேங்கிற மரியாதையில்லாம... சே! உலகம் கெட்டுப் போச்சு! காலம் கெட்டுப் போச்சு! எவனுக்கும் மரியாதை தெரியுறதில்லே! அட, நகருப்பான்னா!’ என்று பலவிதமாக அதட்டிக்கொண்டு பஸ் ஏறுவார். எண்பதைக் கடந்தவர் என்பதால் யாரும் அவரை ஒன்றும் சொல்வதில்லை. அவர் பஸ் ஏறினதும், நேர் ஸீட்டில் உட்கார்ந்திருப்பவரை, “எழுந்திரப்பா! தனியா உனக்குச் சொல்லணுமா? பெரியவன் வந்தா எழுந்து இடம் விடணும்கிற பண்பாடு எப்பத்தான் நம்ம நாட்டு ஜனங்களுக்கு வரப் போகுதோ!” என்று அதட்டி, எழுந்திருக்க வைப்பார். “முன்னே முதியோர் ஸீட்டு இருக்குது. அங்கே போய் அவங்களை எழுந்திருக்கச் சொல்லுங்க!” என்று ஒரு சமயம் ஓர் இளைஞன் சொன்னான். அதற்கு, “யாரைப் போகச் சொல்றே? அறிவிருந்துதான் பேசறியா நீ? இந்தக் கூட்டத்துல வயசானவன் எப்படிடா போவான்? முன்னே முதியோருக்கு ஒரு ஸீட் போட்ட பன்னாடைங்க பின்னாடியும் ஒரு ஸீட் போட்டிருந்தா உன்னை ஏண்டா எழுப்பப் போறேன்? ம்... எழுந்திரு!” என்றார்.

அவரிடம் ஒருமுறை கண்டக்டர் டிக்கெட் தருவதற்காக, “எங்கே போகணும்?” என்று கேட்டுவிட்டார். “கேட்டுட்டேல்ல போறபோதே எங்கே போறேன்னு? ம்ஹ்ம்... போன காரியம் உருப்புட்டாப்புலதான்! எங்கே போவான் வியாதியஸ்தன்? எல்லாம் அந்த ஜி.ஹெச்சுக்குதான். டெய்லிதான் போறேனே, அப்புறம் என்ன கேள்வி, எங்கே போறேன்னு!” என்று சலித்துக்கொண்டே டிக்கெட் வாங்கினார் அந்தப் பெரியவர்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எழுந்து இடம் கொடுக்கும் விதமே பிரமிப்பாக இருக்கும். அதாவது, ஒரு ஸீட் காலியானதும் முதலில் பாய்ந்து அந்த இடத்தைப் பிடிப்பது அவர்கள்தான். இடம் பிடிக்கும் போட்டியில் நம்மைத் தோற்கடித்து விடுவார்கள். பின்னர், நமது முகத்தைப் பார்த்து, “நீங்க வேணா உட்கார்றீங்களா சார்?” என்பார்கள். பெரும்பாலும் ‘வேண்டாம்’ என்று மறுத்து விடுவோம் என்கிற நம்பிக்கைதான். அப்படியே, “சரி! எழுந்திருங்கள். நான் உட்காருகிறேன்!” என்று விடாக்கொண்டனாக நாம் சொன்னால், அவர்கள் எழுந்து இடம் கொடுப்பார்கள்தான். ஆனால், இதில் அவர்களுக்கு இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று... ஸீட் பிடிக்கும் போட்டியில் வென்றது தான்தான் என்கிற பெருமை. இரண்டு... ‘அடடா! என்ன பெருந்தன்மையாக அடுத்தவருக்கு எழுந்து இடம் விடுகிறான்!’ என்று மற்றவர்கள் மனதில் தன்னைப் பற்றிய மதிப்பு உயரும் என்கிற எண்ணம். ஸீட்டுக்குப் போட்டியிடாமலே அடுத்தவருக்கு விட்டுவிட்டால், தான் இளித்தவாயன் ஆவோமே தவிர, இப்படியான பெருமையும் மதிப்பும் கிடைக்குமா?

