அடைமழை, அர்த்தராத்திரி, அவள்!

‘1977-ஆம் ஆண்டு டயரியில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. அத்தனை முக்கியமானது இல்லை என்றாலும், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அது அடுத்த பதிவில்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி முதல் தேதியன்று ஒரு பதிவு போட்டிருந்தேன். (சில ஆண்டுகளுக்கு முன், ‘ஏடாகூடம்’ என நான் எழுதிவந்த வலைப்பூவில் போட்டிருந்த பதிவின் மறுபிரசுரம் அது. இப்போது ‘ஏடாகூடம்’ வலைப்பூ இல்லை.) ஆனால், அதற்கு அடுத்து வேறு சில பதிவுகளைப் போட்டுவிட்டேன். யதேச்சையாக எடுத்துப் பார்க்கும்போதுதான், தொடர்ச்சி போடுவதாகச் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. இதோ, அந்தத் தொடர்ச்சி...

நான் வேலை வெட்டியில்லாத தண்டச் சோறாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த காலம் அது. அப்போது நாங்கள் சங்கீதமங்கலம் என்கிற அழகான பெயர் கொண்ட கிராமத்தில் இருந்தோம். அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அனந்தபுரம் என்கிற மேஜர் பஞ்சாயத்து டவுன். அங்கே பனமலை குமரன் என்று ஒரு சின்ன தியேட்டர் உண்டு. மழைச்சாரல் விழுகிற மாதிரியான, ஓடித் தேய்ந்த பழைய ரீல் படங்களை அங்கே போடுவார்கள்.

அதற்கு எதிர்த்தாற்போல் இருந்த கட்டடத்தில் குணசேகரன் என்பவர் தட்டச்சுப் பயிலகம் நடத்தி வந்தார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். நாத்திக வாதம் பேசுபவர். ஆனால், அத்தனை இனிமையானவர். என்னை ரவி என்று கூப்பிடாமல், பிரகாஷ் என்று என் பெயரின் பின்பாதியைச் சொல்லி அழைத்தவர் அவர் ஒருவர்தான். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஜாலியாக இருக்கும் சமயங்களில், 'ஐயிரே!' என்று அழைப்பார்.

பொதுவாக, திராவிடர் கழகத்தினர் ஒரு கூட்டமாகத் திரளும்போதுதான் பிராமண எதிர்ப்புக் கோஷங்களைக் கிளப்பி மனம் புண்படச் செய்கிறார்களே தவிர, தனித் தனி நபராக என்னோடு பழகிய தி.க. நண்பர்கள் அனைவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். தமாஷுக்குக்கூட யாரும் என் சாதியை இழித்துப் பேசியது இல்லை. என் தமிழ் ஆசான் அ.க.முனிசாமி அவர்கள்கூட தி.க-தான். அவர் வீட்டில் தொங்குகிற திரைச்சீலை ஒன்றில் அண்ணா, கையில் புத்தகத்தோடு நடந்து வருவார்; மற்றொன்றில், பெரியார் கைத்தடியோடு நிற்பார். பின்னாளில் இவர் ஆஸ்திகவாதியாக மாறிவிட்டார். கோயில்களில் பட்டிமன்றங்கள், புராணச் சொற்பொழிவுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசுவார்.

தனித்தனியாக ஒவ்வொரு மனிதனும் பண்பட்டவனே! ஒரு கூட்டமாகத் திரளும்போதுதான் கட்டுப்பாடு இழக்கிறான். இது தி.க-வினருக்கு மட்டுமல்ல; எந்த ஒரு கட்சிக்கும், எந்த ஒரு இனத்துக்கும், எந்த ஒரு சமுதாயத்துக்குமே பொதுவானது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். வெட்டியாகத் திரிகிறோமே, தட்டச்சு கற்போமே என்று அந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். சங்கீதமங்கலத்திலிருந்து தினமும் நடந்தேதான் வருவேன்; நடந்தேதான் போவேன். இரண்டு ஆண்டு காலத்தில் ஆங்கிலம் ஹையர், தமிழ் ஹையர் இரண்டும் அவரிடம் பயின்று, பாஸ் செய்தேன். பயிற்சி நேரம் ஒரு மணி என்று பெயர்; நான் நாளெல்லாம் அவர் பயிலகத்திலேயே கிடந்ததால், எந்த மெஷின் காலியானாலும் உட்கார்ந்து பயிற்சி செய்வேன். அவரும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் தம்பி இளங்கோ என் நண்பன். தமிழ்ச்செல்வி என்கிற பெண்ணை அவன் லவ் பண்ணி, அதற்கு நான் தூது போனது தனிக் கதை!

