கஸல் ராணி!

சில மணி நேரத்துக்கு முன்பு, எனது மற்றொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிகனி’ல், எனக்குப் பிடித்த பாடகர்கள், பாடகிகள் பற்றிய பதிவைப் போட்டேன். இந்தப் பதிவை நான் எழுத நினைத்ததற்குக் காரணமே வேறு ஒரு பாடகி. தமிழ்ப் பாடகி அல்ல; இந்திப் பாடகி. ரொம்ப நாள் கழித்து, நேற்றைக்குதான் மீண்டும் அவரின் ‘கஸல்’ பாடல்களைக் கேட்டேன்.

பீனாஸ் மஸானி என்பது அவரின் பெயர்.

1989-ல்தான் நான் முதன்முதலாக டி.வி. வாங்கினேன். அப்போது சன் டி.வி-யெல்லாம் வரவில்லை. கேபிள் கனெக்‌ஷன் என்பதே கிடையாது. ஒவ்வொரு வீட்டு மாடியிலும் ஆன்ட்டெனா கம்பிகள் கோணலும் மாணலுமாக, வயல்வெளி நடுவே சட்டித் தலையும், வைக்கோல் உடம்பும், குச்சிக் கைகளுமாக நின்றுகொண்டு இருக்கும் சோளக்கொல்லை பொம்மை மாதிரி கண்ணுக்குத் தட்டுப்படும். டெல்லி தூர்தர்ஷன், சென்னைத் தொலைக்காட்சி நிலையம் மற்றும் பொதிகை மட்டும்தான். வெள்ளிக்கிழமை சாயந்திரம் சென்னைத் தொலைக்காட்சியில் ‘ஒளியும் ஒலியும்’, திங்கள்கிழமை இரவில் சென்னைத் தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் ‘படமும் பாடலும்’ என, வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டும்தான் தலா அரை மணி நேரத்துக்கு ஐந்தாறு தமிழ்ப் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகும். புதன்கிழமை இரவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழிப் பாடல்கள் ‘சித்ரஹார்’ என்ற பெயரில் கலவையாக ஒளிபரப்பாகும். இப்படிச் சிக்கனமாக இருந்தபோது, அவற்றைப் பார்த்து ரசிப்பது சுவாரசியமான ஒன்றாக இருந்தது. இப்போது எந்த சேனலைத் திருப்பினாலும் பாடல் காட்சிகள்தான். அலுத்துவிட்டது!

அந்தச் சமயத்தில் ஹிந்தி நிகழ்ச்சிகள், ஹிந்தி சீரியல்கள்தான் அதிகம். மொழி புரிகிறதோ இல்லையோ, பார்த்துவிடுவது வழக்கம். அப்படி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான ஒரு ‘கஸல்’ ஆல்பத்தை, வேறு நிகழ்ச்சி எதுவும் இல்லாததால் நான் பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி அத்தனை அற்புதமாக இருந்தது. அதில் தோன்றிப் பாடிய பாடகியின் குரல் வளம் தேன் போல என்னை ஈர்த்தது. இன்றைக்கு வரைக்கும் அதற்கு மிஞ்சிய அழகான குரலையும், அவரின் பாடல்களைவிட இனிமையான பாடல்களையும் நான் கேட்கவில்லை.

அவர்தான் பீனாஸ் மஸானி. அன்றைய தினத்திலிருந்து அவர் பாடிய கேஸட்டுகள் எங்கே கிடைத்தாலும் வாங்கிக் கேட்க ஆரம்பித்தேன். ஸ்பென்ஸர் பிளாஸாவிலுள்ள மியூஸிக் வேர்ல்டில் மாதம் ஒருமுறை, இருமுறை என விசிட் செய்து, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேக்குகளில் பீனாஸ் மஸானியின் கேஸட்டுகள் இருக்கிறதா என்று தேடுவேன். புதிதாக ஏதேனும் தட்டுப்பட்டால் உடனே வாங்கிவிடுவேன். இப்படி என்னிடம் 15 கேஸட்டுகள் வரை சேர்ந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றையும் எத்தனை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பதற்குக் கணக்கு வழக்கில்லை.

ஒரு கட்டத்தில், அத்தனைக் கேஸட்டுகளுமே தேய்ந்து, துருவேறி, பயன்படாமல் போய்விட்டன. இதனால் பீனாஸ் மஸானியின் பாடல்களைக் கேட்டு ரசிக்கவே முடியாமல் போனது என்னால். நெட் கனெக்‌ஷன் வந்ததும், அதில் அவரின் கஸல் பாடல்கள் இருக்குமாவெனத் தேடினேன். ஊஹும்!

ரொம்ப நாள் கழித்து இன்றைக்கு மியூஸிக் வேர்ல்ட் போய் மொத்தக் கடையையும் மூன்று நான்கு முறை சுற்றிச் சுற்றி வந்து, ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் கண்டெடுத்தேன். அதில் பீனாஸ் மஸானியின் பாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்றும், பங்கஜ் உதாஸ், சல்மா ஆகா போன்று மற்றவர்கள் பாடிய கஸல்கள் நான்குமாக மொத்தம் ஐந்து சி.டி-க்கள் ஒரு பேக்கேஜாகக் கிடைத்தன. பீனாஸ் மஸானியை ஆவலோடு போட்டுப் பார்த்தேன். நான் முன்பு ரசித்த மிகச் சிறப்பான பாடல்கள் எதுவும் அதில் இல்லை. வேண்டுமென்றே மிகச் சுமாரான பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொடுத்தது போலிருந்தது.

‘மொஹப்பத் கி சாஹர்’ என்று தொடங்கும் பாடல் அத்தனை அருமையாக இருக்கும். ‘ஜப் மேரி ஆஜ் லஹாகி’, ‘யோன் உன்கி பஸோன் மெய்ன் காமோஷியோன்...’ என்கிற பாடல்களெல்லாம் (வரிகள் சரியா என்று தெரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது. காதில் விழுந்ததை ஞாபகத்தில் வைத்திருந்து எழுதுகிறேன்.) கேட்கக் கேட்கத் திகட்டாததாக இருக்கும். முன்பு நான் வாங்கி வைத்திருந்த கேஸட்டுகளில் ‘தி பெஸ்ட் ஆஃப் பீனாஸ் மஸானி’ என்று ஒரு கேஸட். அதன் கடைசி பாடல் - வரி ஞாபகமில்லை - அந்தப் பாடலில் பீனாஸ் தன் குரலை ஏற்றி இறக்கி, குழைத்து, பிழிந்து, படிப்படியாக உச்ச ஸ்தாயியிக்குச் சென்று, ஜால வித்தை காட்டுவார். இடையிடையே கரகோஷம் வேறு ஒலிக்கும். அது அந்தப் பாட்டுக்கு மேலும் கிக் ஏற்றுவதாக இருக்கும்.

பின்பொரு முறை, ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பீனாஸ் மஸானியின் பேட்டிக் கட்டுரை வந்திருந்தது. அதில் ஒரு பக்கம் முழுக்க பீனாஸின் வண்ணப் படம் வெளியிட்டிருந்தார்கள். அதைக் கட் செய்து என் அறைச் சுவரில் ஒட்டி வைத்திருந்தேன். அந்த அளவுக்கு பீனாஸ் மஸானியின் ரசிகனாக இருந்தேன். இப்போதும்தான். அந்தப் பழைய பாடல்களைக் கேட்கத்தான் கொடுத்து வைக்கவில்லை.

