குடும்ப அட்டையோடு ஒரு குஸ்தி!

யில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் எல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே இணையத்தின் மூலம் வாங்கிவிடலாம்; டெலிபோன் பில், கரன்ட் பில், மின்சார வரி, சொத்து வரியெல்லாம்கூட நெட் மூலம் கட்டிவிடலாம்; தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டு இருக்கும் வேகத்தைப் பார்த்தால், கணினி மூலமே கல்யாணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று, வளர்த்து ஆளாக்கிவிடலாம் போலிருக்கிறது.

ஆனால்...

இன்றைக்குக் குடிமக்களின் அடிப்படை அத்தாட்சியாக விளங்குகிற, ஆதார தேவையாக விளங்குகிற ‘ரேஷன் கார்டு’ பெறுவதற்கு மட்டும், கால இயந்திரத்தில் ஏறி, சுதந்திரத்துக்கும் முந்தைய காலத்துக்குச் செல்ல வேண்டி இருப்பது பெரிய கொடுமை! புதிய கார்டு பெறுவதற்குத்தான் என்றில்லை; புதிய குடும்ப உறுப்பினர் பெயரைச் சேர்க்க வேண்டும், உறுப்பினர் பெயரை நீக்க வேண்டும், முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என எந்த ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும் சரி... லேசில் முடியாது. தாவு தீர்ந்துவிடும். அனுபவத்தில் சொல்கிறேன்.

‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை’ (என்ன பாதுகாப்போ?!) என்று பேர் மட்டும் பெத்த பேராக இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரேஷன் கொண்டு வரப்பட்டபோது என்னென்ன நடைமுறைகள், என்னென்ன சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டனவோ, அவையேதான் இன்னமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனவோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அசோக் நகரிலிருந்து மேற்கு மாம்பலம் குடிபெயர்ந்ததும், குடும்ப அட்டையையும் புதிய முகவரிக்கு மாற்றிவிடலாம் என்று நான் முயன்றபோது கிடைத்த அனுபவங்கள் பத்து பதிவுக்குத் தாங்கும். எனினும், சுருக்கமாகவே சொல்கிறேன்.

சென்ற மாதம் முதல் வாரத்தில், வழக்கமாக உணவுப் பொருள்கள் வாங்கும் அசோக் நகர் ரேஷன் கடைக்குப் போய், முகவரி மாறிவிட்டதைச் சொல்லி, அட்டையை எப்படி அங்கு மாற்றிக் கொள்வது என்று கேட்டேன். தெரியும். சும்மாதான், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காகக் கேட்டேன்.
“தி.நகர்ல ரேஷன் ஆபீஸ் இருக்கு சார்! அங்கே போய் ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்க. உடனே மாத்திக் கொடுத்துருவாங்க!” என்றார். “அந்த ஆபீஸ் அட்ரஸ் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் சார்!” என்றேன். “எல்லாத்தையும் இங்கேயே கேக்காதீங்க. போய் நாலு எடத்துல விசாரிங்க!” என்று சொல்லிவிட்டு, “கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கம்மா! இப்படி வெளிச்சத்தை மறைச்சுக்கிட்டு நின்னீங்கன்னா எப்படி பில் போடுறது!” என்று, என் மீது எழுந்த எரிச்சலை, அடுத்து பொருள் வாங்க வரிசையில் நின்றிருந்த பெண்களிடம் காட்டினார்.

தி.நகரில், கண்ணதாசன் சிலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில், சிறிது தூரத்தில் உள்ளது ரேஷன் ஆபீஸ். நெட்டின் மூலம் தெரிந்துகொண்டேன். காரை உதிர்ந்த பழைய கால கட்டடத்தில், குறுகலான மாடிப்படிகள் வழியே ஏறிச் சென்றால், அலுவலகம் வரும். சாலையில் கார்ப்பொரேஷன்காரர்கள் நீளமாகப் பள்ளம் தோண்டி ஏதோ வேலையில் ஈடுபட்டிருக்க, சின்ன மரப்பாலம் (1'X5' அளவுள்ள சின்ன மரப் பலகை) வழியாக அகழியைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. ஒரு ஆள் மட்டுமே ஏறிச் செல்லும்படியான (எஸ்.பி.பி. போன்ற சரீரம் உள்ளவர்களால் அதுவும் சத்தியமாக முடியாது.) படிகளில் நூறு பேர் ஏறி, இறங்கிக்கொண்டு இருந்தார்கள். இவற்றையெல்லாம் நெட்டில் தெரிந்துகொள்ள முடியாது. அனுபவத்தில்தான் அறிய முடியும்.

படிகளின் உச்சியில் அலுவலகம் இரண்டு பக்கமும் பிரிந்து கிடக்கிறது. ஆனால், எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்க வேண்டியதுதான். அத்தனைக் கூட்டம். தவிர, இறங்கத் துடிக்கும் ஜனங்களைச் சமாளித்து, கீழே விழாமல் சுதாரித்து நிற்கத் தனிச் சாமர்த்தியம் வேண்டும்.

இடம் செல்வதா, வலம் செல்வதா எனப் புரியாமல் விழித்தேன். யாரைக் கேட்டாலும், பாவம், அவர்களுக்கும் தெரியவில்லை. “உள்ளே போய்க் கேட்டுப் பாருங்க சார்!” என்றார்கள். ஆனால், எந்தப் பக்கம் உள்ளே போவது என்பதே பிரச்னையாக இருந்தது. குத்து மதிப்பாக வலப்புறம் நுழைய முயன்றேன். “சார்! க்யூவுல வாங்க சார்! காலையிலேர்ந்து நிக்கிறோமில்லே!” என்று இடப்பக்க அறைக்குள்ளிருந்து குரல் வந்தது. அதாவது, வலப்பக்க அறைக்குள்ளிருந்து புறப்பட்ட ஜன வரிசை, பொதுவான ஏரியாவையும் கடந்து, இடப் பக்க அறைக்குள் புகுந்து போயிற்று. சிவனின் அடி முடி காண முடியாத பிரம்மன் மாதிரி திணறினேன்.

அடுத்து, இடப் பக்க அறைக்குள் நுழைந்தேன். முன்னெல்லாம் நெரிசலான பஸ்ஸுக்குள் ஏறிப் பிதுங்கிப் பிதுங்கிப் பயணம் செய்திருந்த அனுபவம் இங்கே எனக்கு அந்த அறையில் நுழைவதற்குக் கைகொடுத்தது. கூட்டத்தில் என்னைத் திணித்துக் கொண்டு உள்ளே புகுந்துவிட்டேன். வவ்வால் புழுக்கை நாற்றம் வீசியது. மேலே கறுப்புக் கறுப்பாக ஒட்டடைகள் தொங்கின. கர்ரக்... கர்ரக்... என்று சீராகச் சத்தமிட்டபடி, அந்தக் கால சீலிங் ஃபேன்கள் விதியே என்று சுழன்றுகொண்டு இருந்தன.

ரங்க்நாதன் தெருவுக்குள் நுழைந்துவிட்டதான உணர்வு. தானாக நகர்த்தப்பட்டு, ஒரு மேஜைக்கு அருகில் போய்விட்டேன். விண்ணப்பத்தையும் ரேஷன் அட்டையையும் வாங்கிப் பார்த்த ஒரு பெண் ஊழியர், “எந்த ஏரியா?” என்றார். “அசோக் நகர்” என்றேன். “முன்னே எங்கே இருந்தீங்க?” என்றார். “அதான் சொன்னேனே, அசோக் நகர். இப்ப மாம்பலம் வந்திருக்கேன். இந்த அட்டையை அசோக் நகர்லேர்ந்து மாம்பலம் அட்ரஸுக்கு மாத்தணும்” என்றேன்.

“மாம்பலத்துல எங்கே?”

“கோவிந்தன் ரோடு!”

“கோவிந்தன் ரோடா?” என்றவர், யோசனையாக ரேஷன் அட்டையை முன்னும் பின்னும் புரட்டிவிட்டு, பக்கத்திலிருந்த ஊழியரிடம், “ஏம்மா, கோவிந்தன் ரோடு நம்ம சர்க்கிள்ளயா வருது?” என்று விசாரித்தார். அவர் உதட்டைப் பிதுக்கினார். “சார், நீங்க ஒண்ணு பண்ணுங்க. அதோ கடைசீல உட்கார்ந்திருக்காங்களே, அந்த மேடத்துக்கிட்ட போய், கோவிந்தன் ரோடு எந்த சர்க்கிள்ள வருதுன்னு கேட்டுக்கிட்டு வாங்க” என்று என்னைத் துரத்தினார்.

