ரம்மியமான ரமணீய நினைவுகள்!

ழுத்தாளர் ரமணீயன் மறைந்துவிட்டார். இந்த வார குமுதம் கேள்வி-பதில் பகுதி பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். 'அடடா!' என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அவருடன் சொல்லிக்கொள்ளும்படியாக எனக்கு அதிகம் தொடர்பு இல்லையென்றாலும், நான் சாவியில் சேர்ந்த புதிதில் அங்கே முக்கியப் பொறுப்பில் இருந்தவர் ரமணீயன்தான் என்கிற விதத்தில் பழக்கம் உண்டு.

அபர்ணா நாயுடு என்கிற புனைபெயரில் பிரபலமான திரு.சி.ஆர்.கண்ணன், திரு.ரமணீயன் மற்றும் இன்றைய தினமணி நாளேட்டின் ஆசிரியர் திரு.வைத்தியநாதன் ஆகியோர் அங்கே மும்மூர்த்திகளாக இருந்தார்கள்.

கண்ணன் பெரும்பாலும் கட்டுரைத் தொடர்கள், தொடர்கதைகள் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு மேட்டர்களைக் கவனித்துக் கொள்வார்; வைத்தியநாதன் சினிமா மேட்டர்களையும், அரண்மனை ரகசியம், அரசல் புரசல் என்பன போன்ற தலைப்புகளில் டெல்லி, தமிழகம் சார்ந்த அரசியல் மேட்டர்களையும் சேகரித்துத் தருவார். ரமணீயன், சாவி இதழ் கலகலப்பாக வரவேண்டும் என்பதிலும், சிறுகதை மற்றும் லேஅவுட் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி, வாரா வாரம் பத்திரிகையைக் கொண்டு வருவதில் ஈடுபடுவார். குமுதத்துக்கு எப்படி ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் ஆகிய மூவரோ, அது போல சாவிக்கு இவர்கள் மூவரும் என்று நான் எண்ணிக் கொள்வேன்.

சாவி சாருக்குமேகூட அப்படியொரு எண்ணம் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். காரணம், அவர் மற்ற பத்திரிகைகள் எதையும் தனக்குப் போட்டியாக நினைக்க மாட்டார். குமுதத்தை மட்டுமே போட்டியாக நினைப்பார். இத்தனைக்கும் அதன் சர்க்குலேஷனும் சாவி சர்க்குலேஷனும் மலையும் மடுவும் போல. இருந்தாலும், தன் பத்திரிகையின் சர்க்குலேஷனை என்றாவது ஒரு நாள் குமுதத்தை விஞ்சிக் காட்டிவிட வேண்டும் என்று ஒரு தீராத தாகம் அவருக்கு எப்போதும் இருந்தது.

வாரா வாரம் குமுதம் வந்ததுமே, அதை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு வரி விடாமல் படித்துவிடுவார் சாவி. எங்கள் அனைவரிடமும், "பார்த்தீங்களா, எப்படிப் பிரமாதப்படுத்தியிருக்கான் குமுதங்காரன்! அவனால பண்ண முடியும்போது உங்களால முடியாதா?" என்பார். "பாருங்க, தலைப்பை எவ்வளவு க்ரிஸ்ப்பா கொடுத்திருக்கான். தலைப்பைப் படிச்சதுமே அந்தக் கதையை, கட்டுரையை உடனே படிக்கணும்னு தோணுது இல்லையா, அங்க நிக்கறான் குமுதங்காரன்!" என்பார். குமுதத்தில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்துக்கான லேஅவுட் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதைப் பிரித்து எங்களிடம் காண்பித்து, "எவ்வளவு ரசனையோட பண்ணியிருக்கான் பாருங்க! இந்த மாதிரிதான் நம்ம சாவியைக் கொண்டு வரணும்னு நான் விரும்பறேன்" என்பார். குமுதத்தில் தலைப்பு எழுத்தை ஏதாவது புதுமையாக, வித்தியாசமாக எழுதியிருந்தாலும் அதை எங்கள் ஆர்ட்டிஸ்டிடம் காட்டி, "இந்த மாதிரி உன்னால எழுத முடியாதா?" என்பார். ஆனால், அந்த ஓவியரின் திறமையைக் குறைவாக எடை போடுகிற மாதிரி பேச மாட்டார். "இதைவிட உன்னால இன்னும் சிறப்பா, அழகா எழுத முடியும். கொஞ்சம் யோசிக்கணும். மூளையைக் கசக்கணும். அவ்வளவுதான்!" என்பார்.

