இன்றைய நாள் இனிய நாள்!

முப்பெரும் தேவியரில் முதலாமவர்!

ன் மரியாதைக்குரிய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர், எழுத்தாளர் திருமதி சிவசங்கரி. ஆனந்த விகடனில் வெளியான அவரின் தொடர்கதை ’பாலங்கள்’ மூன்று தலைமுறைப் பெண்களின் கதைகளைச் சொல்லியது. வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கதை அது. அவரின் ’ஒரு மனிதனின் கதை’ குடிப்பழக்கத்தின் தீமையை பொட்டில் அறைந்தாற்போல் விவரித்தது. அப்போது அந்தத் தொடர்கதையைப் படித்துவிட்டு, அந்த பாதிப்பால் குடிப்பழக்கத்தைப் பலர் கைவிட்டது எனக்குத் தெரியும். அந்த அளவுக்கு வலுவான எழுத்து சிவசங்கரியுடையது. அந்தத் தொடர்கதை ஆரம்பிக்கும்போது சென்னையில் ஹோர்டிங் வைத்து விளம்பரப்படுத்தியது விகடன் என நினைக்கிறேன். ஒரு பத்திரிகைத் தொடர்கதை விளம்பரத்துக்காக அதற்கு முன்போ பின்போ இப்படி ஹோர்டிங் வைக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சாவியில் பணியாற்றிய காலத்தில், சிவசங்கரியிடம் தொடர்கட்டுரை கேட்டு வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ நடத்தி, அதன் நடுவர் குழுக் கூட்டத்தின்போது அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். மற்றபடி அவருடன் அதிகப் பழக்கமில்லை.
நான் விழுப்புரத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சிவசங்கரி வழுதரெட்டியில் வசித்தார். அவரின் சிறுகதைகளை நான் அப்போதே படித்ததுண்டு. ஒருமுறை, திரு.வி.க ரோட்டில் உள்ள ஒரு கடையில் நான் பாடப் புத்தகம் வாங்கிக்கொண்டு இருந்தபோது, அருகில் இருந்த மற்றொரு கடை வாசலில் ஒரு கார் வந்து நின்றது. யாரென்று பார்த்தால், இறங்கியவர் எழுத்தாளர் சிவசங்கரி. கூடவே உதவியாளர் போன்று வேறு ஒரு பெண்மணியும் இறங்கினார். இருவரும் அந்தக் கடைக்குள் சென்று ஏதோ வாங்கினார்கள். நான் சென்று, என்னை சிவசங்கரியிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளலாமா என்று பார்த்தேன். ஆனால் அத்தனை பெரிய எழுத்தாளியிடம் பள்ளிச் சிறுவனான நான் போய் அறிமுகப்படுத்திக் கொண்டால் மதிப்பாரா என்று புரியாமல், தயக்கத்துடன் அவர் மீண்டும் காரில் ஏறிச் செல்கிற வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
பின்னர், விழுப்புரத்தில் எனது கல்லூரிப் படிப்பு துண்டாகி, மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த நேரத்தில், வழுதரெட்டியில் இருந்த சிவசங்கரியின் உதவியாளராக என்னைச் சேர்ப்பதற்கு மாமா முயன்றார். ஆனால், வேறு பல காரணங்களால் அந்த முயற்சி தள்ளிப் போய், நானும் அப்போது சில காலம் சென்னை வந்து ஒரு சின்ன வேலை தேடிக்கொண்டு செட்டிலானேன்.
இவ்வளவுதான் எழுத்தாளர் சிவசங்கரியுடனான எனது பழக்கம்.
சில மணி நேரத்துக்கு முன்பு எனக்கு ஒரு போன்கால் வந்தது. எடுத்தால், எதிர் முனையில் சிவசங்கரி. “சொல்லுங்கம்மா” என்றேன். ரொம்ப நாள் பழகியவர்போன்று, நெருங்கிய அன்பான உறவினர் பேசுவது போன்று வாஞ்சையான குரலில், “ரவி, எதுக்கு இப்போ உங்களுக்குப் போன் பண்ணேன் தெரியுமா? இப்பத்தான் மூணு மணி நேரமா உங்க பிளாக் பதிவுகளையெல்லாம் ஒண்ணுவிடாம மொத்தமா படிச்சு முடிச்சேன். அப்பப்பா... நகாசு பூசாத என்னவொரு எளிமையான எழுத்து! அரவிந்த அன்னையைப் பத்தி நீங்க எழுதியிருந்தது, உங்களுக்கு வந்த சோதனையிலிருந்து அன்னை உங்களைக் காப்பாத்திக் கரை சேர்த்தது, ஆசிரியர் சாவி பத்தி, சுஜாதா பத்தி, ஆசிரியர் பாலு பத்தியெல்லாம் நீங்க எழுதினது அத்தனையும் படிச்சேன். சூப்பர்ப் ரவி! ஆடம்பரமில்லாத, நம்மோடு நேர்ல பேசற மாதிரியான நடையில நீங்க எழுதினதைப் படிக்கிறப்போ, நீங்க சந்தோஷப்படற இடங்கள்ல அந்த சந்தோஷம் என்னையும் தொத்திக்கிச்சு; கண் கலங்குற இடத்துல என் கண்களும் கலங்கிச்சுங்கிறது நிஜம். இதையெல்லாம் நீங்க புஸ்தகமா கொண்டு வரணுமே?” என்றார்கள்.
சிவசங்கரி, இந்துமதி, அனுராதாரமணன் இவர்களையெல்லாம் எழுத்துலகின் முப்பெரும் தேவியர்களாகக் கருதுகிறவன் நான். அப்படியிருக்க, என் வலைப் பதிவுகளைப் பாராட்டுவதற்காகவே மிகச் சிறந்த எழுத்தாளரும் கட்டுரையாளருமான சிவசங்கரி வேலை மெனக்கிட்டு எனக்குப் போன் செய்திருக்கிறார் என்றால், நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் அல்லாமல் வேறென்ன?
“வாங்களேன் ஒரு நாள் வீட்டுக்கு! சாவி சாரைப் பத்தியும், பாலு சாரைப் பத்தியும் உங்க கிட்டே நிறைய அரட்டையடிக்கணும்போல இருக்கு!” என்று பிரியத்துடன் அழைத்தார்.
விரைவில் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்குமென்று நினைக்கிறேன்.

2 comments:

sury Siva said...

Today is indeed a HAPPY DAY.

SUBBU THATHA.

ஜீவி said...

உஷா சுப்ரமணியம்?.. எழுத்தில் வீர லெஷ்மி அல்லவா?..

அவசரப்பட்டு முப்பெரும் தேவியரை வரிசைப்படுத்தி விட்ட மாதிரி தோன்றியது..