பாராட்டுகிறார் பாக்கியம் ராமசாமி!

திப்புக்குரிய நகைச்சுவை எழுத்தாளர், பத்திரிகையாளர், நண்பர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்களிடமிருந்து வந்துள்ள கடிதம்...

ன்பார்ந்த நண்பர் திரு.ரவிபிரகாஷுக்கு,

ஆசிகள்.
அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு பிரமுகருக்கு விருது அளித்து கௌரவித்து வருவது உங்களுக்குத் தெரியும். இந்த ஆண்டு, கூடுதலாக ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறு அன்புப் பரிசு வழங்குவதென்று தீர்மானித்தோம்.

சென்ற ஆண்டு பத்திரிகைகளில் அதிகம் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிய ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ரூ.
250 பரிசு வழங்குவதென்று முடிவு செய்தோம். ஆனால், இப்படி ஐந்து பேரைத் தேர்ந்தெடுக்கும் பணி மலைப்புக்குரியதாகி, எங்கள் வலைத் தளம் கவலைத் தளமாக ஆகிவிட்டது. தக்க சமயத்தில் தங்கள் வலைப்பூ வாசகர்கள் மூலம் எங்கள் அறக்கட்டளையின் பிரச்னையை அறவே தீர்த்து வைத்தீர்கள்.

போட்டிக்குரிய
30 நகைச்சுவைத் துணுக்குகளை உங்கள் ‘என் டயரி’ வலைப்பூவில் பிரசுரித்தீர்கள். அவற்றைப் படித்து ஆராய்ந்து, சிறந்த ஐந்தை உங்கள் வலைப்பூ வாசகர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர். இந்த நகைச்சுவைப் பணிக்காக உங்களின் ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்களுக்கு எங்கள் அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை மகிழ்ச்சியையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

வெற்றி பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்களுக்குரிய பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த ஆண்டு, ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி, நகைச்சுவை விருது அளிப்பதென்று அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் அனுப்பியுள்ளேன். நீங்களும், உங்கள் வலைப்பூ வாசகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,

பாக்கியம் ராமசாமி,
அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை.

மேற்படி விழாவில் பரிசு பெறும் ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கலந்துகொண்டு, தங்கள் ரசனைக்கேற்ப முதல் ஐந்து பேரை வரிசைப்படுத்திப் பின்னூட்டம் அனுப்பிய வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி விழா அழைப்பிதழை இங்கே பதிவிட்டுள்ளேன். என் வலைப்பூ வாசகர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன்.

இந்தப் போட்டியில், முதல் ஐந்து பேரை அதிகமான எண்ணிக்கையில் சரியாகக் குறிப்பிட்டு, முதலாவதாகப் பின்னூட்டம் அனுப்பியவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வி.ராஜசேகரன். அவர் உடனே என்னை இ-மெயிலில் தொடர்பு கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து, புகைப்படமும் முகவரியும் அனுப்பியிருந்தார். அவருக்கான புத்தகப் பரிசு (முயற்சி திருவினையாக்கும்) அப்போதே, உடனேயே அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.ராஜசேகரனின் விருப்பத்தின் பேரில் அவரது புகைப்படத்தையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.

அதேபோல், சமீபத்தில் நடத்திய போட்டி, ‘ஏ.எம்.ரவிவர்மா’ என்ற பெயரில் உள்ள சிறப்பு என்ன என்பதாகும். ஆங்கிலத்தில் அந்தப் பெயரை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படித்தால் பெயர் மாறாமல் இருக்கும் பாலிண்ட்ரோம் வகையைச் சேர்ந்த பெயர் அது என்பதே அதன் சிறப்பு. இதைச் சரியாகவும் முதலாவதாகவும் எழுதிய ‘அன்புடன் அருணா’விடமிருந்து நேற்றைய சனிக்கிழமையன்று அவரது முகவரியைத் தெரிவித்து இ-மெயில் கிடைத்தது. அவருக்குரிய புத்தகப் பரிசான ‘ஏடாகூடக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பதிவை முடிக்கும் முன், ஒரு புதிர்...

ஒரு அடுக்கில் பத்து பொற்காசுகள் வீதம், வரிசையாக பத்து அடுக்குகள் உள்ளன. மொத்தம் 100 பொற்காசுகள்.

ஒரே ஒரு அடுக்கைத் தவிர, மற்ற ஒன்பது அடுக்குகளில் உள்ள எல்லா பொற்காசுகளுமே தலா 10 கிராம் எடை கொண்டவை. அந்த ஒரே ஒரு அடுக்கில் உள்ள பத்து பொற்காசுகள் மட்டும் தலா 11 கிராம் எடை கொண்டவை.