சாவியின் கனவுகளுக்கெல்லாம் கை கொடுக்கும் வலது கரமாகத் திகழ்ந்தவர் ரமணீயன்தான். சாவி சாரைப் போலவே ரமணீயனுக்கும் குமுதப் பித்து அதிகம். அவரிடம் நான் பழக நேர்ந்தது அதிகபட்சம் ஓராண்டுக் காலம்தான். அதற்குள் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

'ரவிபிரகாஷ்' என்று எனக்குப் பெயர் சூட்டியவரே ரமணீயன்தான். அதற்கு முன்னால் நான் கல்கி, ஆனந்தவிகடன், தினமணிகதிர், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் எல்லாம் 'இரவிப்பிரகாஷ்' என்றே எழுதி வந்தேன். சாவியில் சேர்ந்த இரண்டு வாரங்களிலேயே சிறுகதை ஒன்றை எழுதித் தரும்படி கேட்டார் ரமணீயன். அப்படியே எழுதி, அவரிடம் பரிசீலனைக்குத் தந்துவிட்டு, அவரின் அபிப்ராயத்தை அறிய ஆவலோடு காத்திருந்தேன்.

இரண்டு நாள் கழித்து, என்னைக் கூப்பிட்டார். அவர் கையில் நான் எழுதிக் கொடுத்த கதை. "என்ன இது, நல்லாவே இல்லே!" என்றார், சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு. சட்டென்று மனம் சுணங்கிப்போனது. அடுத்த விநாடியே பளீரென்று சிரித்தவர், "அட, நான் உன் கதையைச் சொல்லலைப்பா! அது சூப்பரா இருக்கு. நான் நல்லால்லேன்னு சொன்னது நீ பேர் எழுதுற விதத்தை! ஸ்கூல் படிக்கும்போது உனக்கு உன் தமிழய்யாவை ரொம்பப் பிடிக்குமோ? என்ன இது, இ.. ர.. வி.. ப்.. பி.. ரகாஷ்னுட்டு! அதெல்லாம் வேணாம். வெறுமே ரவிபிரகாஷ்னு போடு போதும்! என்னைப் பாரு, இரமணீயன்னா போட்டுக்கறேன்?" என்றார்.

தொடர்ந்து அவரே, "எம்.ஜி.ஆர். தன் பெயரை எம்.ஜி.இராமச்சந்திரன்னு போட்டுக்கறாரே! அவரைவிட உங்க புகழ் உசந்துடுச்சான்னெல்லாம் கேக்கக்கூடாது! ரவிபிரகாஷ்னு போட்டுக்கோன்னா போட்டுக்கணும்!" என்று உரிமையோடு சொல்லிவிட்டு, அந்த வாரமே என் சிறுகதையைப் பிரசுரித்தார். எப்படித் தெரியுமா? கதைத் தலைப்பை மிகச் சிறியதாகவும், கதாசிரியர் பெயரைக் கதைத் தலைப்பு மாதிரி பெரியதாகவும் வைத்து லே அவுட் செய்யச் சொன்னார். எனக்கு அது புதுசாக இருந்தது. "என்ன சார் இது, இவ்ளோ பெரிசாவா கதாசிரியர் பெயரைப் போடுவாங்க?" என்றேன். "ஏன், என்ன தப்பு? போடக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?" என்றார். "இல்ல... சார் (சாவி) ஏதாவது கோவிச்சுக்க மாட்டாரா?" என்று கேட்டேன். "மாட்டேன்! பாராட்டுவார். நீ வேணா பாரு!" என்றவர், "எப்படியோ, உன்னால இந்த வாரம் எழுதின கதாசிரியர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். எல்லார் பேரும் பெரிசா கொட்டை எழுத்துல வரப்போகுதே!" என்று சிரித்தார்.

அந்தக் கதை 'அடிமைகள்'. ரமணீயன் சொன்னது போலவே சாவி சார் அந்த லே-அவுட்டைப் பாராட்டவே செய்தார்.

