பாறைத் தோட்டப் பூங்கா!

ண்டிகர் ஒரு ஸ்பெஷல் நகரம். இரண்டு மாநிலங்களுக்குத் தலைநகரம். பார்த்துப் பார்த்துச் செதுக்கிய நகரம். அகலமான சாலைகள் கொண்ட அழகு நகரம்.

ங்கே வசித்த நேக் சந்த் என்பவர் போன வருடம்தான், அதாவது 2015-ல், தனது 90-வது வயதில் இறந்தார். அன்றைய தினம் சண்டிகரின் அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

யார் இவர்? சுதந்திரப் போராட்ட வீரரா? தொழில் அதிபரா? இலக்கியவாதியா? திரைத்துறைப் பிரபலமா?

இல்லை. ஆனால், காலத்தால் அழியாத ஓர் அற்புதமான பூங்காவை சண்டிகரில் உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார் இவர்.

சிறந்த பூங்கா என்றால், அங்கு பசுமை கொழிக்கும்; குப்பைகளும் வேண்டாத பொருள்களும் அவ்வப்போது நீக்கப்பட்டுவிடும் அல்லவா! ஆனால், இந்தப் பூங்காவில் அவற்றுக்குத்தான் முன்னுரிமை.

ஓட்டை உடைசல்கள், பயனற்ற சிதைந்த உலோகங்கள், குப்பைகள் இவற்றைக் கொண்டுதான் 'ராக் கார்டன்' எனப்படும் இந்தப் பூங்காவை வடிவமைத்திருக்கிறார் நேக் சந்த். பயனில்லாத கண்ணாடிகள், ​சைக்கிளின் ஹேண்டில்பார்கள், துருப்பிடித்த எண்ணெய் டிரம்கள், பாட்டில் மூடிகள், உடைந்த ஓடுகள், ஒழுங்கமைப்பு இல்லாத பாறைகள் போன்றவற்றைக் கொண்டுதான் இந்தப் பூங்கா உருவாகியிருக்கிறது. சராசரியாக தினமும் 5,000 பேர் சுற்றுலாப் பயணிகளாக இங்கே வந்து பார்வையிட்டுவிட்டுப் போகிறார்கள். இந்தப் பூங்காவைப் பார்க்காமல் போனால், அவர்களின் பயணம் முழுமை அடைவதில்லை. சண்டிகரின் மையப் பகுதியில் இருக்கிறது ந்தப் பூங்கா. கொஞ்ச நஞ்சமல்ல, 12 ஏக்கர் பரப்பு கொண்டது.

நுழைவுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு ஒரு குகைக்குள் நுழைந்தோம். இரண்டு புறமும் கல் சுவர்கள். நடுவே சிறிய பாதைகள் வழியாகச் சென்றால், வெவ்வேறு சிறு சிறு அறைகளுக்குள் (மேலே கூரை இல்லை) செல்லலாம். கிட்டத்தட்ட குகையில் நுழைந்து செல்வது போலத்தான் உள்ளது. ஒரு ‘மேஸ்’ வடிவத்துக்குள் செல்வது போல் உள்ளது. வளைந்து வளைந்து சென்று, ஒரு கட்டத்தில் வெளியே வரத் தெரியாமல் சிக்கிக் கொள்வோமா என்றும் கொஞ்சம் திகிலாக இருந்தது உண்மை.

பீங்கான் வடிவங்கள், மனித, மிருக உருவங்கள், பாறையில் உருவான செயற்கை மரங்கள்,  ஆங்காங்கே செயற்கை அருவிகள்.  செயற்கைக் குன்றுகள், அலங்கார அணிவகுப்பைப் போல அடுக்கப்பட்டிருக்கும் மண்பானைகள், வெண்கற்கள், கண்ணாடிகள், கிளிஞ்சல்கள் ஆகியவை பதிக்கப்பட்ட படிகள்.

நேக் சந்த், ஷகர்கர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. பிரிவினையின்போது இந்தியாவில் தங்க முடிவெடுத்து, பஞ்சாபுக்கு வந்து சேர்ந்தார். சண்டிகர் பகுதியிலுள்ள தனது சொந்த நிலத்தில்தான் ராக் கார்டனை உருவாக்கினார். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இதை அவரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான சில தொழிலாளிகளும் உருவாக்கியிருக்கிறார்கள். 1975-ல் இந்த ரகசியம் வெளியானபோது, அனுமதி இல்லாமல் இதையெல்லாம் செய்ததற்காக ராக் கார்டனை இடித்துவிடப் போவதாக அரசு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அணி திரண்டு சென்று அதை எதிர்த்தார்கள். பிறகு அரசும், சண்டிகருக்கு ராக் கார்டன் பெருமையைச் சேர்க்கும் என்பதை உணர்ந்துகொண்டதால், 50 தொழிலாளிகளை அரசு செலவில் நேக் சந்துக்கு உதவியாக அனுப்பியது.

இதை உருவாக்கிய நேக் சந்துக்கு, அவர் வாழும் காலத்திலேயே நமது அரசு பத்மஸ்ரீ விருது அளித்து  கெளரவித்திருப்பது நல்ல விஷயம்!

1957-ல் இந்த ராக் கார்டனை உருவாக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்திக்கொண்டு வந்திருக்கிறார் நேக் சந்த். நாங்கள் போயிருந்தபோதுகூட இந்த விரிவாக்க வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன.ந்தக் கட்டடத் தொழிலாளிகள் தமிழ் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அவர்களுடன் பேசியதில், அங்கு வேலை செய்யும் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. தமிழ்நாட்டிலிருந்து சென்று அந்தத் தொழிலாளிகளிடம் நாங்கள் தமிழில் பேசியதில் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்.

சண்டிகரில் நாங்கள் பார்த்த இடங்களில் ‘வேஸ்ட்’ என்று சொல்ல முடியாத ஒரு நல்ல இடம், வேஸ்ட் பொருள்களால் ஆன இந்த ‘ராக் கார்டன்’.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

நேக் சந்த் சைனி அவர்கள் உருவாக்கிய அழகிய இடம். எந்தப் பொருளுமே வீண் அல்ல என்று புரிய வைத்தவர். இன்றைக்கும் பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பது நல்ல விஷயம்.