ராஜேஷ்குமார் என்னும் ராக்கெட்!

ழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் எனக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கம் உண்டு. சாவி சார் முதன்முதல் ‘மோனா’ மாத இதழைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் கொடுத்து, பன்னிரண்டு நாட்களுக்குள் அடுத்த இதழை ரெடி செய்து, சரியாக முதல் தேதியன்று (ஜனவரி 1, 1988) தன் மேஜையில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டபோது, நம்பிக்கையுடன் நான் அணுகிய எழுத்தாளர் ராஜேஷ்குமார். அன்றைக்கு நான் கேட்டபடியே ஒரே வாரத்தில் மோனாவுக்கான நாவலை (சின்ன தப்பு, பெரிய தப்பு) ரெடி செய்து, கூரியரில் அனுப்பி வைத்து உதவினார் ராஜேஷ்குமார்.

சொன்னால் சொன்ன வாக்குத் தவறாதவர்கள் என ஓவியர்களில் திரு.ஜெயராஜையும், எழுத்தாளர்களில் திரு.ராஜேஷ்குமாரையும் சொல்லலாம். இதற்காக மற்ற ஓவியர்களும், எழுத்தாளர்களும் தாமதப்படுத்துவார்கள் என்று நான் சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை. மேலே குறிப்பிட்ட இந்த இருவரையும் 100 சதவிகிதம் முழுமையாக நம்பி, தைரியமாக பத்திரிகையில் நமது அடுத்த வேலைகளைப் பார்க்கலாம் என்கிறேன்.

சாவி வார இதழில் நான் பணியாற்றியபோது, ஓவியர் ஜெயராஜுக்கு போனிலேயே சிச்சுவேஷனைச் சொல்லி, மறுநாள் மதியத்துக்குள் படம் தேவை என்றால், காலையிலே போன் செய்து “படம் ரெடி!” என்பார் ஜெ. ஒரு நாளுக்கும் அதிகமாக அவருக்குப் படம் வரைய அவகாசம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. இன்றைக்கு ஓவியர் ஸ்யாமும் பத்திரிகையின் அவசரத்தைப் புரிந்துகொண்டு, அந்த அளவுக்கு படு வேகமாக வரைந்து கொடுத்து உதவுகிறார்.

ஸ்டார் எழுத்தாளர்களிடம் சிறுகதை வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அவகாசம் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம்! அதுவே தொடர்கதை என்றால், கதையை ரெடி செய்துகொண்டு, முதல் அத்தியாயத்தை எழுதி அனுப்பப் பதினைந்து நாட்களாவது தேவை.

அதிலும் இன்றைக்குச் சாதனை படைத்துவிட்டார் ராஜேஷ்குமார்.

ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் ஒரு ஸ்டார் எழுத்தாளரின் தொடர்கதை வெளியானால் நன்றாக இருக்கும் என ஆசிரியர் குழு கடைசி நேரத்தில் முடிவு செய்தது. அதாவது, தீபாவளிச் சிறப்பிதழுக்கான வேலைகள் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பக்கங்களை அச்சுக்கு அனுப்பத் தொடங்கிய பிறகு! சிறப்பிதழுக்கான வேலைகளை திங்கள் கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை முடித்துவிட உத்தேசம்! ஸ்டார் ரைட்டரின் தொடர்கதை வேண்டும் எனத் தீர்மானித்தது திங்கள் கிழமையன்று மாலையில்தான்.

உடனே, ராஜேஷ்குமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். லேப்டாப், ஐபாட், மொபைல் என இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப அவர்களை மையப்படுத்தி, அதில் கிரைமும் கலந்து ஒரு தொடர்கதை வேண்டும் என்று கேட்டேன். அந்தக் கதையில் வேறு என்னவெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதையும் விவரித்துச் சொன்னேன். சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டவர், எழுதுவதாக ஒப்புக் கொண்டார். அப்புறம்தான் நான் அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டேன்.

