கார்ட்டூனிஸ்ட்டுக்குள் ஓர் ஆன்மிகவாதி!

வெங்கட்ராகவன் என்கிற கார்ட்டூனிஸ்ட் கேஷவ்வை எனக்கு அதிகம் பழக்கம் இல்லை. ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ பகுதியைத் தொகுப்பதற்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டியபோது அவரின் ‘தொண தொண தொளசிங்கம்’, ‘முழுச்சோம்பல் முருகேஷ்’ போன்ற கேரக்டர் ஜோக்குகளையும், அவர் வரைந்த கர்னாடக சங்கீத பாடகர்களின் கேரிகேச்சர்களையும் பார்த்தேன்.

அப்போது நான் வியந்ததைவிட அதிகம் வியந்தது, அவர் தனது ஓவியக் கண்காட்சிக்கு அழைப்பு வைக்க விகடன் அலுவலகத்துக்கு வந்தபோதுதான். அழைப்பிதழில் அவரின் கண்காட்சியில் இடம்பெறவிருக்கும் படங்களின் சாம்பிள்களை அச்சிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு சொல்லில் அடங்காதது. அத்தனையும் ஆன்மிக ஓவியங்கள் என்பதோடு, அவை சம்பிரதாயமான முறையில் வரையப்படாமல், நவீன பாணியில் வரையப்பட்டிருந்தது. ஓவியர் கேஷவ்வை நான் நேரில் சந்தித்தது அப்போதுதான்.

சக்தி விகடன் இதழுக்குப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், எழுத்தாள நண்பர் சாருகேசி அவர்கள் மூலம் மீண்டும் கேஷவ்வை அவரது இல்லத்துக்கே சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “ஸ்ரீமத் பாகவதத்தை முழுமையானதொரு பெரிய ஓவியமாக கேஷவ் வரைந்திருக்கிறார்; போய்ப் பார்ப்போம், வருகிறீர்களா?” என்று அழைத்தார் சாருகேசி. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று போனேன்.

ஸ்ரீமத் பாகவதம் என்பது பகவான் விஷ்ணுவின் கதைகளையும், ஸ்ரீகிருஷ்ண லீலைகளையும் விவரிக்கும் தொகுப்பு. அதை ஓவியமாகக் காட்சிப்படுத்த தேர்ந்தெடுத்ததே, திரு.கேஷவ் தன் தூரிகை ஆற்றலின் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையைக் காட்டுவதாகும். பாகவதத்தில் அத்தனைச் சம்பவங்கள்; ஒவ்வொன்றிலும் புதைந்திருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்கள்... அத்தனையையும் ஒரு கேன்வாஸில் மெகா ஓவியமாகத் தீட்டுவதற்கு மகா பொறுமை வேண்டும்; ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.

அந்த பாகவத ஓவியத்தைக் கண்டு நான் விக்கித்து நின்றுவிட்டேன். அதுவொரு அசாத்தியமான உழைப்பில் விளைந்த அற்புதப் படைப்பு! ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, அதை அப்போதே சக்தி விகடன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் பரபரத்தேன். அப்போது, சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு தொடக்க இதழை அதிக பக்கங்களுடன் டைஜஸ்ட் வடிவில் கொண்டு வருவதாக இருந்தோம். அதற்கு இந்த பாகவத ஓவியம் ஒரு வெயிட்டான மேட்டராக இருக்கும் என்று என் பத்திரிகை புத்தி கணக்குப் போட்டது.

ஆனால், கேஷவ் மறுத்துவிட்டார். காரணம், நாங்கள் போயிருந்த நேரத்தில், அந்த மெகா ஓவியத்தில் முக்கால்வாசிதான் பூர்த்தியாகியிருந்தது. “இதைப் பூர்த்தி செய்தவுடன் நானே கூப்பிட்டு சக்தி விகடனுக்கு இது குறித்து பேட்டி அளிக்கிறேன்” என்றார்.

அதன்பின், அவரோடு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், நானும் சாருகேசியும். அரசியல் கார்ட்டூன்கள் வரையும் கார்ட்டூனிஸ்ட்டுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு இல்லை. யாரோ ஒரு சாதுவிடம், மதத் தலைவரிடம், பழுத்த ஆன்மிகவாதியிடம் பேசிக்கொண்டிருப்பதான உணர்வு. பாகவதத்தில் தொடங்கி, புராணங்கள், இதிகாசங்கள், தத்துவங்கள் என சகலமும் பேசினார். ‘ஹா’வென்று வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, பாகவத படத்தைப் பூர்த்தி செய்தார் கேஷவ். முன்பு எங்களிடம் வாக்குத் தந்தபடி மறக்காமல் அழைப்பு விடுத்தார். அவரை பேட்டி கண்டார் எழுத்தாளர் திரு.சாருகேசி. சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்காக நான் திட்டமிட்டிருந்த கேஷவ்வின் பேட்டி, புத்தாண்டில் வெளியாகவிருக்கும் பொங்கல் சிறப்பிதழில் வெளியாகிறது.

