உற்சாகமாகி, உடனே கிளம்பிப் போனேன். அப்போது கி.ராஜேந்திரன் அவர்களின் வீடு, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்துக்குப் பக்கத்தில் ஏரிக்கரைச் சாலையில் இருந்தது.
நான் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். கீழே ஹாலில், முதிய பெண்மணி ஒருவர் சோபாவில் அமர்ந்து, டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். நான் போனதும், வாசலில் நிழலாடியதைக் கண்டு, கண்களை இடுக்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தவர், "யார்ரா... பேப்பர் போடுற பையனா?" என்றார்.
"இல்லை பாட்டி! நேர்ல வந்து பார்க்கச் சொல்லி ஐயா லெட்டர் அனுப்பியிருந்தார்" என்று, சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்து, அவர் முன்பாகக் காட்டினேன்.
"என்னத்துக்கு வரச் சொன்னானோ... தெனம் நூறு பேர் வரா!" என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டார்.
நான் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், வாசலில் நின்றபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
ஏதோ சினிமா பாடல் காட்சி. பாட்டிக்கு அதில் மனம் லயிக்கவில்லை போலும்! சிறிது நேரத்துக்குப் பின்பு, "டீ... இது என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு ஆடறதுகள். வந்து கிரிக்கெட்டையானும் போடு! இது ஒண்ணும் நன்னால்லை" என்று குரல் கொடுத்தார்.
"தோ வரேம்மா" என்று குரல் கேட்டது.
நான் காத்திருந்தேன். அதற்குள் அந்த ஹாலை நோட்டம் விட்டேன். ஆடம்பரமோ படாடோபமோ இல்லை. சுவாதீனமாய் சமையல்கட்டு வரைக்கும் போய், "ஒரு தோசை கொடுங்க, மாமி" என்று உரிமையாய்க் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் போன்ற தோரணையில் இருந்தது அந்த ஹால். சுவரில், கடல் அலை வெளேரென சீறி அடிக்கும் ஒரு சிறு பாறை மீது, நமக்கு முதுகு காட்டியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் ஆயில் பெயின்ட்டிங் ஒன்று காணப்பட்டது. வேட்டி அணிந்திருந்தார். கையில் தம்புரா வைத்திருந்தாரோ என்று ஞாபகம். சரியாக நினைவில்லை.
அந்தப் படத்தை வரைந்தவர் ஓவியர் மணியம். படத்தில் இருந்தவர் பேராசிரியர் கல்கி.
உள்ளிருந்து 'தோ வரேம்மா' என்று குரல் கொடுத்தவர் கல்கியின் மருமகள். அதாவது, கி.ராஜேந்திரனின் மனைவி.
ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டி, கல்கியின் மனைவி. வாசலில், இவர்களின் அருமை பெருமை தெரியாத நான்.
"ஏண்டாப்பா! உனக்கு கிரிக்கெட் போடத் தெரியுமா?" என்று என்னிடம் ரிமோட்டை நீட்டினார் பாட்டி. நான் பகபகவென முழித்தேன். ஷோ-ரூம்களின் வெளியே நின்றபடி கிரிக்கெட் பார்க்கும் கும்பலில் ஒருத்தனாகக்கூட டி.வி. பார்த்தறியாதவன் நான். ரிமோட் என்கிற விஷயமே எனக்குப் புதுசு.
"இல்லை பாட்டி! எனக்குத் தெரியாது" என்றேன்.
"என்ன பிள்ளை நீ! நான்தான் வயசானவோ! தெரியாது. நீ இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமோ? போகட்டும், கிரிக்கெட்டாவது பார்ப்பியோ, மாட்டியோ?" என்றார் பாட்டி.
அதற்கும் நான் அசடு வழிய ஒரு பதிலைச் சொல்வதற்குள், உள்ளிருந்து கி.ராஜேந்திரனின் மனைவி வந்து, டி.வியில் கிரிக்கெட்டைப் போட்டுவிட்டு, பின்பு நான் நிற்பதைக் கவனித்தார்.
"சாரைப் பார்க்கணுமா? மேலே மாடிக்குப் போங்கோ. அவர் சாப்பிட்டுட்டு மாடிக்குப் போயிட்டார்னா அப்புறம் சாயந்திரம் நியூஸ் போடறச்சதான் இறங்கி வருவார். அங்கேயே போய்ப் பாருங்கோ!" என்றார்.
வாசல் ரேழியிலேயே மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் இருந்தன. மேலே ஏறிப் போனேன்.
கி.ரா. அமர்ந்திருந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கடிதத்தைக் காட்டினேன்.
"உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். சாவியிலே நீங்க பிரமாதமா வொர்க் பண்றதா சாரே சொல்லியிருக்கார். ஏன் வேலையை விட்டீங்கன்னு கேக்கப் போறதில்லே. கல்கியிலே சேர விருப்பமா?" என்றார்.
"விருப்பம்" என்றேன்.
"எடுத்த எடுப்பிலே உங்களை பர்மனென்ட் ஸ்டாஃபா சேர்க்க முடியாது. அதுக்கு எனக்கு ரைட்ஸ் கிடையாது. நிர்வாகக் குழு இருக்கு. எல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கணும். என் பொண்ணையேகூட சட்டுனு இதுல சேர்த்துடலே நான்! படிப்படியாத்தான் வந்தா. அதனால, முதல்லே நீங்க வந்து போயிண்டிருங்கோ. மேட்டர் பண்ணுங்கோ. ஒரு ஆறு மாசம் போகட்டும். நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்னு அப்பத்தான் எங்களுக்கும் தெரியும். அப்புறமா உங்களை அப்பாயின்ட் பண்ணிக்கறோம்!" என்றார் கி.ரா.
"நன்றி!" என விடைபெற்று எழுந்தேன்.
கல்கியில் சேர வேண்டும் என நான் விண்ணப்பம் போடவில்லை. சாவியிலிருந்து நான் விலகியது தெரிந்து, அவர்களேதான் அழைப்பு அனுப்பினார்கள். அப்படியிருக்கையில், திரு.கி.ராஜேந்திரன் பேசியது எனக்கு உடன்பாடாக இல்லை.
கீழே வந்தேன்.
"பார்த்தாச்சா? கிளம்பிட்டேளா?" என்றார் விஜயாம்மா. கி.ரா-வின் மனைவி.
எதற்காக வந்தேன், வந்த காரியம் நிறைவேறியதா என்று கேட்கவில்லை.
"வேகாத வெயில்ல வந்திருக்கேள். கொஞ்சம் மோரானா சாப்பிட்டுட்டுப் போங்கோ!" என்று உள்ளே போய், ஒரு டம்ளர் நிறைய, கறிவேப்பிலையிட்ட மோருடன் வந்தார்.
குடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினேன். அந்தச் சில நிமிடங்கள்தான் அவரைப் பார்த்தது. அவர் முகம்கூட மனதில் பதியவில்லை.
எனவேதான்...
நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில், சாஸ்திரிகள் ஐந்தாறு பேர் சுற்றிலும் நின்று மந்திரங்களை முழங்கிக்கொண்டு இருக்க, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தவர் அவர்தானா என்று என்னால் முகத்தைப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இயலவில்லை.
ஆமாம், நேற்று காலமாகிவிட்டார், காலத்தால் அழியாத அமர காவியங்களைப் படைத்த பேராசிரியர் கல்கியின் அருமை மாட்டுப் பெண்.
நான் போயிருந்தபோது மின் மயானத்தில் மந்திரம் ஓதும் சாஸ்திரிகள், மயான ஊழியர்கள் ஒரு சிலரைத் தவிர யாருமே இல்லை. ஐந்து நிமிடம் கழித்து, தளர்ந்த நடையுடன் வந்தார் கி.ராஜேந்திரன். அவரோடு பத்துப் பதினைந்து பேர் வந்தார்கள். அவர்களில் பத்திரிகையாளர் சந்திரமௌலியைத் தவிர, எனக்குப் பரிச்சயமான முகம் வேறில்லை.
உடலுக்கு எரியூட்டும் வரை இருந்தேன். பின்னர், அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்த கி.ராஜேந்திரனிடம் சென்று, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் கைகளைப் பற்றிக்கொண்டார்.
"எதிர்பார்க்காத மரணம் இது. நல்லாத்தான் சிரிச்சுப் பேசிண்டிருந்தா. திடீர்னு மாஸிவ் அட்டாக். போயிட்டா. நினைக்கவே இல்லே இவ போயிடுவான்னு!" என்றார்.
விடைபெறாமல் கிளம்பினேன்.
திருமதி விஜயா ராஜேந்திரனின் முகம் இப்போதும் என் நினைவில் இல்லை; அன்று அவர் தந்த மோரின் மணமும் சுவையும் மட்டும் ஞாபகம் இருக்கிறது!
***
பார்த்ததும் கேட்டதும் மறந்துவிடலாம்; உணர்வுகள் மறக்காது!
பார்த்ததும் கேட்டதும் மறந்துவிடலாம்; உணர்வுகள் மறக்காது!
5 comments:
இந்த வரிகளில் எல்லாமே அடங்கி விட்டது படித்துவுடன் மனம் கனத்தது .. என்ன சொல்வதென்று தெரியவில்லை
நினைவஞ்சலியில் பதிந்த உணர்வுகளை சரியாக பதித்தீர்கள் ...
அற்புதமாய் ஒரு நினைவாஞ்சலி...அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..
’என்னைக் கவர்ந்த அழகிகள்’ பதிவு படிக்கும்போது எனக்குக் கிடைத்த அதே பிரமிப்புதான் இதைப் படிக்கும்போதும் ஏற்பட்டது. பதிவில் கண்ட அந்தப் புகைப்படம் எந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது என்பதையும் ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம்.
\\எனவேதான்...
நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில், சாஸ்திரிகள் ஐந்தாறு பேர் சுற்றிலும் நின்று மந்திரங்களை முழங்கிக்கொண்டு இருக்க, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தவர் அவர்தானா என்று...\\ என்னங்க இது... சுவாரஸ்யமா ஏதோ சொல்லிட்டு வரீஙகன்னு படிச்சுட்டிருந்தா, தடால்னு இப்படி ஒரு வரியைப் போட்டுத் தூக்கிவாரிப் போட வெச்சுட்டீங்க. அதிலும் அந்தக் கடைசி வரி கண்ணையும் மனசையும் கலக்கிடுச்சு. மறைந்த அன்னாருக்கு என் இதய அஞ்சலி!
Post a Comment