டி.எம்.எஸ்ஸை அழவைத்த பாடல்!

ன் அபிமான பாட்டுத் தலைவன் டி.எம்.எஸ். பற்றி எங்கே, யார் , என்ன எழுதியிருந்தாலும் உடனே வாங்கிப் படித்துவிடுவேன். அப்படி சமீபத்தில் டி.எம்.எஸ். பற்றி கவிஞர் வாலி எழுதியிருந்ததையும் படித்தேன்.

மும்பையில், நோய்வாய்ப்பட்டு சகோதரர் வீட்டில் தங்கியிருந்த தன் தாயார், டி.எம்.எஸ்ஸைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, அதன்படி அருகில் வாணி வித்யாலயாவுக்கு வந்திருந்த டி.எம்.எஸ். அவர்களிடம் கவிஞர் வாலி போய் தன் தாயாரின் விருப்பத்தைச் சொன்னவுடன், மறுப்பேதும் சொல்லாமல் டி.எம்.எஸ். உடனே கிளம்பி வந்து, தாயாரின் அருகில் அமர்ந்துகொண்டு பரிவோடு விசாரித்து, அவர் கேட்டுக்கொண்டபடி இரண்டு திரைப்படப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார் என்று சமீபத்திய குமுதம் இதழில் சொல்லியிருக்கிறார் கவிஞர் வாலி. இதன் பின்னணியில், என் அபிமான பாட்டுத் தலைவன் டி.எம்.எஸ்ஸின் பேரன்பையும் பெரியமனசையும் வெளிக்காட்டும் விதமாக ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது.

டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தான். எத்தனையோ வைத்தியர்களைப் பார்த்தும், எத்தனையோ சிகிச்சைகள் செய்தும் அவன் உடல்நிலை தேறவே இல்லை. ‘முருகா… முருகா…’ என்று அனத்திக்கொண்டு இருந்த அவனைப் பார்க்கப் பார்க்க பெற்ற உள்ளம் துடிதுடிக்க, அருகே இருந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார் டி.எம்.எஸ். அவர் மனம் பிள்ளை படும் துயரைக் காணச் சகியாமல் அழுதுகொண்டு இருந்தது.

அதே நேரம், ‘பாகப் பிரிவினை’ படத்துக்காக அவர் போய் ஒரு பாடலைப் பாடிக்கொடுக்கவேண்டிய கட்டாயம். தன்னால் ஏதும் தாமதம் ஆகிவிடக்கூடாதே என்று, மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, மகனிடம் விடைபெற்று, ஸ்டுடியோவுக்குப் போய் அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ். வழக்கமாக ஓரிரண்டு முறை ரிகர்சல் பார்ப்பது வழக்கம். ஆனால், அந்தப் பாடலுக்கு ரிகர்சல் ஏதும் பார்க்கவில்லை. பாடல் வரிகளைக் கேட்டுக்கொண்டார். மெட்டு என்ன என்று கேட்டுக் கொண்டார். இசையமைப்பாளரை ஒருமுறை பாடச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான்! ஒரே டேக்கில் பாடிப் பதிவாகிவிட்டது அந்தப் பாடல்! அப்போது அவர் இருந்த சோகமான மனநிலையோடு அந்தப் பாடல் வரிகளும் மெட்டும் ஒத்துப் போயிருந்ததால் பாடல் மிகக் கச்சிதமாக அமைந்துவிட்டது.

அதுதான், ‘ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?’ பாடல்!

பாடலைப் பாடிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய டி.எம்.எஸ்ஸுக்குப் பேரதிர்ச்சி! உடல்நிலை சரியில்லாத மகன் உயிரை விட்டிருந்தான். துடிதுடித்துப் போனார் டி.எம்.எஸ். ஆற்றாது அழுது தீர்த்தார்.
அத்தனை பேராலும் பாராட்டப்பட்ட அந்தப் பாடல், அவர் வரையில் ஒரு மீளாத் துயரத்தின் நினைவுச் சின்னமாக ஆகிவிட்டது. ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் டி.எம்.எஸ். மனத்தின் சோகத்தைக் கிளறும் பாடலாகிவிட்டது. எனவே, அந்தப் பாடலை அவர் அறவே வெறுத்தார்.
எந்த மேடையிலும் அதைப் பாடுவதில்லை என்று தவிர்த்தார். எந்தக் கச்சேரியில் எத்தனைப் பெரிய பிரமுகர் கேட்டுக்கொண்டாலும், ‘மன்னிக்கவும். அதை நான் பாடமாட்டேன்’ என்று பிடிவாதமாக மறுத்துவிடுவார்.. அவ்வளவு ஏன்… வீட்டில் ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போது ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் ஒலித்தால், சட்டென்று எழுந்து போய், ரேடியோவை அணைத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் நெஞ்சில் காயம் ஏற்படுத்தியிருந்தது அந்தப் பாடல்.

பாகப் பிரிவினை படம் வெளியானது 1959-ஆம் ஆண்டு.

1960-ல்… நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞர் வாலியின் தாயார் தன்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பிச் சென்று, அந்த மூதாட்டியைச் சந்தித்தார் டி.எம்.எஸ். அந்தத் தாயார் டி.எம்.எஸ்ஸைப் பாடச் சொல்லிக் கேட்ட பாடல்… ‘ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?’

ஒருகணம் உள்ளுக்குள் அதிர்ந்து போனார் டி.எம்.எஸ். இருப்பினும் சுதாரித்துக்கொண்டார். ‘இங்கே இந்தத் தாய் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இவர் விரும்பிக் கேட்கும் பாடலைப் பாடி மகிழ்விப்பது என் கடமை!’ என்று முடிவெடுத்தார். தனது வைராக்கியத்தைக் கைவிட்டார். அதே உருக்கமும் துயரமும் இழையோடும் குரலில் ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடினார். எத்தனைப் பெரிய மனசு!

இந்த பேரன்பு மிக்கவரைத்தான் ஆணவம் பிடித்தவர், பிறரை மதிக்காதவர், திமிர் பிடித்தவர் என்று ஒரு கூட்டம் இன்னும் சொல்லிக்கொண்டு திரிகிறது! 

0 comments: