ராஷ்மி பன்சால் எழுதிய ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ புத்தகத்தைத் தமிழ்ப்படுத்திக் கொடுத்துவிட்டேன். விரைவில் விகடன் பிரசுரமாக அது வெளியாகவிருக்கிறது.
ராஷ்மி பன்சாலின் ஒவ்வொரு புத்தகமுமே அருமையான தொகுப்புதான். இதற்கு முந்தைய அவரின் புத்தகங்களான ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ மற்றும் ‘கனெக்ட் தி டாட்ஸ்’ ஆகிய புத்தகங்களையும் நான்தான் தமிழாக்கம் செய்தேன். அந்த இரண்டு புத்தகங்களை விட, ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ புத்தகம் மிக மிக அற்புதமானதாக இருக்கிறது. வெறுமே ஒரு தொழிலாக மட்டும் இல்லாமல், மனித குலத்தை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற, மனித குலத்துக்குச் சேவை செய்வதாக அமைகிற ஒரு தொழிலை மேற்கொண்டிருக்கிறவர்களைப் பற்றிய தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
புத்தகத்தின் மேன்மை எத்தகையது என்பதை உங்களுக்குச் சொல்வதற்காக, இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற முதல் கட்டுரையை முடிந்தவரையில் இங்கே சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.
***
ஒரு தனி மனிதனால் மலைகளை அசைக்க முடியும்; அற்புதங்களைப் படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் பிந்தேஷ்வர் பதக்.
பிந்தேஷ்வர் பதக், பிறப்பால் பிராமணர். பீகாரில், வைஷாலி மாவட்டத்தில், ராம்பூர் பாகல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். பிந்தேஷ்வரின் தாத்தா ஒரு புகழ்பெற்ற ஜோசியர். அப்பா ஆயுர்வேத மருத்துவர். ஆசாரமான பிராமணக் குடும்பம் அது.
பெரிய மதில் சுவருடன்கூடிய, அகலமும் நீளமுமான மிக விசாலமானதொரு வீட்டில் வளர்ந்தார் அவர். அந்த வீட்டில் மொத்தம் ஒன்பது அறைகள். பூஜை அறையும் உண்டு. ஆனால், அவ்வளவு பெரிய வீட்டில் கழிப்பறையே இல்லை என்பதுதான் விசித்திரம். அந்த வீட்டில் மட்டுமல்ல; அங்கே யார் வீட்டிலும் கழிப்பறை கிடையாது.
ஒவ்வொரு நாள் காலையும் 4 மணிக்குக் கூச்சலும் குழப்பமுமாய், அந்த வீடு ஏக ரகளையாக இருக்கும். சூரிய உதயத்துக்குள், அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லோரும் காலைக் கடன்களை முடித்துச் சுத்தபத்தமாகிவிட வேண்டும். யாராவது ஒரு பெண்மணிக்கு உடல் நிலை சரியில்லை என்றால், ஒரு வைக்கோல் கூடையிலோ அல்லது சாம்பல் நிரப்பிய மண்பானையிலோ சிரம பரிகாரம் செய்துகொள்ளலாம்.
இளம் வயது பிந்தேஷ்வர் இதையெல்லாம் கவனித்தார். இங்கே ஏதோ சரியில்லையே என்று அவருக்குத் தோன்றியது.
பிந்தேஷ்வர் நான்கு வெவ்வேறு பள்ளிகளில் படித்தார். எந்த ஒரு பள்ளியிலும் கழிப்பறை இல்லை. அங்கே ஒரு ஜமீன்தார் வீட்டில் மட்டும்தான் எடுப்புக் கழிப்பறை இருந்தது. அதுவும் அவர் வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவில் இருந்தது. அது வெகுவாக துர்நாற்றமடிக்கும். அதன் வழியாகக் கடந்து செல்லும்போதெல்லாம் மூக்கை இறுக்கப் பொத்திக்கொள்ள வேண்டியதுதான்.