"உனக்கு எந்த ஓவியருடைய படம்னா ரொம்பப் பிடிக்கும்?" என்று கேட்டார் ரமணீயன். "மாயா" என்றேன். "சரி, அப்படின்னா இந்தக் கதையை நீயே நேர்ல அவர்கிட்ட கொண்டு போய்க் கொடுத்து, படம் போட்டு வாங்கிட்டு வா!" என்றார்.

சாவி வார இதழில் அதுவரை ஓவியர் மாயா படம் வரைந்ததில்லை. அந்த என் கதைக்கு வரைந்ததுதான் சாவியில் மாயா வரைந்த முதலும் கடைசியுமான படம்.

ஒருமுறை, லே அவுட் செய்யப்பட்ட இரண்டு பக்கப் படக் கதை ஒன்றை வைத்துப் படித்துக்கொண்டு இருந்தார் ரமணீயன். படங்கள்: ஓவியர் அரஸ். நான் எட்டிப் பார்த்ததும், "இந்தா! படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு?" என்று அதை என்னிடம் கொடுத்தார் ரமணீயன்.

வாங்கிப் படித்தேன். இரண்டு மூன்று கட்டங்கள் படித்ததுமே, அது படக் கதை இல்லை; சினிமா விமர்சனம் என்று புரிந்தது. மேலே படிக்காமல் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து, "சார்... என்ன சார் இது! சினிமா விமர்சனமா இப்படி..." என்று இனம்புரியாத ஒருவித பரபரப்பும், இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் சேர்ந்த கலவையாய்க் கேட்டேன். "ஏன் ஷாக் ஆகிறே? சினிமா விமர்சனத்தை இப்படிப் படக் கதையாகப் போடக் கூடாதா என்ன? விஷயம் வாசகர்களுக்குப் போய்ச் சேரணும். அவ்வள‌வுதானே! இப்ப உனக்கு ஏற்பட்ட இந்த உணர்வு, இதைப் படிக்கிற அத்தனை வாசகர்களுக்கும் ஏற்படும் இல்லையா, அதுதான் ஒரு பத்திரிகையோட சக்ஸஸ் ஃபார்முலா!" என்றார். படக் கதை போன்று விமர்சனம் வெளியான அந்தப் படம் 'பாடு நிலாவே'.

'சாவி' இதழ் ஒன்றில் புதுமையான ஒரு சிறுகதை எழுதியிருந்தார் ரமணீயன். கதையின் ஆரம்பத்தில் ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தார். 'இந்தக் கதையில் கே.ஆர்.விஜயா நடித்த சினிமா படங்களின் பெயர்கள் ஐம்பது இடம்பெற்றுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உண்மையில், இவற்றில் 49 தான் கே.ஆர்.விஜயா நடித்த படங்கள். மீதி ஒரு படம் கே.ஆர்.விஜயா நடித்தது அல்ல! அது என்ன படம் என்பதைச் சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு 100 ரூபாய்' என்பதே அந்த அறிவிப்பு.

அதே போல... வரி, வரி என்று அதிகம் இடம்பெறுகிற மாதிரியான வார்த்தைகளைக் கோத்து ஒரு சிறுகதை எழுதி, பின்பு அதில் இருந்த 'வரி'களையெல்லாம் நீக்கிவிட்டு, அதை 'வரி விலக்கு பெற்ற கதை' என்ற தலைப்பில் வெளியிட்டார். 'முற்றும்' என்ற வார்த்தை அதிகம் இடம்பெறுகிற மாதிரி ஒரு கதை எழுதி, பின்பு 'முற்றும்' என்ற வார்த்தையை நீக்கி அதைப் பிரசுரித்துவிட்டு, அதற்கு 'முற்றும் துறந்த கதை' என்று தலைப்புக் கொடுத்தார்.

இதெல்லாம்தான் என் அடி மனதில் பதிந்து, பின்னாளில் விகடனில் ஒரு சினிமா ஸ்பெஷலில் 250‍-க்கும் மேற்பட்ட சினிமா தலைப்புகளை வைத்து ஒரு சிறுகதை எழுதவும், 'ஏடாகூடக் கதைகள்' எழுதவும் என்னை ஊக்குவித்திருக்க வேண்டும் என்று, யோசித்துப் பார்க்கையில் இப்போது தோன்றுகிறது.

