என் ஆசிரியர்கள்!

ன் ஆசிரியர்களைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தோன்றியது. அப்புறம், ‘அடடா! இந்த யோசனை செப்டம்பர் 5-ம் தேதி வந்திருந்தால், பொருத்தமாக இருந்திருக்குமே என்று நினைத்தேன்.

இன்றைக்கு சரஸ்வதி பூஜை! ஆசிரியர்கள் பற்றிய பதிவை இன்றைக்கு இட்டாலும் பொருத்தமாக இருக்கும்தானே!

அருணாசல ஐயர்: மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களிலிருந்துதான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. எனக்குச் சின்ன வயதில் கையெழுத்து அழகாகவே இருக்காது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதா?) அழகாக இருக்காது என்பது மட்டுமல்ல; சிலேட்டில் மண்டை மண்டையாக எழுதுவேன். சிலேட்டின் ஒரு பக்கம் முழுக்க ‘அ’ என்ற ஒரே ஓர் எழுத்தை எழுதிவிட்டு, மறுபக்கம் ‘ஆ’ என்று எழுதிவிட்டு, ‘இ’யை எங்கே சார் எழுதுவது என்று அவரிடம் கேட்பேனாம். ஓங்கி உலகளந்த பெருமாளுக்கு மகாபலிச் சக்கரவர்த்தி மூன்றடி நிலம் தானம் கொடுக்க முன் வந்தபோது, மகாவிஷ்ணு பூமியை ஓரடியாலும், வானத்தை மறு அடியாலும் அளந்துவிட்டு, இன்னொரு அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மகாபலி ‘என் தலையில் வையுங்கள்’ என்றானாம். விஷ்ணு அவன் தலையில் கால் வைத்து அவனை ஒரே அமுக்காக அமுக்கி, பாதாளத்தில் தள்ளிவிட்டார் என்பது புராணம். அந்தக் கதையாக, நான் இரண்டு எழுத்துக்களை எழுதிவிட்டு, மூன்றாம் எழுத்துக்கு இடம் கேட்க, அருணாசல ஐயர் நொந்து போய், ‘என் தலையில் எழுது’ என்பாராம் கடுப்பாக. என் அப்பா சக ஆசிரியர் என்பதால், என் எழுத்துத் திறமையை(!)ப் பற்றிய புகார்கள் அவருக்குப் போகும். ஒரு நாள் அருணாசல ஐயர் என் அப்பாவிடம் கேலியாக, ‘சார், உங்க பையன் எதிர்காலத்துல பெரிய எழுத்தாளனா வருவான்னு நினைக்கிறேன். பாருங்க, பெரிசு பெரிசா ரெண்டே ரெண்டு எழுத்தை மட்டும் எழுதிட்டு இன்னொரு எழுத்தை எங்கே எழுதறதுன்னு கேக்கறான்!’ என்று சொல்லியிருக்கிறார். 1978-ல் எனது முதல் சிறுகதை ‘கல்கி’யில் வெளியானபோது இதைச் சொல்லி, ‘அருணாசல ஐயர் கேலியாகச் சொன்னாரோ என்னவோ, அவர் வாக்கு பலிச்சுட்டுது. நீ பெரிய எழுத்தாளனா வரப் போறே!’ என்று மகிழ்ந்தார் அப்பா.