நான் டயரியில் எழுதி வைத்த சுவாரஸ்யமான விஷயம் அதுவல்ல.

ஒரு மழைக்காலத்தில் டைப்ரைட்டிங் முடிந்து, மாலையில் எதிரே உள்ள தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். 'அன்பளிப்பு' என்பது படத்தின் பெயர். சிவாஜிகணேசன், சரோஜாதேவி, ஜெய்சங்கர் நடித்த படம் அது. 'வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே... வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்... நான் வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்... அத்திரி மாத்துப் பத்திரி பொண்ணு ஐஸுபக்கா பக்காடி...' என்று ஒரு மாட்டுவண்டியில் சிவாஜியும் சரோஜாதேவியும் ஜாலியாகப் பாடி வரும் காட்சி இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

படம் முடிந்து ஒன்பது மணிக்கு வெளியே வந்தபோது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டு இருந்தது. நல்ல இருட்டு. பஸ் கிஸ் எதுவும் வருகிற மாதிரி தெரியவில்லை. நான் குடை கொண்டு வந்திருந்தேன். எனவே, வழக்கம்போல நடராஜா சர்வீஸில் கிளம்பிவிட்டேன். இடியும் காற்றுமாகப் புரட்டியெடுத்துக்கொண்டு இருந்தது. பளீர் பளீரென்று மின்னல் வெட்டுக்கள். இருட்டாக இருந்தாலும், பழகிய ரோடு ஆதலால் வேகமாக நடையை எட்டிப் போடமுடிந்தது. முன்னே பின்னே ஒருத்தரும் இல்லை. நான் மட்டும் தனியனாக நடந்துகொண்டு இருந்தேன்.

கொஞ்ச தூரம் போனதுமே குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. சீக்கிரமாக வீடு போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று கால்களை எட்டிப் போட்டேன். எங்கோ குழந்தை சிணுங்குகிற சத்தம் கேட்டது. இந்த வேளையில், இந்த இருட்டில் குழந்தையா! அடுத்த ஒரு மின்னல் வெட்டில், சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில், இளம்பெண் ஒருத்தி கையில் குழந்தையுடன் நின்றிருப்பது தெரிந்தது. அருகில் போனேன். அந்தப் பெண்ணின் உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது.

"நீங்க சங்கீதமங்கலம் போகணுமா? நானும் அங்கேதான் போறேன். வாங்க, குடையிலேயே போயிடலாம்!" என்று அழைத்தேன்.

அவள் கொஞ்சம் தயங்கினாலும், சூழ்நிலை கருதி என்னோடு வரச் சம்மதித்தாள். அவளுக்குக் கிட்டத்தட்ட என் வயசுதான் இருக்கும். ஆனால், ஆண்களைவிடப் பெண்கள் முதிர்ச்சியாக, அதுவும் புடவையில் என்றால் கேட்கவே வேண்டாம். பெரியவர்களாகத் தெரிவார்களே! அவள் வெள்ளைக் கோடுகள் போட்ட கறுப்புப் புடவையில் அழகாக இருந்தாள். (அது சரி, அந்த வயசில் எனக்கு எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் தெரிந்தார்கள்!) அந்தப் பெண்ணின் சேலை, ஜாக்கெட் முழுவதும் மழையில் நனைந்து, உடம்போடு ஒட்டியிருந்தது. தலைமுடி ஈரத்தில் நனைந்து, முகத்தில் கேச இழைகள் படிந்திருந்தது கூட அழகாகத் தோன்றியது. குடைக்குள் எனக்கு மிக நெருக்கமாக அவள் நடந்தபோது, இனம்புரியாத உணர்வுகள் என்னுள் படபடத்தன. அவள் கையில் இருந்த குழந்தை மீது சாரல் அடிக்கக்கூடாது என்கிற அக்கறையில் நான் அவளோடு இன்னும் நெருங்கி நடக்க, அவள் அடுத்த ஆண் என்கிற கூச்சத்தோடு விலகி நடந்தாள்.

"எங்கே இந்த ராத்திரியில இங்கே வந்து மாட்டிக்கிட்டீங்க?" என்றேன், ஏதாவது பேசவேண்டுமே என்று.

