பயப்பட எதுவுமில்லை!

ன் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய நண்பரும், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு.பாக்கியம் ராமசாமி அவர்களுடன் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வியைக் கீழே தந்திருக்கிறேன். அதற்கான பதிலை ரொம்ப நேரம் யோசிக்காமல் சட்டென்று உங்களால் சொல்ல முடிகிறதா என்று பாருங்கள். என்னால் முடியவில்லை.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கிருபானந்த வாரியார், சிலுக்கு ஸ்மிதா, வி.வி.கிரி, ஆட்டோ சங்கர், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், புலவர் கீரன், கிரிதாரி பிரசாத், சாவி, சுஜாதா, எஸ்.ஏ.பி., தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், புனிதன், சு.சமுத்திரம், கே.பி.சுந்தராம்பாள், சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஹரிதாஸ்கிரி, ராஜாஜி, ஈ.வெ.ரா., எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம்., ஏ.எம்.ராஜா, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, டி.கே.பட்டம்மாள், பத்மினி, கண்ணதாசன், மதுரை சோமு, என்.வி.என்.சோமு, ஏவி.எம்.ராஜன், வி.கே.ராமசாமி, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சந்தன வீரப்பன், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெமினி கணேசன், சஞ்சய் காந்தி, ஸ்ரீதர், அன்னை தெரசா, ஆதிமூலம், ஆலடி அருணா, ஜெய்சங்கர், ஜெய்கணேஷ், சதாம் உசேன், ஸ்ரீவித்யா, ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.நாகராஜன், க.ராசாராம், வி.கோபால கிருஷ்ணன், ஆர்.எஸ்.மனோகர், பி.எஸ்.வீரப்பா, அசோகன், எம்.என்.நம்பியார், சொர்ணமுகி, ஏ.கருணாநிதி, முரசொலி மாறன், பி.பானுமதி, தேவிகா, படாபட் ஜெயலட்சுமி, ஜெயவர்த்தனே, பிரபாகரன், சதாசிவம், பகீரதன், காமராஜர், அண்ணா, ராம்சுரத் குமார், டயானா, மைக்கேல் ஜாக்சன்... பெயர்களா சொல்லிக்கிட்டே போறேனே... சட்டுனு உன் மனசுல என்ன தோணுது ரவி?

திரு.பாக்கியம் ராமசாமி என்னிடம் கேட்ட கேள்வி இதுதான். எழுத்தில் பார்க்கும்போது பதில் சுலபமாகத் தெரிகிறது. செவி வழியாகக் கேட்கும்போது எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நீங்கள் யூகித்து வையுங்கள். விடையை இறுதியில் சொல்கிறேன்.

*****

குமுதம் குழுமப் பத்திரிகையான பக்தி ஸ்பெஷலில் ஜோசியப் பகுதி எழுதும் பிரபல ஜோசியர் ஏ.ஆர்.ராஜகோபாலனின் மகன் திடீரென்று ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்; ராஜகோபாலன் அந்தச் சமயம் அமெரிக்காவில் இருந்திருக்கிறார். எண்பது வயது கடந்தவர். அங்கேயே அவருக்கு இந்த அதிர்ச்சியான தகவலைச் சொல்லிக் கலவரப்படுத்தவேண்டாம் என்று அவரை சென்னைக்கு அழைத்து வந்தபின்புதான் தகவலைச் சொன்னார்களாம். நேற்று இந்த விஷயத்தைச் சொன்ன ஓவிய நண்பர் ராஜா, அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.

அந்த மகனுக்கு ஏறத்தாழ 40 வயதுதான் இருக்குமாம். முதிய வயதில் பிள்ளையைப் பறிகொடுப்பது என்பது துயரங்களிலேயே துயரமான ஒன்று!

மரணம் எப்போது, எப்படி வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டுகிறது என்பது தெரிவதே இல்லை. அப்படித் தெரியாமல் இருப்பதால்தான் கொஞ்சமாவது தைரியமாக இருக்க முடிகிறதோ என்னவோ! எல்லோருக்கும் பிறக்கும்போதே, ‘உனக்கு 35 வயசு; உனக்கு 72; இந்தாப்பா உனக்கு 68-தான். வர்ற நவம்பர் 17-ம் தேதியோட உன் பூலோகக் கணக்கு முடியுது. மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டுப் புறப்படத் தயாரா இரு!’ என்பது மாதிரி ஆளாளுக்கு இயற்கை நிர்ணயம் செய்து அனுப்பியிருந்தால், அவனவனுக்கும் நடுக்கமாக இருக்குமல்லவா? மருந்து, மாத்திரை, ஸ்கேன் வகையறாக்களுக்கெல்லாம் எவனும் பணத்தைச் செலவழிக்க மாட்டான். இன்ஷூரன்ஸ் என்கிற ஒரு கான்செப்டே இருக்காது. நான் பெரியவன், நீ பெரியவன் என்கிற போட்டி, பொறாமை இருக்காது.

