நீங்கள் எப்படிப்பட்டவர்?

ஜோசியம், ராசிபலன், கைரேகை, நியூமராலஜி, நேமாலஜி, வாஸ்து, ராகு காலம், தெற்கு சூலை, வடக்கு சூலை போன்ற எதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதேபோல், ‘இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் எப்படி என்று சொல்கிறோம்’ என்று மார்க் போட்டுக் கணிக்கிற முறையும் எனக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கும். என்றாலும், அவற்றை ஒரு நகைச்சுவைக் கட்டுரை படிக்கிற ஆர்வத்தோடு நான் படித்து ரசிப்பதுண்டு.

அப்படிச் சமீபத்தில் ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் பிறந்த நாள் பொதுப் பலன்கள் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். என்ன ஆச்சர்யம்..! அதில், என் பிறந்த நாளுக்குரிய பலன்கள் (ஏப்ரல் 13) எனக்குக் கச்சிதமாகப் பொருந்தின. (அதற்காக, ஜோசியம் இத்யாதிகளில் நம்பிக்கை வைக்கத் தொடங்கிவிட்டேன் என்று அர்த்தமல்ல!)

அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் பிறந்த நாளுக்குரிய பலன்கள் பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தினால் ஆச்சர்யப்படுங்கள்; மற்றபடி, ராசி பலன் வகையறாக்களை நம்பத் தொடங்கிவிடாதீர்கள்!

உங்கள் பிறந்த நாளும், அதற்குரிய பலன்களும்..!

ஜனவரி 1 முதல் 9 வரை; ஏப்ரல் 1 முதல் 3 வரை; ஜூன் 15 முதல் 20 வரை; ஜூலை 10 முதல் 15 வரை; செப்டம்பர் 28 முதல் 30 வரை; டிசம்பர் 1 முதல் 16 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பறவை.

ஜனவரி 10 முதல் 24 வரை; மார்ச் 16 முதல் 23 வரை; ஏப்ரல் 15 முதல் 26 வரை; மே 1 முதல் 13 வரை; ஜூன் 1 முதல் 3 வரை; ஜூலை 1 முதல் 9 வ்ரை; ஆகஸ்ட் 16 முதல் 25 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - நத்தை.

ஜனவரி 25 முதல் 31 வரை; மார்ச் 13 முதல் 15 வரை; மே 22 முதல் 31 வரை; நவம்பர் 1 முதல் 16 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - கரப்பான் பூச்சி.

பிப்ரவரி 1 முதல் 5 வரை; மார்ச் 24 முதல் 31 வரை; ஜூன் 25 முதல் 30 வரை; ஜூலை 27 முதல் 31 வரை; செப்டம்பர் 15 முதல் 27 வரை; நவம்பர் 17 முதல் 30 வரை... இந்தத் தேதியில் பிறந்தவர்களின் சின்னம் - வௌவால்.

பிப்ரவரி 6 முதல் 14 வரை; மே 14 முதல் 21 வ்ரை; ஜூலை 16 முதல் 26 வரை; செப்டம்பர் 1 முதல் 14 வரை; டிசம்பர் 26 முதல் 31 வரை... இந்தத் தேதியில் பிறந்தவர்களின் சின்னம் - தவளை.

பிப்ரவரி 15 முதல் 21 வரை; ஏப்ரல் 27 முதல் 30 வரை; ஜூன் 4 முதல் 14 வரை; ஆகஸ்ட் 26 முதல் 31 வரை; அக்டோபர் 16 முதல் 27 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பல்லி.

பிப்ரவரி 22 முதல் 29 வரை; ஏப்ரல் 4 முதல் 14 வரை; அக்டோபர் 28 முதல் 31 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - பாம்பு.

மார்ச் 1 முதல் 12 வரை; ஜூன் 21 முதல் 24 வரை; ஆகஸ்ட் 1 முதல் 15 வரை; அக்டோபர் 1 முதல் 15 வரை; டிசம்பர் 17 முதல் 25 வரை... இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் - வண்ணத்துப்பூச்சி.