"சினிமாவுக்கு நானும் என் வூட்டுக்காரரும் வந்தோம். நடுவுல அவருக்கு சோலி வந்துடுச்சி. 'நீ படம் பார்த்துட்டு வூட்டுக்குப் போ! நான் சிறுவாலை வரைக்கும் போய் ஒரு சோலிய முடிச்சுட்டு ராவிக்கா வூட்டுக்கு வந்துடறேன்'னு சொல்லிட்டுப் போயிட்டாரு. மழை வலுக்கறதுங்காட்டியும் வூட்டுக்குப் போயிடணும்னு, படம் முடியறதுக்கு மிந்தியே பொறப்டேன். இங்க வசமா வந்து மாட்டிக்கிட்டேன்" என்றாள்.

"பெரியவங்க பரவால்ல... சமாளிச்சுக்கலாம்! குழந்தைக்கு ஒண்ணரை வயசுதான் ஆவும்போலிருக்கு. அது இப்படி மழையில நனைஞ்சுதுன்னா என்னத்துக்காகுறது? குடையாச்சும் கொண்டு வந்திருக்கலாமில்லே?" என்றேன்.

"குடை இல்லியே! இருந்தா கொண்டு வந்திருப்போம்" என்றாள் பாவமாக. அவளுக்கும் அவள் கையிலிருந்த குழந்தைக்கும் சாரல் படாதவாறு குடை பிடித்தபடி நெருக்கமாக நடந்தபோது, அகஸ்மாத்தாக அவ்வப்போது அவள் மீது நான் உரச நேர்ந்தது. தவிர, அவள் வேகத்துக்கேற்ப நான் நடக்கும் வேகமும் குறைந்தது.

"நீங்க வாத்தியார் வூடா?" என்றாள். "ஆமா!" என்றேன். "ஐயர் வாத்தியார் மவன்தானே நீங்க?" என்றாள் மறுபடி. "ஆமா!" என்றேன். "உங்க அப்பா கிட்டதான் என் தம்பி படிக்குறான். மணின்னு பேரு" என்றாள்.

அவள் இப்படிச் சொன்னது, 'என்னிடம் ஏதாவது தப்புத்தண்டாவாக நடக்க முயற்சி செய்தால், மாட்டிக்கொள்வாய். நீ யாரு, என்னன்னு உன் ஜாதகமே எனக்குத் தெரியும்' என்று மறைமுகமாக எனக்கு எச்சரிக்கை விடுப்பது போல் இருந்தது.

அதன்பின் அதிகம் பேசாமல் நடந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்திருப்போம்... அடிக்கிற மழையில், எதிரே பலகீனமான டைனமோ வெளிச்சத்தோடு ஒரு சைக்கிள் வந்துகொண்டு இருந்தது.

அது வேறு யாருமில்லை; அவளின் கணவன்தான். நல்ல கிராமத்து தேகம். அவன் என்னைவிட நாலைந்து வயதுதான் பெரியவனாக இருப்பான். ஆனால், உடலுழைப்பால் கைகளும் கால்களும் முறுக்கேறியிருந்தன. கட்டுமஸ்தாக, பெரிய ஆள் போல இருந்தான்.

எங்கள் இரண்டு பேரையும் அத்தனை நெருக்கமாகப் பார்த்தவன் என்ன நினைப்பானோ என்று என் மனதில் ஒரு குறுகுறுப்பான உணர்வு ஓடியது. எல்லாம், நிறையக் கதைகள் படித்ததால் வந்த அதிகப்படியான கற்பனை! அவன் பார்க்கத்தான் பட்டிக்காட்டானாக இருந்தானே தவிர, பக்கா ஜென்டில்மேனாக இருந்தான்.

"தம்பி, ரொம்ப டாங்க்ஸ் தம்பி! அவசர ஜோலியா போயிட்டேன். பாவம் புள்ள, கையில குழந்தையோடு எங்கே மாட்டிக்கிச்சோ என்னமோன்னு பதறிப்போய் ஓடியாறேன்! காப்பாத்திக் கர சேத்துட்டீங்க!" என்றவன், அந்தப் பெண்ணிடம், "வா புள்ள! கேரியர்ல உக்காந்துக்க. வெரசா போயிரலாம்" என்றான்.

"நீங்களும் வாங்க தம்பி, முன்னாடி பார்ல உக்காருவீங்கள்ல?" என்றான்.

"இருக்கட்டுங்க! இந்த மழையில அவங்கள வெச்சு ஓட்டுறதே பெரிய காரியம். நீங்க போங்க, நான் வரேன். அது இருக்கட்டும், இவ்ளோ தூரம் இவங்களை நனையாம கூட்டி வந்தது வீணாப் போயிடும் போலிருக்கே. இந்த மழையில எப்படிப் போவீங்க?" என்றேன்.

"மழையப் பாத்தா முடியுங்களா? போய்த் துவட்டிக்க வேண்டியதுதான். ஈரம் பட்டா உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?" என்று சிரித்தான்.

"சரி, இந்தக் குடையை எடுத்துக்கிட்டுப் போங்க! நாளைக்கு வாங்கிக்கிறேன்" என்றேன்.

"இதெல்லாம் ரொம்ப அநியாயம் தம்பி! நீங்க நனைஞ்சு வருவீங்க, நாங்க பாட்டுல கண்டுக்காம போகணுமா? என்ன புள்ள, வாயில கொழுக்கட்டையா? தம்பிக்கு எடுத்துச் சொல்றது!" என்றான்.

இவ்வளவு நேரமும் அந்தப் பெண், குடையின் கீழ் பாதுகாப்பாக என்னை ஒட்டித்தான் நின்றுகொண்டு இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்களும் வாங்க! பார் கட்டைல உட்கார்ந்துக்குங்க. பயப்படாதீங்க. இவரு எட்டு ஆளை வெச்சுக்கூட ஓட்டுவாரு!" என்று சிரித்தாள்.

அவன் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு, தரையில் காலூன்றிக் கொள்ள, அவள் பத்திரமாக கேரியரில் உட்கார்ந்துகொண்டு, மடியில் குழந்தையைக் கிடத்திக்கொண்டாள். அதுவரை அவளுக்கு நான் குடை பிடித்துக்கொண்டு இருந்தேன்.

"குடையை இப்படி என்கிட்ட கொடுங்க. ம்... பார்ல உட்காருங்க, சொல்றேன்!" என்று வற்புறுத்தினான் அவன். உட்கார்ந்துகொண்டேன். பாரில் உட்கார்ந்து வருவது பெரிய சங்கடமாக இருந்தது எனக்கு.

அவனே இடக் கையில் குடையைப் பிடித்தபடி, வலக் கையால் ஹேண்டில்பாரைப் பிடித்து, சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

ஒரு வழியாக சங்கீதமங்கலம் வந்தது. ஏரியைக் கடந்து ஊருக்குள் நுழைகிற எல்லையிலேயே அவர்களின் குடிசை. அவளை இறக்கிவிட்டுவிட்டு, "நீ இரு புள்ள! நான் தம்பியைப் போய் அதும் வூட்டுல விட்டுட்டு வந்துடறேன்" என்றான்.

"அதெல்லாம் வேணாங்க. நான் நடந்தே போயிடுவேன்" என்றாலும் கேட்கவில்லை. "அட, நீங்க சும்மா இருங்க தம்பி. ரெண்டு மிதி மிதிச்சா உங்க வூடு! கேரியர்ல உட்காருங்க. சல்லுனு போயிரலாம். எவ்ள நேரம் ஆயிரப் போவுது!" என்று வலுக்கட்டாயமாக என்னை ஏற்றிக்கொண்டு சரசரவென்று கொண்டு வந்து என் வீட்டு வாசலில் விட்டுவிட்டு, சட்டென்று மழையிலேயே தொப்பலாக நனைந்தபடி சைக்கிளை ஓட்டிக்கொண்டு போய்விட்டான்.

படிப்புக்கும் பண்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை, வசதிக்கும் நாகரிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று எனக்கு உணர்த்திய சம்பவம் இது.

'மழையில நனைஞ்சா இந்த உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?' என்று கேட்டான். உண்மைதான், இரும்புதான் துருப்பிடிக்கும்; தங்கம் துருப்பிடிக்குமா என்ன?

இந்தச் சம்பவத்தைதான் என் டயரியில் எழுதி வைத்திருந்தேன். இத்தனை விலாவாரியாக அல்ல! சுருக்கமாக.

மறுநாள் டயரி எழுதுவதற்காக அதை எடுத்தபோது, அதில் என் அப்பாவின் கையெழுத்து தெரிந்தது.