வேறு வகையினரும் இருக்கிறார்கள். அவர்களும் இடமளிக்கும் பரோபகாரிகள்தான். “பெரியவரே, நீங்க எங்கே போகணும்?” என்று, அருகில் நின்றுகொண்டு இருக்கும் தள்ளாத வயதுப் பெரியவரை உட்கார்ந்த வாக்கில் விசாரிப்பார்கள். “சென்ட்ரல்” என்று அவர் சொன்னால், “அப்படியா! இங்கேயே இருங்க. நான் அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கிடுவேன். நீங்க உட்கார்ந்துக்குங்க!” என்பார்கள். அடுத்த ஸ்டாப்பிங் என்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும். எழுந்து இடம் கொடுக்கிற மகானுபாவன் உடனேயே எழுந்து இடம் கொடுக்கலாம். ஆனால், மாட்டார். பஸ் மெதுவாக அடுத்த ஸ்டாப்பிங்கை அடைந்து, ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கியதும், இவர் மெதுவாக எழுந்து, ‘ம்.. உட்கார்ந்துக்குங்க!’ என்று கரிசனமாகச் சொல்லிவிட்டு இறங்குவார். அப்போதுதான் தான் செய்த பரோபகாரத்துக்கான புண்ணியம் தன் கணக்கில் சேருமென்று நினைக்கிறாரோ, என்னவோ! பின்னே, பெரியவர் வந்து தன் அருகில் நின்றதுமே எழுந்து இடம் கொடுத்துவிட்டால், அது உபகாரக் கணக்கில் சேருமோ, சேராதோ?!

இன்னும் சில காமெடிகள்கூட நடக்கும். பஸ் வந்து நின்றதும் கூட்டம் திபுதிபு என்று ஏறும். காலியாகக் கிடக்கும் ஸீட்டுகளை ஆக்கிரமிக்கத் தொடங்குவார்கள். ஒரு பெரியவருக்கும் நடுத்தர வயதுக்காரருக்கும் இடம் பிடிக்கும் போட்டி. நடுத்தர வயதுக்காரரே வெல்வார். பிறகு, பரிதாபமாக நிற்கும் பெரியவர் மீது கரிசனம் வந்து, “அதோ பாருங்க... அங்கே ஒரு இடம் இருக்கு” என்று சுட்டிக்காட்டிவிட்டு, அங்கே உட்கார முனையும் நபரை, “சார்! கொஞ்சம் இருங்க. பெரியவர் வராரு!” என்று உஷார்படுத்துவார். ஆக, தன் இடமும் பறிபோகக் கூடாது; பெரியவருக்கும் இடம் பிடித்துக் கொடுத்துவிட்ட திருப்தி! அப்படி இவர் பேச்சை மீறி அந்த நபர் வம்படியாக உட்கார்ந்துவிட்டால், இவர் எழுந்து தன் இடத்தை அந்தப் பெரியவருக்குக் கொடுப்பாரா என்றால், மாட்டார். “ஹூம்... என்ன ஜனங்களோ! இடத்தையா சுமந்துகிட்டுப் போகப்போறோம்! என்ன, மிஞ்சிப் போனா ஒரு அரை மணி நேரம்... அவ்வளவுதான் இந்த பஸ்ஸோட நம்ம உறவு. அதுக்குள்ள என்னா போட்டி! பாவம், அந்தப் பெரியவரு வராருன்னு சொல்லிட்டேயிருக்கேன், அடமா உட்கார்றாரு பாரு! இவங்களையெல்லாம் எந்த லிஸ்ட்டுல கொண்டு போயிச் சேர்க்குறது?” என்று உட்கார்ந்த நபரை, தான் இருக்கும் இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அசையாமல் சபித்துத் தள்ளுவார்.