பீனாஸ் பாரம்பரியமான இந்துஸ்தானி பாடகர் குடும்பத்தில் வந்தவர். பார்சி குடும்பம். மதுராணி என்பவரிடம் கஸல் பயின்றார். சமீபத்தில் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இவரது குரலை முதன்முதலில் ராகேஷ்ரோஷன் ‘ஹமாரி பாஹு ஆல்கா’ என்ற படத்தில் பயன்படுத்தினார். ஆனால், பீனாஸுக்குத் திரைப்படத்தில் யாரோ ஒரு கதாநாயகிக்குப் பின்னணி பாடுவதைவிட, நேரடியாக மக்களோடு தொடர்பு கொள்ளும் கஸல் பாடல்களைப் பாடுவதில்தான் விருப்பம் என்பதால், படங்களில் பாடுவதைத் தவிர்த்துவிட்டார்.

ரொம்ப காலத்துக்கு முன்பு ஷரான் பிரபாகர், பார்வதி கான் ஆகியோரின் பாப் ஆல்பங்களைக் கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். பின்னர் ஸ்வேதா ஷெட்டியின் அதிரடி பாப்களைக் கேட்டு லயித்திருக்கிறேன். தொடர்ந்து அலீஷாவின் ‘மேட் இன் இண்டியா’ ஹிட் பாடல்! வேறு சில பாடல்கள். அனைடா, அனாமிகா எனப் பலப்பல கேட்டிருந்தாலும், எல்லாமே ரசிக்கும்படி இருந்தாலும், பீனாஸின் குரல் என்னை ஈர்த்த அளவுக்கு வேறு எதுவும் ஈர்க்கவில்லை.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போதே, நெட்டில் பீனாஸ் பாடல்களைத் தேடினேன். ஆச்சரியம்... சில பாடல்கள் கிடைத்தன. ஆனால், முன்னே நான் ரசித்த அந்த அட்டகாசமான பாடல்கள் எதுவும் சிக்கவில்லை.

பீனாஸிடம் எனக்குப் பிடித்த ஒரு விஷயம்... என்னைப் போலவே அவருக்கும் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கொஞ்சம் கூடப் பிடிக்காது!

*****
எதை நீ இழந்தாலும், உடனே அதன் மதிப்பு இரண்டு மடங்காக, நான்கு மடங்காக ஆகிவிடுகிறது!
.

5 comments:

♠ ராஜு ♠ said...

ஒரு பாடகியைப் பற்றி தெரிந்து கொண்டேன் ரவி ஸார்.

REKHA RAGHAVAN said...

//எத்தனை எத்தனை முறை கேட்டிருப்பேன்//

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள் என்பதற்காக எத்தனை எத்தனை என்று இரண்டு முறை போட்டிருக்கிறீர்கள். சரிதானே! பதிவை படித்ததும் நல்ல இசையை யார் பரிந்துரைத்தாலும் கேட்டுவிடுவது என்ற என் கொள்கைக்கேற்ப இதோ நெட்டில் அவரின் பாடலை தேட ஆரம்பித்துவிட்டேன்.

ரேகா ராகவன்.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

K.B.JANARTHANAN said...

இசை நம்ம உசிராச்சே! உடனே கேட்கத் தோன்றிற்று. தேடி, யுடிவியில் 'ஏ பஹார் கஹ் ரஹீ ஹை...' என்ற பாடலைக் கேட்டேன். குழைவும் எடுப்பும் கலந்த மதுரக் குரல். நீங்கள் குறிப்பிட்ட பழைய பாடல்களையும் கேட்க வேண்டும்... எப்படியாவது!

கே.பி.ஜனா said...

அன்புள்ள திரு. ரவி பிரகாஷ் அவர்களுக்கு,

பீனாஸ் மசானி பற்றிய பதிவு படித்தேன்.
ஒரு சிறிய சந்தேகம். ராகேஷ் ரோஷன் நடிகர். அவர் சகோதரர் ராஜேஷ் ரோஷன் தான் இசையமைப்பாளர். இருவருமே பழம்பெரும் இசையமைப்பாளர் ரோஷனின் புதல்வர்கள். பீனாஸின் குரலை திரைக்கு அறிமுகப் படுத்தியவர் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளவர் பின்னவராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன், சரியா?