

நான் தற்போது விகடன் பிரசுரத்துக்காகத் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டு இருக்கும் புத்தகம் ‘STAY HUNGRY STAY FOOLISH'.
வெளியான ஒரு சில மாதங்களிலேயே ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கும் புத்தகம் இது.
அப்படி என்ன சிறப்பு இந்தப் புத்தகத்தில்?
ஐஐஎம் -மில் படித்துப் பட்டம் பெற்று, ஒரு சில ஆண்டுகள் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, பின்பு அதிலிருந்து விலகி, சுயமாக, புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்ட, மேலும் மேலும் உயரத்திற்குச் சென்றுகொண்டு இருக்கக்கூடிய இருபத்தைந்து தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்.
இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நாடி நரம்புகள் முறுக்கேறி, உடனே தாங்களும் சுய தொழிலில் இறங்கிச் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் பிறக்கும் என்பது உறுதி. அதற்கு மிகச் சரியாக வழிகாட்டக்கூடிய ஒரு கைடு மாதிரி, அந்த இருபத்தைந்து பேரின் அனுபவக் கதைகளோடும், ஆலோசனைகளோடும் சுவாரசியமாக இருக்கிறது இது.
இருபத்தைந்து பேரையும் பேட்டி கண்டு, இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியிருப்பவர் ‘ராஷ்மி பன்சால்’. இவர் ஓர் எழுத்தாளர். இவரே ஒரு தொழிலதிபர்.
‘ஜாம்’ (JAM - Just Another Magazine) என்கிற, இந்தியாவின் முன்னணி இளைஞர் பத்திரிகையின் இணை நிறுவனரும் ஆசிரியருமாக இருப்பவர் ராஷ்மி பன்சால். அந்தப் பத்திரிகை அச்சிலும் வருகிறது; ஆன்லைனிலும் கிடைக்கிறது. இளைஞர்களின் எண்ணங்கள், எதிர்கால வாழ்க்கை, தொழில்கள் பற்றியே அதிகம் எழுதுகிறார் ராஷ்மி. பிரசித்தி பெற்ற இவரது பிளாக்: 'Youthcurry'.
'STAY HUNGRY STAY FOOLISH' என்கிற தலைப்பே கவித்துவமானது. பசி, தாகம் இதெல்லாமே எதையும் சாதிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வார்த்தைகள். முட்டாள்தனமாக இருப்பது என்பது வேறில்லை... எதையும் அறிந்துகொள்ளும் வேட்கையோடு, அதற்கான தகுதியோடு இருப்பது. காலிப் பானையில்தானே எதையாவது போட்டு நிரப்ப முடியும்? அது போல!
இதற்குத் தமிழில் தலைப்புக் கொடுக்க நான் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கவில்லை. திருவருட்பிரகாச வள்ளலார் கைகொடுத்தார்.
அவரது தாரக மந்திரம் ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்பதாகும்.
பசித்திருப்பது என்றால், பட்டினி கிடப்பது என்று பொருளல்ல. பசித்துப் புசித்தால்தான் எதுவும் ஜீரணமாகும். தனித்திருப்பது என்றால், கூட்டத்திலிருந்து விலகித் தனித்திருப்பது அல்ல; மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவது; தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொள்வது. விழித்திருப்பது என்றால், தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு கண் விழித்திருப்பது அல்ல; விழிப்புடன் இருப்பது. எச்சரிக்கையாக இருப்பது.
ஒவ்வொரு மனிதனுக்கும், முக்கியமாக ஒரு தொழிலதிபருக்கு வேண்டிய குணாம்சங்கள் இம்மூன்றும். ஒன்றைச் செய்யவேண்டும் என்கிற வேட்கை, பசி... அதுதான் அடிப்படை. எதையும் புதுமையாகச் செய்வது முக்கியம்; அதுதான் தனித்திருப்பது. எந்த நேரமும் விழிப்பு உணர்வோடு, எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.
ஆக, ஆங்கிலத் தலைப்புக்குப் பொருத்தமாக ‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ என்று தமிழ்த் தலைப்பு கொடுத்துவிட்டேன்.
“மொத்தத் தமிழாக்கத்தையும் நாங்கள் பார்த்துத் திருப்தி அடைந்து சம்மதம் தெரிவித்த பின்னர்தான் மேற்கொண்டு நீங்கள் இதில் இறங்க வேண்டும்” என்று மூலப் பிரதி வெளியீட்டாளர்கள் சொல்லியிருந்தார்கள். ஒரு சாம்பிளுக்கு பத்து பேரைப் பற்றிய தமிழாக்கத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார் விகடன் பிரசுர ஆசிரியர் திரு.வீயெஸ்வி அவர்கள்.
அங்கிருந்து சமீபத்தில் பதில் வந்துவிட்டதாம். “ஆங்கில மூலத்தின் அடிப்படை ஜீவனைக் கொஞ்சமும் பிசகாமல் தமிழில் அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள். மிக அருமையான, சரளமான தமிழாக்கம். மேற்கொண்டு எதுவும் எங்கள் பார்வைக்கு அனுப்ப வேண்டியதில்லை. கோ அஹெட்!” என்று உற்சாகமான பதில் வந்திருக்கிறது என்று சொல்லி, அதற்காக என்னைப் பாராட்டினார் வீயெஸ்வி.
மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குக் கிடைத்த பாராட்டுக்களில் பாதி அவருக்கே சேரும். ஆங்கில மொழி ஏற்படுத்திய மயக்கத்தில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் சறுக்கியிருந்த ஒரு சில இடங்களை எல்லாம் கவனமாகக் கண்டுபிடித்துத் தவற்றைக் களைந்தவர் அவர்தான்.
நான் பசித்திருந்தேன்; அவர் விழித்திருந்தார்!
*****
குறிக்கோள், நீ என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது. ஆர்வம், அதை நீ எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது.
.