ஜெயராமன் - பத்மாவதி: நான் நான்காம், ஐந்தாம் வகுப்புகள் படித்தது இவர்களிடம்தான். காணை கிராமத்துப் பள்ளியில் இந்தத் தம்பதி பணியாற்றினார்கள். ஜெயராமன் சார் அடிக்க வந்தால், கரும்பலகையைச் சுற்றி ஓடி, அவருக்கு ஆட்டம் காட்டுவேன். இப்போது போல், சுவரில் பதிக்கப்பட்ட கரும்பலகைகள் இல்லை அப்போது. உயரமான மர முக்காலி ஸ்டேண்ட் மீது, அச்சாணிகள் பொருத்தி, கரும்பலகையைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதை இரண்டு நாளைக்கொரு முறை நாலைந்து பிள்ளைகளாக இறக்கி, மணல், கரி, கோவைக்காய் போட்டுத் தேய்ப்பது ஒரு சுவாரசியமான வேலை. வகுப்பில் ஒரு மூலையாக அந்தக் கரும்பலகை நிறுத்தப்பட்டிருக்கும். வீட்டுப் பாடம் எழுதவில்லையென்றோ, கேள்விக்குப் பதில் தெரியவில்லையென்றோ ஜெயராமன் ஆசிரியர் பிரம்பை ஓங்கிக்கொண்டு என்னை அடிக்க வரும்போது தப்பித்து, அந்தக் கரும்பலகையின் பின்னால் ஓடிப் பதுங்கிக் கொள்வேன். அவரும் சிரமப்பட்டு, நுழைந்து வருவார். நான் சிக்காமல் வெளியேறித் தப்பித்து, சுற்றிச் சுற்றி ஓடி ஆட்டம் காட்டுவேன். கடைசியில், ஆசிரியர் ஜெயராமன் களைத்துப் போய், ஒரு பிரம்மாஸ்திரம் எடுத்து வீசுவார்... “ரவி! மரியாதையா வந்து உதை வாங்கிக்க. இல்லேன்னா, நேரே உங்கப்பா கிட்ட போய்ச் சொல்லுவேன்!” என் அப்பா பிரம்பை எடுத்து வீறினால், முழங்காலுக்குக் கீழே தண்டு தண்டாக வீங்கிப் போகும். சிராய்ப்பு போல ரத்தம் பெருகும். அதற்கு ஜெயராமன் வாத்தியாரின் அடியே தேவலாம் என்று பகுத்தாய்ந்து, அமைதியாக அவர் முன் பரிதாபமாகக் கையை நீட்டுவேன். அவருக்கும் என் மீது இரக்கம் தோன்றி, ஒப்புக்கு மென்மையாக ஒரு அடி கொடுத்து, புத்தி சொல்லி, உட்கார வைப்பார். அவரின் மனைவி பத்மாவதி சிறந்த பேச்சாளர். கே.பி.சுந்தராம்பாள் போல இருக்கும் அவரின் குரல். தங்கு தடையின்றிச் சரளமாகப் பேசுவார். உள்ளூர் கோயில் திருவிழாக்களிலும், விழுப்புரம் போன்று அருகில் உள்ள கோயில் விழாக்களிலும் கலந்துகொண்டு, புராணச் சொற்பொழிவுகள் செய்வார். எனக்குத் திருமணமான புதிதில் (1992) விழுப்புரத்தில் ஒருமுறை அவரைச் சந்தித்தேன். என் மனைவியிடம் என்னைப் பற்றிய அருமை, பெருமை(!)களை (ஜெயராமன் ஆசிரியருக்கு ஆட்டம் காட்டியது உள்பட) சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். திரு.ஜெயராமன் இப்போது இல்லை. பத்மாவதி டீச்சர் இருப்பாரா, இல்லையா என்று தெரியவில்லை. இருந்தால், சந்திக்க விரும்புகிறேன். அவருக்கு இப்போது 75 வயதுக்கு மேல் இருக்கும்.

