
ராமர் தனது வாழ்க்கையில் 18 முறை தவறு செய்திருக்கிறார் என்கிறது வால்மீகி ராமாயணம். வால்மீகி ராமாயணத்தைப் பொறுத்தவரை ராமர் கடவுள் அல்ல; மனிதன். தவறு எதுவுமே செய்யாதவனாக ஒருவன் இருப்பானேயானால், அவன் கடவுளாகிறான். எந்தவொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தபட்சம் 18 முறை தவறு இழைப்பான் என்பது புராண ஐதிகம். ஆகவேதான் வால்மீகி தன் கதாநாயகனான ராமனை, கதைப்படி சரியாக 18 முறை தவறு செய்திருப்பவனாகக் காட்டியுள்ளார்.
மனிதர்களிடத்தில் உள்ள குணத்தையும் குறைகளையும் அலசி ஆராய்ந்து, இரண்டில் எது அதிகமோ அதன்படி அவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று வகைப்படுத்துங்கள் என்கிறார் வள்ளுவர். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் திலகம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். இது அவரின் சாதனைக்கும் பெருமைக்கும் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்திவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், இதுவரை சிவாஜி பற்றி நான் கேள்விப்படாத ஒரு விஷயத்தை முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது என் மனசு சற்றுத் துணுக்குற்றது என்பது உண்மை!
சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? எனக்கு இத்தனை நாள் தெரியவில்லை.
அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா. சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி என்று அறிகிறேன். அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினிகணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை; அது சிவாஜிகணேசனைக் குறிப்பதுதான்.
ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ.வி.சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். “என் தங்கை நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார்” என்று எம்.ஜி.ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப் படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.
‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான். அதே போல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக, ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ்.வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’. ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.
ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல; நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட, அவரா!’ என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப் பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா. ‘அன்னை’ என்றொரு படம்; பி.பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதே போல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள்.
சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.
கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா சமீபத்தில்தான், அதாவது 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76. அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.
(திரையுலகைச் சேர்ந்த, வயதில் மூத்த சில நண்பர்களுடன் பேசியதில் கேள்விப்பட்ட விஷயங்களைத்தான் இங்கே கொடுத்துள்ளேன். இதில் இடம்பெற்றுள்ள தகவல்களில் பிழையான விவரங்கள் இருப்பின், அவற்றைப் பின்னூட்டத்தில் அவசியம் சுட்டிக் காட்டுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)
நாலு பேர் மத்தியில் நீங்கள் முக்கியமானவராக இருப்பது இனிமையானதுதான்; ஆனால், இனிமையானவராக இருப்பது முக்கியமானது!