மறுபடியும் மனித வெள்ளத்தில் நீந்தி, அவர் குறிப்பிட்ட அந்த அம்மையாரை அணுகி, விசாரித்தேன். அவர் பக்கத்தில் இருந்தவரைக் கலந்தாலோசித்துக்கொண்டு, ‘சைதாப்பேட்டை சர்க்கிள்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

மீண்டும் க்யூவின் இடையில் புக முடியவில்லை. “நடுவுல பூராதேய்யா! வேலை வெட்டி இல்லாமயா இங்கே எல்லாரும் நின்னுட்டிருக்கோம்?” என்று சத்தம் வந்தது பின்னாலிருந்து. அப்புறம், எனக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவர், “சார் ரொம்ப நேரமா க்யூவுலதாம்ப்பா வராரு. ஏதோ விசாரிக்கச் சொன்னாங்கன்னு போனாரு” என்று சிபாரிசு செய்ய, மீண்டும் கவுன்ட்டரை அணுகி, ‘சைதாப்பேட்டை சர்க்கிளாம்’ என்றேன்.

“சரி, இங்கே அட்டையை கான்சல் பண்ணிக்குங்க. சைதாப்பேட்டை போய் புது முகவரிக்கு மாத்திக்குங்க” என்று ஒரு கூப்பன் கொடுத்தார் அந்தப் பெண்மணி.

“அட்ரஸ் ப்ரூஃப் இருக்குதா?” என்றார்.

“அட்ரஸ் ப்ரூஃபா? இப்பத்தாம்மா புது முகவரிக்கு வந்திருக்கேன்!” என்றேன்.

“இல்லீங்க. அட்ரஸ் புரூஃப் இல்லாம முடியாது. காஸ் ரசீது, பாங்க் புஸ்தகம், டெலிபோன் பில்னு ஏதாவது கொண்டு வந்து, இந்த கூப்பனோடு சேர்த்து, எதிர் ரூம்ல கவுன்ட்டர்ல கொடுங்க. மத்தியானம் ஒரு மணிக்குள்ள வரணும். இல்லேன்னா நாளைக்குதான்!”

அவர் அப்படிச் சொல்லும்போது மணி 12.

பைக்கில் வீட்டுக்குச் சென்று, காஸ் பில் (நல்லவேளையாக, புது வீடு போனதுமே புது காஸ், புது வீட்டுக்கு வந்திருந்தது!) எடுத்துக்கொண்டு மீண்டும் ரேஷன் ஆபீஸ் வந்தேன். மணி 12:30.

மீண்டும் நுழைவுப் போராட்டம். ஏகப்பட்ட கியூக்கள். இடமே இல்லாததால், எல்லாருமே நெருக்கியடித்து நின்றுகொண்டு இருக்க, எது மனு கொடுக்கும் க்யூ, எது முகவரி மாற்றும் க்யூ, எது ரிசல்ட் தெரிந்துகொள்ளும் க்யூ என்று வித்தியாசமில்லாமல் ஒரே கும்பல் போலத்தான் தெரிந்தது என் கண்ணுக்கு. அங்கே மணிக் கணக்காக நின்று பழகியவர்களுக்கு மட்டும்தான் எது எந்தக் க்யூ என்று இனம் காண முடிந்தது.

நான் மனு கொடுக்க வந்திருக்கிறேன் என்று தெரிந்து, இன்ன க்யூ என்று சொன்னார்கள். அது நேர் வரிசையாக இல்லாமல், இஷ்டத்துக்கு வளைந்து வளைந்து பாம்பு மாதிரி இருந்தது. போதாக்குறைக்கு குறுக்கேயும் நெடுக்கேயும் (வேறு வழியில்லாமல்) செல்கிறவர்களால் வரிசை அவ்வப்போது எறும்புக்கூட்டம் மாதிரிச் சிதறிச் சிதறி, மீண்டும் ஒன்றிணைந்துகொண்டு இருந்தது.

