பொய் அழகா, அழகில்லையா என்பது இருக்கட்டும். வாழ்க்கைக்குப் பொய் அத்தியாவசியம் என்பது என் கருத்து. பொய் இருப்பதால்தான் வாழ்க்கை அதிக சண்டை சச்சரவுகள் இல்லாமல் சுமுகமாக ஓடுகிறது.
“இன்றைக்கு நீ வைத்த சாம்பார் ஏ கிளாஸ்!” என்று காலையில் மனைவியிடம் பொய் சொன்னால்தான், ராத்திரிக்குச் சோறு கிடைக்கும். “உங்க ஐடியா பிரமாதம் சார்! எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் வித்தியாசமா சிந்திக்கத் தோணுது!” என்று மேலதிகாரியிடம் பொய் சொன்னால்தான் பிரமோஷன், இன்க்ரிமெண்ட் எல்லாம் கிடைக்கும். ஆனால், இங்கே ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொய்யைப் பொய் மாதிரியே சொல்லிவிடக் கூடாது. உண்மை போல் சொல்ல வேண்டும். எதிராளிக்கு நாம் சொல்வது பொய் என்று தெரிந்திருந்தாலும், நாம் அதை மகா உண்மை போலவே சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல வேண்டும். குரலிலும் நக்கல், நையாண்டி, எடக்கு, மடக்கு இதெல்லாம் இல்லாமல் சொல்ல வேண்டும்.
உண்மையில், பொய் சொல்வது என்பது ஒரு பெரிய கலை! நீங்கள் பொய் சொல்கிறீர்களா இல்லையா என்பதைக் கொஞ்சம் அனுபவஸ்தர்கள் உங்கள் கண்களைப் பார்த்துக் கண்டுபிடித்து விடுவார்கள். டெலிபோனில் பேசினாலும், உங்கள் குரலை வைத்து நீங்கள் சொல்வது பொய்யா, மெய்யா என்று கண்டுபிடித்துவிடும் ஜீனியஸ்களும் இருக்கிறார்கள்.
சாவியில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில் ஜெயபால் என்று எனக்கொரு உதவியாளர் இருந்தார். ரொம்ப மும்முரமாக நான் பத்திரிகை வேலையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஓர் அறுவை கிராக்கியிடமிருந்து போன். அனுபவத்தில், ரிங் வரும்போதே எனக்குத் தெரியும், அந்தச் சமயத்தில் யார் போன் செய்வார்கள் என்று. எனவே ஜெயபாலிடம், போனை எடுத்து யார் என்று கேட்டு, அவர் என்னைக் கேட்டால், நான் ஆபீசுக்கே வரவில்லை என்று சொல்லிவிடும்படி சொன்னேன். ஜெயபாலும் போனை எடுத்தார். எதிர்முனையில் நான் யூகித்த அதே ஆசாமிதான். அவர் என்னைக் கேட்டார். “ரவி சார் இன்னிக்கு ஆபீசுக்கே வரலீங்களே!” என்றார் ஜெயபால். எதிர்முனையில் அவர் உடனே, “அட, ஏம்ப்பா பொய் சொல்றே! அங்கே உன் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கார். கூப்பிடு அவரை!” என்றார் அதட்டலாக. ஜெயபாலுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! ரிசீவரின் வாயைக்கூடப் பொத்தாமல், தன் இடத்தில் இருந்தபடியே, “ரவி சார்! நீங்க பக்கத்துலதான் இருக்கீங்கன்னு சொல்றாரு சார் அவரு! நீங்க ஆபீசுக்கே வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறாரு சார்! நீங்க இங்கே இருக்குறதை எப்படியோ கண்டுபிடிச்சுட்டாரு சார்!” என்றார் கத்தலாக. அப்புறம் எதிர்முனை நண்பரிடம் நான் அசடு வழிந்து சமாளித்தது தனிக் கதை.
எனவே எல்லாரும் பொய் சொல்ல முடியாது. குரல், கண்கள், உடல் மொழி அனைத்தையும் தன் விருப்பத்துக்கேற்ப இயக்கும் திறமை உள்ள ஒருவர்தான் நல்ல பொய்யராகத் திகழ முடியும்.
எல் போர்டு பொய்யர்களுக்குப் பெரிதும் கைகொடுத்து உதவிடும் வகையில் இன்றைய நவீன வகை செல்போன்களில் வசதிகள் இருப்பதாக அறிகிறேன். (என்னிடம் இருப்பது வெறுமே பேசுவதற்கு மட்டுமேயானது. அதை நான் வீட்டுக்கு வெளியே எடுத்துச் சென்று பேசினால் தங்கள் இமேஜ் ஸ்பாயில் ஆவதாக என் பிள்ளைகள் சொல்கிறார்கள்.) செல்லில் பேசும்போது, தான் வசதியாக ஏ.சி. அறையில் உட்கார்ந்திருந்தாலும், ஏதோ கசகசவென்ற டிராஃபிக்கில் இருப்பதுபோல் எதிராளிக்குப் பின்னணி இசையோடு தன் குரலைக் கொடுக்கும்; ஒரு தியேட்டரில் அமர்ந்திருப்பது போன்ற எக்கோவுடன்; ஒரு
மீட்டிங் ஹாலில் உட்கார்ந்திருப்பது போன்ற பலப்பல பேச்சுக் குரல்களுடன்; கொட்டும் மழையில் இருப்பது போன்ற இரைச்சலுடன்; ஒரு கல்யாண மண்டபத்தில் இருப்பது போன்ற சந்தடிகளுடன் எல்லாம் எதிராளிக்கு நம்மைப் பொய்யாய்க் காட்டும். அவரும் பாவம், நாம் பேசுவது காதில் விழாமல் ‘அப்புறம் பேசுகிறேன்’ என்று சொல்லி வைத்துவிடுவார்.
இது பரவாயில்லை; என் நண்பர் ஒருவர் வைத்திருந்த மொபைல் இன்னும் சூப்பர். நம் குரலை எதிர் முனையில் உள்ளவர்களுக்குக் குழந்தைக் குரலாக மாற்றி அனுப்புகிறது. நாம் மிமிக்ரி செய்ய ரொம்ப மெனக்கிட வேண்டாம். நாம் நம் சொந்தக் குரலிலேயே, “அப்பா வெளியே போயிருக்கார் அங்கிள்” என்று சொன்னால் போதும்; எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அது ஏழெட்டு வயதுச் சிறுமியின் குரலாக ஒலிக்கும். இன்னும் ஜுரத்தில் கிடப்பவனின் களைத்த குரலாக, தொண்டை கட்டிப்போய் பேசவே முடியாமல் இருப்பவனின் கரகர குரலாகவெல்லாம் தேவையான ‘மோடு’க்கு மாற்றியமைத்துக் கொண்டு பேசலாம்.
வாழ்க்கையில் நாம் தினசரி எத்தனை எத்தனைப் பொய்களைச் சந்திக்கின்றோம்? சும்மா ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன்.
1. உங்க வீட்டுக் காபி மாதிரி நான் வேற எங்கேயுமே சாப்பிட்டது கிடையாது சார்!
2. இப்பத்தான் உங்களைப் பத்தி நினைச்சேன்; இதோ, நீங்களே வந்துட்டீங்க. உங்களுக்கு ஆயுசு நூறு!
3. அடடா! கொஞ்சம் முன்னே வந்து கேட்டிருக்கக்கூடாதா சார்... கையில் இருந்தா செலவழிஞ்சுடப் போகுதேன்னு சொல்லி இப்பத்தான் கொண்டு போய் எல்.ஐ.சி. பிரீமியம் கட்டிட்டு வரேன்.
4. ஸாரி சார்! என் பசங்க சும்மா இல்லாம செல்லை சைலண்ட் மோடுல மாத்தி வெச்சிருக்காங்க போலிருக்கு. ரிங்கே வரலை. அதான் எடுக்கலை!
5. சேஞ்ச் இல்லை. ஐம்பது பைசா இருந்தா கொடுங்க, ஒரு ரூபாயா தரேன்!
6. ஆபீசுல டைட் வொர்க் சார்! லீவே கிடைக்கலை. அதான், உங்க கல்யாணத்துக்கு வர முடியலை.
7. படிச்சேன் சார். ரொம்பப் பிரமாதம். சமீபத்துல, இந்த ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள இப்படி ஒரு அற்புதமான கதையைப் படிச்சதா ஞாபகம் இல்லை.
8. பாவம், நல்ல மனுஷன். எப்போ மெட்ராஸ் வந்தாலும் என்னைப் பார்க்காம போக மாட்டார். கலகலன்னு சிரிச்ச மூஞ்சியா இருப்பார். போய்ட்டார்!
9. அவங்க எனக்கு மாமியார் இல்லே; அம்மா!
10. அவளை என் மருமகளா நினைக்கிறதில்லே, மகளாத்தான் நினைக்கிறேன்.
11. அசினின் சிவப்பழகை நீங்களும் பெற வேண்டுமா? இதோ...
12. சின்ன வயசுல கஷ்டப்பட்டதுக்கு, நம்ம குரூப்ல நீ ஒருத்தனாவது இன்னிக்கு கார், பங்களான்னு வசதியா இருக்கிறதைப் பார்த்து எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்குடா!
13. இந்தப் பட்டுப்புடவையில உங்களைப் பார்க்குறப்போ அப்படியே மகாலக்ஷ்மியே எதிர்ல நிக்கறது மாதிரி இருக்கு மாமி!
14. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான்!
15. இந்த மாதிரி ஒரு டாப் லெவலுக்கு நீ வருவேன்னு எனக்கு அன்னிக்கே தெரியும். சின்ன வயசுலேயே அதுக்கான அடையாளங்கள் உன் கிட்டே தெரிஞ்சுது!
16. பணத்தை நான் பொருட்படுத்தறதே இல்லை சார்! பணமா சார் வாழ்க்கை?
17. ஒரு வேலையில நான் மூழ்கிட்டேன்னா எனக்கு டயம் போறதே தெரியாது!
18. தமிழே இன்னொரு தமிழை வாழ்த்துகிறது!
19. ஆமாம் சாமி போடறவனை, ஜால்ரா அடிக்கிறவனை, சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுறவனை, உங்களை மாதிரி இல்லையாக்கும் ஆகா ஓகோன்னு மூஞ்சிக்கு நேரே புகழ்றவனையெல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது.
20. தங்கள் சிறுகதையைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்!
*****
பொய்களில் மூன்று வகை உண்டு. 1. பொய், 2.பச்சைப் பொய், 3. புள்ளிவிவரம்.
பொய்களில் மூன்று வகை உண்டு. 1. பொய், 2.பச்சைப் பொய், 3. புள்ளிவிவரம்.
7 comments:
ஆஹா, பிரமாதம் (இது பொய்யான பாராட்டு இல்லை சார் :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
உண்மை + உண்மை = பொய் என்று எங்கோ கேட்டது நினைவுக்கு வருகிறது. அதாவது குதிரை + கொம்பு = குதிரைக் கொம்பு.
இந்த கட்டுரை செம இன்டரஸ்டிங். (கண்டிப்பா #21 இல்லைங்க)
பொய்யி பத்தி புட்டு புட்டு வெச்சிருக்கிறது மெய்யாலுமே ஜோராதான் கீது. ஆனா பொய்யை மகா உண்மை போல சீரிஸா மூஞ்சியை வெச்சிட்டு சொல்லணும்னு சொல்லிக்கிறீங்களே அதான் கொஞ்சம் ஒதைக்குது. என் ஒய்ப் கிட்டஒரு தபா, 'இன்னைக்கு நீ வெச்ச மாதிரி ருசியான ஒரு சாம்பாரை யாருமே எப்பவுமே வெச்சதில்லே'ன்னு நம்பறா மாதிரி சீரிஸா உட்டேன். 'போன வார சாம்பாரை பிரிஜிலேர்ந்து எடுத்து சூடு பண்ணிக் கொடுத்தாக் கூட தெரியலியே, உங்களை வெச்சிட்டு எப்படித்தான் குடும்பம் நடத்தறேனோ..'ன்னு சொல்ற அளவு நம்பிட்டா.
_கே.பி. ஜனா
இந்த பதிவு அருமையாக உள்ளது.
(இது பொய்யோ, பச்சைப் பொய்யோ, சிவப்பு பொய்யோ இல்லை.)
:-)
பதிவு நல்லாயிருக்கு.
இதையும் உங்க லிஸ்ட்ல சேர்த்து விடாதீர்கள்.
நீங்கள் ஒரு இடுகை புதிதாக இட்டுள்ளீர்கள் என்று நண்பர் கே.பி.ஜனா ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அது பொய்யாக இருக்குமோ என்று உங்கள் blog-ஐ திறந்து பார்த்தால் அட மெய்யாலுமே பொய் பற்றி நல்லாவே எழுதி இருக்கீங்க சார்.
ரேகா ராகவன்.
திரு.சொக்கன், உங்கள் பாராட்டு பொய் இல்லைதான். எனக்குத் தெரியும். உங்கள் மனமார்ந்த பாராட்டுதலுக்கு என் உளங்கனிந்த நன்றி! (இதுவும் பொய்யான நன்றி இல்லை!)
திரு.சத்யா, உண்மை + உண்மை = பொய்யா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பொய் + பொய் = உண்மை என்கிற சூத்திரம் தெரியும். பாராட்டுக்களுக்கு நன்றி!
திரு.ஜனார்த்தனன், முழுப்பொய் வேலைக்காவாது சார்! சுத்தத் தங்கத்தை நகையாக்க முடியுமா? கொஞ்சம் செம்புக் கலக்க வேண்டியிருக்குது இல்லியா? அது மாதிரி கொஞ்சூண்டு உண்மையைக் கலந்து ட்ரை பண்ணிப் பாருங்க, கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்!
திரு.ராஜு! புதியவரான தங்களை வருக, வருகவென்று வரவேற்கிறேன். பொய் பத்தின கட்டுரையைப் பாராட்டினாக்கூட இதையும் பொய்யின்னு நினைச்சுடுவேனோன்னு சங்கடமாயிருச்சு பாருங்க எல்லாருக்கும்!
திரு.பட்டர்ஃப்ளை! லிஸ்ட்ல எல்லாம் சேர்க்க மாட்டேன். (நெசம்மா!)
திரு.ரேகா ராகவன், உங்க பாராட்டைப் படிச்சதுல மெய் மறந்துட்டேங்க!
Post a Comment