இயக்குநர் வசந்தும் (அப்போது அவர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குந‌ராக இருந்தார்) ரமணீயனும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி ஒன்றாகச் சுத்துவார்கள். 'கேளடி கண்மணி' படம் சம்பந்தமாக இருவரும் கதை டிஸ்கஸ் செய்துகொண்டு இருந்ததாக ஞாபகம். ரமணீயன் தொலைக்காட்சியில் நுழைய முயற்சி செய்துகொண்டு இருந்தார். இன்றைக்கு மெகா சீரியல், மெகா சீரியல் என்று ஒரே மெகா சீரியல் மேனியாவாக இருக்கிறதே... முதல் மெகா சீரியலுக்கு வித்திட்டவர் ரமணீயன்தான். ஆம்... அவரது கதை, வசனத்தில் உருவான 'விழுதுகள்'தான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் வெளியான (பொதிகை சேனல்) முதல் மெகா சீரியல்.

அவர் எப்போதும் டி.வியிலேயே கவனமாக இருக்கிறார், பத்திரிகையைக் கவனிப்பதே இல்லை என்று கோபம் கொண்டு, அவரை ஒரு நாள் டிஸ்மிஸ் செய்துவிட்டார் சாவி அவர்கள்.

நான் சாவியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குள்ளாக, ரமணீயன் விலகிவிட்டதில், இழப்பு எனக்குதான். அவர் இருந்திருந்தால், பத்திரிகை நுணுக்கங்களை இன்னும் நான் அதிகமாகக் கற்றிருக்க முடியும்.
அதன்பின், சாவியில் ஓரிரு ஆண்டுகளுக்கு திரு.கண்ணன் ராஜ்ஜியமாகிப் போனது. அவர் என்னை எப்போதும் தனக்குப் போட்டியாகவே நினைத்தார். (அது பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.)

சாவியிலிருந்து விலகிச் சென்ற பின்பு, ரமணீயன் ஒரு மாத நாவல் தொடங்கி நடத்தியதாக ஞாபகம். 'எ நாவல் டைம்' என்று பெயர். ஒருவேளை, அது பாக்கெட் நாவல் ஜி.அசோகனின் பத்திரிகையாகவும் இருக்கலாம். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நாவலின் முதல் இரண்டு பக்கங்களில் ஆசிரியரின் கடிதம் இடம் பெறும். நம்மோடு தமாஷாகப் பேசுவது போன்று அந்தக் கடிதம் படிக்கப் படிக்க அத்தனை ஜாலியாக இருக்கும். ரமணீயனின் அந்தக் கடிதத்தைப் படிப்பதற்காக‌வே நான் தொடர்ந்து சில மாதங்கள் வரை அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

ரமணீயன் சாவியிலிருந்து விலகிய பின்பு அவரை நான் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில், மனைவியோடு தீவுத் திடல் சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போயிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் அவரைப் பார்த்தேன். என் பணிகளைப் பற்றி அன்போடு விசாரித்தவர், "சாவி சார் ரொம்பவும் கோபப்படுவார். ஆனா, அதுல ஓர் அர்த்தம் இருக்கும்; நம் மீதான‌ அக்கறை இருக்கும். அதனால, அவர் கோபிச்சுக்கிட்டார்ங்கிறதுக்காக அவரை விட்டு வந்துடாதே! நான் வெளியே வந்ததுகூட‌ அவர் என்னைக் கோபிச்சுக்கிட்டார்ங்கிறதுக்காக இல்லை. நான் மேலே ஏற, எனக்கு அடுத்த படி தேவையா இருந்துது. அதான்!" என்று அறிவுரை சொல்லி, "வாரா வாரம் சாவி இதழ் பார்த்துக்கிட்டு வரேன். நல்லா பண்றே. இங்கே சாவி சார் கிட்டேதான் நீ நிறையக் கத்துக்கலாம். நிறையச் சுதந்திரம் கொடுப்பார். உற்சாகப்படுத்துவார். அதைப் பயன்படுத்திக்கிட்டு முன்னேர்றது உன் சமர்த்து!" என்று சொல்லி விடைபெற்றார்.