மதியம் 1:30 மணிக்கு கூப்பனையும் ரேஷன் கார்டையும் கொடுத்தேன். வாங்கி முத்திரையிட்டு, வேறு ஒரு கூப்பன் தந்து, பத்து நாள் கழித்து வரும்படி சொன்னார்கள்.

பத்து நாள் கழித்துப் போனபோதும், இதே அவதிகள்தான். ஆனால், அனுபவம் காரணமாக, இந்த முறை எந்த க்யூவில் நிற்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. காலையில் 10 மணிக்கு நின்றவன், 12:30-க்கு கவுன்ட்டரை நெருங்கினேன்.

அவரும் ஒரு கூப்பன் தந்தார். “கான்சல் பண்ணியாச்சு! இதைக் கொண்டு போய் சைதாப்பேட்டை ஆபீஸ்ல கொடுத்து முகவரி மாத்திக்குங்க!” என்றார்.

அன்றைக்கே போக முடியவில்லை. இரண்டு நாள் கழித்துப் போனேன். இந்த முறையும் ரேஷன் ஆபீசில் யாரும் முகவரி சொல்லி உதவவில்லை. சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் விசாரித்ததில், ஆட்டோக்காரர் ஒருவர் சொன்னார்.

தி. நகர் ஆபீசுக்குக் கொஞ்சமும் சளைக்காமல், அதைப் பிரதியெடுத்த மாதிரிதான் இருந்தது சைதாப்பேட்டை அலுவலகமும், அங்குள்ள பணியாளர்களும்! பெரிய ஹால்; நடுநடுவே கான்க்ரீட் தூண்கள். அந்தத் தூண்களுக்கு இடையில் பழைய கால மர பீரோக்கள் அடைத்துக்கொண்டிருக்க, சுவர்களுக்குப் பதிலாக அவையே ஹாலை பல அறைகளாகத் தடுத்தாட்கொண்டிருந்தன.

மீண்டும் நீளமான வரிசையில் நின்றேன். நீளமான க்யூவில் நிற்கவேண்டுமே என்கிற கடுப்பில்தான் திருப்பதி வேங்கடாசலபதி போன்ற காஸ்ட்லி சாமிகளைத் தேடி நான் போவது இல்லை. அதே போல், சினிமா பார்க்கும் ஆசை நிறைந்த சின்ன வயதிலும்கூட தியேட்டர் க்யூவில் நின்றது இல்லை. இங்கே விதியே என்று நின்றேன்.

இரண்டு மணி நேரம் நின்ற பிறகு, கவுன்ட்டரை நெருங்கி, தி. நகர் கான்சலேஷன் கூப்பனையும் ரேஷன் கார்டையும் நீட்டினேன். (மறந்துவிட்டேனே, அட்ரஸ் புரூஃப் இங்கேயும் கேட்டார்கள். முன்யோசனையாக எதற்கும் இருக்கட்டும் என்று, இந்த முறை வாடகை ஒப்பந்த பத்திரத்தின் ஜெராக்ஸை எடுத்துப் போயிருந்தேன்.) இங்கேயும் ஒரு கூப்பன் கொடுத்து, பத்து நாள் கழித்து வரச் சொன்னார்கள்.

அதே போல் பத்து நாள் கழித்துப் போய், கால் கடுக்க இரண்டு மணி நேரம் நின்று, (கவனிக்க: நான்காவது முறையாக, ரேஷன் கடை வரிசையில் இரண்டு மணி நேரம் நிற்கிறேன்.) அவர்கள் தந்த இன்னொரு கூப்பனையும் ரேஷன் கார்டையும் வாங்கி வந்தேன். அந்த கூப்பனைக் கடையில் கொடுத்துப் பதிந்து கொள்ள வேண்டுமாம்.

வீட்டு வாசலில் ஒரு ரேஷன் கடை உள்ளது. அங்கே போய் இந்த கூப்பனை நீட்டினால், “இதுல குறிச்சிருக்கிற கடை எண் இது இல்ல சார்! மேட்டுப்பாளையத்துல வரும்னு நினைக்கிறேன்” என்றார். மேட்டுப்பாளையத்தில் இரண்டு மூன்று கடைகளில் விசாரித்தும், இதில் குறிப்பிட்டிருந்த எண் கொண்ட கடை எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

திரும்பி வந்தேன். முதல் காரியமாக, வாசல் ரேஷன் கடை எண்ணை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டேன். மீண்டும் மறுநாள் சைதாப்பேட்டை அலுவலகத்துக்குப் படையெடுத்தேன்.

மீண்டும்... இதை எழுதும்போதே கால் வலிக்கிற மாதிரி ஓர் உணர்வு!

மணிக் கணக்காகக் காத்திருந்து, கவுன்ட்டரை நெருங்கி, கூப்பனை நீட்டி, “என்ன மேடம்... இப்படியொரு எண் கொண்ட கடையே எங்கே இருக்குன்னு தெரியலையே?” என்றேன். கூப்பனை வாங்கி அப்படியும் இப்படியும் புரட்டி ஏதோ கண்டுபிடித்துவிட்டது போன்ற பாவனையில், என்னவோ திருத்தம் செய்ய இருந்தவரைத் தடுத்து, “எங்கேயாவது போட்டுடாதீங்க. இந்த நம்பர் உள்ள கடைக்கு எழுதிக் கொடுங்க” என்று வாசல் கடை எண்ணை நீட்டினேன்.

ரெஜிஸ்டரில் எழுதிக்கொண்டு, கூப்பனிலும் மாற்றித் தந்தார்.

அதை வாங்கி வந்து, உடனடியாக ரேஷன் கடையில் முகவரி மாற்றிப் பதிந்துகொண்டால்தான் திருப்தியாக இருக்கும்போலிருந்தது.

ஆனால் பாருங்கள், கடைக்காரர் ஒரு வாரம் லீவில் போயிருந்தார். “25-ஆம் தேதிதாங்க வருவாரு. அப்ப வந்து ரெஜிஸ்டர்ல என்ட்ரி போட்டுக்குங்க!” என்று அனுப்பினார், கடையில் பொருள்களை நிறுத்துப் போடுபவர்.

அப்புறம் நாலைந்து தடவை நடையாய் நடந்து, (வாசல் கடை என்பதால் இது ஒரு சௌகரியம்!) ஒருவழியாக 30-ஆம் தேதி அவர் வந்ததும், போய்ப் பதிந்துகொண்டுவிட்டேன்.

இந்தப் புதிய ரேஷன் கடையில் இன்னும் பொருள்கள் வாங்கவில்லை.

இந்த அனுபவத்தில், எனக்குள் எழுந்த சில கேள்விகள்:

1) ரேஷன் ஆபீசில் வேலை செய்கிறவர்களுக்கே கூடவா எந்த ஏரியா, எந்த சர்க்கிளில் வரும் என்று தெரியாமல் இருக்கும்?

2) அனகோண்டா பாம்பு மாதிரி நீள நீள வரிசைகளில் மனிதக் கூட்டம் நிற்பதைப் பார்த்தும் சற்றும் பதற்றமோ பரபரப்போ இல்லாமல் எப்படி இவர்களால் சினிமா கதை, சீரியல் கதை பேசிக்கொண்டு, பஜ்ஜி தின்றுகொண்டு, சாவதானமாக வேலை செய்ய முடிகிறது?

3) சற்றும் சளைக்காமலும், பொறுமை இழக்காமலும், எப்படி ஜனங்களால் மணிக்கணக்காக வரிசையில் நிற்க முடிகிறது?

4) ரேஷன் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று ரேஷன் கடைக்காரர்களுக்குத் தெரியுமா, தெரியாதா? தெரிந்தேதான், அலையட்டுமே இவன் என்று அலைக்கழிக்கிறார்களா? அதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?

