ஸாரி... ஸாரி... ஸாரி..!

கந்தை கூடாது; ஆணவம் கூடாது. இவை இரண்டும் ஆளை அழிக்கும் கருவிகள். தெரியும். எனக்கு அகந்தையோ, ஆணவமோ இருக்கிறதா என்று அவ்வப்போது என் செயல்களை நானே அலசிப் பார்ப்பது உண்டு. எங்கேனும் துளி அகந்தை இருப்பதாகத் தோன்றினாலும், உடனே அதை அகற்றுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடுவேன்.

சாவி வார இதழில், சாவி சாரின் நேரடிப் பார்வையின்கீழ் அந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக சுமார் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிவிட்டு விகடனில் வந்து சேர்ந்தபோது, சேர்மன் எஸ்.பாலசுப்பிரமணியன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: “ஒரு பத்திரிகையில் எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்து, கிட்டத்தட்ட தனி ராஜாவாகவே இத்தனை வருட காலம் செயல்பட்டு வந்திருக்கும் உங்களால் இங்குள்ள சீனியர்களோடு அட்ஜஸ்ட் செய்து போக முடியுமா? ஈகோ, தாழ்வு மனப்பான்மை போன்றவை உங்கள் வேலைக்கு இடைஞ்சல் செய்யாதா?”

“காரில் ஒரு பிரமுகர் பயணிக்கிறார்; எதிரே வருபவர்கள் சல்யூட் அடிக்கிறார்கள் என்றால், அந்த மரியாதை அந்தப் பிரமுகருக்குத்தானே தவிர, காரைச் செலுத்தும் டிரைவருக்கு அல்ல. சாவி வார இதழில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சுஜாதா இவர்களோடு நான் மிகச் சுலபமாக நேரடித் தொடர்பு கொண்டு கதை, கட்டுரைகளைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாவி சாரின் மீது வைத்திருக்கும் மதிப்புதான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனவே, ஈகோவுக்கு இங்கே இடமில்லை. அதே போல் எனக்குத் தாழ்வு மனப்பான்மையும் இல்லை. என் பலம் என்ன, ஒரு பத்திரிகைக்கு என்னால் என்ன பணி ஆற்ற முடியும் என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். சாவியில் இருந்தபோது நான் செய்த பணிகளை இங்குள்ள வசதி வாய்ப்புகளுக்கு இன்னும் சிறப்பாகவே என்னால் செய்ய முடியும். எனவே, தாழ்வு மனப்பான்மை என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று அவருக்கு பதில் சொன்னேன் நான்.

இன்றைக்கு விகடனின் பொறுப்பாசிரியர் என்கிற உயர்ந்த பதவியில் இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் விகடன் நிர்வாகம் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதானே தவிர, ஏதோ பெரிசாக சாதித்துக் கிழித்து விட்டோம், அதற்குக் கிடைத்த வெகுமதி இந்தப் பதவி என்று ஒருபோதும் நான் நினைத்துக் கொள்வது கிடையாது. ஒரு காற்றடித்தால் சின்னச் சருகுகூட கோபுரத்தின் கலசத்தில் போய் உட்காரும்; மறு காற்றடித்தால் அதுவே சாக்கடைக்குள் வந்து விழும். காற்று நமக்குச் சாதகமாக அடிக்கிறதா என்பது நம் கையில் இல்லை. நம் கடமையை நாம் ஒழுங்காகச் செய்கிறோமா என்பதே முக்கியம்.

அந்த வகையில் என் கடமையை நான் ஒழுங்காகச் செய்கிறேன் என்கிற ‘அகந்தை’ எனக்கு உண்டு. இதை அகந்தை என்று குறிப்பிடலாமா என்றால், சந்தேகமில்லாமல் இதுவும் ஒரு வித அகந்தைதான். எனக்கு எல்லாம் தெரியும் என்பது வித்யா கர்வம். அதே போல், ‘பிறருக்கு வாரி வழங்குவதில் நான் கர்ணனுக்குச் சமம் என்று எண்ணிக் கொள்வதும்’ ஒரு கர்வம்தான் - உண்மையிலேயே அப்படி அள்ளி வழங்கும் வள்ளலாக இருந்தாலும்கூட!

‘நான் கெட்டிக்காரன்’ என்று நாமே தீர்மானித்துக் கொள்வது எப்படி அகந்தையின் கீழ் வருமோ, அது போல ‘நான் நல்லவன்’ என்று நாமே முடிவு கட்டிக் கொள்வதும் அகந்தையின் கீழ்தான் வரும்.

என்னுள் இன்னும் சில ‘அகந்தை’களும்கூட உண்டு. ‘நேரம் தவறாதவன்’ என்கிற அகந்தை. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்தால் இருப்பேனே தவிர, நேரம் தவறிப் போக மாட்டேன். 8:30-க்கு ஒரு மீட்டிங் அல்லது முகூர்த்தம் என்றால், 8:25-க்குள் கண்டிப்பாக அங்கே இருப்பேன். அதே போல் ‘சொன்னால் சொன்ன வாக்கைக் காப்பாற்றுபவன் நான்’ என்கிற அகந்தை கூட என்னுள் உண்டு. முதன்முறையாக எனது அந்த அகந்தை மீது ஓர் அடி விழுந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் நான் எழுதிய பதிவில், ‘வருகிற புதன்கிழமையன்று என் வலைப்பூ நேயர்களுக்கு ‘ரசிகன்’ டி.வி. நிகழ்ச்சி தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான போட்டி வைத்துப் புத்தகப் பரிசளிப்பதாக’ அத்தனை அழுத்தமாகச் சொல்லியிருந்தேன். அதற்குத்தான் வந்தது வினை!

குறிப்பிட்டபடி ‘வருகிற புதன்கிழமையன்று’ அந்தப் போட்டியை அறிவிக்க இயலாத நெருக்கடி ஒன்று எனக்கு ஏற்பட்டுவிட்டது. கவனிக்கவும், எப்படியும் அந்தப் போட்டியை அறிவிக்கத்தான் போகிறேன். ஆனால், சொன்னபடி நாளை புதன்கிழமை அறிவிக்க இயலவில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவின் தலைப்பு - ஸாரி... ஸாரி... ஸாரி..!

அப்படி என்ன நெருக்கடி?

நேற்று அதிகாலை என் மனைவிக்கு உடல் நிலை சீரியஸாகி, மயக்கமுற்று விழுந்துவிட்டாள். உடம்பு சில்லிட்டுவிட்டது. பதறிப்போய் ஆட்டோ தேடி, அவளை அள்ளிப் போட்டுக்கொண்டு அருகில் உள்ள பல்லவா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தேன். உடனடியாக அவளின் வயிற்று வலிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் அவள் கண் விழித்தாள். வலியும் குறைந்திருந்தது. எனினும், நிலைமை சிக்கலாக இருப்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் மருத்துவர்கள்.

பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. குடலிறக்கம் என்று சொல்லக்கூடிய ‘ஹெர்னியா’ பிரச்னைதான். குடல் தன் இடத்தைவிட்டு ரொம்ப தூரம் இறங்கி வேறு எங்கோ போய் இசகுபிசகாகச் சிக்கிக்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லேசாக காங்கிரின் ஃபார்ம் ஆகியிருப்பதாகவும் சொன்னார்கள். பி.பி., தைராய்டு டெஸ்ட், ஷுகர் டெஸ்ட் எனப் பலப் பல டெஸ்ட்டுகளை முடித்து, நாளை மதியம் அறுவைச் சிகிச்சைக்கு முகூர்த்தம் குறித்திருக்கிறார்கள். ஆபரேஷன் முடிந்து, அதன்பின் ஒரு வார காலம் வரையில் மருத்துவமனையில் உடன் இருக்க வேண்டிய கட்டாயம்.

45 முதல் 55 ஆயிரம் வரையில் செலவாகும் என்பது உத்தேசக் கணக்கு. மெடிக்ளைம் பாலிசி இருக்கிறது. ஆனால், அது தொடங்கி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்; அப்படியும் சிற்சில நோய்களுக்குத்தான் அது செல்லும்; ‘எதிர்பார்க்கக்கூடிய பிரச்னை’யான இம்மாதிரி குடலிறக்கம் போன்ற உபாதைகளுக்கு அது உதவுமா போன்ற சிக்கல்கள் எல்லாம் இருக்கின்றன. பார்க்கலாம்!

விஷயத்திற்கு வருகிறேன். எனவே, ‘ரசிகன் - கண்ணதாசன்’ போட்டியைத் தவிர்க்க முடியாமல் அடுத்த புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கிறேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“போட்டிக்கான விடைகள் அடுத்த வார ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் ‘ரசிகன்’ தொடரில் வெளியாகிவிடும்; எனவே, இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் விடைகளை சனிக்கிழமை இரவுக்குள் பின்னூட்டமாக இடவேண்டியது அவசியம் என்று கொடுத்திருந்தீர்களே?” என்று முக்கியமான கேள்வி எழும்.

போன பதிவைப் படித்த இயக்குநர் மணிவண்ணன் உற்சாகமாகி இன்று காலை எனக்கு போன் செய்திருந்தார். அவரிடம் நிலைமையைச் சொன்னேன். “அதனாலென்ன, கண்ணதாசன் பற்றிய இந்த நிகழ்ச்சி எப்படியும் ஒன்பது வாரங்களுக்கு வரப்போகிறது. எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை வேறு சிலவற்றை ஒளிபரப்பில் ஏற்றிவிட்டு, குறிப்பிட்ட எபிசோடை அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளி வைத்துக் கொள்கிறேன்” என்றார். சொன்ன வாக்கு ஒரேயடியாகத் தவறிவிடாமல் காப்பாற்றிக் கொடுத்த அவருக்கு என் நன்றி!

கண்டிப்பாக அடுத்த புதன்கிழமை (17.2.10) போட்டியை அறிவிக்கிறேன். கலர்ஃபுல் போட்டி! இதில் கலந்துகொள்பவர்களுக்கு, முன்பே சொன்னது மாதிரி, அவரவர் திறமைக்கேற்ப ஒரு புத்தகத்திலிருந்து நான்கு புத்தகங்கள் வரை வெல்லும் வாய்ப்பு உண்டு! விகடன் பிரசுரத்திலிருந்து ‘புதுமொழி 500’ போன்று இனிமேல் தயாராக வேண்டிய புத்தகமாக இல்லாமல் ஏற்கெனவே விற்பனையில் உள்ள புத்தகங்களையே பரிசளிக்கவிருப்பதால், வென்றவர்களுக்கு ஒரு சில நாட்களிலேயே புத்தகப் பரிசு கையில் கிடைத்துவிடும்!

தவிர்க்க முடியாத தாமதத்துக்கு வருந்தும்,

‘உங்கள் ரசிகன்’
ரவிபிரகாஷ்.

***

தாமதம் என்றால் தாமதம்தான்; அதில் சிறிய தாமதம், பெரிய தாமதம் என்று வித்தியாசம் எதுவும் இல்லை.

20 comments:

அநன்யா மஹாதேவன் said...

சார் அவங்களைப்போய் பாருங்க.. அவங்க நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் போட்டி எல்லாம் வெச்சுக்கலாம்.She is added in my prayers. Get well soon Ma'm.

thenammailakshmanan said...

உங்கள்மனைவி பூரண குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் ரசிகன் போட்டியெல்லாம் பிறகு ...

A-kay said...

Oh my god! Hope she gets better soon!

butterfly Surya said...

உங்கள் மனைவி நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

அதுக்கு இத்தனை ஸாரி தேவையா..?

ஸாரி.. இது டூ மச்..

பத்மநாபன் said...

பரிசு போட்டி இருக்கட்டும் ... அவர்களது உடல் நிலையை முதலில் கவனியுங்கள் ... நல்லபடியாக சிகிச்சை முடிந்து , விரைவில் பூரண குணம் அடைந்து, என்றும் உங்களுக்கு பக்கபலமாக இருக்க , எல்லாம் வல்ல அருட் பேராற்றலை வணங்கி பிரார்த்தினை செய்கிறோம்..
இவ்வளவு இக்கட்டிலும், அனைவருக்கும் மதிப்பு கொடுக்கும் அந்த மாண்பு ,என்றும் உங்களை கைவிடாது ........

புதுகைத் தென்றல் said...

உங்க மனைவியை முதலில் கவனிங்க. போட்டி அறிவிப்பை அப்புறம் பாத்துக்கலாம். என் விசாரிப்புக்களையும் சொல்லிடுங்க

Chitra said...

‘நான் கெட்டிக்காரன்’ என்று நாமே தீர்மானித்துக் கொள்வது எப்படி அகந்தையின் கீழ் வருமோ, அது போல ‘நான் நல்லவன்’ என்று நாமே முடிவு கட்டிக் கொள்வதும் அகந்தையின் கீழ்தான் வரும்.

..........so true. பலர், இதை உணர்வதில்லை.

K.B.JANARTHANAN said...

போட்டி இருக்கட்டும் சார், போட்டி! உங்கள் துணைவியாரை நல்ல (போட்டி போட்டுக் கொண்டு ) கவனியுங்கள்.. அவர் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்! -- கே. பி. ஜனா

Kalyani said...

I hope your wife's surgery goes on fine and she recovers soon. My prayers are with you. Take care, bye...

பாலாஜி said...

விரைவில் குணம்பெற வேண்டுகிறேன்

பின்னோக்கி said...

தங்கள் துணைவியார் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள். இந்த பிரச்சினையை முன்பே கண்டறிந்திருக்கலாமே :(.

மெட்ராஸ்காரன் said...

ரவி சார்,

உங்கள் மனைவி நலம் பெற என் பிரார்த்தனைகள்...Get well soon Madam...கிருஷ்ணா

பாபு said...

தங்கள் துணைவியார் பூரண குணமடைய பிராத்தனைகள்!

தமிழ் உதயம் said...

என்னாலும் முடியும் என்று நினைப்பது அகந்தையல்ல... தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்று நினைப்பதே அகந்தை. உங்களுக்குள்ளது தன்னம்பிக்கை மற்றும் பெருமை தானே ஒழிய அகந்தை அல்ல.

கிருபாநந்தினி said...

போட்டி கிடக்கட்டும், விடுங்க! உங்க வொய்ஃபுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுதா? அவங்க இப்ப நல்லாருக்காங்களா? அதைச் சொல்லுங்க! தவிர, ஹெர்னியாங்கிறது திடீர்னு முளைக்கிற பிரச்னை இல்லை. அது சீரியஸாகிற வரைக்கும் உங்க மனைவி ஹெல்த்ல ஏன் இவ்ளோ நாளா அலட்சியமா இருந்தீங்கன்னு புரியலை. ஸாரி, நான் இதைக் குறிப்பிட வேண்டியிருப்பதற்கு!

ரவிஷா said...

Take it easy and take care of your wife.

Good luck!

அன்புடன் அருணா said...

/அந்த வகையில் என் கடமையை நான் ஒழுங்காகச் செய்கிறேன் என்கிற ‘அகந்தை’ எனக்கு உண்டு/
எனக்கும் உண்டு!

/என்னுள் இன்னும் சில ‘அகந்தை’களும்கூட உண்டு. ‘நேரம் தவறாதவன்’ என்கிற அகந்தை./
எனக்கும் உண்டு....வேலையை மதிக்காமல், நேரத்தை வீணாக்குபவர்கள் நிறைந்து இருக்கும் இடத்தில் இப்படி சரியாக இருப்பதினால் கொஞ்சம் அகந்தையிருந்தால் ஒன்றும் தவறல்ல என்றே நான் நினைக்கிறேன்!

Anonymous said...

அன்புள்ளா ரவி அவர்களுக்கு,
தங்கள் மனைவி ந்லமாக இருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் விரைவில் குணமாகப் பிரார்த்திக்கிறேன்.

<>
உண்மை. உண்மை...பாரதியார் “தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ” என்று சொன்னது இது நினைவுப் படுத்துகிறது.

--கடுகு

ர‌கு said...

நீங்க‌ சொன்ன‌ அக‌ந்தை லிஸ்ட்ல‌, என‌க்கும் சில‌து சூட் ஆகுது. இப்ப‌டி நான் சொல்ற‌துனால‌ அது அக‌ந்தை ஆகாது இல்ல‌ சார்:))

உங்க‌ள் ம‌னைவி விரைவில் குண‌ம‌டைய‌ க‌ட‌வுளை பிரார்த்திக்கிறேன்

padmanabhan said...

get well soon.