பரபரப்பாகப் படித்தேன். குறிப்பிட்ட சம்பவத்தைப் படித்ததாகவும், என்னை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் எழுதியிருந்தார். 'உதவவேண்டும் என்கிற உன் உள்ளம் உயர்ந்தது; ஆனால், எல்லோரும் அந்தப் பெண்ணின் கணவன் போல் இருப்பார்கள் என்பது நிச்சயம் இல்லை. நீ ஒன்று செய்திருக்கலாம். பேசாமல் அந்தப் பெண்ணிடமே குடையைக் கொடுத்து, வசதியாக அவளை நடந்துவரச் சொல்லிவிட்டு, நீ தனியாக மழையில் நனைந்தே நடந்து வந்திருக்கலாம்' என்று எழுதியிருந்தார். 'ஆமாமில்லே..? இது ஏன் எனக்கு அப்போது தோணலே?' என்று நினைத்துக்கொண்டேன்.

மறுநாளிலிருந்து நான் டயரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

***
சிறந்த எண்ணங்கள் மூளையிலிருந்து பிறக்கின்றன. உயர்ந்த எண்ணங்களோ இதயத்திலிருந்து தோன்றுகின்றன.

15 comments:

Chitra said...

படிப்புக்கும் பண்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை, வசதிக்கும் நாகரிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று எனக்கு உணர்த்திய சம்பவம் இது.

'மழையில நனைஞ்சா இந்த உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?' என்று கேட்டான். உண்மைதான், இரும்புதான் துருப்பிடிக்கும்; தங்கம் துருப்பிடிக்குமா என்ன?


......Super outlook!

பத்மநாபன் said...

பருவ கால இயல்பான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்...

அப்பா பாராட்டினார்..நீங்கள் டைரி எழுதுவதை நிறுத்தி விட்டீர்கள்..இதுவும் இள்மையின் இயல்பே...

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல நடை பாராட்டுக்கள்

Rekha raghavan said...

உதவும் உள்ளம் உள்ள உங்களை காலம் உள்ளவும் நினைக்க வைத்த பதிவு. அருமை.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள்.

//'மழையில நனைஞ்சா இந்த உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?' என்று கேட்டான். உண்மைதான், இரும்புதான் துருப்பிடிக்கும்; தங்கம் துருப்பிடிக்குமா என்ன?// வெள்ளந்தியாக இருக்கும் அவர்கள் பாஷையும் நன்றாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

/மறுநாளிலிருந்து நான் டயரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்./
அடடா!இன்னும் எவ்ளோ சுவரஸ்யமான விஷயங்கள் கிடைத்திருக்கும்!!!

அரபுத்தமிழன் said...

சே, சான்ஸே இல்ல‌, சூப்பர்ணே,
படித்து முடிக்கும் வரையில் 'அமானுஷ்ய உணர்வோடு'
தங்களுடன் பயணித்தேன். கடைசியில் தங்கள் தந்தையின்
செல்லக்'குட்டு' என் தலையில் விழுந்த உணர்வு.
அறிவுரை அருமை.

விக்னேஷ்வரி said...

ஒரு வரிகூட பிசகாம, செம ரைட்டப்ங்க. ஒவ்வொரு வரி சுவாரசியம், கடைசி வரியிலும் இருந்தது.

vasan said...

அப்பா க‌மண்ட் தான் சூப்ப‌ர்.

CS. Mohan Kumar said...

அருமை. நேரில் பாக்கிற மாதிரி இருந்தது

நிஜ சம்பவம் என்றாலும் ஒரு சிறு கதைக்கான விஷயம் இதில் உள்ளது. இக்காலத்திற்கு ஏற்ப சற்று மாற்றி இதை கதையை எழுதலாம் சார்

கணேஷ் ராஜா said...

ஆர்ட் பிலிம் ஒன்றைப் பார்த்த அனுபவம் உண்டானது உங்களது இந்தப் பதிவைப் படித்தபோது! வாழ்த்துக்கள் சார்!

அன்புடன் மலிக்கா said...

மிக அழகான எழுத்துநடை..

கிருபாநந்தினி said...

ஒரு ஆர்ட் பிலிம் பாக்குற மாதிரி இருந்துதுங்க. கூடவே நீங்க கொடுத்திருந்த லின்க்ல போயி, அன்பளிப்பு படப் பாட்டையும் ரசிச்சேன். தூள்ங்ணா!

Sridhar Narayanan said...

//மறுநாளிலிருந்து நான் டயரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்.//

இதனால்தான் நான் டயரியே எழுதுவதில்லை :))

அருமையான பதிவு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட.. நல்லா இருக்கே!