கிறுக்குத்தனங்கள்!

சின்ன வயதில் என்னிடம் ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் ஏதேனும் ஓட்டாஞ்சில்லு கண்ணில் பட்டால், அதைக் காலால் உதைத்துத் தள்ளிக்கொண்டே, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு போக முடியுமா என்று முயற்சி செய்வேன். பல நேரம் என் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

அநேகமாக இதே போன்ற கிறுக்குத்தனங்கள் அந்த வயதுப் பிள்ளைகள் அனைவரிடமும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிறுவர்களிடம் மட்டுமல்ல; பெரியவர்களிடமும் சில கிறுக்குத்தனங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் நண்பர் ஒருவரோடு சாலையில் நடந்து போகும்போது, வழியில் கடக்கும் மரம், மட்டை, அறிவிப்புப் பலகை என கைக்குத் தட்டுப்படும் எல்லாவற்றையும் லேசாகத் தட்டிக்கொண்டே வருவார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘டாக்டர் ஜான்சன் தெரியுமா, பெரிய மேதை! அவருக்கும் இப்படி ஒரு பழக்கம் இருந்ததாம்’ என்பார்; இந்த ஒரு விஷயத்திலாவது, ஒரு பெரிய மேதையோடு தன்னைச் சமமாக ஒப்பிட்டுக் கொள்ளும்படியான வாய்ப்பு கிடைத்ததே என்கிற திருப்தி அவருக்கு உள்ளூர இருந்திருக்குமோ, என்னவோ!

வேறு சிலர் இருக்கிறார்கள். தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறுமா என்பதை அறிய, ஜோசியம் போல சில பரீட்சைகள் செய்து பார்ப்பார்கள். “நான் அந்தப் பச்சைக் கட்டடத்தைத் தாண்டுவதற்குள், தெரு வளைவிலிருந்து ஒரு பஸ்ஸோ, காரோ எதிர்ப்பட்டுவிட்டால், நான் போகிற காரியம் ஜெயம் என்று அர்த்தம்” என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொள்வார்கள். எதிர்ப்படவில்லையென்றால், சற்றும் மனம் தளராமல், “நான் அந்தத் தெருவில் திரும்புவதற்குள் என்னைக் கடந்து ஏதேனும் வாகனம் முந்திச் சென்றால், நான் போகிற காரியம் வெற்றி!” என்று மறு தீர்மானம் செய்துகொள்வார்கள். தப்பித் தவறி, சைக்கிள் டயர் ஓட்டும் சிறுவன் யாராவது இவரைக் கடந்து போய்விட்டால், மனசுக்குள் ஒரே கொண்டாட்டம்தான்! காரியம் பழமாகும் என்பதற்கான சிக்னல் கிடைத்துவிட்டதே!

என்னிடமும் சமீப காலமாக ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. அதைக் கிறுக்குத்தனம் என்பதைவிட, ஏதோ அபூர்வமான திறமை (ஒன்றுக்கும் உதவாத திறமை அது!) என்பதாக எண்ணி, மனசுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வேன். இதனாலேயே அந்தக் கிறுக்குத்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தேன்.

ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும்போது, என் முன்னால் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களைப் பார்த்து, அதன் சிறப்பம்சத்தைக் கண்டுபிடிப்பேன். சில மாதங்களுக்கு முன்பு, யதேச்சையாக ஒரே நம்பர் பிளேட் கொண்ட (உதாரணமாக, 9005 என்ற எண்; ரெஜிஸ்ட்ரேஷன் ஆங்கில எழுத்துக்கள் மாறுபட்டிருக்கும்.) மோட்டார் பைக், கார் மற்றும் ஒரு வேன் ஆகியவை பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்ததிலிருந்துதான் எனக்கு இந்தக் கிறுக்குத்தனம் தொற்றிக்கொண்டது. ஒருமுறை 2786 என்ற எண் கொண்ட வண்டியும், 6872 என்று உல்டாவாக எண் கொண்ட ஒரு வண்டியும் பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்தேன். இன்னொரு தடவை 1974 என்ற எண் கொண்ட ஒரு வாகனத்தைப் பார்த்தேன். அந்த எண்ணின் சிறப்பம்சம் உடனே என் புத்தியில் உறைத்தது. வேறொன்றுமில்லை; என் ஸ்கூட்டி எண் 7419. புரிகிறதா சிறப்பம்சம்? இன்னொரு முறை, ஒரு வாகனத்தின் பக்கத்தில் சென்ற மற்றொரு வாகனத்தின் எண், முந்தின வாகனத்தின் அதே எண்களையே மாற்றிப் போட்டதாக இருந்தது. அதாவது, ஒன்றின் எண் 3741 என்றால், அடுத்த வாகனத்தின் எண் 4317 என்பதாக இருந்தது. இந்தச் சிறப்பம்சங்களையெல்லாம், என் பின்னால் உட்கார்ந்து பயணிக்கும் என் மகளிடம் உடனுக்குடன் காட்டி, அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன்.

இது மட்டுமல்ல; என் முன் செல்லும் வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும், அதைத் தொடர்ந்து செல்லும் மற்றொரு வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும் ஒன்றாக இருக்கிறது என்பது போன்ற சிறப்பம்சங்களையும் நான் கவனிப்பதுண்டு.

இந்தக் கிறுக்குத்தனம் முற்றிப்போய், வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்தில் கொண்டு தள்ளிவிடப் போகிறதே என்று பயம் வந்து, சுமார் ஏழெட்டு மாதங்களாக என்னிடம் இருந்த இந்தக் கிறுக்குப் பழக்கத்தைக் கடந்த பத்து நாட்களாக விட்டுவிட்டேன்.

என்னிடம் இது ஒரு கிறுக்குத்தனம் மட்டும்தானா, அல்லது என்னையும் அறியாமல் வேறு ஏதேனும் கிறுக்குத்தனம் என்னிடம் இருக்கிறதோ என்னவோ, தெரியவில்லை!

யார் அந்த அழகி? பரிசு யாருக்கு?

சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்குச் சரியான விடை: பூங்குழலி.

நிறையப் பேர் சரியான விடைகளை அனுப்பியிருக்கிறார்கள். என்றாலும், ஏற்கெனவே சொன்னது போல், சரியான விடையை முதலில் அனுப்பிய ‘யாழ் மைந்தன்’ அவர்களுக்கு விகடன் பிரசுர புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவர் தனது முகவரியை எனது இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கக் கோருகிறேன்.

இதில் எனக்குப் பெருமையும் சந்தோஷமும் அளித்த ஒரு விஷயம் என்னவென்றால், இந்தப் போட்டிக்கான விடையை என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் ஞாநியும் பின்னூட்டம் இட்டிருக்கிறார் என்பதுதான். திரு.ஞாநி அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்!

***

முட்டாளிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியாது; ஆனால், உலகுக்குத் தெரியும். புத்திசாலியிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியும்; ஆனால், உலகுக்குத் தெரியாது!

13 comments:

கவிதை காதலன் said...

ஹா.. ஹா.. சுவாரஸ்யமான கிறுக்குத்தனங்கள். ரசிக்கும்படியாகவே இருக்கிறது...

Elamparuthi said...

sir PS BOOK advance panra store la than book vanganuma?...illa inga advance pannitu book fair la vangikalama?JAN 7,8 book fair varen...athan keten....

கணேஷ் said...

(சின்ன வயசில் என்னிடம் ஒரு கிறுக்குத்தனம் இருந்தது.) ஒரு? என்னிடம் நிறைய இருந்தன. இப்போதும்தான். உங்கள் விஷயத்தில் ரசிக்கும்படியான கிறு்க்குத்தனம்தான் சார்!

லதானந்த் said...

என்னால் உங்கள் வாகனத்தைப் பார்க்காமலேயே ஒரு விஷயத்தைக் கரெக்டாகச் சொல்ல முடியும். உங்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் ஒரே பதிவு எண் இருக்கும். சரிதானா?

வே.சுப்ரமணியன். said...

அருமையான கிறுக்குத்தனங்கள். இத்தகைய கிறுக்குத்தனங்களை குழந்தைத்தனம் என்றும் கூறுவார். முதிர்ச்சியடைந்த மனிதன் குழந்தைதனத்தையே விரும்புவான். அது ஒரு ஏக்கம். உங்களது குழந்தைதனமும் அருமை.

Pranavan G said...

சுவாரசியமான பதிவு .. வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நம் எல்லோருக்குள்ளும் இதுபோன்ற கிறுக்குத்தனங்கள்.... :)

சுவையாகச் சொல்லி இருக்கீங்க சார்....

அன்புடன் அருணா said...

ம்ம் இதை விடப் பயங்கரமான கிறுக்குத்தனமெல்லாம் எங்கிட்டே இருக்குங்க....!

கணேஷ் ராஜா said...

கிறுக்குத்தனத்துக்குத் தாங்கள் வெளியிட்டிருந்த டாய்லெட் படம் மிகப் பொருத்தம். தவிர, கார்கள் படம் போட்டிருந்தீர்கள். யார் கவனித்தார்களோ இல்லையோ, நான் கவனித்தேன். அதில் ஓடும் இரண்டு கார்களின் நம்பர் பிளேட்டும் ஒன்றே! இந்த என் உன்னிப்புக் கவனிப்பைப் பாராட்டி எனக்கு ஏதும் புத்தகப் பரிசு தரக்கூடாதா? :)

jamuthi said...

If you observe continuously 20 number plates, the last two digits [of any number plates] will repeat atleast once.

ரேகா ராகவன் said...

நேற்று ஒன்று, இன்றும் ஒரு பதிவா? ஆஹா...தொடருங்க!

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

தீபிகா(Theepika) said...

இனி இந்த கிறுக்குத்தனம் தங்களிடமிருந்து எங்களுக்கும் எம்மையறியாமல் கடத்தப்பட்டு விடக் கூடும்.