சிரிப்பு... மன்னிக்க, சிறப்பு விருதுகள்!










மிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 2007, 2008-ம் ஆண்டுகளுக்கான விருதுகள் இவை. யார் மனசும் புண்படக்கூடாது என்கிற நல்ல எண்ணம் உள்ளவர் நம் முதல்வர். தனக்கு ரஜினியும் முக்கியம், கமலும் முக்கியம் என்கிற காரணத்தால் ‘சிவாஜி’ படத்துக்காக ரஜினிக்குச் சிறந்த நடிகர் விருதும், ‘தசாவதாரம்’ படத்துக்காக கமலுக்குச் சிறந்த நடிகர் விருதும் அளித்துக் கௌரவித்துவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குரிய விருதுகளை ஒரே நேரத்தில் வழங்கியதில் இது ஒரு சௌகரியம்! சிறந்த நடிகருக்கான விருதினை மட்டும் கொடுத்தால் போதுமா? சிறந்த படங்களாகவும் சிவாஜி, தசாவதாரம் இரண்டையும் தேர்ந்தெடுத்தால்தானே முழுத் திருப்தி கிடைக்கும்!

சரி, யார் மனசும் புண்படக்கூடாது என்கிற நல்ல எண்ணமுள்ள நம் முதல்வர், தம் மனசு மட்டும் புண்படும்படியாக விட்டுவிடுவாரா? உளியின் ஓசைக்கு மூன்று விருதுகள். சிறந்த உரையாடல் ஆசிரியர்: மு.கருணாநிதி, சிறந்த நகைச்சுவை நடிகை: கோவை சரளா (இப்படியொரு நடிகை இருப்பதே சமீப காலத்தில் எனக்கு மறந்து போய்விட்டது), சிறந்த நடன ஆசிரியர்: சிவசங்கர் என மூன்று விருதுகள். அப்படிப் போடு!

ஆனால், இதற்கெல்லாம் பழியைத் தூக்கி நம் முதல்வர் தலையில் போடுவது ரொம்பத் தப்பு! நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழுதான் விருதுக்குரியவர்களைப் பரிந்துரைத்தது. அதைத் தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டது. அவ்வளவுதான்! பின்னே, தனக்குத் தானே சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதைப் பரிந்துரைத்துக் கொள்வாரா கருணாநிதி? சொல்லப் போனால், நீதிபதி ராஜன் தலைமையில் அமைந்த அந்தக் குழு, சிறந்த திரைப்படமாக ‘உளியின் ஓசை’யையும் தேர்ந்தெடுத்திருந்திருக்கக்கூடும். கருணாநிதியே ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’ என்று கூச்சப்பட்டு, அதைப் பட்டியலிலிருந்து விலக்கியிருக்கலாம்.

தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வாரா கருணாநிதி என்று நான் கேட்டதுமே சிலர், ‘ஏன்? அண்ணா விருதை அவர் தனக்குத் தானேதானே கொடுத்துக் கொண்டார்?’ என்று சண்டைக்கு வரலாம். முன்பு, பேராசிரியர் அன்பழகனுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கக் கருணாநிதி முன்வந்தபோதுகூட, தன் வயதையும் உடல் நிலையையும் காரணம் காட்டிப் பேராசிரியர் அந்தப் பதவியைத் தான் ஏற்க முடியவே முடியாதென்று சத்தியாக்கிரகம் செய்து மறுத்துவிட்டதால்தானே, வேறு வழியில்லாமல் அதை ஸ்டாலினுக்கு வழங்கினார் கருணாநிதி. அது போல ‘அண்ணா விருதை’ வாங்கும் தகுதி தனக்கில்லை என்று அன்பழகன் இப்போதும் மறுத்திருக்கலாம். அந்த விருதுக்கு அன்பழகனே தகுதியில்லை என்றால், பிறகு தன்னை விட்டால் வேறு யார் தகுதி என்று வேறு வழியில்லாமல் கருணாநிதி தானே அதைப் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கலாம். யார் கண்டது?