காமாட்சி இருசாரெட்டியார்: இருசாரெட்டியாரின் மனைவி காமாட்சி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர் பெயரே காமாட்சி இருசாரெட்டியார்தான். ஆண் ஆசிரியர்தான். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது இவர்தான் காணை எலிமென்ட்டரி ஸ்கூலின் தலைமை ஆசிரியராக இருந்தார். என் வகுப்பாசிரியரும்கூட. அருமையாகக் கதைகள் சொல்லுவார். கதை எழுத வேண்டும் என்கிற என் ஆர்வத்துக்கு மறைமுகத் தூண்டுகோலாக இருந்தது இவர் சொன்ன கதைகளாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருமுறை, மிக சுவாரசியமாகக் கதை ஒன்றைச் சொல்லிக்கொண்டே வந்தவர், அதை ஒரு சரியான மர்ம முடிச்சில் நிறுத்திவிட்டார். மறுநாள் நாங்கள் சாத்தனூருக்குச் சுற்றுலா செல்வதாக இருந்தது. அப்போது பஸ்ஸில் மிச்ச கதையைச் சொல்வதாகச் சொன்னார் இருசா ரெட்டியார். அதுவரை நான் சுற்றுலாவில் கலந்துகொள்வதாகவே இல்லை. அப்பா எனக்காகப் பணம் கட்டவில்லை. இவர் இப்படிக் கதையைப் பாதியில் நிறுத்தி, அந்த மர்மத்தை சுற்றுலாவில்தான் சொல்லப் போவதாகச் சொன்னவுடன், அப்பாவை அரித்துப் பிடுங்கி சுற்றுலாவில் நானும் கலந்துகொண்டேன். சொன்னபடியே, பஸ்ஸில் கதையின் மிச்ச பகுதியைச் சொல்லி முடித்தார் இருசா ரெட்டியார். அந்தக் கதை என்ன என்பது இப்போது ஞாபகம் இல்லை.

ராஜாப்பிள்ளை: நான் எட்டாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை படித்தது விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில். இந்த நான்கு வருடங்களிலும் எனக்குப் பல ஆசிரியர்கள் மாறியிருக்கிறார்கள். என்றாலும், ஒரு சில ஆசிரியர்கள் தொடர்ந்து அத்தனைக் காலமும் எனக்குப் பாடம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் ராஜாப்பிள்ளை, அ.க.முனிசாமி, சங்கரநாராயணன், டேவிட்ராஜ்.

ராஜாப்பிள்ளை ஆசிரியர் மிக அழகாக இருப்பார். நடிகர் சிவகுமாருக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடைப்பட்ட உருவமாக இருப்பார். நல்ல உயரமாக, கம்பீரமாக, மிடுக்காக இருப்பார். அத்தனை வகுப்புகளுக்கும் கணிதப் பாடம் போதித்தவர் அவர். அவர் சொல்லித் தருவது மிகத் தெளிவாகப் புரியும். சரியாகக் கணக்குப் போடவில்லை என்றால், பிரம்பால் வெளுத்து வாங்கிவிடுவார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். எனக்கு மற்ற பாடங்கள் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான். ஆனால், கணக்கு நன்றாக வரும். எனவே, எனக்குத் தெரிந்து அவரிடம் பிரம்படி வாங்காத ஒரே மாணவன் நானாகத்தான் இருப்பேன்.“என்ன ஐயிரே! காலையில சாப்பிட்டியா? அப்புறம் ஏன் குரலே வெளிய வரமாட்டேங்குது? பப்புஞ்சாம், மோர்ஞ்சாம் சாப்பிட்டா நோஞ்சான்!” என்பார். அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே, கணக்கு எனக்கு நன்றாக வருமென்றாலும், ஆங்கிலம், கணக்கு இரண்டுக்கும் அவரிடம் டியூஷன் வைத்துக் கொண்டேன் நான்.

அவருக்கு இரண்டு மனைவிகள் என்பது அவரிடம் டியூஷனுக்குப் போன பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. இங்கே காந்தி ஸ்கூலில் படித்தபோதும் ஒருமுறை சாத்தனூர் சுற்றுலாவுக்குப் போனேன். அப்போது அவர் அட்டகாசமான பேண்ட், சட்டையில் அமர்க்களமாக வந்து, விசிலடித்துப் பாட்டுப் பாடி, உற்சாகமாக இருந்தார். வகுப்பில் பார்க்கும் கெடுபிடி வாத்தியாராக இல்லை.