பெங்களூரில், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கேஷவ். ஓவியத்தில் நாட்டம் அதிகம் என்றாலும், முறைப்படி கற்க வசதி இல்லை. தரமான காகிதம் வாங்கக்கூட இயலாமல், காலண்டர் தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றின் பின்புற வெள்ளைப் பகுதியில் வரைந்து பழகியவர்.

அவர் முதன்முதலில் படங்கள் வரைந்தது ஆனந்த விகடனில்தான். டிசம்பர் சீஸனின்போது ஒவ்வொரு கச்சேரிக்கும் நேரில் போய், பாடகர்களின் பாவனைகளை நேரடியாக ஸ்கெட்ச் பண்ணியது, தனது ஓவியத் திறனை வெகுவாக வளர்க்க உதவியது என்கிறார் கேஷவ்.

கிளுகிளு கதைகள் எழுதும் புஷ்பாதங்கதுரைக்கும் பக்தி மயமாக ஆன்மிகக் கட்டுரைகள், கதைகள் எழுதும் ஸ்ரீவேணுகோபாலனுக்கும் சம்பந்தமே இருக்காது. சிவாஜியின் அபாரமான டபுள்-ஆக்ட் போல இருக்கும். இருவரும் ஒருவரே என்பதை என்னால் ரொம்ப நாளைக்கு நம்பவே முடியவில்லை. அதேபோலத்தான் ‘தி ஹிந்து’ நாளேட்டில் அதிரடி அரசியல் கார்ட்டூன்கள் போடும் கேஷவ்வுக்குள்ளா இப்படியொரு ஆன்மிக ஓவியர் ஒளிந்திருக்கிறார் என ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

“இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அரசியல் கார்ட்டூன்கள் என்பது அடையாளக் குறியீடுகள்தான். அரசியல் நிகழ்வு குறித்த என் எண்ணத்தை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவை அரசியல் கார்ட்டூன் ஆகிறது. புராணங்களில், இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவைதான் இந்த ஓவியங்கள்!” என்றார் கேஷவ்.

“என்ன சொல்கிறீர்கள்? இந்த ஓவியங்கள் அடையாளக் குறியீடுகளா?” என்றேன் வியப்புடன்.

“ஆமாம்! விஷ்ணு என்றால் எல்லாருக்கும் தெரிந்த மகாவிஷ்ணுவை அப்படியே நான் வரைவதில்லை. விஷ்ணு என்கிற உருவகத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் தத்துவத்தை, அதன் மையக் கருத்தையே ஓவியமாக வரைகிறேன். அனுமன் ஆற்றல் மிகுந்தவன்; அதே நேரம் அடக்கம் மிகுந்தவன். ஆகவே, என் பார்வையில் அனுமனை எப்படி வரைந்திருக்கிறேன், பாருங்கள்” என்று அழைத்துச் சென்று, ஓர் ஓவியத்தின் முன் நிறுத்தினார் கேஷவ்.

ராமன்,லட்சுமணன், சீதை எல்லோரும் சாதாரண மானுடர்கள் போன்று இயல்பான தோற்றத்தில் இருக்க, ராமனின் காலடியில் தன் உடம்பு மொத்தத்தையும் எண்சாணாகக் குறுக்கிக்கொண்டு மடிந்து வணங்கிக்கொண்டு இருந்தது - மன்னிக்கவும் - இருந்தார் அனுமன். என் கண்கள் வியப்பால் விரிந்தன.

“ஆனந்தத்தின் அடையாளக் குறியீடுதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எல்லோரையும் நாம் வெறுமே கடவுளர்களாக வைத்து வழிபடுகிறோமே தவிர, ஒவ்வொன்றின் மூலமும் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களைக் கோட்டை விட்டுவிடுகிறோம். நம் இந்துப் புராணங்களில் சொல்லப்படாத வாழ்க்கை நெறிமுறைகளே இல்லை...”

திரு.கேஷவ்வின் ஆன்மிக விளக்கங்கள் அபாரமானவை. அவற்றை ஒரே சந்திப்பில் அப்படியே உள்வாங்கிக்கொள்கிற பக்குவமும் தகுதியும் எனக்கு இல்லை.

கேஷவ் தனது அன்றாட வேலைகளுக்கிடையிலும், அலுவலகப் பணிகளுக்கிடையிலும், இந்த பாகவத ஓவியத்தை வரைவதற்கு எடுத்துக்கொண்ட காலம் சுமார் மூன்றரை ஆண்டுகள்.
இதை அவர் எதற்காக வரைந்தார்?

ஆத்ம திருப்திக்காக வரைந்தார் என்று நம்ப இடமுண்டு. ஆனால், இந்த அற்புதமான படைப்பை இனி அவர் என்ன செய்யப் போகிறார்?