கிராமத்துக்கு வெளியே வசித்த துப்புரவுப் பெண்மணி ஒருத்தி எப்போதாவது வந்து அதைச் சுத்தம் செய்துவிட்டுப் போவாள். அவளை அந்தக் கிராமத்தார் தீண்டத்தகாதவள் என ஒதுக்கி வைத்திருந்தார்கள். தவிர, அதே கிராமத்தில் வைக்கோல் கூடை பின்னுகிற குடும்பம் ஒன்றையும் தாழ்த்தப்பட்ட குடும்பம் என ஒதுக்கி வைத்திருந்தார்கள் ஊர்க்காரர்கள்.
அந்தக் குடும்பத்தில் யார் மீதேனும் இளம் பிந்தேஷ்வர் பட்டுவிட நேர்ந்தால் அவ்வளவுதான்... வீட்டில் ஒரு பெரிய ரகளையே நடக்கும். அவரை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று, அவரின் பாட்டி அவரை பசுவின் சாணத்தை, பசுவின் கோமியத்தை (சிறுநீர்), சில சமயம் மணலைக்கூட விழுங்கச் சொல்வாள். அவர் மறுத்துத் திமிறினால், சில பிள்ளைகளைக் கூப்பிட்டு அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள் ளச் சொல்லிவிட்டு, அவரது தொண்டையில் அவற்றை வலுக்கட்டாயமாகத் திணிப்பாள்.
இது ரொம்ப காலத்துக்கு முன்பு நடந்த சம்பவம்தான். இருந்தும், இது ஒன்றும் புராதன வரலாறு இல்லை. இந்தியாவின் சில பகுதிகளில் இன்றைக்கும்கூட இப்படியான நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பதற்காக தான் தீவிரமாகப் பணியாற்றும் காலமும் வரும் என்று பிந்தேஷ்வர் பதக் நிச்சயமாக அப்போது கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்.
பிந்தேஷ்வர் வளர்ந்த சமயத்தில், அந்தக் குடும்பம் துரதிர்ஷ்டத்தை எதிர்கொண்டது; சொத்துக்களையெல்லாம் விற்கவேண்டியிருந்தது. அதிலிருந்து மீளும் வழி, கல்விதான். பாட்னாவில், பி.என்.கல்லூரியில் பிந்தேஷ்வர் முதல் மாணவராகத் தேறினார். கல்லூரி விரிவுரையாளராக ஆவதுதான் தனக்குரிய எதிர்காலப் பாதை என்று தீர்மானித்தார். மரியாதைக்குரிய, நிலைத்து நிற்பதற்குரிய ஒரு வேலை அது. இன்றைக்கு டாக்டர், இன்ஜினீயர் தொழில்களுக்குச் சமமாக அன்றைக்கு மதிக்கப்பட்ட தொழில் அது!
இறுதித் தேர்வு வரையில் பிந்தேஷ்வர் அவரது வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஆனால், இறுதித் தேர்வில், எதனாலோ மூன்று பாடங்களில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று, நாலாம் இடத்துக்கு வந்தார். சொல்லப்போனால், மொத்தத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ்கூட அவருக்குக் கிடைக்கவில்லை.
நொறுங்கிப் போனார் பிந்தேஷ்வர். பின்னர் பள்ளி ஆசிரியராக ஆனார். தொடர்ந்து, பல்வேறு வகையான வேலைகளைச் செய்தார். கடைசியாக, குடும்பத் தொழிலான ஆயுர்வேத மருந்துகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டார்.
‘பீகார் காந்தி ஜன்ம சதாப்தி சமிதி’ என்றொரு அமைப்பு பற்றித் தனக்குத் தெரியும் என்றும், அடுத்த ஆண்டு (1969) பாபுஜியின் (காந்திஜி) நூற்றாண்டு விழாவை எப்படிக் கொண்டாடலாம் என்று அது இப்போது திட்டமிட்டுக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார் பிந்தேஷ்வரின் வக்கீல் நண்பர் ஒருவர். மாதம் ரூ.600 சம்பளத்தில் அங்கே ஒரு நிரந்தர வேலை கிடைத்தால், ஏற்க விருப்பமா என்று கேட்டார்.
‘காந்தி சந்தேஷ் பிரச்சார்’ என்னும் குழுமத்தோடு இணைந்து வேலை செய்தார் பிந்தேஷ்வர். பின்னர், சில உள்காய்ச்சல் காரணமாக துப்புரவுப் பகுதிக்கு மாற்றப்பட்டார். அது உண்மையில் ஒரு தண்டனை. ஆனால், பிந்தேஷ்வரின் உண்மையான வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியும் அதுதான்.
