எங்க ஊர் ராஜா!

நேற்றைய பதிவில் சிம்மக்குரலோன் சிவாஜி பற்றி எழுதியிருந்ததை உடனடியாகப் படித்துப் பின்னூட்டம் இட்டிருந்த எழுத்தாளர் ரேகா ராகவன், ‘நீங்கள் படித்து வளர்ந்த ஊரான விழுப்புரத்தில் பிறந்தவர் சிவாஜி. அது பற்றி உங்கள் பதிவில் ஏதேனும் குறிப்பிட்டிருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை என்றதும் வருத்தமாக இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சிவாஜி ‘எங்க ஊர் ராஜா’ என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு இருக்கும் பெருமை அளவற்றது.

சிவாஜி கணேசன் என்று அவர் பரவலாக அழைக்கப்பட்டாலும், அவர் தம் பெயரை எல்லா இடத்திலும் வி.சி.கணேசன் என்றுதான் குறிப்பிடுவார். அதாவது விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயரின் மகன் கணேசன்! 1928-ஆம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதியன்று விழுப்புரத்தில் சிவாஜி பிறந்தபோது, அவர் குடும்பத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. சிவாஜி பிறந்த அரை மணி நேரத்துக்குள் அவரின் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் கைதாகி, நெல்லிக்குப்பம் சிறைக்குச் சென்றுவிட்டார். சிவாஜியின் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் ரெயில்வே இன்ஜினீயராக இருந்தவர். அவரும் அப்போதுதான் ரிடையரானார். குடும்பம் தனித்தனியாகச் சிதற வேண்டிய நிர்பந்தம். சிவாஜி திருச்சிக்குப் போனார். விழுப்புரத்தில் சிவாஜி வாழ்ந்தது சிறிது காலம்தான்.

சிவாஜி முதலில் நாடகங்களில் நடித்தார். திருச்சி வானொலி நிலைய நாடங்களில் நடிக்க விரும்பிப் பெயர் கொடுத்து, அவர்கள் நடத்திய குரல் தேர்விலும் கலந்து கொண்டார். ஆனால், தேர்வாகவில்லை. அதற்கு அவருக்குச் சொல்லப்பட்ட காரணம்: ‘உங்கள் குரல் சரியில்லை!’

பின்னர் சென்னை சென்று, சினிமாவில் வாய்ப்பு தேடினார். அச்சமயம் ‘ஜெமினி’ அதிபர் எஸ்.எஸ்.வாசனையும்கூட அணுகியிருக்கிறார். அப்போது அந்தப் பட நிறுவனத்தில் மேனேஜராக இருந்தவர் ஜெமினி கணேசன். அவரின் சிபாரிசின் பேரில், அப்போது எடுக்கப்பட்டுக்கொண்டு இருந்த படத்திற்கான ஒரு காட்சியில், பணியாள் போன்ற ஒரு சிறு வேஷத்தைக் கொடுத்து சிவாஜியை நடிக்கச் சொன்னார்கள். ஆனால், அதைச் சிவாஜி சரியாகச் செய்யவில்லை என்று அவரை நிராகரித்துவிட்டார்கள்.

அப்புறம் பல ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்தார் சிவாஜி. பின்னர்தான் ‘பராசக்தி’ பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தப் படத்தில் கதாநாயகனாகப் போட கே.ஆர்.ராமசாமி உள்பட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. குழம்பிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் அறிஞர் அண்ணாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அண்ணாவின் பலமான சிபாரிசு சிவாஜிக்குதான் இருந்தது. எனவே, ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவாஜி.

பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராகிப் புகழ்பெற்ற பின்பு, பலமுறை விழுப்புரம் வந்திருக்கிறார். நான் அங்கே பள்ளியிலும், கல்லூரியிலும் படித்துக்கொண்டு இருந்த காலங்களில் கூட வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அங்கே அவர் பேசும்போது, “நான் பிறந்த பொன்னாடான விழுப்புரம் நகரத்துப் பெருமக்களே!” என்றுதான் நெகிழ்ச்சியாகத் தன் பேச்சைத் தொடங்குவார்.