நான் விகடனில் சேர்ந்த பின்னர் திடீரென்று ஒருநாள் அவரிடமிருந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்தது. அது எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. பதில் போட்டேன். அடுத்தடுத்த வருடங்களிலும் அவரிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்துகொண்டு இருந்தன. பின்னர் ஒருமுறை, மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியிலேயே போய் அவரைச் சந்தித்தேன். திடீரென்று அவர் எல்லா வகுப்பு மாணவர்களையும் ஒரு பெரிய ஹாலில் கூட்டி, என்னை அவர்களுக்கு உற்சாகமூட்டி, அறிவுரைகள் சொல்லும்படியாக உரையாற்றச் சொன்னார். நான் எதிர்பார்க்கவே இல்லை இதை. என்றாலும் சுதாரித்து, ஆசிரியர்களின் மேன்மை, மாணவர்களின் கடமை என எனக்குத் தெரிந்த அனுபவங்களைக் கொண்டு அவர்களிடையே ஒரு மணி நேரம் பேசினேன்.

அதன்பின்பு சில ஆண்டுகள் கழித்து, என் மனைவி, குழந்தைகளோடு விழுப்புரம் போய், அவரைச் சந்தித்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டு இருந்தார். தன் மகள்களுக்குத் திருமணம் ஆகி, பேரன் பேத்தி எடுத்துவிட்டதைச் சொன்னார். இப்போதும் விழுப்புரம், வழுதரெட்டியில் சொந்த வீடு வாங்கிக் குடியிருக்கிறார். அவரையும் போய்ப் பார்த்துப் பேசவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

அ.க.முனிசாமி: எங்கள் தமிழய்யா! இவர் அட்டெண்டன்ஸ் எடுத்தால், ‘பிரசென்ட் சார், ஆஜர் சார்’ என்று சொல்லக் கூடாது. தோலை உரித்துவிடுவார். ‘உள்ளேன் ஐயா!’ என்றே சொல்ல வேண்டும். இவர் வீட்டின் வாசல் மற்றும் அறைகளின் வாசல்களில் தொங்கும் திரைச்சீலைகளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நடந்து வந்துகொண்டு இருப்பார்கள். தீவிர நாத்திகராக இருந்தவர் முனிசாமி. ஆனால், பின்னர் பழுத்த ஆத்திகராக மாறிவிட்டார். கோயில் விழாக்களில் நடைபெறும் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு பேசுவார். விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தில் இவர் பேசியதை ஆவலோடு போய்க் கேட்டேன். தலைமை திருக்குறள் முனிசாமி.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எல்லாவற்றிலும் என்னைக் கலந்துகொள்ளச் சொல்லி உற்சாகப்படுத்தி, மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே இந்தப் போட்டிகள் நடக்கும்போது அந்தந்த ஊருக்கும் என்னை அழைத்துப் போய், நான் பரிசுகளை வென்றபோது பாராட்டி மகிழ்ந்தவர் தமிழய்யாதான். இவரின் பிள்ளைகளுக்குப் புகழேந்தி, இளங்கோ என்று புலவர்களின் பெயரைத்தான் வைத்துள்ளார்.

ஆண்டு முடிவில் மாணவர்கள் எல்லோரும் ஆசிரியர்களிடம் ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டிக் கையெழுத்துக் கேட்டோம். மற்ற ஆசிரியர்கள் என்ன எழுதிக் கையெழுத்திட்டார்கள் என்று ஞாபகம் இல்லை. அ.க.முனிசாமி அவர்கள் எனக்கு எழுதித் தந்தது மட்டும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

‘சின்னஞ்சிறு வயதினிலே பேரறிவு பெற்றவர் ஏராளம்;
நீயும் அவர்களைப் போல் உயர்வடைவாய் தாராளம்!’

சங்கர நாராயணன்: எனக்குச் சரித்திரம், பூகோளம் கற்றுக் கொடுத்த ஆசிரியர். நான் விழுப்புரத்தில் என் மாமா வீட்டில் தங்கிப் படித்தபோது, இவர் குடும்பமும் அதே வீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருந்தது. அவருக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். அவர்களை அவர் பெயர் சொல்லி அழைக்க மாட்டார். அம்பி, பெரியம்பி, குந்தம்பி, அங்கச்சி என்றுதான் அழைப்பார். அவரின் மூத்த மகன் கணேசன் என்னோடு படித்தவன். பிரமாதமாகப் படிப்பான். ரொம்பக் கெட்டிக்காரன். இன்றைக்கு அவன்(ர்) வாஷிங்டன் யூனிவர்சிடியில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார் என்பதைச் சக பதிவர் பட்டர்ஃப்ளை சூர்யா மூலம் சமீபத்தில் அறிந்துகொண்டேன். சூர்யா, சங்கர நாராயணனின் மூன்றாவது மகனுடன் ஜெயின் காலேஜில் ஒன்றாகப் படித்தவராம். அங்கச்சி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் திருமணமாகி, இங்கே சென்னையில் அண்ணா நகரில்தான் இருக்கிறார்; சங்கரநாராயணன் சாரே இங்குதான் ட்ரஸ்ட்புரத்தில் இருக்கிறார் என்றார் சூர்யா.

சங்கரநாராயணன் சார் பார்ப்பதற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் போல இருப்பார். எனக்குச் சரித்திரம் என்றால் வேப்பங்காய். போர்களையும், அது நடந்த வருடங்களையும், பூமிப் பிரதேசங்களையும், அங்கு விளையும் தானியங்களையும் நினைவு வைத்துக்கொள்வது என்னால் இயலாத காரியம். இதனால் சாரிடம் நிறைய அடி வாங்குவேன். “நான் உங்க வீட்டில் குடியிருக்கிறேன் என்பதற்காக அடிக்காமல் விட்டுடுவேன்னு நினைச்சுடாதே! எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்!” என்று சொல்லி எனக்குக் கூடுதலாக இரண்டு அடி வைப்பார்.

பட்டர்ஃப்ளை சூர்யா மனது வைத்தால், என் ஆசிரியரை சூர்யாவோடு சென்று சந்திக்க விரும்புகிறேன்.

டேவிட் ராஜ்: மகாத்மா காந்தி பள்ளியின் தலைமை ஆசிரியர். மிக மென்மையான குரல் இவருக்கு. யாரையும் அடிக்க மாட்டார்; திட்டக்கூட மாட்டார். ஆனாலும், மொத்த மாணவர்களுக்கும் இவரைக் கண்டால் நடுக்கம். இவரது பிறந்த நாளை எப்படியோ தெரிந்துகொண்டு, அன்று இவரை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். வகுப்பறை வாசலில் உயரே ஒரு அட்டைப் பெட்டியைப் பொருத்தி, அதனுள் உதிரிப் பூக்களைப் போட்டு, அதன் மூடியை லேசாக மூடி, அதில் ஒரு ட்வெய்ன் நூலைக் கட்டி, பின் வரிசையில் இருந்த ஒரு மாணவனின் கையில் கொடுத்தோம். ஆசிரியர் டேவிட் ராஜ் வாசலில் வரும்போது, நாங்கள் கண் ஜாடை காட்ட, அந்த மாணவன் நூலைப் பிடித்து இழுத்தானென்றால், மூடி திறந்துகொண்டு, பூக்கள் ஆசிரியரின் தலையில் சொரியும் என்பது ஏற்பாடு.

ஆசிரியரும் வந்தார். கண் ஜாடை காட்டினோம். ஆனால், என்னவோ சிக்கல்... அட்டைப் பெட்டியின் மூடி திறக்கவேயில்லை. ஆசிரியர் உள்ளே நுழைந்து பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டார். நாங்கள் எங்கள் திட்டம் சொதப்பலாகிவிட்டதை எண்ணி, பாடத்திலும் கவனம் செல்லாமல் திருதிருவென்று பேஸ்தடித்தது போல் உட்கார்ந்திருந்தோம். டேவிட்ராஜ் இதைக் கவனித்துவிட்டார். “என்ன பிரச்னை? ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். விஷயத்தை அசடு வழிந்துகொண்டே சொன்னோம்.

டேவிட்ராஜ் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டார். “என் மீது இவ்வளவு அன்பா? உங்களுக்காக நான் அப்படியென்ன செய்திருக்கிறேன்?” என்று கண் கலங்கினார். “சரி, நான் வாசலில் நின்றுகொள்கிறேன். நீங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துங்கள்” என்று போய் நின்றுகொண்டார். பின் வரிசைப் பையன் நூலை இழுத்தான். பூக்கள் ஆசிரியரின் தலைமீது கொட்டின.

எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லையே என்ற குறை எங்களுக்கு. ஆனாலும், டேவிட் ராஜ் எங்களின் அன்பைப் புரிந்து கொண்டு, அனைவருக்கும் நன்றி சொன்னார். ஸ்கூல் பியூனை அனுப்பி கடையிலிருந்து ஐந்து பேனாக்கள் வாங்கி வரச் செய்து, இந்தத் திட்டத்துக்கு மூலகாரணமாக இருந்து செயல்பட்ட நான் உள்பட ஐந்து மாணவர்களுக்கு அவற்றை ஆளுக்கொன்றாகப் பரிசளித்தார்.

டேவிட்ராஜின் மனைவி பெயர் மல்லிகா. இவர் எழுபது, எண்பதுகளில் ஆனந்தவிகடனில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பது நான் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்த பின்புதான் தெரிந்தது. என்னிடமேகூட அவரின் சிறுகதைகள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றை நான் தேர்ந்தெடுத்து, ஆசிரியரால் நிராகரிக்கப்பட்டது வேறு கதை!

தெய்வசிகாமணி: விழுப்புரம், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நான் புகுமுக வகுப்பு படித்தபோது எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்தவர் தெய்வ சிகாமணி. டைட்டாக டெரிகாட்டன் பேன்ட்டும், ஸ்லாக் ஷர்ட்டும் அணிந்து ட்ரிம்மாக வருவார். தலைமுடி சுருள்சுருளாக இருக்கும். ஸ்டைலாகப் பாடம் நடத்துவார். மற்றபடி, இவரைப் பற்றிக் குறிப்பாக எதுவும் சொல்ல, எனக்கு இவரோடு அதிகம் பழக்கம் இருந்ததில்லை. இவரைப் பற்றிச் சொல்ல முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. இவர் வேறு யாருமல்ல, இன்றைய கல்வி அமைச்சர் பொன்முடிதான்!

*****
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருமே உங்களுக்கு ஒரு குரு!

3 comments:

கே. பி. ஜனா... said...

பள்ளிக்கூட நாட்களுக்குள் மறுபடி ஒருமுறை சென்று வந்த மாதிரி இருந்தது. அங்கே ஒரு தட்டு, இங்கே ஒரு தடவு என்று இன்றைய நம் உருவை அன்றைய நம் ஆசிரியர்களும்தான் எத்தனை அக்கறையாகச் செதுக்கியிருக்கிறார்கள்! -கே.பி.ஜனா.

கிருபாநந்தினி said...

நல்ல பதிவு! இதற்கு ‘என் ஆசிரியர்கள்’ என்று மொக்கையாகத் தலைப்பு வைத்திருப்பதைவிட ‘என் கல்விக் கடவுளர்கள்’ என்று கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!
- கிருபாநந்தினி

butterfly Surya said...

ரவி சார்.இன்று தான் இந்த பதிவை பார்க்கிறேன்.

கண்டிப்பாக போகலாம்.