இனி பலன்கள்:

பறவை: மிகவும் இனிமையானவர்; விசுவாசமானவர்; நட்புக்கு மரியாதை தருபவர்; தொழிலில் உண்மையானவர்; எளிமையானவர்; எதையும் லேசாக எடுத்துக் கொள்பவர்; குறைந்த அளவு நட்பு வட்டமே உங்களுக்கு இருக்கும். அவர்களும் மிகவும் பண்பாளர்களாகவே இருப்பார்கள்.

நத்தை: கொஞ்சம் குறும்புக்காரர் நீங்கள். அந்தக் குறும்புத்தனமே மற்றவர்களைக் கவரும். ஜாலியான பேர்வழி. உங்கள் தோழமையை மற்றவர்கள் விரும்புவார்கள். ஆனாலும், சின்ன விஷயத்துக்கெல்லாம் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுவது உங்களிடம் உள்ள சின்ன குறை. மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டியிருக்கும். இல்லையேல், கடவுள்தான் அவர்களை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

கரப்பான் பூச்சி: அமைதியை விரும்புகிறவர் நீங்கள். விட்டுக்கொடுத்தாவது சண்டை, சச்சரவைத் தவிர்க்கவே விரும்புவீர்கள். தலைமைக்குச் சரியான நபர் நீங்கள். மற்றவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வந்து, வேலை வாங்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் அலைவரிசையோடு ஒத்துப் போகிறவர்களுடன் நீங்கள் உண்மையான நட்போடு இருப்பீர்கள். மற்றவர்களுடன் மனதளவில் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

வௌவால்: மிக மிக நேசத்துக்குரியவர் நீங்கள். கூச்ச சுபாவம் நிரம்பியவர். உங்களின் அபிமானம் சின்ன நாய்க்குட்டி, கோழிக்குஞ்சு... ஏன், ஒரு சின்ன பூச்சியின்மீது கூட அழுத்தமாக விழும். பொதுவாக நீங்கள் அமைதியானவர்தான்; ஆனால், சரியான காரணம் இருந்தால் எரிமலையாக வெடித்துச் சிதறுவீர்கள். நாகரிகமாக இருக்க விரும்புவீர்கள். அடிப்படையில் மற்றவர்களோடு நன்றாகக் கலந்து பழகுவீர்கள் என்றாலும், புதியவர்களுடன் நீங்களாக அதிகம் பேச மாட்டீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள்.

பல்லி: எதையும் கச்சிதமாகச் செய்யக்கூடியவர். உள்ளத் தூய்மை உள்ளவர். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயமே உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் பரவியிருக்கும். உங்களுக்குத் துன்பம் விளைவித்தவர்களைப் பழி வாங்க நினைக்க மாட்டீர்கள். ஒருவரின் முதுகுக்குப் பின்னால் புறங்கூற மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் மதிப்பதால் அவர்கள் உங்களைப் பெரிதும் நேசிக்கிறார்கள். பெருந்தன்மையானவர். பிறரை அவரின் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்பவர்.

தவளை: வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் உடையவர் நீங்கள். சுற்றிலும் என்ன நடந்தாலும், அதனால் துளியும் பாதிக்கப்படாதவர். உண்மையில், நீங்கள் செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சியை விதைத்துக்கொண்டே செல்கிறீர்கள். நண்பர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் கேட்காமலேயே உதவுகிறவர் நீங்கள். தன்னைப் பற்றியே உயர்வாக நினைத்துக் கொள்பவர்களை வெறுப்பீர்கள். அவர்களிடமிருந்து விலகியிருக்க விரும்புவீர்கள். உங்கள் வேலையில் ஒழுங்காகவும், பொறுப்பாகவும் இருப்பீர்கள். எந்தப் பிரச்னையும் உங்களை அத்தனை சுலபத்தில் அயர்ச்சியில் ஆழ்த்திவிடாது.

பாம்பு: புதிரானவர் நீங்கள். எப்போது இனிமையாகப் பழகுவீர்கள், எப்போது எரிந்து விழுவீர்கள் என்று எதிராளியால் கணிக்கவே முடியாது. எத்தகைய நெருக்கடியையும் எளிதாகக் கையாளத் தெரிந்தவர். எந்தச் சிக்கலான சூழ்நிலையையும் பதற்றமோ, கோபமோ இல்லாமல் சமாளிக்கத் தெரிந்தவர். எதிலும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கேற்பவே எதுவும் நடக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். அப்படி நடக்காமல் போனால், அது உங்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அதனால், சில சமயம் சில நட்புகளை நீங்கள் இழக்க வேண்டி வரலாம். பொதுவாக, நீங்கள் மற்றவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவே விரும்புவீர்கள். அப்படிச் செய்ய முடியாமல் போனால், அதற்காக அலட்டிக்கொள்ள மாட்டீர்கள்.\

வண்ணத்துப்பூச்சி: பொறுமை அற்றவர்; டென்ஷன் பார்ட்டி! உங்களுக்கு எதுவும் உடனடியாக நடந்துவிட வேண்டும். மனதளவில் நீங்கள் குழந்தை போன்றவர்; மிக எளிமையானவர். உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். சர்வ ஜாக்கிரதைப் பேர்வழி. ஏதாவது சர்ச்சையில் உங்கள் பெயர் அடிபட்டால், பதற்றமாகிவிடுவீர்கள். எனவே, எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் எப்போதும் உஷாராக இருப்பீர்கள். ஏதாவது ஏடாகூடமாக நடக்கப்போகிறது என்றால், உங்களின் ஆறாவது அறிவு உங்களை எச்சரித்து, அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிவிடும். பணத்தில் கொஞ்சம் குறியானவர்தான் நீங்கள்.

***
மூட நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது!

9 comments:

பரிசல்காரன் said...

அட! ஆமால்ல...

(ஒரு சின்ன சந்தேகம்.. இந்த ‘வரை’ ’முடிய’ இரண்டுக்குமான வேறுபாடு என்ன?

உதாரணமா.... மே 13 வரைன்னா, மே 12 முடியன்னு அர்த்தம்னு நெனைக்கறேன்.. அடுத்ததுல மே 14 முதல்ன்னு இருக்கு. அப்ப மே 13க்கு ராசிபலன் இல்லையா?

:-)

அப்படிப் பார்த்தா மே

Singa said...

I have checked for myself and my wife and my friend. It looks entirely different and inappropriate.... which strengthening my views on astrology.

புதுகைத் தென்றல் said...

நீங்க சொல்லியிருப்பது சரிதான் (பறவை) ஆனா எதையும் நான் லேசா எடுத்துக்க மாட்டேன். அது மட்டும்தான் மாற்றம். உள்ளே புகுந்து உண்டு இல்லைன்னு பார்ப்பது வழக்கம். :)) (நல்லவங்களுக்கு நல்லவ கெட்டவங்களுக்கு பத்ரகாளின்னும் வெச்சுக்கலாம்)

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

எல்லாம் ச‌ரி நீங்க‌ மூட‌ ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ரா இல்லியா

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பார்த்தேன்.
என் கருத்துக்கு ஒத்துப் போய் வந்தது,
பலன்!

கணேஷ் ராஜா said...

தமாஷுக்காகத்தான் என்றாலும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இது போன்ற பதிவுகளை இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

mrknaughty said...
This comment has been removed by a blog administrator.
கணேஷ் ராஜா said...

என்ன சார், ரொம்ப நாளா வலைப்பூ பக்கம் ஆளையே காணோம்? வேலை பளு அதிகமோ? வாரத்துக்கு ஒரு தடவையாவது வந்து ஏதாச்சும் கிறுக்கிட்டுப் போங்க சார்! அதிகம் வேணாம்... ஒரு ரெண்டு பாராவாச்சும் எழுதலாமில்லே?

ஆர்.ராமமூர்த்தி said...

என்ன ஸார்..டெய்லி வந்துட்டு,வந்துட்டு ஏமாந்து போறேன். புதுசா எதாவது போடுங்க, முதல்ல...

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/