ஒருமுறை, விழுப்புரம் நகரசபையில் சிவாஜிக்குப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். அப்போது அங்கே சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள். அது ஒன்றும் விலை உயர்ந்த பரிசு அல்ல. ஆனாலும், அதை வாங்கிக் கொண்டபோது சிலிர்த்துப் போய்விட்டார் சிவாஜி. அதைப் பரிசாகக் கொடுத்த நகர சபையினருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வார்த்தை வராமல் நெகிழ்ந்துவிட்டார்.

அப்படி என்ன பரிசு அது? வேறொன்றுமில்லை. சிவாஜி விழுப்புரத்தில் பிறந்த சமயத்தில், அது சம்பந்தமாக நகரசபை அலுவலகத்தில் எழுதப்பட்ட ஜனனக் குறிப்புதான் அது. அந்த விவரங்கள் அடங்கிய ஜனனக் குறிப்பை அப்படியே எடுத்து ஃபிரேம் செய்து கொடுத்திருந்தார்கள்.

விழுப்புரத்தில் சிவாஜி பிறந்தது எந்தத் தெருவில் தெரியுமா? பெருமாள் கோயில் தெருவில்!

*****
உங்கள் இலக்கும் லட்சியமும் பெரிதாக இருந்தால், சின்னச் சின்ன தோல்விகள் உங்களைச் சோர்வடையச் செய்யாது!

8 comments:

SRK said...

//விழுப்புரத்தில் சிவாஜி பிறந்தது எந்தத் தெருவில் தெரியுமா? பெருமாள் கோயில் தெருவில்!//

நீங்கள் வசித்து வந்தது 47, பெருமாள் கோயில் தெருவில்தானே?

பிரபாகர் said...

சிவாஜிக்கு கொடுத்த பரிசு உண்மையில் நெகிழ்ச்சியாய் இருந்தது. பரிசு என்பது விலை உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதற்கு ஓர் நல்ல உதாரணம்.

பிரகாஷ் சார் உண்மையில் அருமையாய் எழுதி அசத்துகிறீர்கள். எனது பதிவையும் படித்து உங்களின் கருத்தினை சொன்னால் என்னை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவும்.

பிரபாகர்.

Rekha raghavan said...

சார் விழுப்புரத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறை நாட்களில் கடைத்தெருவை ஒட்டி இருந்த தெருவில் இருந்த சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தில் போய் தினசரிகளையும் வார இதழ்களையும் படிப்பேன். தலைக்குமேலே அறையின் நான்கு பக்கங்களிலும் சிவாஜியின் வெவ்வேறு போஸ் படங்களை மாட்டி வைத்திருப்பதை இன்னொருவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் கைக்கு வரும் வரை ஹா...வென பார்த்துக் கொண்டிருப்பேன். ஆலயமணி படத்தை சீதாராம் திரைஅரங்கில் நாலணா காசு கொடுத்து (தரை டிக்கட்) ஐந்து முறை " சட்டி சுட்டதடா" பாடலுக்கு அவரின் நடிப்புக்காகவே பார்த்திருக்கிறேன். அப்பேற்பட்ட நடிகரை பற்றிய பதிவில் அவர் பிறந்த ஊரான விழுப்புரத்தை பற்றி ஒன்னும் நீங்கள் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்தில் சென்ற பதிவில் பின்னூட்டம் இட்டேன். அதற்கு ஒரு பெரிய இடுகையே இட்டு என்னை நெகிழச் செய்துவிட்டீர்கள். கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்,

ரேகா ராகவன்.

கே. பி. ஜனா... said...

வியக்காமல் இருக்க முடியவில்லை. பெருமாள் கோவில் தெருவில் பிறந்து பின்னால் நடிப்புலகில் பெரும் ஆளாகி ரசிகர் மனக் கோவிலில் வீற்றிருக்கும் சிவாஜியை அறிமுகம் செய்தவர் பேரும் பெருமாள் (நேஷனல் பிக்சர்ஸ்) தான். 'எங்க ஊர் ராஜா' நல்ல பதிவு. -கே.பி.ஜனா

Anonymous said...

V.C. Ganesan enbatharku Vettaithidal Chinaiya Mandrayer Ganersan enbathahum. Vettaithidal ennum Oor Thiruvarur Mavattam Mannargudi aruhe ullathu.

ungalrasigan.blogspot.com said...

//நீங்கள் வசித்து வந்தது 47, பெருமாள் கோயில் தெருவில்தானே?// எஸ்.ஆர்.கே., நான் ஒரு ட்யூப்லைட்! உங்கள் பின்னூட்டத்தில் உள்ள குறும்பு எனக்குப் புரியலை! உடைச்சு சொல்லிடுங்களேன்!

பிரபாகர், பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி! அவசியம் தங்களின் பிளாகுகளையும் படிக்கிறேன். ஆனால், பிளாகுகளைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி! மேம்படுத்திக்கொள்ள யாருக்கும் யாரும் ஆலோசனை சொல்ல முடியாது! உங்கள் வழியில் எழுதி அசத்துங்க!

//விழுப்புரத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது// திரு.ராகவன், எந்த வருடம், எந்தப் பள்ளியில் படித்தீர்கள்? விழுப்புரம்தான் உங்கள் சொந்த ஊரா? தெரிந்துகொள்ள ஆர்வம். அன்புடன்...

பெருமாள் கோயில் தெரு - பெருமாள் (நேஷனல் பிக்சர்ஸ்); அருமையான பொருத்தம்! தங்களின் நுணுக்கமான பார்வை என்னைப் பிரமிக்கச் செய்கிறது திரு.கே.பி.ஜனா!

வி ஃபார் வேட்டைத்திடலா? என்ன அனானிமஸ் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறீங்க? சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவராக இருக்கும் சந்திரசேகரிடம் கேட்டேன். வி ஃபார் விழுப்புரம் என்றார். அவரின் அருமையான தொகுப்பான ‘நடிகர்திலகம்’ என்னும் புத்தகத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, சிவாஜியின் குடும்பத்தாரிடமே விசாரித்துவிட்டேன். அவர்களும் வி ஃபார் விழுப்புரம் என்றுதான் உறுதியாகச் சொன்னார்கள். உங்கள் கருத்துக்கு ஆதாரம் இருந்தால் அவசியம் சொல்லுங்கள். தீர விசாரித்துவிடுவோம்! நன்றி!

சத்யராஜ்குமார் said...

//நீங்கள் வசித்து வந்தது 47, பெருமாள் கோயில் தெருவில்தானே?// எஸ்.ஆர்.கே., நான் ஒரு ட்யூப்லைட்! உங்கள் பின்னூட்டத்தில் உள்ள குறும்பு எனக்குப் புரியலை! உடைச்சு சொல்லிடுங்களேன்!

அப்படி எதுவும் இல்லைங்க. :-) பெருமாள் கோயில் தெரு என்றதும் மேற்கு மாம்பலத்தில் உங்கள் முகவரி நினைவுக்கு வந்தது. சாவி நாட்களில் அந்த முகவரியிலிருந்துதான் உங்கள் கடிதங்கள் வரும். கதைகள் கூட அங்கேயே அனுப்பி விடும்படி சொல்லியிருக்கிறீர்கள். என் ஞாபகத்திலிருக்கும் அந்த முகவரி சரிதானா என்று கேட்டேன். சிவாஜி ரசிகரான நீங்கள் அவர் பிறந்த தெருவின் பெயர் கொண்ட முகவரியிலேயே வசிக்க நேர்ந்த ஒற்றுமையும் மனதில் தோன்றியது.

[சத்யராஜ்குமார்]

ungalrasigan.blogspot.com said...

திரு.சத்யராஜ், உங்கள் ஞாபக சக்திக்கு பத்துக்கு ஐந்து மதிப்பெண்கள். 47 என்கிற கதவு எண் கரெக்ட்; மேற்கு மாம்பலம் என்கிற ஏரியாவும் கரெக்ட்; கோயில் தெரு என்பதும் கரெக்ட். ஆனால், அது பெருமாள் கோயில் தெரு அல்ல; கோதண்டராமர் கோயில் தெரு. சரி, பெருமாளாக இருந்தால் என்ன, கோதண்டராமராக இருந்தால் என்ன... இருவரும் ஒருவர்தானே?