சமீப காலத்தில், சுண்டல் மாதிரி வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் ‘கலைமாமணி’ பட்டம் கொடுத்துக் கொடுத்து, அந்தப் பட்டத்துக்கே ஒரு கௌரவம் இல்லாமல் போய்விட்டது. டாக்டர் பட்டமும் அந்தக் கதிக்கு வந்துவிட்டது. இப்போதைய தமிழக அரசின் திரைப்பட விருதுகள்கூட அப்படித்தான் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு நாகேஷுக்கு நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கங்கை அமரன் பேசியதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.

“நகைச்சுவை மாமேதை நாகேஷுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்காமல், மத்திய அரசு மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டு விட்டது. நம்மவர்கள் டெல்லியில் உள்ள அந்த கமிட்டியில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பட்டத்தை வாங்கிக் கொள்கிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு போகிறது என்று எனக்கும் தெரியும். இப்போது நடிகர் விவேக்குக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு வந்ததுமே விவேக் என்ன செய்திருக்க வேண்டும்? ‘நகைச்சுவைக்கே அரசன் நாகேஷ். அவருக்குக் கொடுக்காத இந்த விருது எனக்கு வேண்டாம்’ என்று மறுத்திருக்க வேண்டாமா? பட்டம், பட்டம்னு ஏன்யா இப்படி அலையறீங்க? இதே போலத்தான் நம்ம வைரமுத்துவும். கவியரசு என்றால், அது கண்ணதாசன் ஒருவர்தான். அதில் ஓரிரு வார்த்தையைச் சேர்த்து, ‘கவிப் பேரரசு’ என்று போட்டு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஒரு பட்டத்தை வாங்கிக் கொண்டார்.

இந்த விருதை செலக்ட் பண்ற கமிட்டியிலே இருக்கிற என் நண்பர் ஒருத்தர், ‘உங்க அண்ணன் இளையராஜாவோட பயோடேட்டாவை அனுப்புங்க. அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்துடலாம்’னு சொன்னாரு. ‘முதல்ல எங்க எம்.எஸ்.வி. ஐயாவுக்குக் கொடுங்க. அப்புறம் இளையராஜாவுக்குக் கொடுக்கலாம்’னு சொல்லிட்டேன்.

‘பாரதி’ படத்துல எங்க அண்ணன் பொண்ணு பவதாரிணி, ‘குயில் போல பொண்ணு ஒண்ணு...’ அப்படின்னு ஒரு பாட்டைக் கிணத்துக்குள்ளேருந்து பாடிச்சு. அதுக்காக தேசிய விருது கொடுத்துட்டாங்க. அதுக்காக எவ்வளவு செலவு செஞ்சாங்கன்றது எனக்குத் தெரியும். அதே படத்துல ‘நிற்பதுவே... நடப்பதுவே’னு ஒரு பாட்டு. அருமையான பாட்டு. அதைப் பாடிய பையனோட குரலும் பிரமாதம். அவனுக்குக் கொடுத்திருக்கணும் தேசிய விருது. இதையெல்லாம் நினைக்கும்போது வயிறு பத்தி எரியுது” என்று ஆவேசமாகப் பேசினார் கங்கை அமரன்.

மிக நேர்மையான பேச்சு. நியாயமான பேச்சு! அவர் சொன்னதில் ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ‘நாகேஷுக்கே இல்லாத விருது தனக்கு வேண்டாம்’ என்று விவேக் மறுத்திருக்க வேண்டாமா என்று கேட்டார். இப்படி விருது கொடுக்கப்பட்ட ஒவ்வொருவருமே, யாரையோ ஒருவரைச் சுட்டிக்காட்டி ‘அவருக்கே இல்லாத விருது எனக்கு வேண்டாம்’ என்று மறுத்துக்கொண்டு இருந்தால், பிறகு யாருக்குத்தான் விருது கொடுப்பது? எந்தக் கையூட்டும் இல்லாமல், சிபாரிசும் இல்லாமல், நியாயமான தகுதியின் அடிப்படையில் வந்த விருதாக இருந்தால், மறுப்புச் சொல்ல வேண்டியதில்லை. தாராளமாக ஏற்கலாம். தப்பில்லை.