5) எனக்குக் கொடுக்கப்பட்ட கூப்பன்களின் எல்லாம் பின்புறத்தில், ஒரே ஏரியாவுக்குள் மாற்ற 3 நாள், ஒரே ஊருக்குள், ஆனால் வேறு ஏரியாவுக்கு முகவரி மாற்ற 1 வாரம், வேறு ஊருக்கு மாற்ற 10 நாள் என்று காலக் கெடு அச்சிட்டிருந்தார்கள். ஆனால், என் ரேஷன் கார்டை அசோக் நகரிலிருந்து மாம்பலம் முகவரிக்கு மாற்றுவதற்கு எனக்கு ஆன நாட்கள், அவர்கள் கூப்பனில் மீண்டும் வரச் சொல்லித் தேத்ஹி குறித்துக் கொடுத்த கணக்குப்படி 20 நாள். எனில், கூப்பனின் பின்பக்கம் அச்சிடப்பட்டுள்ள காலக் கெடு, யார் காதில் பூ சுற்ற?

6) ரேஷன் அட்டைகளை எப்போது கணினிப்படுத்தப்போகிறார்கள்? இன்னுமொரு நூற்றாண்டு ஆகுமோ?

***

எதற்கும் தேவை பொறுமை. வேக வேகமாகப் பல குடங்கள் தண்ணீர் ஊற்றினாலும், ஒரு மரம் அதற்குரிய காலத்தில் வளர்ந்து உயரும்!

13 comments:

Anonymous said...

அரசு அலுவலகங்களின் பிரதிபலிப்பு இது தான்.
நன்றி

ஹுஸைனம்மா said...

அதான் நீங்களே சொலிட்டீங்களே.. //எதற்கும் தேவை பொறுமை.// நம் அரசுத் துறைகள் பொறுமையை பயிற்றுவிக்கும் போதிமரங்கள்!! :-))))))

வெங்கட் நாகராஜ் said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே பொறுமை அதிகம் தான்...

இவர்கள் எல்லாம் இப்படித்தான் பொறுமையை சோதிக்கிறார்கள். என்ன மாற்று வழி என்று யோசிக்க யாரும் முன்வருவதில்லை...

எத்தனை கணினி மயமானாலும் இது போன்ற சில துறைகள் முன்னேற நினைப்பதே இல்லை....

Anonymous said...

same problem,so i cam back without chenaging address.
i don't know how the minster and other officers will change their address.

kannan

முத்து said...

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு சார்..
ஒரு பெரிய பேர் பெற்ற பத்திரிகை குழுமத்தில் பெரிய பொறுப்பில் இருந்தும், அதை அதிகாரிகளிடம் சொல்லாமல் ஒரு சாமானியானாய் கஷ்டப்பட்டு ரேசன் கார்டை மாற்றிக்கொண்டது.. உண்மையிலே கிரேட்தான்.. உங்க கேள்விகள் சிலவற்றில் நியாயம் இல்லையோ என நினைக்கிறேன் சார்.. #.தினம் தினம் கூட்டம்தான்.. அதில் தினமும் டென்சன் ஆக முடியுமோ.. தினமும் இந்த டென்சன்தான்.. அதில் அவர்களின் வேலையை நார்மல் மூடில் பார்ப்பதில் என்ன தவறு?#சற்றும் சளைக்காமலும், பொறுமை இழக்காமலும், எப்படி ஜனங்களால் மணிக்கணக்காக வரிசையில் நிற்க முடிகிறது?# ரேசன் கார்டை ஜஸ்ட் ரெசிடென்ட் ப்ரூப் ஆக மெய்ன்டெய்ன் பன்னுபவர்களும் நிற்கலாம்(பாஸ்போர்ட் எடுக்க பேங்க் அக்கவுண்ட ஓப்பன் செய்ய)..
அந்த ரேசன் அரிசியில் உயிர் வளர்ப்பவர்களும் நிற்கலாம்.. இரு தரப்பினருக்குமே ரேசன் கார்டு முக்கியம்.. பின்னவருக்கு ரொம்பவும் முக்கியம்.. இயலாதவர்கள் பொறுமை இழந்தால் புரட்சியெல்லாம் வராது சார்.. உள்ளதும் போய்விடும்..

அன்புடன் அருணா said...

/சற்றும் பதற்றமோ பரபரப்போ இல்லாமல் எப்படி இவர்களால் சினிமா கதை, சீரியல் கதை பேசிக்கொண்டு, பஜ்ஜி தின்றுகொண்டு, சாவதானமாக வேலை செய்ய முடிகிறது?/

இதென்ன பெரிய விஷயம்?உயிர் போற வலியில் துடித்தாலும் கதை பேசிக்கொண்டு, பஜ்ஜி தின்றுகொண்டு, சாவதானமாக வேலை செய்யும் டாக்டர் நர்ஸ்களையே பார்த்திருக்கேன்...:(

கணேஷ் ராஜா said...

ரேஷன் கடைகள் மட்டுமில்லை ரவி சார், பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படித்தான் மெத்தனமாக வேலை செய்கிறார்கள். மக்கள் எவ்வழி, மந்திரிகள் அவ்வழி!

ரவிஷா said...

//சற்றும் பதற்றமோ பரபரப்போ இல்லாமல் எப்படி இவர்களால் சினிமா கதை, சீரியல் கதை பேசிக்கொண்டு, பஜ்ஜி தின்றுகொண்டு, சாவதானமாக வேலை செய்ய முடிகிறது?//
"மூத்திர நாத்தத்தில்" விட்டுவிட்டீர்களே? பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! பத்திரிக்கை ஆஃபிஸிலிருந்து வருவதை சொல்லாமல் மறைத்து அலையோ அலை என்று அலைந்திருக்கிறீர்கள்! ***** என் முன்நாளைய "பாஸ்" சொல்லுவார்! ஆர்.டி.ஓ. ஆஃபிஸ், கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி, ரேஷன் கடை, இந்த மூன்றிலியேயும் கால் கடுக்க நின்று நம் வேலையை பார்த்துக்கொள்ளுவது என்பது பூர்வ ஜென்ம பாவம் என்பார்!

shanuk2305 said...

i am civil engineer in profession used to shift every 3 year. i easily got ration card while in andhra. but tamilnadu my family particular deleted in native and unable to get new in perambalur. so now i left without ration card and moves out of tamilnadu

பத்மநாபன் said...

இதற்கு அதி முக்கிய காரணம்.. கூடிய மக்கள் தொகையும் ..குடும்ப அட்டையின் அவசியமும் ..கணினிமயம் ஒன்றே தீர்வு..

எனது கதையில் வித்தியாசம்... இந்த நான்கு வருடத்தில் நான்கு முகவரி மாற்றங்கள்.. 1 வட்டமாறுதல் 3 மாவட்ட மாறுதல்கள் எல்லா இடத்திலும் வரிசையில் இருப்பது, டோக்கன் பெறுவது , சொன்ன நாளில் செல்வது, மாற்றம் பெறுவது என தொய்வில்லாமல் சீராக நடை பெற்றதை நினைத்து எனக்கே ஆச்சர்யம் அளித்தது...
மாவட்ட மாறுதலை விட உள்ளூர் கடை மாற்றம் அரசு இயந்திரத்தில் ரொம்ப கடினம் போல் இருக்கிறது....

கிருபாநந்தினி said...

நல்லாருக்கு உங்க பதிவு! ரேஷன் பொருள்களை வாங்கிட்டு ஒரு பதிவு போடுங்க! அப்பத்தான் இந்தச் சுற்று பூர்த்தியாகும்! :)

R.Subramanian@R.S.Mani said...

I know, in a family 2 sons are Computer Engineers and well settled and their mother is a Govt. pensioner and getting about Rs.20,000/- PM as pension; The head of the family is a entereprner; still their ration card is in green colour and therefore the same is eligible for 20 Kgs. of FREE RICE, TV SET, GRINDER, MIXIE, FAN ETC ETC ETC; for which the state and central govt. is paying the price as subsidy; This is the state of affairs, when you are telling about standing in the Q; No body knows how many persons in the "Q" are PATIENTLY waiting for their second or third CARD, Not only the clerks and other workers, the Executives and Bureacrats are not even bothering these things and if the day ends at 5PM they are happy and going to enjopy the evening at a Bar or at CLUB; this is the state of affaire;

R.S. Mani

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரேஷன் கடையில் வேலை பார்க்கும் யாராவது ஒருவர்,பொறுமையாய்..கனிவாய்..பேசுகிறாரென்றால்,அவர் நிச்சயமாய் மஹாவிஷ்ணுவின் பதினோறாம் அவதாரமாய்த் தான் இருக்க வேண்டும்..!!