ஜெயிக்கப்போவது யாரு?

‘ரசிகன்’ தொடருக்கு ஒரு ரசிகனாக நான் அறிவித்திருந்த போட்டிக்கு வந்திருந்த பின்னூட்ட பதில்களை எல்லாம் இதோ, பதிவிட்டுவிட்டேன். (இனி வரும் பதில்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட மாட்டாது.) இவற்றிலிருந்து சரியான பதில்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எழுதியவர்களுக்குரிய புத்தகங்களை அனுப்புவது ஒன்றே இனி என் பணி!

நான் என் போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டிருந்ததுபோல் ஒருவரே தங்களின் பதில்களை இரண்டு, மூன்று பின்னூட்டங்களின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் குறைந்த எண்ணிக்கையில் சரியான விடையைக் கொண்டிருக்கும் பின்னூட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுத்துப் புத்தகம் அனுப்புவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் போட்டிக்கான வலைப் பதிவைப் படித்துவிட்டு, ‘ரசிகன்’ தொடரின் இயக்குநர் மணிவண்ணன் மிகுந்த சந்தோஷமும் உற்சாகமுமாக எனக்கு போன் செய்திருந்தார். அந்தப் பதிவில், ‘ஒருவேளை மேற்படி நிகழ்ச்சி அடுத்த வாரம் தள்ளிப் போனாலும், பின்னூட்ட பதில்களுக்கான இறுதித் தேதி மாற்றியமைக்கப்பட மாட்டாது’ என்கிற வரியைக் குறிப்பிட்டுவிட்டு, “சார், உண்மையிலேயே அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 7-ம் தேதி ஞாயிறன்று காலையில் மணியம்செல்வன் ஓவியங்கள் தொடர்பான நிகழ்ச்சி இடம்பெறும். இந்தத் தகவலை முடிந்தால் உங்கள் வலைப்பூ நேயர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார்.

குறிப்பிட்ட இந்த ‘ரசிகன்’ நிகழ்ச்சி பற்றி தினத்தந்தி நாளேட்டிலும், வேறொரு வார இதழிலும் பெரிய அளவில் வெளியாகவிருப்பதாலேயே இந்தத் தேதி மாற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, போட்டிக்கான விடைகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் ‘என் டயரி’ வலைப்பூ நேயர்களைத் தவிர்க்க முடியாமல் மேலும் ஒரு வாரம் காத்திருக்க வைக்க வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரியான விடைகள் (நான்கு படங்களுக்குமான பாடல்கள்) எனக்குத் தெரியும் என்றாலும், அவற்றை இங்கே சொல்லிப் பரிசு பெற்றோர் விவரத்தை வெளியிடுவது முறையாகாது. அது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் குலைத்துவிடக்கூடும் என்பதால், பரிசு விவரப் பதிவை நானும் அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளி வைக்கிறேன்.

எனினும், ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். பின்னூட்டமாக வந்த பதில்களில் பெரும்பாலானவை சரியான விடைகளைக் கொண்டிருந்தன. ஒருவர் நான்கு விடைகள் எழுதியிருந்தால், அவற்றில் நிச்சயம் ஒரு விடையாவது சரியாகவே இருப்பதைக் கண்டேன். எனவே, அடுத்த வாரம் வரை காத்திருக்காமல், ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே உடனடியாக தங்கள் அஞ்சல் முகவரிகளை (பின்கோடு உள்பட முழுமையாக) என் இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால், மேற்படி நிகழ்ச்சி ஒளிபரப்பான கையோடு புத்தகப் பரிசுகளை அனுப்பி வைக்க எனக்கு உதவியாக இருக்கும்.

போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஓரிருவர் மட்டும் தவறான விடைகளைத் தந்திருப்பதால், அவர்கள் புத்தகப் பரிசு பெறாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனினும், சோர்ந்துவிட வேண்டாம். முன்பே சொன்னதுபோல், இந்த ஆண்டு முழுக்கவே அவ்வப்போது நான் இப்படியான போட்டிகளை அறிவித்துப் புத்தகப் பரிசளிக்க இருக்கிறேன்.

மற்றபடி ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெற்றி பெறப் போகிறவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

ரண்டு செய்திகள்:

1. ‘புதுமொழி 500’ புத்தகம் அட்டை உள்பட அனைத்தும் அச்சாகி, பைண்டிங் நிலையில் உள்ளது. இத்தனை நேரம் தயாராகி இருக்க வேண்டும். எனினும், வேறு சில வேலைகள், புத்தகத் தயாரிப்புகள் (உதாரணமாக, துணை முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிப் பத்திரிகையாளர் சோலை எழுதிய புத்தகம்) காரணமாக, இந்த பைண்டிங் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மற்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அநேகமாக அடுத்த வாரம் ‘புதுமொழி 500’ புத்தகம் தயாராகிவிடும். தயாரானதும்தான், ஆனந்த விகடன் அறிவிப்புகள் மூலமாக உங்களுக்கே தெரிய வருமே! முன்பே சொன்னபடி, மேற்படி புத்தகம் கைக்கு வந்ததும், உரியவர்களுக்கு அவற்றை உடனடியாக அனுப்பி வைக்கிறேன்.

2. நான் தற்சமயம் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இல்லை. (விகடனில் பலராலும் விரும்பி ரசிக்கப்படும் ‘பொக்கிஷம்’ பகுதியை மட்டும் வழக்கம்போல் தொகுத்துத் தருகிறேன்.) அதற்குப் பதிலாக ‘சக்தி விகடன்’ ஆன்மிகப் பத்திரிகைப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கடந்த சில நாட்களாகவே ஒரு மாற்றத்தை என் மனம் மானசீகமாகத் தேடிக்கொண்டு இருந்தது. அதற்கெனப் பிரத்யேகமாக நான் வேண்டிக்கொள்ளாதபோதும், மகாஸ்ரீ அன்னை அந்த மாற்றத்தை நான் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே சிறப்பாக எனக்குத் தேடித் தந்துவிட்டார் என்றே கருதுகிறேன்.

***

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!

18 comments:

Ananya Mahadevan said...

புதிய பொறுப்பேற்றமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

Chitra said...

சக்தி விகடன் பொறுப்பு ஏற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள்.
விகடன் "பொக்கிஷம்" தொகுப்பில் உங்கள் பங்கு நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சார்! உங்களின் வலைப்பூ இப்போது தான் படிக்கக்கிடைத்தது.(போட்டின்னதும் தான் கண்ணுல படுதோ?) எப்போதும் விகடன் குழும நூல்களில் (ஆனந்த,அவள் விகடன் வாசகி) ஒரு மயக்கம் எனக்குண்டு.அதுவும் விகடன் பொறுப்பாசிரியர் அவர்களின் வலைப்பூ என்று அறிந்ததும் தங்களின் அனைத்துப்பதிவுகளையும் (இரண்டு வலைப்பதிவிலும்) படித்து முடித்த போது விகடனின் பெரிய புத்தகத்தைப்படித்த சுவாரசியமும் தங்களின் அனுபவங்களை அறிந்து கொண்ட மகிழ்ச்சியும் கிடைத்தது.நன்றி.தங்களின் துணைவியார் பூரண் நலம் பெற்றிருப்பார் என நம்புகிறேன்.நன்றி!

ஜீவன்பென்னி said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Radha said...

நீ ஒரு பிராமண கிரிமினல். நீ செய்த வினைக்கு கட்டாயம் எதிர் வினை உண்டு.

ungalrasigan.blogspot.com said...

அநன்யா மஹாதேவன், சித்ரா, க.நா.சாந்தி லெட்சுமணன், ஜீவன்பென்னி ஆகியோரின் இதயங்கனிந்த வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ungalrasigan.blogspot.com said...

ராதா என்பவரிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வந்தது. கூடவே சில இந்தி வார்த்தைகளும் இருந்தன. அவற்றின் பொருள் எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஆபாசமான வார்த்தைகளாக இருக்குமோ என்கிற யூகத்தில் தமிழ் வரிகளை மட்டும் எடுத்து இங்கே பதிவிட்டுள்ளேன். அனானிமஸ் பின்னூட்டம்தான். ரிஜெக்ட் செய்திருக்கலாம். ஆனால், மற்றவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே என்றுதான் இதை இங்கே பதிவிட்டிருக்கிறேன். ராதா என்கிற பெயரில் ஒளிந்துகொண்டுள்ள அவர் யார், என் மேல் அவருக்கு அப்படியென்ன கோபம் என்று புரியவில்லை. கொஞ்சம்கூட யூகிக்க முடியவில்லை. அல்லது, அவருக்கு இது ஒரு விளையாட்டான பொழுதுபோக்கா? பின்னூட்ட வரிகளைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இது யாருக்கோ போட நினைத்துத் தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்ட பின்னூட்டமா என்றும் புரியவில்லை. சந்தோஷமாக ஒரு காரியத்தைச் செய்ய நினைக்கும் வேளையில் இப்படி ஒரு கடுமையான பின்னூட்டம் வருவது வேதனை அளிக்கிறது. யாருக்காவது என் மேல் ஏதேனும் கோபம் இருந்தால், அதை நேரடியாகவே சொல்லிவிடலாமே! புனைபெயரில் வசை பாடவேண்டிய அவசியம் இல்லையே!

ரிஷபன் said...

