காந்தர்வக் குரலுக்கு வயது 86!


நுண்ணிய சங்கீத ஞானமும் தெள்ளிய தமிழ் உச்சரிப்புமாக இரண்டு தலைமுறைகளைக் கட்டிப் போட்ட குரலின் பெயர் - டி.எம்.எஸ்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒரு ஹோட்டல் அறையில் சாதகம் செய்யும்போது ஜன்னல் வழியாகப் பார்த்து, தானும் அதுபோலப் பாட வேண்டுமென்று ஆசைப்பட்ட சிறுவனாக இருந்து, பிற்காலத்தில் ஏகப்பட்ட பேர்களின் காது மடல்களில் கூடுகட்டிக் குடியிருந்த வானம்பாடி என்பார்கள் டி.எம்.சவுந்திரராஜனை.

டி.எம்.எஸ்-ஸின் எண்பத்தாறாவது பிறந்த நாள் பிரம்மாண்டமான விழாவாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த வயதிலும் மாறாத குரல் வளத்துடன் மலேசியாவிலும் மதுரையிலும் கச்சேரிகள் முடித்துவிட்டுத் திரும்பியிருந்த டி.எம்.எஸ்-ஸைச் சந்தித்தோம்.

''உங்களுக்கு மதுரையில் பாராட்டு விழா நடக்கப் போகிறதாமே...'' என்றதும் ஸ்ருதி பிசகாத குரலில் பேச ஆரம்பித்தார்.

''ரசிகர்கள் என்மேல் வைத்திருக்கிற அபிமானத்தை நினைத்தால் ஆனந்தமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. போன வருடம் மார்ச் 24-ம் தேதி என் 85-வது பிறந்தநாளை வைரமுத்து கொண்டாடினார். அந்த மேடையில் என்னைப் பாராட்டிப் பேசிய தம்பி மு.க.அழகிரி, 'அடுத்த ஆண்டு உங்கள் பிறந்த நாளை நான் பெரும் விழாவாகக் கொண்டாடப் போகிறேன். அது எப்படி இருக்கும் என்று அப்போது பார்ப்பீர்கள்' என்று பேசினார். கோடை மழை காரணமாக அந்த விழா தள்ளிப்போயிருக்கிறது.

அழகிரிக்குப் பால்யத்திலிருந்தே என்னை ரொம்பப் பிடிக்குமாம். என் பாடல்களை கேஸட்டில் பதிவு செய்து வாக்மேனில் கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஒருநாள் அவர் கண்ணை மூடிப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த கலைஞர், 'என்ன பாட்டு?' என்று கேட்டுவிட்டு, 'நீ மட்டும்தான் கேட்கணுமா? பெரிய டேப்ரிக்கார்டரில் போடு. நானும் கேட்கிறேன்' என்றாராம். இதை தம்பி அழகிரியே என்னிடம் சொன்னார்!''

''உங்கள் வாழ்க்கை வரலாறு தொலைக் காட்சித் தொடராக வரப்போகிறதாமே... அதற்கான வேலைகளெல்லாம் எப்படிப் போகின்றன..?''

''என் ஐம்பது ஆண்டுகால இசைப் பயணம் 'இமயத்துடன்...' என்கிற பெயரில் தொடராகத் தயாராகிறது. ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குநரா இருந்த விஜய்ராஜ் இயக்குகிறார். சினிமா உலகத்துக்குள் நுழைவதற்காக நான் பட்ட பாடுகளை எல்லாம் பழைய கால ஸ்டுடியோவிலேயே ஷூட் பண்ணியிருக்கார். பழம்பெரும் இசையமைப்பாளர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் இவங்களுக்கெல்லாம் நான் பாடின பாடல்கள், அவங்களோட என் அனுபவங்கள்னு கலந்துகட்டித் தயாராகி இருக்கிறது. மலேசியாவுக்கெல்லாம் போய் ஷூட் பண்ணியிருக்கோம்.
தொடர் தயாராகும்போது ஒருகட்டத்தில் சின்னதா முடை வந்துச்சு. அதைக் கேள்விப்பட்ட மு.க.அழகிரி, விஜய்ராஜைக் கூப்பிட்டனுப்பினார். 'இந்தத் தொடரை நல்லா எடுங்க. கலைஞர் டி.வி-யில் போட ஏற்பாடு செய்யறேன். வேற எந்த உதவியா இருந்தாலும் செய்றேன்'னு சொல்லியிருக்கார் அழகிரி. அதுக்கப்புறம் வேகம் பிடிச்ச ஷூட்டிங், இப்போது முடியும் கட்டத்துல இருக்கு. 'கிருஷ்ணவிஜயம்' படத்துக்காக 1946-ல் பதிவான என் முதல் பாடலான, 'ராதே நீ என்னைவிட்டு ஓடாதேடி' பதிவான கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில்கூடப் படமெடுத்திருக்காங்க!'' என்று ஓர் இளைஞரின் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டவர்,

''அறுபது வருஷங்களா இடைவெளி விடாமல் பாடிட்டிருக்கிறதால, இன்னும் என் சாரீரம் நல்லா இருக்கு. அதான் இன்னும் பாடிக்கிட்டிருக்கேன். எல்லாம் அவன் அருள்!'' என்று வானத்தைக் காட்டுகிறார்.

''இந்த வயதிலும் உற்சாகமிழக்காமல் இருப்பது என்ன ரகசியம்?'' என்றோம்.

''காலை ஐந்து மணிக்கு எழுந்துடுவேன். ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தபடி வீட்டுக்குள்ளேயே வாக்கிங் செய்வேன். அப்புறம் அஞ்சு நிமிஷம் ஓய்வு. டாக்டர் ஒருத்தங்ககிட்டே, 'ஆல்ஃபா மைண்ட் பவர்' கத்துக்கிட்டேன். அந்த முறையில் உட்கார்ந்து, 'என் நோய் நொடியெல்லாம் போகட்டும். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நோய்களே, என்னை விட்டுப் போய்விடுங்கள்' என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொள்வேன். இயற்கையை ஒட்டி வாழ்வதால், அதுவே எனக்குப் பாதுகப்பாக இருக்கிறது. இறைவன் அருளால் பாடுகிறேன். அவற்றைக் கேட்டு என் ரசிகர்கள் மனமார வாழ்த்துகிறார்கள். அந்த வாழ்த்துகளாலேயே குறையேதும் இல்லாமல் வாழ்கிறேன்!'' - நெகிழ்ச்சியோடு கலகலவென சிரிக்கிறது அந்த வெண்கலக் குரல்!

- பி.என்.பரசுராமன்
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்


(ஜூனியர் விகடன் ஏப்ரல் 13, 2008 தேதியிட்ட இதழிலிருந்து...)

பின்குறிப்பு: இந்த இதழ் வெளியான ஜூனியர் விகடன் இதழை எடுத்துக்கொண்டு திரு.பி.என்.பரசுராமன் அவர்களோடு சென்றபோதுதான் என் அபிமான பாட்டுத் தலைவன் டி.எம்.எஸ். அவர்களை முதன்முறை சந்தித்தேன்.

2 comments:

சே. குமார் said...

நல்ல பகிர்வு...

கந்தரக் குரலோனின் குரலில் மயங்காதோர் யார் உண்டு?

Amuthan Sekar said...

Dear Sir, I have read all your articles in this blog. I enjoyed very much from reading your articles.

Please write more articles in your blog. Your writing style is like "kalki's" style. I like so much your writing's.

Thanks,
Amuthan Sekar