துப்புரவுப் பணியாளர்கள் கடைப்பிடிக்கும் ‘வாளிக் கழிப்பறை’ முறை சங்கடமான முறை. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்; வேறு ஒரு சிறந்த முறையை வழங்கவேண்டும் என அவர் நாளெல்லாம் அது பற்றியே தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்தார்.
ஒருவருடைய பிரச்னை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், வெறுமே ஒரே ஒரு தடவை அவர்களோடு உரையாடினால் போதாது; அவர்களோடு சில காலமாவது வாழ வேண்டும். எனவே, தீண்டத்தகாதவர் காலனி ஒன்றில் சில காலம் வசிக்கலாம் என்று முடிவுக்கு வந்தார். அங்கே வசிப்பதற்காக வாடகைக்கு ஓர் அறையைத் தேடியபோது, அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான போலா ராத்தைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார் பிந்தேஷ்வர். அதைக் கேட்டதும் ‘ஐயையோ! இது என்ன விபரீதம்!’ என்று அலறியே விட்டார் அவர். ஆனாலும், பிந்தேஷ்வர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
அந்தக் காலனியில் மூன்று மாதங்கள் தங்கினார். அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. அவை அவரது மனத்தில் அழியாத வடுவை ஏற்படுத்தின.
முதலாவது, ஓர் இளம் புது மணப்பெண் சம்பந்தப்பட்டது. அவள் தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த முதல் நாள், அவளது மாமியார், மாமனார் மற்றும் கணவன் மூவரும் அவளை எடுப்புக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். அந்தப் அருவருப்படைந்து அழுதாள்; கதறினாள். ஆனாலும் அந்த இளம் மணப்பெண்ணுக்கு வேறு வழியில்லை.
அதற்கு அடுத்துப் பத்து நாட்கள் கழித்து, இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது. கடைத்தெருவில் ஒரு சின்னப் பையனை காளை மாடு ஒன்று துரத்திக்கொண்டு வந்தது. அவனைக் காப்பாற்றப் பலர் வேகமாக முன்வந்தனர்.
அப்போது யாரோ ஒருவர், ‘‘இந்தப் பையன் துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவனாச்சே!’’ என்று கத்தினார்.
அவ்வளவுதான்... சட்டென்று அந்தக் கூட்டம் கலைந்துவிட்டது.
பிந்தேஷ்வரும் அவரது நண்பரும் ஓடிச் சென்று ஒருவழியாக அந்த மாட்டைத் துரத்தினார்கள். ஆனாலும், அந்தப் பையனை அதற்குள் மாடு முட்டிவிட்டது. பலத்த காயம் அடைந்திருந்த அவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டான்.
இந்த இரண்டு சம்பவங்களும் பிந்தேஷ்வரை அடியோடு உலுக்கியெடுத்துவிட்டன. கழிவறைப் பிரச்னைக்கு ஏதாவது தீர்வு கண்டாக வேண்டும் என்று மும்முரமாக அது பற்றிய தகவல்களைத் தேடித் தேடிச் சேர்த்தார்.
இறுதியில், அவரது கடும் உழைப்பால் ‘சுலப்’ நிறுவனம் பிறந்தது. கழிப்பறைகளுக்கான அவர்களின் மாதிரி அமைப்பு மிக எளிமையானது. குறைந்த செலவு, சிறிதளவே தண்ணீர் பயன்பாடு, கழிவுகளை உரமாகத் திருப்பும் செயல்முறை; அந்தந்தப் பகுதியிலேயே விரைவாகக் கட்டி முடிக்க ஏற்ற தன்மை; முக்கியமாக, அதைப் பராமரிக்க துப்புரவுப் பணியாளர்கள் தேவைப்படாதது. சுருக்கமாகச் சொன்னால், இரட்டைக் குழியுள்ள, நீர் பாய்ச்சுகிற, கூட்டு உரக் கழிவறைதான் சுலப்.
ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டே சிறப்பாக ஊற்றிக் கழுவுவதற்குத் தோதாக, சரிவான கழிப்பறைத் தட்டு உருவாக்கப்பட்டது. அந்தத் தட்டு, ஒரு சிறிய கால்வாய் மூலமாக இரண்டு குழிகளோடும் இணைந்திருக்கும். பயன்பாட்டுக்கு ஏற்ப சில மாதங்களோ, வருடங்களோ ஆகும், ஒரு குழி நிரம்புவதற்கு. அதன்பின் கழிவுகள் இரண்டாவது குழிக்குப் போகும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், முதல் குழி நிரம்பி, ஓய்வாக இருக்கும் நேரத்தில், அதனுள் இருக்கும் கழிவுகள் நல்லதொரு உரமாக மாறிவிடுகின்றன. நாற்றம் இல்லை, நோய் உண்டாக்கும் கிருமிகள் இல்லை, மனிதர்கள் சுத்தம் செய்யவேண்டிய தேவையில்லை. பிந்தேஷ்வர் தனியொரு ஆளாக இதைச் செய்து முடித்துவிட்டார். கழிப்பறைத் தட்டுகளை அவர் தன் கையாலேயே தயார் செய்து, பாலீஷ் பண்ணினார்.
அந்த வடிவமைப்பைக் கச்சிதமாகக் கொண்டு வர இரண்டு, மூன்று ஆண்டுகளாயிற்று. பத்தாண்டுகளில், அது மேலும் சிறப்புற்றது. பல வகையான அமைப்புகளில், வித்தியாசமான கட்டுமானப் பொருள்களில் தயாராயிற்று. ஆனால், அதன் அடிப்படை நோக்கம், இன்றைக்கும் மாறாமல் அப்படியே உள்ளது.
பிந்தேஷ்வர் இதைப் பரவலாக எடுத்துச் செல்லவேண்டும் என்கிற எண்ணத்தில், தனது ஆரம்ப முன்மாதிரி வடிவமைப்போடு அரசாங்கத்தை அணுகியபோது கிடைத்த முதல் எதிர்விளைவு: ‘‘ம்ஹூம்! இது வேலைக்காகாது. பிரயோஜனம் அற்றது. ஏமாற்று வேலை!’’
அதன்பின், அதற்காக இவர் அரசு எந்திரத்தோடு நடத்திய போராட்டங்கள் கணக்கில் அடங்காதவை. அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலப்பல பேருக்குக் கடிதங்கள் எழுதினார். நேரில் சந்தித்து விளக்கினார். வருடங்கள் ஓடிக்கொண்டே இருந்தன.
கடைசியாக, ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். மாநில அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படாத துப்புரவுப் பணியை மேற்கொண்டு, கழிவுகளை அகற்றும் ஒரு புதிய யோசனையை முன்வைத்த அந்தக் கடிதம் இந்திராவின் கவனத்துக்குப் போயிற்று.
பத்து நாட்களுக்குள் இந்திராஜியிடமிருந்து பீகார் முதலமைச்சர் கேதார் பாண்டேவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதன்பின், சரண் மாவட்டத்தில் ஒரு முன்னோட்டச் செயல் திட்டமாக இதைத் தொடங்குவதற்கு பீகார் முதல்வர் ஒப்புக்கொண்டார்.
1973-ல், அந்தத் திட்டத்துக்காக ரூ.25,000 அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்த வேலை தொடங்குகிற சமயத்தில், அதற்கான பொறுப்பு அதிகாரி மாற்றப்பட்டார். புதிய செயலர் மீண்டும் ஒருமுறை அந்த வேலையைக் கிடப்பில் போட்டார்.
வெறுத்துப்போன பிந்தேஷ்வர், பிறகு யோசிக்கவே இல்லை. கிராமத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த ஒரு சிறு நிலத்தை விற்றார். பின்னர், தன் மனைவியின் நகைகளை விற்றார். அப்படியும், தொழில் தொடங்குவதற்குப் போதுமான பணம் கிட்டவில்லை.
பல்வேறு இடையூறுகள், போராட்டங்களுக்குப் பிறகு, முதல் சுலப் கழிப்பறை, 1973 ஆகஸ்ட்டில் உபயோகத்துக்கு வந்தது. 1978-லிருந்து வங்காளம், ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம் என இந்தியா முழுவதும் பரவியது சுலப். இன்றைக்கு அது ஆப்கானிஸ்தானிலும், 14 ஆப்பிரிக்க நாடுகளிலும்கூட இது உபயோகத்தில் இருக்கிறது.
‘‘இது ஒரு புரட்சி; துப்புரவுப் புரட்சி. என்னுடைய குறிக்கோள், மகாத்மா காந்தியின் கனவைப் பூர்த்தி செய்வதே! துப்புரவுப் பணியாளர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவது. இந்தத் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கல்வியறிவு கிடைக்கச் செய்து, அவர்களை வேறு ஒரு புதிய தொழிலில் இறக்கி, சமுதாயத்தின் முக்கிய அங்கமாக ஆக்குவதுதான் என் நோக்கம்’’ என்கிறார் பிந்தேஷ்வர் பதக்.
ஒரு காலத்தில் தீண்டத் தகாதவர்களாக, அழுக்கானவர்களாக, சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருக்கத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட துப்புரவுப் பணியாளர்களை, மற்றவர்கள் இப்போது மனிதப் பிறவிகளாக மதித்து நடப்பதற்கும் முயற்சி எடுத்திருக்கிறார் அவர். வாழ்க்கை நடத்துவதற்குரிய வருமான வழியாக அவர்களுக்கு ஒரு காலத்தில் துப்புரவுப் பணி மட்டுமே இருந்தது; இன்று பிந்தேஷ்வரின் முயற்சியால் வேறு சில தொழில்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். கைவினைப் பொருள்கள் தயாரித்து விற்க, அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறார் அவர்.
‘‘அவர்கள் தயாரிக்கும் பொருள்களை யார் வாங்குகிறார்கள்? அவர்கள் முன்னே துப்புரவுப் பணிக்காக எந்தெந்த வீடுகளுக்குள் போனார்களோ, அங்கே உள்ளவர்கள்தான் வாங்குகிறார்கள். அந்த வீட்டு அம்மா முன்னெல்லாம் அவர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூடக் கொடுக்கமாட்டாள். ஆனால், இன்றைக்கு அதே வீடுகளுக்குள் இவர்கள் போகிறார்கள்; சோபாவில் உட்காருகிறார்கள்; அந்த வீட்டம்மாவோடு ஒரு கப் டீ சாப்பிடுகிறார்கள். முன்னர் எப்போதும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத அவர்கள் இன்று கோயில்களுக்குள்ளும் போகிறார்கள்...’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் பிந்தேஷ்வர்.
‘தீண்டத்தகாதவர்கள்’ என்று சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறவர்களுக்குக் கல்வி அறிவு ஊட்டுவது முக்கியம்; கூடவே, அவர்கள் ஒவ்வொருக்குள்ளும் சுயகௌரவத்தை வளர்ப்பது அதைவிட மிகவும் முக்கியம் என்கிறார் பிந்தேஷ்வர். இதற்கு உதாரணமாக, டாக்டர் அம்பேத்கர் சொன்ன ஒரு சின்ன சம்பவத்தையும் சொல்கிறார்.
பள்ளிக்கூடத்தைச் சோதனையிடுவதற்காகக் கல்வி அதிகாரி ஒருவர் வந்தாராம். மாணவர்களிடம் அவர், ‘உங்களால் பார்க்க முடியும்; ஆனால், தொட முடியாது. அது என்ன?’ என்று கேட்டாராம். குழந்தைகள் இதற்கு சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று... என்று பல்வேறு பதில்களைச் சொன்னார்கள். அம்பேத்கர் எழுந்து, அந்த வகுப்பறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த மண் பானையைச் சுட்டிக்காட்டியபடி, ‘தண்ணீர்ப் பானை’ என்றாராம்.
‘‘எல்லா இன மக்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தாத வரையில், ஒன்றாகக் கோயிலுக்குச் செல்லாத வரையில், ஒன்றாக பூஜை செய்யாத வரையில், ஒரே குளத்தில் ஒன்றாகக் குளிக்காத வரையில், ஒரே கிணற்றிலிருந்து நீர் இறைக்காத வரையில்... தீண்டாமை ஒழிந்துவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’’ என்றார் அம்பேத்கர்.
