எஸ்.வரலட்சுமி என்றதும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அவரது ஸ்டீரியோஃபோனிக் குரல்தான். இன்றைக்கு டீ.டி.எஸ்., ஊஃபர் என எல்லாவிதமான ஒலி வசதிகளும் இருக்கின்றன. ஆனால், இவை எதுவுமே இல்லாமல் அந்த எஃபெக்டை அந்நாளிலேயே கொடுத்தது வரலட்சுமியின் குரல்.
‘வெள்ளிமலை மன்னவா...’ (கந்தன் கருணை) பாட்டைக் கேட்டுப் பாருங்கள்; நான் சொல்வது புரியும். அந்தப் பாடல் மட்டுமில்லை; அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே அந்த ரகம்தான். ‘ஏடு தந்தானடி தில்லையிலே...’ (ராஜ ராஜ சோழன்), ‘மங்கலம் காப்பாள் சிவசக்தி...’ (தாய்), ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினைத் தொட்டிலில் கட்டி வைத்தேன்...’ (நீதிக்குத் தலை வணங்கு) எல்லாமே நம்முள் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பாடல்கள்தான். கே.பி.சுந்தராம்பாள், பி.பானுமதி மாதிரி தனக்கென பிரத்யேக குரல் வளம் கொண்டவர் வரலட்சுமி.
எஸ்.வரலட்சுமியை நான் கடைசியாகப் பார்த்தது ‘குணா’ படத்தில்தான். அதுதான் அவரது கடைசி படம் என்று நினைக்கிறேன். ஆனால், முதன்முதலில் பார்த்தது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில். கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாவாக வருவார் எஸ்.வரலட்சுமி. ஒரு மாவீரனின் மனைவி என்பதற்குரிய கம்பீரத்தோடு இருப்பார்.
அதில் ஒரு ஸீன் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. (1979-ல் வேலை தேடி சென்னையில் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில்தான், அந்தப் படத்தை நான் கடைசியாகப் பார்த்தேன்.) அப்பா வீரபாண்டிய கட்டபொம்மன் (சிவாஜி) கொள்ளையர்களோடு போரிட்டு அடக்கிவிட்டுக் களைத்துப் போய் அரண்மனைக்கு வருவார். அவர் தூங்குவதற்காக அவரின் மகள் தன் அம்மாவிடம், ‘அம்மா! நீ பாடு; நான் ஆடறேன்; அதைப் பார்த்துக்கிட்டே அப்பா தூங்கட்டும்!’ என்று சொல்லும். உடனே வரலட்சுமி, ‘சிங்காரக் கண்ணே, உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி..!’ என்று பாடுவார். அந்தப் பாட்டும் டீடிஎஸ் ரகம்தான்.
கே.பி.எஸ். போல மிகக் கண்ணியமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலுமே வரலட்சுமியைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, வார இதழ் ஒன்றில், சின்ன வயதில் வரலட்சுமி நடித்த கவர்ச்சியான ஸ்டில் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். அது அப்படியொன்றும் ஆபாசமான ஸ்டில் கிடையாது. ஆனாலும், எஸ்.வரலட்சுமியை அந்தத் தோற்றத்தில் பார்த்தபோது, மனசுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆரம்பக் காலத்தில் ஒரு நடிகையாக அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்க வேண்டி இருந்திருக்கலாம். பின்னர் அவற்றை மறுத்துக் கண்ணியமான பாத்திரங்களையே தேர்வு செய்திருக்கலாம். என் மனதில் அவர் மீது எழுந்திருந்த ஒரு மரியாதையின் காரணமாகவே, அந்தப் பழைய ஸ்டில் சங்கடத்தை அளித்தது.
அதே போல்தான் ‘குணா’ படத்திலும்! அதில் தாசிகள் கூட்டத்தின் தலைவியாக வருவார் வரலட்சுமி. உடையிலும் தோற்றத்திலும் கடுகளவு ஆபாசமும் இல்லை என்றாலும், அப்படியொரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கத் தேவையில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. அவரை சாதாரண நடிகையாக நான் பார்க்கவில்லை என்பதால் இதைச் சொல்கிறேன்.
நான் ஏதோ அவரை ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் வெளியான சமயத்தில், சில காலம் கொஞ்சம் முன்னே பின்னேதான் நடிக்க வந்திருப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியோடு அறிமுகமானவர் என்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்தேன்.
ஆனந்த விகடனில் 1938-ல் வெளியான தொடர்கதை ‘சேவாசதனம்’. இந்தி நாவலாசிரியர் பிரேம்சந்த் எழுதியதன் தமிழாக்கம் அது. அந்த நாவல்தான் அதே பெயரில் திரைப்படமானது. அதில் அறிமுகமானவர்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரோடு அதில் நடித்திருக்கிறார் எஸ்.வரலட்சுமி என்பது எனக்கு ஆச்சரியமான செய்தி. கீழே உள்ள படம் ‘சேவாசதனம்’ ஸ்டில். இதில் எம்.எஸ். யார், எஸ்.வரலட்சுமி யார் என்று தெரிகிறதா? இடப்புறம் இருப்பவர் எம்.எஸ். வலப்புறம் எஸ்.வரலட்சுமி.திருத்தமான முகமும், நல்ல குரல் வளமும், கணீர்க் குரலும், சுத்தமான உச்சரிப்பும் கொண்ட எஸ்.வரலட்சுமி நடித்த படங்கள் என்று விரல் விட்டால், நமக்குத் தெரிவது வீ.பா.க.பொம்மன், ரா.ரா.சோழன், கந்தன் கருணை, பூவா தலையா, பணமா பாசமா, மாட்டுக்கார வேலன், நீதிக்குத் தலைவணங்கு போன்று பத்துப் பன்னிரண்டு படங்கள்தான். ஆனால், வரலட்சுமி போன்ற ஒரு திறமையான நடிகைக்கு, அதுவும் 1938-லேயே அறிமுகமாகி தொடர்ந்து ‘குணா’ வரையிலும் நடித்து வந்திருக்கும் ஒரு நடிகைக்கு இது மிகவும் குறைவான எண்ணிக்கையல்லவா?