நீங்கள் தராசை உபயோகித்து ஒரே ஒரு முறைதான் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அதிகமான எடை கொண்ட பொற்காசுகள் உள்ள அடுக்கு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சவாலுக்குத் தயாரா?

உடனே உங்கள் விடைகளைப் பின்னூட்டமாக அனுப்புங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு எனது ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

***
உன்னிப்பாகக் கவனியுங்கள்... வாய்ப்பு எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும்!

21 comments:

Anonymous said...

ஒவ்வோர் அடுக்கிலிருந்தும் 1, 2, 3, 4 எனப் பொற்காசுகளை எடுத்து மொத்தமாக ஒரே ஒருமுறை எடைபோடவேண்டியது, மொத்தம் 1 + 2 + 3 + 4 ... +10 = 55 * 10 = 550 கிராம் இருக்கவேண்டும், அதற்கு ஒரு கிராம் கூடுதலாக இருந்தால், முதல் வரிசைதான் 11 கிராம் காசுகளைக் கொண்டது, 2 கிராம் கூடுதலாக இருந்தால், 2வது வரிசை & so on :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

Anonymous said...

You have 100 coins, that is 10 in each batch. Now, weigh all 10 batches in one shot, total weight must be 101. Now start removing by 1 batch at a time and subtract the weight from the total weight accordingly. When the weight reduces by 11 gms, that’s the batch which contains the coins.

Enna correcta ?

- Sri

Anonymous said...

எந்த மாதிரி தராசு என்பதை சொல்லவில்லையே.. - கமலா

Anonymous said...

புதிர் விடை ஒவ்வொரு அடுக்கிற்கும் ஒரு வரிசை எண் கொடுத்து விட வேண்டும். பிறகு முதல் அடுக்கிலிருந்து ஒரு காசு, இரண்டாவது அடுக்கிலிருந்து 2 காசு, மூன்றவது அடுக்கிலிருந்து 3 காசு, நான்காவது அடுக்கிலிருந்து 4 காசு, ஐந்தாவது அடுக்கிலிருந்து 5 காசு, ஆறாவது அடுக்கிலிருந்து 6 காசு, ஏழாவது அடுக்கிலிருந்து 7 காசு, எட்டாவது அடுக்கிலிருந்து 7 காசு, எட்டாவது அடுக்கிலிருந்து 8 காசு, ஒன்பதாவது அடுக்கிலிருந்து 9 காசு, பத்தாவது அடுக்கிலிருந்து 10 காசு என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இப்போது நம்மிடம் 55 காசுகள் இருக்கும். எல்லாம் 10 கிராம் எடை காசுகளாக இருந்தால் மொத்த எடை (55 x 10) 550 கிராம். ஆனால் ஒரு அடுக்கில் 11 கிராம் காசுகள் இருப்பதால் அதன் எடை 551 முதல் 560 வரை ஏதாவது ஓர் எடை இருக்கும். 511-ஆக இருந்தால் ஒன்றாம் அடுக்கில் உள்ள காசு எடை அதிகம். 552-ஆக இருந்தால் 2-ம் அடுக்கில் உள்ள காசு ( இதிலிருந்துதானே 2 காசுகள் எடுத்து இருக்கிறோம்?) எடை அதிகம். 553 ஆக இருந்தால் 3-ம் அடுக்கில் உள்ள காசு எடை அதிகம். 554 ஆக இருந்தால் 4-ம் அடுக்கில் உள்ள காசு எடை அதிகம். 555 ஆக இருந்தால் 5-ம் அடுக்கில் உள்ள காசு எடை அதிகம். ....... விடை சரிதானே.. ( விடை சரியாக இருந்தால் புத்தகம் அனுப்பாதீர்கள். ஏதாவது ஒரு அடுக்கு பொற்காசுகளை அனுப்புங்கள்!!! ) -- ஆர்.

கணேஷ் ராஜா said...

என்னங்க... போட்டிகளா வெச்சு அசத்தறீங்க! சரி, உங்க பொற்காசு போட்டிக்கு என் விடை... முதல் அடுக்கிலிருந்து ஒரு பொற்காசு, இரண்டாவது அடுக்கிலிருந்து இரண்டு பொற்காசுகள்... பத்தாவது அடுக்கிலிருந்து பத்து பொற்காசுகள்... இப்படி வரிசையா எல்லா அடுக்கிலிருந்தும் பொற்காசுகள் எடுத்து (மொத்தம் 55 பொற்காசுகள் வரும்) மொத்தமா எடை போட்டுப் பார்க்கணும். எல்லா பொற்காசுகளும் தலா 10 கிராம் இருந்தா, மொத்த எடை 550 கிராம் வரும். அப்படி இல்லாமல் 551 கிராம் இருந்தால், முதல் அடுக்கில் உள்ள பொற்காசுகள்தான் எடை அதிகம் உள்ளவை. காரணம், அதிலிருந்துதானே ஒரே ஒரு பொற்காசு எடுத்துள்ளோம்? 552 கிராம் இருந்தால் இரண்டாவது அடுக்கு எடை அதிகம். இப்படியே 559 கிராம் இருந்தால் ஒன்பதாவது அடுக்கு, 560 கிராம் இருந்தால் பத்தாவது அடுக்கு எடை அதிகம் என கண்டுபிடிக்கலாம்.
என்ன... எனக்குப் பொற்காசு பரிசு உண்டா? :) தங்கள் புத்தகப் பரிசை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் அருணா said...

முதல் அடுக்கிலிருந்து முதல் பொற்காசையும் இரண்டாம் அடுக்கிலிருந்து இரண்டாம் பொற்காசையும் மூன்றாம் அடுக்கிலிருந்து மூன்றாம் பொற்காசையும் இவ்வாறு பத்தாவது அடுக்கிலிருந்து பத்தாவது பொற்காசையும் எடுத்து எடை போடவேண்டும்.முதல் அடுக்கில் அந்தப் பொற்காசு இருந்தால் 55.1 gm வரும்(1.1+2+3+4+5+6+7+8+9+10=55.1) இரண்டாவதில் இருந்தால் 55.2 வரும்....இப்படி 56 gm இருந்தால் பத்தாவது அடுக்கு என்றும் கண்டு பிடித்து விடலாம்!!! சரியா??

Killivalavan said...

ஒவ்வொரு அடுக்காக தராசின் இரண்டு தட்டுகளிலும் ஏற்றவும். 1+1, 2+2, 3+3, 4+4, 5+5 என எடை போடவும்.
எடை அதிகமாக உள்ள அடுக்கு உள்ள தராசு தட்டில் வைக்கும்போது ஒரு பக்கம் சாயும்.
அதை வைத்து எந்த அடுக்கு எடை அதிகமுள்ளது என எளிதாக கண்டறிய முடியும்.

Unknown said...

We name all the shelves of gold coins as 1,2,3......upto 10.

Then we put 1 coin from shelf 1, 2 coins from shelf 2,....10 coins from shelf 10 onto the scale. Find the total weight(first total).

Now, the total weight(second total) would have been
10g X(1+2+3+4+5+6+7+8+9+10=55) = 550g
i.e.if all coins have the same weight(10g each).

Subtract this (second total) weight from the first total weight.

If the answer results in 1 g, then shelf No.1 has the higher weight of coins, if the answer results in 2g, then its shelf No. 2, if answer results in 3g, then its shelf No.3, etc.

This way we can find out the shelf containing 11g gold coin!!!

கே. பி. ஜனா... said...

முதல் அடுக்கிலிருந்து ஒரு காசு, இரண்டாவது அடுக்கிலிருந்து இரண்டு காசு, மூன்றாவதிலிருந்து மூன்று என எடுத்து அவற்றை தராசில் ஒரே முறை எடை போடவும். நூற்றுக்கு எத்தனை கிராம் அதிகம் இருக்கிறதோ அத்தனையாவது அடுக்கில் இருப்பவை தாம் பதினோரு கிராம் எடையுள்ளவை.

ராமுடு said...

திரு ரவி அவர்களே,

எனது விடை : முதல் தட்டில் இருந்து ஒரு காசு, இரண்டாம் தட்டில் இருந்து இரண்டு காசு,.. இது மாதிரி பத்து தட்டில் இருந்தும் காசு எடுத்து எடை அளந்தால், எடையின் அளவு 10 gm கூடுதலாக இருந்தால் முதல் தட்டும், 20gm இருந்தால் இரண்டாம் தட்டு என கண்டுபிடிக்கலாம்.. இதனை தவிர வேறு வழிகள் இருக்கலாம்...

நன்றி.. - ஸ்ரீராம்

ராமுடு said...

திரு ரவி அவர்களே,

எனது விடை : முதல் தட்டில் இருந்து ஒரு காசு, இரண்டாம் தட்டில் இருந்து இரண்டு காசு,.. இது மாதிரி பத்து தட்டில் இருந்தும் காசு எடுத்து எடை அளந்தால், எடையின் அளவு 11 gm கூடுதலாக இருந்தால் முதல் தட்டும், 22gm இருந்தால் இரண்டாம் தட்டு என கண்டுபிடிக்கலாம்.. இதனை தவிர வேறு வழிகள் இருக்கலாம்...

நன்றி.. - ஸ்ரீராம்

Unknown said...

You need to divide them into two groups 1-5 and 6-10. Then, from each group pick 1, 2, 3, 4, 5 coins
respectively from each stack i.e., from the first stack pick 1 coin, from the second stack pick 2 coins etc. You will have two sets each containing 15 coins. Put each set in each side of the balance. One set will be heavier. The heavy side will indicate which of the two sets (1-5 or 6-10) contains the heavier(11gm) coins. The weight difference (displayed in the balance) will indicate the stack that contains the heavy coins(11gm) within the set. If it is the 6-10 set that is heavier, and if the difference in weights is 2, then it is the 7th stack that contains heavier coins.

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு.......வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

ஏடாகூடக் கதைகள் புத்தகம் வந்து சேர்ந்து விட்டது!!!நன்றியோ நன்றி!படித்து விட்டுக் கண்டிப்பாகக் கருத்தும் தெரிவிப்பேன்.மீண்டும் ந்ன்றி!

ungalrasigan.blogspot.com said...

பின்னூட்டம் இட்ட அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! பெங்களூரைச் சேர்ந்த எழுத்தாளரும், பதிவரும், நண்பருமான திரு. என்.சொக்கன் அவர்கள் சரியான விடையை முதலாவதாக எழுதியுள்ளார். அவருக்கு உடனடியாக எனது ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.
சரியான விடை எழுதிய அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!

Anonymous said...

ஹும்.. நண்பர் என்பதால் அவருக்குப் பரிசு.
எனக்குப் பரிசு தரவில்லை.. . போகட்டும் போட்டிதான் முடிந்து விட்டதே.. அந்த பொற்கசுகள் இனிமேல் தேவை இல்லையே. அதையாவது ‘இந்தா தொலை’ என்று சொல்லி எனக்கு அனுப்பி வைக்கிறது!-- ஆர்

ungalrasigan.blogspot.com said...

அன்புள்ள திரு. ரவிபிரகாஷ் அவர்களுக்கு,

நலம். நாடலும் அதுவே.

உங்கள் வலைத்தளத்தில் அறிவித்திருந்த போட்டியில் என்னுடைய பின்னூட்டம்
முதலாவதாகத் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி.

ஒரே ஒரு விண்ணப்பம். என்னிடம் ஏற்கெனவே உங்களுடைய ‘தரையில்
நட்சத்திரங்கள்’ புத்தகம் உள்ளது, வாசித்தும் முடித்துவிட்டேன் - ஒரு
புதிருக்கு விடை சொல்கிற மகிழ்ச்சியில்தான் உங்களுடைய போட்டியில்
கலந்துகொண்டேன், முதலாவதாக என் பின்னூட்டம் வரும் என்று நான் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை,

ஆகவே, இந்தப் புத்தகத்தைப் புதிதாகப் படிக்கக்கூடிய இன்னொருவருக்கு
இந்தப் பரிசு சென்றால் பலன் உடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தயவுசெய்து தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். உங்கள் அன்புக்கு மிகவும்
நன்றி!

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

ungalrasigan.blogspot.com said...

நண்பர் சொக்கனின் சமீபத்திய பின்னூட்டத்தின்பேரில், அவருக்கு அடுத்தபடியாகச் சரியான விடையை முதலாவதாக எழுதியுள்ள திரு.ஆர் (நாலாவது பின்னூட்டம்) அவர்களுக்கு மேற்படி புத்தகத்தைப் பரிசாக அனுப்பிவைக்க விழைகிறேன். அவருக்குப் புத்தகம் தேவையில்லை, பொற்காசுகள்தான் தேவை எனும் பட்சத்தில் அடுத்து வரும் திரு.கணேஷ் ராஜாவுக்கு மேற்படி புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

பத்மநாபன் said...

புதிரான புதிர்..விடை சொன்னவர்கள் பாராட்டுக்குரியவர்கள்..டிஜிட்டல் யுகத்தில், இரண்டு தட்டு தராசையே நினைத்து விடையை நெருங்க முடியவில்லை. சொக்கன் அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது..

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Anonymous said...

அன்புள்ள ரவி அவர்களுக்கு, உன்கள் பின்னூட்டததை பாக்கத்தவறி விட்டேன். புத்தகத்தை ராஜாவிற்கு அனுப்பிவிட்டீர்கள்....இதற்கு மேல் எழுத முடியவில்லை..- ஆர்.