“சார்! இந்தக் கதையை தீபாவளிச் சிறப்பிதழ்ல ஆரம்பிக்க எண்ணியிருக்கோம். ஏற்கெனவே அதுக்கான வேலைகள் தொடங்கியாச்சு. அதனால, அதிக நாள் இல்லே. முதல் அத்தியாயம் எனக்குச் சீக்கிரமே வேணும்!” என்றேன். அவர் “தருகிறேனே!” என்றார். ‘சீக்கிரம் என்றால்... ஒரு ஐந்தாறு நாளாவது அவகாசம் தர மாட்டோமா?’ என்று எண்ணியிருப்பார்போல. “என்னிக்கு வேணும்?” என்றார். “உடனே! நாளைக்கே!” என்றதும் பதறிவிட்டார். “என்ன ரவி, என்ன சொல்றீங்க?” என்றார்.

“ஆமாம் சார்! விளையாட்டில்லை; நெஜம்மாத்தான் சொல்றேன். ஓவியருக்கு வேற அனுப்பிப் படம் வாங்கணும். இடையில மூணு நாள்தான் இருக்குது!” என்றேன். கொஞ்சம் திக்குமுக்காடிவிட்டார். எங்களுடைய நெருக்கடியைச் சொன்னேன். “சரி ரவி! நாளைக்கு ராத்திரிக்குள்ள முதல் அத்தியாயத்தை ரெடி பண்ணி, உங்களுக்குக் கூரியர்ல அனுப்பிடறேன். அது புதன்கிழமை காலையில உங்க கைக்குக் கிடைச்சுடும். பரவாயில்லையா?” என்றார். சம்மதித்தேன்.

ஆச்சரியம்! இன்று காலையில் கதை என் மேஜையில் இருந்தது.

மதியம் ஒரு மணிக்கு போன் செய்தார். “என்ன ரவி, கதை கிடைச்சுதா?” என்றார்.

“இதுவும் ஒரு கின்னஸ் சாதனைதான் சார்! அசத்திட்டீங்க!” என்றேன். உலகிலேயே அதிக நாவல்கள் எழுதியவர் என்கிற சாதனையை சீக்கிரமே ராஜேஷ்குமார் கின்னஸில் பதிய இருக்கிறார். அதற்காக, விகடனில் வெளியான அவரது நாவல்கள் பற்றிய ஒரு சான்றிதழை சில மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தார். அனுப்பி வைத்திருந்தேன். இப்போது இத்தனை குறுகிய அவகாசத்தில் ஒரு தொடர்கதையை ஆரம்பிப்பதையும் கின்னஸில் சேர்த்துக் கொள்வார்கள் என்றால், அது கட்டாயம் ராஜேஷ்குமாரின் இந்த நாவலாகத்தான் இருக்கும்.

விகடனில் இப்போது ஆரம்பிக்கப்போகும் நாவலின் முதல் அத்தியாயத்தை, ராஜேஷ்குமாரின் கைப்பிரதியிலேயே விறுவிறுவென வாசித்தேன். பயங்கர வேகம்.

இளைஞர்களுக்குப் பொதுவாக மற்ற எல்லா பைக்குகளையும்விட யமாஹாதான் பிடிக்கும் என்று சொல்வதுண்டு. காரணம், எடுத்த எடுப்பில் டாப் கியரில் எகிறிப் பறக்கிற பைக் அது. அந்த மாதிரி ஒரு வேகம் ராஜேஷ்குமாரின் எல்லா நாவல்களிலுமே இருக்கும். இப்போது அனுப்பியதிலோ புல்லட் வேகம்!

ராஜேஷ்குமார் முன்பு எழுதிய ‘இரவில் ஒரு வானவில்’ நாவல், ‘அகராதி’ என்ற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. ன்பு, டமை, ராஜ்யம், தியாகம் இவற்றின் முதல் எழுத்துக்களைச் சேர்த்த வார்த்தையே அது. அநேகமாக தீபாவளிக்குப் பத்துப் பன்னிரண்டு நாள் கழித்து அது ரிலீஸாகும் என்று தெரிகிறது. தவிர, கலைஞர் டி.வி-யில், தனது க்ரைம் கதைகளை நாலு நாலு எபிஸோடுகளாக (இந்தியில் முன்பு வெளியான ‘தி க்ளூ’ போல) சீரியலாக்கும் முயற்சியில் வேறு மும்முரமாக இறங்கியுள்ளார். இத்தனை நெருக்கடிகளுக்கிடையில் அசுர வேகத்தில் செயல்பட்டு, முதல் அத்தியாயத்தை உரிய நேரத்தில் அனுப்பியது நிச்சயம் ஒரு சாதனைதான்!