சக்தி விகடன் பொறுப்பிற்கு நல்வாழ்த்துகள்.
அனானிமஸ் கருத்துகளுக்கு பதில் அவசியமில்லை.. அந்த அளவு மெசூரிட்டி இல்லாமல் வரவில்லை உங்கள் வலைத்தளம் படிப்பவர்கள்.
ஜாதி குறித்தே இன்னமும் ஏசிக் கொண்டிருப்பவர்கள்தான் ஜாதிகளை ஒழிக்கப் போகிறவர்கள்! இவர்கள் மன நலம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கிறது. ‘இவர்கள் செய்வது இன்னதென்று அறிந்திருக்கவில்லை.. தேவனே இவர்களை மன்னியும்.!’

pudugaithendral said...

anonymous தொல்லைகள் எங்களுக்கும் இருந்ததுண்டு. கவலைப்படாதீங்க. புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள்

Anuradha Ramanan said...

அன்புள்ள‌ ர‌வி,
முத‌லில் என் வாழ்த்துக்களைப் பிடியுங்க‌ள். ச‌க்தி த‌ரும் மாற்றம் என்றும் ஏற்றமே தரும்.

அன்புட‌ன் அனுராதா ர‌ம‌ணன்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

தங்களுக்கு நேர்ந்ததாவது பின்னூட்ட வடிவில்.அடுத்தவருக்குத் தெரியாமல் நீக்கிவிட்டுப்போகும் வசதி உண்டு.அந்தமானில் தமிழ் நிகழ்ச்சியில் நேரடித்தொலைபேசி நிகழ்ச்சியில் ஹிந்தி அறியாத நிகழ்ச்சிப்பொறுப்பாளர் பதில் சொல்லிக்கொண்டிருக்க ஏதோ அவர் மீதுள்ள கோபத்தில் நன்றாகப்பேசிக்கொண்டிருந்த தமிழறிந்த வேற்றுமொழிக்காரர் ஒருவர் ஹிந்தியில் திட்ட ஆரம்பிக்க நாங்கள் சுதாரித்து தொடர்பை கத்தரிப்பதற்குள் இரண்டு,மூன்று வார்த்தைகள் காற்றில் போய்விட்டது.வானொலி நிர்வாகம் த்மிழில் நேரடித்தொலைபேசி நிகழ்ச்சியைத் தூக்கிவிட்டு அந்த நிகழ்ச்சிப்பொறுப்பாளர் போனதும் எங்களிடம் செய்யச்சொல்லியுள்ளார்கள்.ஆனால் ஒலிப்பதிவு செய்து பின் ஒலிபரப்ப அனுமதித்துள்ளனர்.உங்களின் இந்த அனுபவம் எனக்கு அந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திவிட்டது.விமர்சனம் அதிகரிக்க,அதிகரிக்க ரொம்பப்பெரியாளாக (ஏற்கனவே பெரிய ஆள்) ஆகிக்கொண்டிருக்கிறீர்கள்.

பத்மநாபன் said...

இது போன்ற போட்டிகள் , உண்மையிலேயே உற்சாகம் கொடுக்கிறது. சக்தி விகடனிலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
( நீங்கள் மாற்றம் விரும்பி செல்வதாகவே இருந்தாலும், தாய் விகடனிலும் ( ஆ. வி ) இல்லையே என்பது சின்ன 'கருக்' .ஒருவர் எவ்வளவு பணி தான் செய்வது .. பொக்கிஷமாக இருக்கிறீர்கள் என்பது ஜன ரஞ்சக விரும்பிகளுக்கு ஆறுதல்.

Rekha raghavan said...

சக்தி விகடனில் பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துகள். உங்கள் பங்களிப்பில் மேலும் பல புதிய பகுதிகளை எதிர்பார்க்கிறேன்.

ரேகா ராகவன்

கிருபாநந்தினி said...

புதுமொழி 500 புத்தகம் அனுப்புவதாகச் சொன்னீர்களே, அது என்ன ஆயிற்று என்று நானே கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்களே விளக்கம் அளித்துவிட்டீர்கள். நன்றி! ரசிகன் போட்டியிலும் எனக்கு இரண்டு புத்தகங்கள் பரிசாகக் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. சந்தோஷமாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

சக்தி விகடனில் புதிய பொறுப்பு ஏற்றமைக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

Anonymous said...

சக்தி விகடன் பொறுப்பு ஏற்றது அறிந்து மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்.
உங்கள் 1967 வருஷ பொக்கிஷத்தின் தொகுப்பைப் பார்க்கக் காத்திருக்கிறேன். அந்த வருஷத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது.
-பி.எஸ்.ஆர்.

Kalyani said...

Of all the vikatan issues, Sakthi vikatan is my favorite. In particular, I love the kelvi-badhil part by Seshadrinatha Sasthrigal. His answers are so clear and simple, and help us separate the most common misconceptions from what the religion actually says. I am glad that you are going to be working for Sakthi vikatan and hope to see many new articles in there. Good luck with everything.

பின்னோக்கி said...

போன வார ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் உங்கள் பெயர் இல்லாததை, இன்று காலை கவனித்தேன். உங்களிடம் கேட்க நினைத்தேன். இன்று தெரிந்து கொண்டேன்.

உங்கள் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.