சொல்ல முடியாது; ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் குளிர் விட்டுப் போனாலும் போகும். தான் கிளம்பப் போகிற தேதியை மறைத்து, ஏகப்பட்ட கடன் வாங்கி நாமத்தைப் போட்டாலும் போடுவான். ஆனால், யாரும் யாரையும் நம்பிக் கடன் கொடுப்பார்களா என்பது சந்தேகம்!

மரணத் தேதி நமக்குத் தெரியாமல் இருப்பது இயற்கை நமக்களித்த வரம் என்றுதான் நான் நினைக்கிறேன். நாளை என்ற ஒன்று இருக்கிறது என்கிற நம்பிக்கையில்தான் இன்று நாம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறோம்; உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று, மாம்பலத்தில் இருந்த நீலா சித்தி வீட்டுக்கு (என் அம்மாவின் சித்தி) அம்மாவும் நானும் போயிருந்தோம். ‘சித்தி ரொம்பவும் உடம்பு முடியாமல் இருக்கிறார்; தள்ளாமை அதிகமாகிவிட்டது. ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும்’ என்று அம்மா ரொம்ப நாளாகவே சொல்லிக்கொண்டு இருந்தார். நீலா சித்திக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. மூன்று பெண்கள்; இரண்டு பையன்கள். பெரிய பெண் பெயர் லலிதா.

அவர்கள் இருந்தது பெரிய இடம்; ஆனால், மிகப் பழைய வீடு. அதை முற்றாக இடித்துவிட்டு, ஃப்ளாட்ஸ் கட்டவேண்டும் என்பது லலிதா சித்தியின் திட்டம். அதற்காக பில்டர்ஸிடம் பேசி, ஒப்பந்தம் செய்திருந்தார்.

நாங்கள் பெரிய சித்தியிடம் ஆசிபெறச் சென்ற அன்று (ஜனவரி 1) யதேச்சையாக மகன், மகள், மருமகள் என சித்தி குடும்பத்தார் அனைவருமே வந்திருந்தார்கள். லலிதா சித்தி எங்களுக்கு ஸ்வீட் கொடுத்து, ஹேப்பி நியூ இயர் சொல்லி சந்தோஷப்பட்டார். பில்டர்ஸும் வந்து, வீட்டை இடிப்பது தொடர்பாக லலிதா சித்தியிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் அங்கே ஒரு மணி நேரம் போல் இருந்துவிட்டு வந்துவிட்டோம்.

மதியம் 3 மணிக்கு போன் வந்தது - சித்தி காலமாகிவிட்டார் என்று. ‘ரொம்பவும் வயதானவர்; எதிர்பார்த்ததுதான்’ என்று நினைத்தபடி மீண்டும் நானும் அம்மாவும் அவர் வீட்டுக்குப் போனதும்தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. இறந்தது நீலா சித்தியின் மகள் லலிதா. இந்த மரணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை எங்களால். ஒரு நோய் நொடி இல்லை; ஒன்றும் இல்லை. ஹக்கென்று ஒரு விக்கல். தண்ணீர் கேட்டாராம். கொண்டு வருவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது என்றார்கள்.

இன்னொரு மரணம் சற்று வேடிக்கையானது. ஆச்சரியமானதும்கூட! வெங்கட்ராமன் என்பவர் என் அத்தை கணவரின் தம்பி. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் சொந்த ஊரான கல்பட்டு என்னும் கிராமத்துக்குச் சென்றிருந்தார், குலதெய்வத்தை வழிபட்டு வர. விழுப்புரம் வந்து, சென்னைக்கு பஸ் பிடிக்க வேண்டும்.

விழுப்புரம் வந்தவருக்கு மனதில் ஏதோ தோன்றியிருக்கிறது. நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார். அங்கே ரைட்டரிடம் ஒரு பேப்பர், பேனா வாங்கி மளமளவென்று தன் சென்னை முகவரியை எழுதி, அவர்களிடம் கொடுத்தார். “சார்! நான் இங்கே குலதெய்வத்தைக் கும்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். ஆனா, எனக்கு என்னவோ இன்னும் கொஞ்ச நேரத்துல என் உயிர் போயிடும்னு தோணுது. கூட உதவிக்கும் யாரும் இல்லை. நான் இங்கே அநாதையா சாக விரும்பலை. நான் இறந்துட்டா என் உடம்பை பத்திரமா இந்த முகவரிக்கு அனுப்பி வெச்சுடுங்க” என்று சொல்லிவிட்டு, அங்கேயே நாற்காலியில் உட்கார்ந்தவாக்கில் இறந்துவிட்டார்.

போலீஸே அவர் உடம்பை ஒரு டாக்ஸியில் ஏற்றி, காவலர் ஒருவர் துணையோடு, பைசா செலவில்லாமல் சென்னை முகவரிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போனது. அவர் மட்டும் தன் முடிவை யூகித்து அப்படிச் செய்திருக்கவில்லை என்றால்..? யோசிக்கவே முடியவில்லை.

மரணம் மர்மமானது; புதிரானது; சுவாரசியமானது. அதில் பயப்பட எதுவும் இல்லை. இந்த உலகில் வாழ்வதுதான் பயமாக இருக்கிறது!

*****

ரம்பக் கேள்விக்கு விடை: சட்டென்று உங்கள் மனதில் உறைத்ததா, அத்தனை பேரும் இறந்துபோய்விட்டவர்கள் என்பது?

“சும்மா மனசுல தோணினதைக் கடகடன்னு சொன்னேன் ரவி! யோசிச்சு எழுதினா இந்தப் பட்டியல் இன்னும் நீண்டுக்கிட்டே போகும். இத்தனை பேரையும் நாம் நம் கண்ணெதிரேயே பறிகொடுத்திருக்கோம். வாழ்க்கை எத்தனை அநித்தியமானது பார்த்தியா ரவி!” என்றார் பாக்கியம் ராமசாமி.

உண்மைதான்!
***
‘யார் யார் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டால், அத்தனை பேரும் கை தூக்குவார்கள். ‘யார் யார் சாக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டுப் பாருங்கள்; ஒரு கையும் உயராது!
.

7 comments:

♠ ராஜு ♠ said...

படிக்கும் போது, எனக்கும் பல சாவுகள் ஞாபகத்துக்கு வந்தது அண்ணே..!
கடைசி வரிதான் பஞ்ச்.

JANARTHANAN said...

மனதைக் கனக்க வைத்தது. மரணம் சாதாரணம் அல்ல. -- கே.பி. ஜனா

REKHA RAGHAVAN said...

//மரணம் மர்மமானது; புதிரானது; சுவாரசியமானது. அதில் பயப்பட எதுவும் இல்லை. இந்த உலகில் வாழ்வதுதான் பயமாக இருக்கிறது!//

சரியாக சொன்னீர்கள்.பதிவை படித்து முடித்ததும் மிகவும் உடைந்து போனேன். மரணம் எங்கே எப்படி வரும் என்பது இன்று வரை யாராலும் யூகிக்க முடியாததாகவேதானே இருக்கிறது? மிக அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

கிருபாநந்தினி said...

அருமையான பதிவு! ஆனால், இதில் உள்ள சில பிழைகளை என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. அவர் பெயர் ஏ.ஆர்.ராஜகோபாலன் இல்லை; ஏ.எம்.ராஜகோபாலன். அவர் மகன் விபத்தில் இறந்தது இங்கே சென்னையில் இல்லை; சவூதியில். திரு.ராஜகோபாலன் குமுதம் பக்தி ஸ்பெஷலில் எழுதவில்லை; குமுதம் ஜோதிடம் பத்திரிகையில்தான் எழுதி வருகிறார்.

ரவிபிரகாஷ் said...

திரு.ராஜு, கடைசி வரியில் மட்டுமல்ல, கடைசி காலத்திலும் பஞ்சுதான் - மனிதனின் காதிலும் மூக்கிலும்! பின்னூட்டத்துக்கு நன்றி!

திரு.கே.பி.ஜனா! மரணம் சாதாரணம் அல்லதான். அதனால்தான் அதைப் பலரால் ஜீரணம் செய்ய முடியவில்லை!

திரு.ராகவன், பாராட்டுக்களுக்கு நன்றி!

கிருபாநந்தினி, தாங்கள் ‘திரு’வா, ‘திருமதி’யா, செல்வியா என்று தெரியவில்லை. ‘திருமதி’ என்று போடவே இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது. எனவே பெயரை மட்டுமே போட்டுள்ளேன். பாராட்டுக்கு நன்றி!

R.Subramanian@R.S.Mani said...

You are very creful Ravi ; I read three or four times just to find out whether any living "perusu"s" name is erroneously included there; but not so; so it is not charming;
Suppamani

அஸ்குபிஸ்கு said...

மக்கள் அபிமானம் பெற்றவர்கள், ம்ரணமடைந்தவர்கள் என்று மனதில் தோன்றியது.

உங்களின் இந்த பதிவு மட்டுமல்ல, திரு கடுகார் உங்கள் டைரிக்கான சுட்டியை தந்த நாள்முதல் பழைய ஒவ்வொரு பதிவுகளையும் வாசித்து வருகிறேன். உங்களுடன் உறவாடுவது போல இருக்கிறது. மீண்டும் நன்றி