அடுத்த முறை, அவரை நுங்கம்பாக்கத்தில் இருந்த (வடக்கு சன்னதி தெருவோ, வடக்கு தேரடி தெருவோ... ஞாபகமில்லை.) அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தேன். அப்போது சாவி சார் மீது கோபித்துக்கொண்டு, வேறு பத்திரிகையில் ஏதேனும் வேலை கிடைக்குமா என்று தேடும் ஒரு முயற்சியாகவே அவரை நான் சென்று சந்தித்தேன். அப்போதும், 'உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்... கோபத்தைக் காரணம் காட்டி சாவி சாரை விட்டுப் பிரியாதேனு! பத்திரிகை சம்பந்தமா அவர் கிட்டே உன்னால கத்துக்க முடியாதது, வேற எங்கேயும் கத்துக்க முடியாது. பத்திரிகைத் துறையில் அவர் ஒரு பல்கலைக் கழகம்' என்று எனக்கு ஏகமாக புத்தி சொல்லி அனுப்பிவிட்டார்.

அந்த நல்ல மனித‌ரோடு அதிகம் பழகக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு.

(ஆனந்த விகடனில் நாலைந்து சிறுகதைகள் எழுதியுள்ளார் திரு.ரமணீயன். அவற்றில் ஒன்றை, அவரது நினைவாக, எனது 'உங்கள் ரசிகன்' வலைப்பூவில் விரைவில் பதிவிடுகிறேன்.)

***
சிலரின் அருமை அவர்கள் நம்மோடு இருக்கும்போது தெரியும்; சிலரின் அருமை, பிரியும்போதுதான் தெரிகிறது!

7 comments:

Chitra said...

Thats a sad news. May his soul rest in peace.

SRK said...

ரமணீயன் அவர்களை என்னால் மறக்க முடியாது. ஏனெனில் பள்ளி நாட்களிலேயே கதைகளை கிறுக்கிக் கொண்டிருந்தாலும் யாரோ பரிசளித்த ரமணீயனின் கதை எழுதுவது எப்படி என்ற ஒல்லியான ஒரு புத்தகத்தைப் படித்த பிறகுதான் தினம் ஒரு சிறுகதை எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து பத்திரிகைகளில் பிரசுரமாக ஆரம்பித்தன. முதல் கதை சாவியில்தான்!

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

அன்புடன் அருணா said...

/சிலரின் அருமை அவர்கள் நம்மோடு இருக்கும்போது தெரியும்; சிலரின் அருமை, பிரியும்போதுதான் தெரிகிறது!/
100 % உண்மை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கும் ரமணீயன் கதைகள் படித்த ஞாபகம்!

twitter.com/sridar57#

கிருபாநந்தினி said...

வாழ்த்துக்காகக் காத்திராமல் உங்களோடு பழகிய மற்ற எழுத்தாளர்கள் பற்றியும் எழுதுங்கள் என்று உங்களின் பி.கே.பி. பற்றிய பதிவில் நகைச்சுவைக்காகக் குறிப்பிட்டிருந்தேன். அது இப்படி ஒரு நல்ல எழுத்தாளரின் மறைவையொட்டிய பதிவாக அமையும் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. வருந்துகிறேன் மறைந்துவிட்ட அந்த எழுத்தாளருக்காக! அன்னாருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி!

பத்மநாபன் said...

ரமணியன் பற்றிய செய்திகளோடு..பத்திரிக்கை துறையில் உங்களுக்கு அவர் செய்த உதவிகளை விடாமல் பகிர்ந்தது சிறப்பு..

குமுதத்தை வைத்து சாவி அவர்கள் நயமாக வேலை வாங்கிய விதமும் சிறப்பு

கணேஷ் ராஜா said...

மன்னிக்கவும் சார்! புத்தகங்கள் அதிகம் வாசித்தறியாத எனக்கு ரமணீயன் என்றொரு எழுத்தாளர் இருந்ததே தெரியாது. தங்கள் பதிவைப் படித்த பின்பு, அவரது பெருமைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவசியம் அவரது கதை ஒன்றைப் பதிவிடுங்கள்.