எண்ணிக்கை ஒரு புறம் இருக்கட்டும். அவர் நடித்து மனதில் பளிச்சென்று நிலைத்திருப்பதுதான் என்ன? வாயாடி மாமியார் கேரக்டர்கள்தானே! இன்றைக்கு தொலைக்காட்சி சீரியல்களில் வடிவுக்கரசியும், நளினியும், சாந்தி வில்லியம்ஸும் செய்கிற அதே கேரக்டர்களைத்தானே வரலட்சுமியும் செய்தார்! அந்த மாதிரி கேரக்டர்கள் செய்வதற்கு மட்டும்தான் அவர் லாயக்கானவராகிப் போனாரா?
‘எல்லா விதமான கேரக்டர்களையும் செய்துவிட்டார்; இனி அவர் செய்வதற்கு ஒன்றுமேயில்லை!’ என்று சொல்லிச் சொல்லியே சிவாஜி கணேசனைப் பின்னாளில் பலப் பல படங்களில் உருப்படாத கேரக்டர்களைக் கொடுத்து வீணடித்துவிட்டார்கள். நல்ல நடிகை-கம்-பாடகி எஸ்.வரலட்சுமியை அப்படிக்கூட அதிகம் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை தமிழ்த் திரையுலகம்.
நினைக்க நினைக்கப் பெருமூச்சுதான் எழுகிறது.
*****
சரித்திரத்தைப் பாடம் படிப்பது சுலபம்தான்; சரித்திரத்திலிருந்து பாடம் கற்பதுதான் கஷ்டம்!
சரித்திரத்தைப் பாடம் படிப்பது சுலபம்தான்; சரித்திரத்திலிருந்து பாடம் கற்பதுதான் கஷ்டம்!
9 comments:
"சரித்திரத்தைப் பாடம் படிப்பது சுலபம்தான்; சரித்திரத்திலிருந்து பாடம் கற்பதுதான் கஷ்டம்!"
well said ரவிபிரகாஷ்...
Nice post Thanks...
//நினைக்க நினைக்கப் பெருமூச்சு
தான் எழுகிறது//
எனக்கும் தான்.
ரேகா ராகவன்.
நல்ல பகிர்வு.
அவர் நடித்த கடைசி படம் குணாதான் என்று நினைக்கிறேன்.
ஆனால் அதை கூட கமல் தான் செய்ய வேண்டியிருக்கிறது.
அந்த பிரத்தியேகக் கனிவும் அழுத்தமும் கொண்ட குரல் வேறு
யாருக்கும் வரா லட்சுமி ஆயிற்றே அவர்? இழப்பு பெரிது தான் நமக்கு.
--கே.பி.ஜனா.
(டீ.டி.)எஸ்.வரலட்சுமி என்கிற தலைப்பை ரசித்தேன்.
-கிருபாநந்தினி
புதிய வரவா புதுவை சிவா? வரவேற்கிறேன். பாராட்டுக்களுக்கு நன்றி!
சில திறமைசாலிகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை; சில திறமைசாலிகள் வீணடிக்கப்படுகிறார்கள். பெருமூச்சு வராமல் என்ன செய்யும்? பின்னூட்டத்துக்கு நன்றி ராகவன்!
‘குணா’ என்று நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் சூர்யா! அது சரி, ரொம்ப நாளாக உங்கள் வலைப்பூவில் பதிவிடவே இல்லையே, புதிய உலகப் பட டிவிடி எதுவும் சிக்கலையா?
//அந்த பிரத்தியேகக் கனிவும் அழுத்தமும் கொண்ட குரல் வேறு
யாருக்கும் வரா லட்சுமி// முதல் முறை படிக்கிறபோது, அவசரத்தில் அந்த வார்த்தை விளையாட்டை கவனிக்க மறந்துபோனேன். நல்ல நயமான பின்னூட்டம். நன்றி ஜனா!
தலைப்பை ரசித்தீர்கள்; புடவையை... ஸாரி, கட்டுரையை ரசித்தீர்களா கிருபாநந்தினி?
சிவாஜி இப்போது இல்லை ஆனாலும் வீணடித்தார்கள் என்று படிக்கும்போது எங்களுக்கும் பெருமூச்சு வருகிறது என்றால் அத்தனை பேரும் ஒரே மாதிரி யோசித்து இருப்பதாய்த் தானே அர்த்தம் - ரிஷபன்
ரிஷபன்! நீங்கள் இந்த வலைப்பூவுக்குப் புதிய வரவென்று நினைக்கிறேன். மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். பின்னூட்டத்துக்கு நன்றி! ஸ்பெஷலாக உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டுமே! உங்கள் (புனை)பெயர் ரிஷபன். என் ராசி ரிஷபம். (ஒருவேளை உங்கள் ராசியும் ரிஷபம் என்பதால்தான், அந்தப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்தீர்களோ?)
என்னை நினைவு இருக்கிறதா? ரிஷப ராசிதான் பெயர் காரணம் சாவி ஆபிசில் சந்தித்த நினைவுகள் இப்போதும் - ரிஷபன்
Post a Comment