பிந்தேஷ்வர் துப்புரவுப் பணியாளர் ஒருவரை ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, விருந்து கொடுத்திருக்கிறார். எதற்காக? ‘நாமும் இங்கே வரமுடியும்; நமக்கும் அந்தத் தகுதி இருக்கிறது’ என்று சுய கௌரவத்தோடு அவர்கள் உணர்வதற்காக.
அதேபோல், ஐந்து நட்சத்திர ஹோட்டலான டெல்லி மயூரா ஹோட்டலுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் சுமார் 20 பேரை அழைத்துச் சென்று, 3 லட்ச ரூபாய் செலவழித்து விருந்து கொடுத்திருக்கிறார் பிந்தேஷ்வர்.
ஒரு துப்புரவுப் பணியாளர் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகவேண்டும் என்று கனவு கண்டார் காந்திஜி. அந்தக் கனவை தன்னளவில் பூர்த்தி செய்யும் விதமாக, துப்புரவுப் பணியாளராக இருந்த ஒரு பெண்மணியை ‘சுலப்’ நிறுவனத்தின் தலைவராக்கினார் பிந்தேஷ்வர். உஷா சௌமர் என்கிற அந்தப் பெண்மணி இப்போது உலகம் முழுக்கப் பயணம் செய்து, கூட்டங்களில் கலந்துகொள்கிறார்; உயர்பதவி வகிப்போரைச் சந்தித்துப் பேசி வருகிறார்; விருதுகள் பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு, ஐக்கிய நாட்டு அறங்காவல் மன்றத்தில், ஆங்கிலத்தில் உரையாற்றினார் உஷா. இந்தியாவின் முன்னணி மாடல்களோடு மேடையில் நடைபயின்றார். புது டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற ‘உலக கழிப்பறை உச்சி மாநாடு - 2007’ல் ‘சுலப்’பின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
வெறுமே வாயளவில் சீர்திருத்தம், புரட்சி, சமத்துவம் என்று வெற்றுப் பேச்சுப் பேசிக்கொண்டிருப்பவர்களைத்தான் உலகம் சீர்திருத்தவாதிகள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. பிந்தேஷ்வர் பதக் போன்றவர்கள் எந்தச் சலனமோ ஆர்ப்பாட்டமோ அலட்டலோ இல்லாமல் மனித குலத்துக்குத் தங்கள் சேவையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
.
10 comments:
super sir., please to inform the book buying place
Congratulation on translating a good book. The unfortunately thing is all your translated books are costlier than the original one. Is it because of you or because of Anandha vikatan?
thanks for the sharing sir..
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை
இப்படி மனிதர் இருப்பதை கேள்விபட்டதும் இதயம் சிலிர்த்தது..பகிர்தலுக்கு நன்றி.
உண்மையிலேயே அவர் ஒரு மாமனிதர் தான்!
அருமையானதொரு மனிதரைப்பற்றிப் பகிர்ந்ததற்கு நன்றி..
hii.. Nice Post
Thanks for sharing
சார், இன்றுதான் தங்கள் வலைப்பக்கத்திற்கு முதன்முதலாக வருகிறேன். இந்தக் கட்டுரை மிகவும் டச்சிங்காக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.
அருமையான பகிர்வு. மிக்க நன்றி.
புத்தகம் வெளியாகிவிட்டதா? உடனே வாங்கவேண்டும்.
உயர்குலத்தவர்கள் இந்தவேலைசெய்வார்களா? என்ற வெறும் வாய்ச்சொல்வீரர்களின் சவாலுக்கு சரியான பதில் கொடுத்துள்ளார் அந்தப் பிராமணர்.
அருமையான பகிர்வு. வாழ்த்துகள் ரவி.
நீண்ட நாட்களாகப் பதிவுகளைக்காணோமே? முகம் தெரியாத
பல புதியவர்களும் உங்கள் எல்லா பழைய பதிவுகளையும் படிக்கிறார்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா?
தொடர்ந்து எழுத ஏரா ளமான சுவையான
விஷயங்களை வைத்திருக்கும் நீங்கள்
தொடர்ந்து எழுதாமல் இருப்பது
எங்களுக்கு நஷ்டம். தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment