இதயத்தை உலுக்கும் இலா அருண்!

லா அருண்... பேரைச் சொல்லும்போதே அதிரடியும் ஆர்ப்பாட்டமுமான அவரது குரல், காதுகள் வழியே இறங்கி இதயத்தை உலுக்குகிற மாதிரி ஓர் உணர்வு!

ஜெய்ப்பூரில் பிறந்தவர் இலா அருண். தனது நான்காவது வயதிலிருந்தே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஆடுவது இவரின் பொழுதுபோக்கு. ஜெய்ப்பூரில் மகாராணி பெண்கள் கல்லூரியில் படித்தார். அங்கேயும் கிராமியப் பாடல்களை அவருக்கே உரிய ஹஸ்கி குரலில் பாடி அசத்தினார். இதனால் டி.வி. நிகழ்ச்சிகளில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பு வந்தது. பின்னர் இவர் வெளியிட்ட ‘வோட் ஃபார் காக்ரா’ இசை ஆல்பம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றுச் சாதனை படைத்தது. அதன்பின் நிறைய ஆல்பங்களை வெளியிட்டார். ‘ஹாலே ஹாலே’ ஆல்பத்துக்குப் பிறகு, இசைத் திருட்டு, ரீ-மிக்ஸ் கலாசாரம் இவற்றை எதிர்த்து ‘இனி பாடுவதில்லை’ என்று சில காலம் ஒதுங்கியிருந்தார்.

ஆபாச வார்த்தைகளை நுழைத்து எழுதிய பாடல்களைப் பாடுவதென்றால் இவருக்கு அறவே பிடிக்காது. ஆனால் ஆச்சர்யமாக, ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ (சோளிக்குள் என்ன இருக்கு?) பாட்டுதான் இவரைப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. மாதர் சங்கங்கள் போட்ட வழக்கினால் அந்தப் பாடலுக்கு கோர்ட், கேஸ், தடை உத்தரவு எல்லாம் வந்தது. ஆனால் இவரோ, “இது ஆபாசமான பாடலே அல்ல. இதைவிடப் பச்சையான பாடல்கள் எல்லாம் வந்திருக்கின்றன. அவற்றை எதிர்த்து யாரும் குரலெழுப்பவில்லை. காரணம், அவை பாப்புலராகவில்லை. இந்தப் பாடல் பிரபலமாகிவிட்டதால், இதை எதிர்ப்பதன் மூலம் தங்கள் இருப்பை வெளியுலகுக்குத் தெரியப்படுத்திக் கொள்ள் விரும்புகிறார்கள் சில மாளிகைவாசி மாதர் சங்கப் பெண்கள். இந்த எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சுபவள் நானல்ல” என்றார்.

“காலையில் எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போவது வரைக்கும் கிராமியப் பாடல்களைப் பாடிக்கொண்டே வேலை செய்வது ராஜஸ்தானிய கிராமத்து மக்களின் ரத்தத்தில் ஊறிப் போன பழக்கம். எங்கள் வீட்டில் ரகுநாத் என்று ஒரு வேலைக்காரர் இருந்தார். அவர் எப்போதும் ராஜஸ்தானியப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அவர்தான் தினமும் பள்ளிக்கூடத்துக்கு என்னை சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் செல்வார். அப்படி சைக்கிள் ஓட்டிச் செல்லும்போதும் கிராமியப் பாடல்களைப் பாடியபடியே வருவார். அதைக் கேட்டுக் கேட்டு எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆக, என் முதல் குரு ‘ரகுநாத்’தான்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் இலா அருண்.

இலாவின் கணவர் அருண், மெர்ச்சன்ட் நேவியில் அதிகாரியாக இருந்தவர்.

இலா பாடல்களும் எழுதுவார். இவரே எழுதி, பாடித் தொகுத்த ‘சபன்சுரி’ என்ற கிராமியப் பாடல்கள் அடங்கிய ஆடியோ கேஸட் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. இந்தியாவில் இந்த கேஸட் அதிகம் விற்பனையான மாநிலம்... சொன்னால் நம்ப மாட்டீர்கள் - நம்ம தமிழ்நாடுதான்! “தமிழகத்திலிருந்து எனக்குக் கிடைத்த இந்த மகத்தான வரவேற்பைக் கண்டு பிரமித்துப் போனேன்” என்று சொல்லியிருக்கிறார் இலா அருண்.

இலா அருண் சைனா கேட், சிங்காரி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ‘ஜோதா அக்பர்’ படத்தில் அக்பரின் நர்ஸ் கேரக்டரில் வருவது இலா அருண்தான். ஒரு வளர்ப்புத் தாயார் போன்ற கேரக்டர் அது.

சமீபத்தில் நம்ம ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ‘ரிங்கா, ரிங்கா’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், அல்கா யாக்னிக் இருவருடனும் இணைந்து பாடியிருக்கிறார் இலா அருண். இவரின் ‘பஞ்சாரன்’ பாடல்கள் அதட்டலும் உருட்டலும் மிரட்டலுமாக இருக்கும். கொஞ்சம் திகிலோடுதான் அவற்றைக் கேட்க வேண்டும். எனக்கு ரொம்பப் பிடித்தமான பாடல்கள் அவை. என்னவொரு உலுக்கியெடுக்கும் குரல்!

ஏ.ஆர்.ரஹ்மான் புண்ணியத்தில் இலா அருண் தமிழிலும் பாடியிருக்கிறார். மிஸ்டர் ரோமியோ படத்தில் ‘முத்து முத்து மழையே...’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களும் இலாவின் குரலை ரசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்!

***
சந்தோஷம் என்பது ஒரு தொற்று. ஆனால், அதைப் பெறுபவராக இருப்பதைவிடப் பரப்புபவராக இருக்க முயலுங்கள்!

4 comments:

Paleo God said...

பல விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது உங்கள் தளத்தில்...நன்றி.

கிருபாநந்தினி said...

பீனாஸ் மஸானி, ஸ்வேதா ஷெட்டி, இலா அருண்... லிஸ்ட் இன்னும் நீளுமா? அருமையான தகவல்கள். அவரின் பாடல்களை முடிஞ்சா இணைப்பு கொடுங்களேன்!

ungalrasigan.blogspot.com said...

நன்றி பலா பட்டறை!

நன்றி கிருபாநந்தினி! பாடல்களின் இணைப்பு கொடுக்க ஆசைதான். ஆனால், எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை. ஸாரி!

Ananya Mahadevan said...

ஜோதா அக்பரில் வில்லி ரோல் தான் என்றாலும் பின்னி இருப்பார். அதே போல் ஷ்யாம் பெனெகலின் வெல்கம் டு சஜ்ஜன்பூர் என்ற படத்தில் இலா வரும் காட்சிகள் எல்லாம் பயங்கர கிச்சு கிச்சு. பார்க்காவிட்டால் அவசியம் பார்க்கவும். யஷ் சோப்ராவின் லம்ஹே என்ற படத்திலும் இலா பாடி இருந்ததாக நினைவு. எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். நிறைய விஷயங்கள் அறிய வசதியாக இருக்கிறது உங்கள் தளம்.