அது பற்றி அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

காஞ்சி மகான் தற்போது நம்மிடையே இருந்திருந்தால், மறு யோசனையின்றி இந்த ஓவியத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பித்து, அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்திருப்பார் கேஷவ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

பின்குறிப்பு:

காஞ்சிப் பெரியவர் படத்தை மிக அற்புதமாக, தத்ரூபமாக வரைந்து, அதை அந்த காஞ்சி மகானிடமே காண்பித்து, அவரின் ஆசியாக மட்டைத் தேங்காயைப் பெற்றிருக்கிறார் கேஷவ். அந்தத் தேங்காயை இன்றைக்கும் பெரியவர் படத்தின் முன்பு வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு, திரு.கேஷவ்வை நான் சந்தித்தபோது, சாவியிடம் நான் பணியாற்றியதைச் சொல்லி, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது அவர் இந்தக் காஞ்சி மகான் படத்தைக் காண்பித்து, “இந்தப் படத்தைப் புகைப்படம் எடுத்து ஆசிரியர் சாவியிடம் கொண்டு காண்பித்து, அவரின் பாராட்டுக்களையும், ஆசிகளையும் பெற்றுக் கொண்டேன். அடுத்த வார சாவி இதழில் அட்டைப்படமாக இதை வெளியிட்டுவிட்டார் சாவி. அது எனக்குப் பெரிய தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஏனென்றால், இங்கே நான் பணியாற்றும் இடத்தில் முன் அனுமதி பெறாமல் வெளியிடங்களில் படம் வரையக் கூடாது!” என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

எனக்குத் துணுக்கென்றது. அந்தப் படத்தை சாவி அட்டையில் வெளியிட்டவன் நான்தான். பத்திரிகைப் பணியில் சேர்ந்த புதிதாகையால், ஒருவர் தந்த படத்தை அவருக்கே சொல்லாமல், அவரின் முன் அனுமதி பெறாமல் பத்திரிகையில் வெளியிடக்கூடாது என்கிற பத்திரிகை தர்மம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இருந்தாலும், அன்று கேஷவ்விடம் இந்த உண்மையை நான் சொல்லவில்லை. கொஞ்சம் பயம்தான்!

***
நமக்குத் தெரியாதவற்றிலிருந்து பயம் வளர்கிறது; நம்மால் செய்ய இயலுவதிலிருந்து நம்பிக்கை பிறக்கிறது.

11 comments:

கணேஷ் said...

பிரமிப்பான விஷயம். ‘முனஜாக்கிரதை முனுசாமி’ ஓவியங்கள் ரசித்திருக்கிறேன்- வரைந்தது யாரென்று தெரியாமலே. உங்களின் விரிவான பேட்டியின் மூலம் அற்புதமான கார்ட்டூனிஸ்ட், இல்லை... ஓவியரை அறிய முடிந்தது. சக்திவிகடன் வாங்கிப் பார்க்கிறேன். நன்றி மற்றும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழத்துக்கள்!

கணேஷ் said...

ரவி ஸார் மன்னிக்க... கமெண்ட் போடும் போது கரண்ட் போய் யுபிஎஸ் கத்திக் கொண்டிருந்ததால் சென்ற கமெண்டில் ‘முழுச் சோம்பல் முருகேஷ்’ என்பதை தவறுதலாக ‘முன்ஜாக்கிரதை முனுசாமி’ என்று டைப் செய்து ஸேவ் செய்து விட்டேன். முழு மேட்டரையும் படித்த பின்பே கருத்திடுவது என் வழக்கம். மீண்டும் மன்னிக்க...

ரேகா ராகவன் said...

கார்டூனிஸ்ட் கேஷவ் பற்றிய தகவல்கள் அருமை. அவர் தீட்டிய ஆன்மீக படங்களை பார்த்ததும் உடனே நமஸ்காரம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைத்தது. அவரின் பாகவத படத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டுள்ளேன். பதிவாக அளித்ததற்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை விஷயங்கள் உங்களிடமிருந்து தெரிந்து கொள்கிறோம்....


தொடருங்கள் உங்கள் பதிவுகளை....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

Seshadri e.s. said...

அருமை! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Seshadri e.s. said...

அருமை!தொடரட்டும் உங்கள் பதிவுகள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
காரஞ்சன்(சேஷ்)www.esseshadri.blogspot.com

Seshadri e.s. said...

அருமையான பதிவு!
தொடரட்டும் உங்கள் பணி!

காரஞ்சன்(சேஷ்)
www.esseshadri.blogspot.com

கே. பி. ஜனா... said...

சித்திரத்தில் அற்புதமான ஒரு மனிதரை உங்கள் சொற் சித்திரத்தால் அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்!

ganesh said...

அருமையான தொகுப்பு ,சிந்திக்க வைத்த கருத்துக்கள் நிறைந்த தொகுப்பு

BalHanuman said...

மிகவும் அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும்...

jawahar said...

Excellent treasure to cherish