வேறு சில விசித்திரங்களும் நடக்கும். இரண்டு ஸீட் இருக்கையில், விளிம்பில் ஒருவர் உட்கார்ந்திருப்பார். புதிதாக உட்கார வருகிறவர், அவரை ஜன்னலோரம் தள்ளி உட்காரச் சொன்னால், இவர் வெளிப்புறமாகத் தன் கால்களை நகர்த்தி உட்கார்ந்துகொண்டு, புதியவரை ஜன்னலோரத்துக்கு அனுப்புவார். ஜன்னலில் வெயிலடிக்கும் அல்லது சாரலடிக்கும் என்பதுதான் காரணம் என்றால், அதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், அவர் சொல்லும் காரணமே வேறு. “நான் உங்களுக்கு முன்னாடியே இறங்கிடுவேன்!” அதாவது, இன்னும் ஏழு ஸ்டாப்பிங்குகள் போனதும் அவர் இறங்குவாராயிருக்கும். எட்டாவது ஸ்டாப்பிங்கில் அந்தப் புதியவர் இறங்குவார். ஒருத்தரைக் கடந்து வந்து இறங்குவது அத்துணைக் கடினமா என்ன? அவ்வளவு முன்ஜாக்கிரதைப் பேர்வழியாம்!

டிரைவர் அமைதியாக பஸ்ஸை ஓட்டிக்கொண்டு இருப்பார். பின்னால் பல ஸீட்டுகள் தள்ளி எங்கோ நடுவில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் நபர் செய்கிற அலம்பல்கள் தாங்க முடியாது. பக்கத்தில் ஓவர்டேக் செய்யும் மோட்டார் பைக்காரரை, “ஏய்யா... என்னா உனக்கு அவதி? மெதுவாத்தான் போவறது! சந்துல தலையைக் கொடுத்து சாவப் பாக்குறியே?” என்று கடுப்படிப்பார். “ஆகா... வண்ட்டான்யா ஆட்டோக்காரன். ஒரு சின்ன சந்து கிடைச்சாப் போதுமே இவுங்களுக்கு, உள்ள பூந்துடுவாங்க! அப்புறம் டிராபிக் ஜாம் ஆகாம என்ன பண்ணும்? போய்யா போ! முன்னக்க போய் நின்னுக்க. நீயும் போக வேண்டாம்; நாங்களும் போகல! நெட்டுக்க போத்தீஸையே வேடிக்க பார்த்துக்கிட்டு இங்கனயே கெடப்போம்!” என்பார்.

பஸ் வலது புறம் திரும்பினால், இவர் ரொம்ப அக்கறையாக தன் கை முழுசையும் வெளியே நீட்டி சிக்னல் காட்டுவார். “யோவ், யாருய்யா அது! கையை உள்ள வை!” என்று டிரைவர் அதட்டல் போட்டால், மெதுவாகக் கையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, “ரைட் ரைட்... போ, போ! உனுக்கு இவனுங்கதான் சரி!” என்று முணுமுணுப்பார்.

“நாங்கள்ளாம் ஸ்டெடியா நிப்பம்ல?” என்று வடிவேலு ரேஞ்சுக்கு, இடம் இருந்தாலும் உட்காராமல், மேலே கைப்பிடியையும் பிடிக்காமல், ஒரு கம்பியில் சாய்ந்து நின்றவாறே பயணம் செய்யும் பேர்வழிகளும் இருக்கிறார்கள்.

இப்படியான விசித்திர பஸ் பிரயாணிகளை நான் நாள்தோறும் புதிது புதிதாகச் சந்தித்து வருகிறேன். எனவே, இந்தப் பதிவு இப்போதைக்கு முடியாது. ஆகவே, இத்துடன் பஸ்... பஸ்..!

*****
எப்போதும் கையில் ஒரு சுத்தியுடனேயே திரிந்துகொண்டு இருந்தால், சுற்றி இருப்பதெல்லாம் ஆணிகளாகத்தான் தெரியும்!

13 comments:

பீர் | Peer said...

ரைட் ரைட்....

பிரபாகர் said...

பஸ்சில் அதிகம் பயணித்தவன் என்பதால் யாவும் நேரில் பார்த்த மாதிரி அருமையாய் இருக்கிறது. இன்னொன்றையும் சேர்க்கலாம். பஸ் வந்தவுடன் எல்லா கும்பலும் இரு வாயில்களிலும் அப்பிக்கொண்டு அடித்து பிடித்து ஏறிய பின், வண்டியில் இன்னமும் நிறைய சீட் காலியாக இருக்கும்.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

ஆஹா...

ரசித்து எழுதியிருக்கீங்க..

நானும் நகரப் பேருந்துகளில் போன காலங்கள் நினைவுக்கு வருகிறது

ரேகா ராகவன் said...

" அடிக்கடி வயதான ஒரு பெரியவரை நான் பஸ்ஸில் சந்திக்கிறேன் " என்று தங்களின் " பஸ்ஸுக்குள் ஓர் தனி உலகம்! " பதிவில் வந்துள்ளதை கண்டேன். தவறாக எண்ண வேண்டாம் இது ஒருவருக்கு அடிக்கடி வயதாகிறது போன்ற பொருளில் வருவது மாதிரி எனக்கு தோன்றுகிறது. நான் கூட தப்பாக இருக்கலாம். இதையே " வயதான ஒரு பெரியவரை நான் அடிக்கடி பஸ்ஸில் சந்திக்கிறேன் என்று மாற்றி அமைத்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்கிறேன்,

அன்புடன்
ரேகா ராகவன்.

கிருபாநந்தினி said...

’பஸ்ஸுக்குள் ஓர் தனி உலகம்’ என்று வராது. ‘பஸ்ஸுக்குள் ஓர் உலகம்’ என்று போடலாம். ஓர், ஒரு என்பது ஆங்கில an, a போல. அடுத்து வரும் வார்த்தை உயிரெழுத்தில் தொடங்கினால் மட்டுமே ஓர் என்று வரும்; மற்ற எழுத்துக்கள் பின்தொடருவதாக இருந்தால், ஒரு என்றுதான் போட வேண்டும்.

கே. பி. ஜனா... said...

வெளியே பார்த்தாலும் காட்சி இதைப் போலவே... நீங்கள் சொல்வது போல வெளி உலகுக்கு ஒரு சாம்பிள் பஸ்சினுள். _ கே.பி.ஜனா

ungalrasigan.blogspot.com said...

+ திரு.பீர், பதிவுக்குப் பொருத்தமாக டபுள் விசில் கொடுத்து என்னை மேலும் எழுத ஊக்குவித்தமைக்கு நன்றி!

+ திரு.பிரபாகர், தாங்கள் சொன்னது மெத்தச் சரி! நன்றி!

+ திரு.கதிர், கருத்துப் பதிவுக்கு நன்றி!

+ திரு.ராகவன், குற்றம் சொல்கிறோமோ என்ற உறுத்தல் எழுந்ததாலோ என்னவோ, தனியே இ-மெயில் அனுப்பியுள்ளீர்கள். உறுத்தல் தேவையே இல்லை. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என்று சிவனையே எதிர்க்கும் நிகழ்வுகள் நமது புராணங்களில் உள்ளன. தாங்கள் குறிப்பிட்டுள்ளது சரிதான். பத்திரிகையாக இருந்தால், இந்தப் பிழைகளை மறுமுறை படிக்கும்போது நானே திருத்துவேன். அல்லது, உதவியாளர்களுக்கு எடுத்துச் சொல்வேன். பதிவுதானே என்று ஓர் அலட்சியம்! இனி, கவனமாக இருக்க முயல்கிறேன். மற்றவர்களுக்கும் இது பற்றித் தெரிய வேண்டும், தமிழைச் சரியாக எழுத முற்பட வேண்டும் என்கிற எண்ணத்தினாலேயே இதை இங்கே எடுத்துப் போட்டுள்ளேன்.

+ திருமதி கிருபாநந்தினி, தாங்கள் சொன்னதும் மெத்தச் சரி! மேலே திரு.ராகவன் சொன்ன பதில்தான் தங்களுக்கும். இனி கவனமாக இருக்க முயல்கிறேன். அது சரி, மற்றபடி பதிவு எப்படி என்று நீங்கள் இருவருமே சொல்லவில்லையே?!

+ திரு.ஜனா! ‘பஸ்ஸுக்குள் ஒரு தனி உலகம்!’ என்று தலைப்பு வைத்துவிட்டேனே... இது பதிவுக்குப் பொருத்தமானதா என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். தாங்கள் என் பிரச்னையைத் தீர்த்துவிட்டீர்கள். நன்றி!

பிச்சைப்பாத்திரம் said...

i enjoyed this post. thanks.

Anonymous said...

enjoy - reading your posts thoroughly,though recent entry from UT padhivu.

resemble a bit of devan+kalki in ur style.pl continue.

ORU punchline-at last -where U stand or sit ? in these motley bus crowd..
no tamil font,hence in thanglish.

sundaram

சத்தியமூர்த்தி said...

நான் சென்னை பஸ்ஸில் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. நான் பஸ்ஸில் போன போது நடந்ததெல்லாம், இருபத்தைந்து வருடங்கள் ஓடின பிறகும் இன்னும் நடக்கின்றன என்பது பஸ்ஸுக்குள் இருப்பது உண்மையிலேயே தனி உலகம்தானோ என்று வியக்க வைக்கிறது. நீங்கள் மறுமொழியாளர்களுக்காக விட்டவைகள் - ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வரும் நபர்கள் (அவர் ஓட்டுநரின் நண்பர் என்று காட்டுவதில் கிட்டத்தட்ட பஸ் உரிமையாளர் போன்ற ஒரு மிதப்பு அவரிடம் இருக்கும்). மிக மிக விட்டது அந்த படிக்கட்டு பேர்வழிகளையும், பஞ்சை உரசும் “தீ”யையும்.

:)

பின்னோக்கி said...

சாவி அவர்கள் எழுதிய “கேரக்டர்” படித்த உணர்வு உங்கள் எழுத்தில்.

பஸ்ஸில் போய் ரொம்ப வருஷம் ஆச்சு..

கருப்பு பூனை said...

தோழர் கிருஷ்ணா,

* உங்கள் பேருந்து பற்றிய இந்த இடுகை மிகவும் எதார்த்தமாகவும், பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்கும் வகையில் அமைந்தது.

* நானும் தினமும் மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் ஒரு சாராசரி மனிதன், உங்கள் இடுகையில் உள்ள ஒரு பண்பு எனது பண்புடன் ஒத்துப்போகும். நன் மாநகரப்பெருந்தில் இடம்பிடிக்கும் போதெல்லாம் ஒரு பெரியவர்வந்து எனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளேன், ஆதலால் நிற்கமுடியவில்லை என்று என்னிடம் கேட்காமலேயே உட்கார்ந்து விடுவர்.

* என்னொரு முக்கியமான ஒன்று மாநகர பேருந்துகளில் நடக்கும், பெண்கள் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்தால், சமத்துவம் சமஉரிமை என்று பேசி , நம்மை எழ சொல்லி விட்டு அமர்ந்து விடுவார்கள். அனால் அவர்கள் நமது இருக்கையில் உட்கார்ந்தால் "நாம் அவர்களை எழ சொல்லாமல் பெருந்தன்மயுடன் விட சொல்லகிறார்கள்"

[ * ஒரு சில பெண்கள் மட்டும் ]



நன்றியுடன் ,

கருப்புபூனை

Ananya Mahadevan said...

உங்களுக்கும் பஸ் ஆப்செஷன் இருக்கு போல இருக்கு. இன்னொரு காமடியை விட்டுட்டீங்களே, டெர்மினஸ்ல((பெரும்பாலும் தி நகர் அல்லது வடபழனி)எந்த பஸ் முன்னாடி போகும்னு பயணிகள் இறங்குவதும்,ஓடிப்போய் ஏறுவதுமாக இருப்பார்கள். கடைசியில் இறங்கிவந்த வண்டிதான் முதலில் போகும். முக்கால்வாசி பேருக்கு பல்பு கிடைக்கும்.