இங்கே ரஜினி, கமல் இருவரின் நிலையும் அதுதான்! அவர்களாக இந்தத் தமிழக அரசு திரைப்பட விருதுகளைத் தேடிப் போயிருக்க மாட்டார்கள். சொல்லப் போனால், இதற்காக அவர்கள் கொஞ்சம் கூச்சமே கூடப் பட்டிருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, இப்போது அவர்களுக்குக் ‘கலைமாமணி’ பட்டம் தருவதாக வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு எப்படி இருக்கும்?

அது சரி, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ‘கலைமாமணி’ பட்டங்கள் இன்னின்னாருக்கு என்று அறிவித்தார்களே! என்ன ஆயிற்று? அவற்றை எப்போது வழங்கப் போகிறார்கள்? அந்த காமெடி டிராமா என்றைக்கு?

*****
உன் தகுதிக்கு மீறி உன்னை ஒருவர் புகழ்கிறாரா? உண்மையில், உன்னை அவர் இகழ்கிறார்!

6 comments:

பிரபாகர் said...

பிரகாஷ்,

தண்டோரா அண்ணனுக்கு பதிவிட்ட அதெ பின்னூட்டம் தான் இங்கேயும்.

"தமிழக மக்களின் தலை விதி. அனுபவித்துத் தான் ஆகவேண்டும். ஒரு விஷயத்தில் நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள், காணாமல் அயல் நாட்டில் இருப்பதால்..."

நீங்கள் இன்னும் ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். அவர்களின் குடும்பத்திற்காக இன்னும் பல விருதுகளை அறிவித்து, அளித்து மகிழலாம். அந்த கன்றாவியை பார்ப்பதற்குத்தானே இருக்கிறோம்?

ம்... என்றுதான் திருந்தப் போகிறோமோ?

பிரபாகர்.

butterfly Surya said...

மத்திய என்ன மாநிலம் என்ன..??

இந்தியாவில் அனைத்து விருதுகளும் கேலி கூத்தின் உச்ச கட்டம் தான்.

கிருபாநந்தினி said...

//இப்படியொரு நடிகை இருப்பதே சமீப காலத்தில் எனக்கு மறந்து போய்விட்டது// சார், இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! கங்கை அமரன் பேச்சு பாரபட்சமில்லாமல் நேர்மையாக இருந்தது. வெல்டன் அமர்!

பின்னோக்கி said...

//உளியின் ஓசைக்கு மூன்று விருதுகள்

ம்ம்..ம்ம்...ரொம்ப குறைச்சலாத்தான் குடுத்திருக்காங்க..இன்னம் கொஞ்சம் எதிர்பார்த்தோம். இந்த படத்தின் நகைச்சுவை அருமை. அதுவும் இந்த படத்துக்கு போடப்பட்ட செட்..படம் எடுப்பவர்களுக்கு ஒரு பாடம். இப்படி ஒரு தமிழ் படம் வந்தது, நமக்கெல்லாம் பெருமை.

பின்னோக்கி said...

/நீதிபதி ஏ.கே.ராஜன்

வன்மையாக கண்டிக்கிறேன். நீதியரசர் ஏ.கே.ராஜன் என்பது தான் சரி. பதிவ மாத்தி எழுதுங்க

Ananya Mahadevan said...

சமீப காலத்தில், சுண்டல் மாதிரி வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் ‘கலைமாமணி’- மிகவும் ரசித்து சிரித்தேன். நானும் இந்த கண்றாவிஎல்லாம் பார்த்துண்டு தான் இருந்தேன். நாம என்ன சார் பண்ண முடியும்?