இரண்டு தனித்தனி டிராக்குகளாகக் கதை செல்கிறது. இரண்டிலும் சிலிர்க்க வைக்கும் மர்ம முடிச்சு. இதை மேலும் சுவாரஸ்யப்படுத்த, ஒரு கதைக்கு ஓவியர் ஸ்யாமையும், இன்னொரு கதைக்கு ஓவியர் அரஸ்ஸையும் படம் போடச் சொல்லியிருக்கிறோம். தவிர, கதையைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு இந்தக் கதை தொடர்பாக வாரா வாரம் ஏதாவது பரிசுப் போட்டிகளும் வைக்கலாமா (முன்பு சுஜாதாவின் ‘யவனிகா’ நாவலில் போட்டிகள் வைத்த மாதிரி) என்று யோசித்து வருகிறோம்.

நான் தொடர்கதை பற்றி ராஜேஷ்குமாருடன் பேசிய அந்தக் கணத்திலிருந்து தூக்கம் தொலைந்தது அவருக்கு. இரவெல்லாம் கண் விழித்துக் கதைக்கு ஒரு அவுட்லைன் யோசித்து, விடியற்காலையில் நான்கு மணிக்குதான் உறங்கச் சென்றாராம். பின்னர், எழுந்ததிலிருந்து மளமளவென்று எழுதத் தொடங்கி, சரி பார்த்து, திருத்தி, காப்பி எடுத்து, நேற்று மாலை 6 மணிக்குக் கூரியரில் சேர்த்திருக்கிறார்.

ராஜேஷ்குமார் வேகம்; அவரின் எழுத்து நடை படு வேகம்!

*****
செயல் புயல் ஆசாமி போலச் சிந்தியுங்கள்; சிந்தனைப் புயல் ஆசாமி போலச் செயல்படுங்கள்!

10 comments:

Tech Shankar said...

http://uploading.com/files/5m647m43/athu%2Boru%2Bnilakkalam_rajesh%2Bkumar.doc/

http://uploading.com/files/9e1e2afa/13697242-RKThappu-Thappai-Oru-Thappu-RAJESH-KUMAR-NOVEL.pdf/

கே. பி. ஜனா... said...

உண்மை சார்! ராக்கெட் சுமார் என்கிற வேகம் ராஜேஷ் குமார்! அவர் நாவலைப் போலவே இந்தப் பதிவும் விறு விறு. - கே.பி. ஜனா.

SRK said...

ராஜேஷ்குமாரை 1984-ல் பதினெட்டு வயது பொடியனாக சந்தித்தேன். என்னுடைய அதீத எழுத்தார்வத்தை முதல் பத்து நிமிடத்தில் கிரகித்து விட்டவர் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம் என்று எனக்காக அவர் வீட்டுக் கதவுகளை திறந்து விட்டார். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் ஒவ்வொன்றும் எனக்கு ஒரு பல்கலைக் கழக பாடம்.

நான் எழுதிய மோனா நாவலின் அட்டைப்படம் அச்சுக்குப் போய் விட்டது, இன்னும் பக்கங்கள் வேண்டும் என நீங்கள் கேட்டதும் - மேலும் முப்பத்தியிரண்டு பக்கங்களை நான் உடனே எழுதி அனுப்பியபோது அவரோடு ஒப்பிட்டு என்னை பாராட்டினீர்கள். மிகையான ஒப்பீடுதான் எனினும், அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவர் வெறும் ராக்கெட் அல்ல; ஹைப்பர்சானிக் ராக்கெட்! அவரை சந்தித்ததும், நெருங்கி பழக முடிந்ததும் என் பூர்வ ஜென்ம புண்ணியம்!

butterfly Surya said...

அதே ஸ்பீடுல பதிவையும் போட்டு விட்டீர்கள்.

தீபாவளி மலருக்காக காத்திருக்கிறோம்.

உங்க பிளாக்கில் தீபாவளி ஸ்பெஷல் என்ன..??

We want something different..

பிரபாகர் said...

அழகாய் ராஜேஷ்குமரைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அவரை தொடர்ந்து வாசித்தவன், ரசிகன் என்ற வகையில் மிகவும் சந்தோஷமாயிருக்கிறது.

நன்றி திரு பிரகாஷ்....

பிரபாகர்.

Rekha raghavan said...

அடேங்கப்பா அவர் நாவல் எழுதுவதில் ராக்கெட் வேகம் என்றால் பதிவு போடுவதில் நீங்கள். எனக்கு மலைப்பாக இருக்கு சார். விறு விறு சுறு சுறு பதிவு.

ரேகா ராகவன்.

Raju said...

\\இந்தியில் முன்பு வெளியான ‘தி க்ளூ’ போல\\

வாழ்க்கையில மறக்கமே முடியாத நிகழ்ச்சி சார் அது..!"அதிகாரி பிரதர்ஸ்" தயாரிச்சது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு"இன்ஸ்பெக்டர் விதான்" ற பேர்ல வந்தது.செம சுவாரஸியாமா இருக்கும்.

பின்னோக்கி said...

சிறு வயதில் க்ரைம் நாவல் வரும்போது படிப்பதற்கு சண்டையே நடக்கும் என் வீட்டில். இவரின் எழுத்து நடை வெகு சுவாரசியம்.

ஒரு சின்ன சந்தேகம். Fax பயன்படுத்த மாட்டீர்களா ? எதற்காக courier ?

ungalrasigan.blogspot.com said...

AP4All, யூஆரெல் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி!

கே.பி.ஜனா! பின்னூட்டத்துக்கு நன்றி!

எஸ்.ஆர்.கே., திறமை எங்கிருந்தாலும் மனப்பூர்வமாகப் பாராட்டும் நல்ல குணத்தை நான் சாவி சாரிடமிருந்துதான் பெற்றேன். ஆனால், விகடனுக்கு வந்த பிறகுதான் இந்த குணத்தைக் கைக்கொண்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் இத்தனை நாளும்! தங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகுதான், ‘அடேடே! அன்றைக்கே பாராட்டியிருக்கிறேனே!’ என்று வியந்தேன். அன்புக்கு நன்றி!

//உங்க பிளாக்கில் தீபாவளி ஸ்பெஷல் என்ன..?? We want something different..// என்ன சூர்யா! பட்டர்ஃப்ளை போல மனசைப் படபடக்க வைக்கிறீங்களே! நான் ஏதோ பொழுதுபோக்காக எழுதிக்கொண்டு இருக்கிறேன். இருந்தாலும், என் மீது கொண்ட நம்பிக்கைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி!

பிரபாகர், நன்றி! நன்றி!!

ராகவன், ஜனா போலவே நீங்களும் என் பதிவு வேகத்தைப் பாராட்டியிருக்கிறீர்கள். ஆனால், சில நாள்கள் ஒன்றுமே எழுதாமல் விட்டிருக்கிறேனே! ஓ.கே! அன்புக்கு நன்றி!

கரெக்ட் ராஜு! சுராக், சஸ்பென்ஸ் இரண்டும் கூட ‘அதிகாரி அண்ட் அதிகாரி’ தயாரிப்புதான். நீங்கள் குறிப்பிட்ட ‘இன்ஸ்பெக்டர் விதான்’ நான் பார்க்கவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி ராஜு!

பின்னோக்கி வந்தாலும் முன்னோக்கிய சிந்தனையோடு ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஃபேக்ஸ், இ-மெயில், வாய்ஸ் ஸ்னேப் என எல்லா வசதிகளையும் நாங்கள் (விகடன்) பயன்படுத்துவோம். அவரிடம் அந்த வசதிகள் இல்லையாமே? ஆர்வக் கேள்விக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

Anonymous said...

www.emagaz.in இல் உள்ள ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களில் இருந்து சில வாக்கியங்களை http://twitter.com/emagazin/ இல் வெளியிட்டு உள்ளார்கள். படித்து மகிழுங்கள்!