அப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி!


நேற்று இரவு (7.12.17) சுமார் 1 மணி இருக்கும். தூக்கம் வராமல் மொபைலில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்தபோது, எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி உடல்நிலை சீரியஸாகி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக திரு.ராஜேஷ்குமார் போட்டிருந்த பதிவைப் படித்தேன். மறுநாள் காலை, பாக்கியம் ராமசாமி அவர்களின் உதவியாளர் ‘அனில்’ போன் செய்தபோது, மனச் சங்கடம் தரும் செய்தியாக இருக்குமென்று யூகித்தது போலவே ஆகிவிட்டது.
ஆம். பாக்கியம் ராமசாமி மறைந்துவிட்டார். காலையில் அலுவலக மீட்டிங்கை முடித்துவிட்டு, அவரின் வீட்டுக்குப் போனேன். பத்திரிகையாளர்களால் நிறைந்திருந்தது வீடு. மாமிக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. பெரிய இழப்பு. சாவி சார், விகடன் சேர்மன் எஸ்.பாலு சார், எழுத்தாளர் சுஜாதா ஆகியோருக்கு அடுத்து என்னால் தாங்க முடியாத பிரிவு இவரின் மறைவு.
ooooooooooo
இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவராத, எழுத்தாளப் பெருந்தகை பாக்கியம் ராமசாமியின் எழுத்தை இங்கே பகிர்கிறேன்.
நான் ஸ்கூல் படித்துக்கொண்டிருந்த காலத்தில், பாக்கியம் ராமசாமி எழுதியஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்தொடர்கதையாக குமுதம் வார இதழில் வெளியாகிக்கொண்டிருந்தது. அதற்காகவே என் அப்பா குமுதம் வாங்கினார். ஒவ்வொரு வாரமும் குமுதம் வந்தவுடன், முதலில் அந்தத் தொடர்கதையைப் படித்து விழுந்து விழுந்து சிரித்ததோடு மட்டுமல்லாமல், என்னையும் படிக்கச் சொல்லித் தூண்டினார்.
பின்னாளில் அதே நகைச்சுவைத் திலகத்தைச் சந்திப்பேன் என்றோ, அவரின் அளப்பரிய அன்புக்குப் பாத்திரமாவேன் என்றோ கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவரை அவர் வீட்டில் சென்று சந்தித்துப் பேசிவிட்டு வருவதுண்டு. அப்படி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, “சார், நீங்க ஏதோ ஒரு தொடர்கதையிலே, நீள நீளமாக ஏதோ வசனம் பேசி அரபு ஷேக் ஒருவருக்கு அப்புசாமி வணக்கம் சொல்வதுபோல எழுதியிருந்தீங்களே, சின்ன வயசுல படிச்ச கதை அது...” என்று என் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதும், “அதுவா... ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் கதை அதுஎன்றார். அப்புறம் அது பற்றியே பேச்சு தொடர்ந்தது.
மறுநாள் .ரா.சு சாரிடமிருந்து எனக்கு ஒரு போன்கால். “ரவி, நேத்து நீ வந்து ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் கதை பத்திப் பேசிட்டுப் போனவுடனே, அப்புசாமித் தாத்தாவோடு அந்தத் தொடர்கதை பத்தி நானே பேசுறது மாதிரி தமாஷா எழுதிப் பார்த்தேன். அதை உனக்கு -மெயிலில் அனுப்பியிருக்கேன். சும்மா படிச்சுப் பார்!” என்று சொன்னார்.
அது கீழே...
oooooooooooo
அப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி!

இறக்கை இல்லாமலே பறக்கிறது, கண் இல்லாமலேபார்க்கிறது, கால் இல்லாமலே நடக்கிறது, போகாத ஊருக்கெல்லாம் போவது போன்ற காரியங்கள் அத்தனைக்கும் சேர்த்து வார்த்தை ஒன்று உண்டு.
அதன் பெயர் கற்பனை...”
எதிரே இருந்த பெரியவரிடம் விளக்கிக்கொண்டு இருந்தேன்.
"சரிதான் போய்யா, நீயும் உன் விளக்கமும்! வாக்கிங் வந்தவனை வழிமறித்துக் கூட்டிவந்துட்டு என்னவோ பெரிசா வௌக்கறியே... நான் ஏதாவது கேட்டனா?" என்றார் அந்தத் துறுதுறு பெரியவர். அவர் வேறு யாருமல்ல, அப்புசாமி தாத்தாவேதான்!
என் மனைவி உள்ளே கிச்சனில் காபி போட்டுக்கொண்டிருந்தாள். காபி வாசனையோடு, முந்திரிகள் நெய்யில் மார்கழி நெய்யாடேலோ ரெம்பாவாய் செய்யும் வாசனையும் சேர்ந்து வீசியது.
துறுதுறு பெரியவரை ஒரு பேட்டிக்காகத் தள்ளிக்கொண்டு வந்திருந்தேன். விடியற்காலையில் பெருமாள் கோயில் மார்கழிப் பொங்கலை நோக்கித் தமது விறுவிறுப்பான நடையில் முன்னேறிக்கொண்டிருந்தவரை மறித்து, (கடத்தி என்றும் சொல்லலாம்) வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டேன்.
"உம்மகிட்டே பேசறதுக்கே பயம்மா இருக்கு. அங்கே காலியாயிடும் லேட்டா போனால்,"
என்று பரபரத்தார்.
"இங்கேயே பொங்கல் தயாராகுது. கவலைப்படாதீங்க. பொங்கல் வர்ரதுக்குள் நம்ம பேட்டியை முடித்துக் கொள்ளலாம்."
"எப்போ வருவாரோ எந்தன் கலி தீ... தீ... தீர... எப்போ..."
"சரி, பேட்டியை ஆரம்பிக்கலாமா?"
"விடிஞ்சிடும் போலிருக்கே. மார்கழிப் பொங்கல்னா அதை பளபளன்னு விடிகிற பொழுதில் சாப்பிட்டால்தான் அதிக ருசி. சரி, சரி... என்னவோ பாட்டீன்னு சொன்னீங்களே..."
"நான் பேட்டின்னு சொன்னேன். உங்களுக்குப் பாட்டி நினைப்பேதான் எப்போதும்."
"அதுக்குப் பேர் நினைப்பா. பயம். நான் சாதா மாதங்களில் இருபது தும்மல் தும்முவேன். மார்கழி மாதம்னா முப்பதும் தப்பாமே..."
"ப்ளீஸ், தாத்தா நேரம் ஓடறது. பொங்கல் வர்றதுக்குள் உம்மகிட்டே பேட்டியை முடிச்சுக்கணும். அது வந்துடுத்துன்னா உங்க கிட்டேயிருந்து ஒரு வார்த்தை பிடுங்கமுடியாது."
"ஏன், பொங்கலையும்கூடத்தான். ஹி, ஹி... என்ன இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா?"
"வந்துடும் வந்துடும். நான் சில விஷயங்களைக் கேட்கணும்னுதான் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன். நீங்க அரேபியா போயிருந்தீங்களே, ஏதோ ஊர் பேர்கூடச் சொன்னீங்க. மறந்துட்டேன்."
"ஆமாம், ஆமாம். அல்ஜுமானோ என்னவோ. அந்தக் கழுதைச் சவாரியை நினைத்தால் இப்பவும் நடுங்குதய்யா."
"ஏன் தாத்தா, அங்கெல்லாம் டிரான்ஸ்போர்ட் பஞ்சமா?"
"என்ன கிண்டலா? அந்த அல்ஜுமான் ஷேக்குக்கிட்டே என் வீட்டுக் கிழவி நல்லாப் போட்டுக் கொடுத்துட்டா. கழுதை வாலிலே பட்டாசு வேற கட்டிக் கொளுத்திட்டாங்க. அது பிரேக் அறுந்து போன லாரி மாதிரி ஓடு ஓடுன்னு கல்லிலும் முள்ளிலும் ஓடுது. மேலே நான் உட்கார்ந்திருக்கேன்."
"ரொம்பப் பாவம்தான் தாத்தா நீங்க."
"அந்த ஷேக் இருக்காரே, பொல்லாத கோபக்காரர். நல்ல கவிஞர். அந்த மந்திரி ஜப்பார், அவரும் பெரிய கவிஞர். ஷேக் நல்ல மூடில் இருந்தால் கவிஞர்னு கூப்பிடுவார். கோபம் வந்ததுன்னா அவ்வளவுதான், நாக்கை ஒரே வெட்டிலே மூணு துண்டாய் வெட்டி, அதைக் குளத்திலே முதலைக்குப் போட்டு, முதலையையும் கொன்னுடுன்னு உத்தரவு போடுவார்.”
"எல்லாம் ஞாபகம் இருக்குதா? படாதபாடு பட்டாலும் அனுபவம்தானே தாத்தா? சாப்பாடு, தீனி வசதியெல்லாம் அங்கே எப்படி இருந்ததோ? சரவணபவன் மாதிரி நம்ம பக்கத்து ஓட்டல்கீட்டல் ஏதாவது இருந்ததா?"
"ஸிம்ஸிம்னு ஒரு படுபாவிப் பய எனக்கு விருந்து தர்ரேன்னு கூட்டிக்கொண்டுபோய் இலையை மட்டும் போட்டுட்டு, எதையும் பரிமாறாமஇதோ பாயசம், இதோ பிரியாணி, இதோ குருமானு வெறுமே ஜாடையிலேயே எல்லாத்தையும் பரிமாறிட்டு, நிஜத்தில் எதையும் ஒரு துளிகூடத் தராமலேயே சாவடிச்சான். ஆனால், அப்புறம் பார்மாகிகளின் ஆதரவு கிடைச்சு, அவங்களோட தளபதியாவே ஆயிட்டேன். அந்த மிலிட்டரி டிரெஸ்லே என்னை நீ பார்த்திருக்கணுமே, அபாரம்! அப்புறம்..."
அப்பு தாத்தாவுக்கு அரேபியா நினைவுகள் மலரும் நினைவுகளாகவும் அலறும் நினைவுகளாகவும் குபுகுபுவென்று வந்து, பேசித் தள்ளிவிட்டார்.
அதையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டுதான்ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகளைஎழுதி முடித்தேன். கடைசியில், வழக்கம்போல சீதேக்கிழவிதான் வந்து கணவரைக் காப்பாற்றியிருக்கிறாள்.
அப்புசாமி கொடுத்துவைத்தவர்; நானும்தான்!
இதை ஓப்பன் செய்து படிக்கும் நீங்களும்.
- பாக்கியம் ராமசாமி


0 comments: