“சார், ஒரு தகவல் வேணும். உங்க ஆனந்த விகடன்ல ரெண்டு வாரத்துக்கு முன்னே ‘இடைவெளி’ன்னு ஒரு சிறுகதை வந்ததே, அதை எழுதிய ‘உஷா சுப்ரமணியன்’, பழைய ரைட்டர் உஷா சுப்ரமணியன்தானா?” என்று கேட்டார்.
“அவரேதான்!” என்றேன். “தேங்க்ஸ் சார்! ஒரு சின்ன சந்தேகம் இருந்துது. அதைக் கிளியர் பண்ணிக்கிறதுக்காகத்தான் கேட்டேன்” என்று சொல்லி, மொபைலை அணைத்து விட்டார்.
அவரது சந்தேகத்துக்கான காரணம் எனக்கு உடனே விளங்கிவிட்டது.
உஷா சுப்ரமணியன் முப்பது வருடங்களுக்கு மேலாகச் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். அவருக்கு வயது இப்போது 60-க்கு மேலிருக்கலாம் என்று யூகிக்கிறேன். அடிக்கடி அவரோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
“இ-மெயிலில் ஒரு கதையை அனுப்புகிறேன். படித்துவிட்டு உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள்” என்பார். ஆனால், இ-மெயிலில் கதை வராது. சில மாத இடைவெளிக்குப் பின்பு, மீண்டும் போனில் விசாரிப்பார், கதை எப்படி இருந்தது என்று. அதற்குள் அது எனக்கு மறந்தே போயிருக்கும். “கதை எதுவும் வரவில்லையே மேடம்” என்பேன். இப்படியே இரண்டு மூன்று தடவை நடந்தது.
சென்ற மாதம் மீண்டும் அதுபோல் என்னை மொபைலில் தொடர்புகொண்டு, “இடைவெளின்னு ஒரு கதை அனுப்பியிருக்கிறேன். ஆனந்த விகடன்ல பிரசுரிக்கிறீங்களோ இல்லையோ, படிச்சுட்டு உங்க அபிப்ராயத்தைச் சொல்லுங்க” என்றார். எனது ஜி-மெயில் முகவரிக்கு வந்த அந்தக் கதையை உடனே படித்தேன்.
கதையின் கருவும், நடையும் அத்தனை இளமையாக இருந்தன. டயலாக்குகள் இன்றைய இளைஞர்களை அப்படியே கண் முன் நிறுத்தின. இதை எழுதிய உஷா சுப்ரமணியன் அந்தப் பழைய எழுத்தாளர் உஷா சுப்ரமணியன்தானா, அல்லது அதே பெயரில் இன்றைய இளம் எழுத்தாளர் யாரேனும் எழுதுகிறாரா என்று ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது. காலத்தால் தேங்கிப் போய்விடாமல், தன்னைப் புதுப்பித்துக்கொண்டு எழுதியவர் சுஜாதா அவர்கள். அதே போல் தன்னையும் நிரூபித்திருந்தார் உஷா, இந்த ‘இடைவெளி’ கதையில்.
உடனே, உஷா சுப்ரமணியனுக்கு போன் செய்து, கதையை வெகுவாகப் பாராட்டி, அதில் வரிக்கு வரி மிளிர்ந்த இளமையை ரசித்து, என் வியப்பையும் வெளிப்படுத்தி, விரைவிலேயே இந்தக் கதை விகடனில் வெளியாகும் என்று சொன்னேன்.
மேற்படி கதை, 7.4.10 விகடன் இதழில் வெளியாயிற்று. அதைப் படித்து ரசித்த தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன், அது பற்றி இன்றைய தினமணியில் ‘தமிழ்மணி’ பகுதியில், ‘இந்த வாரம்’ பகுதியில் சிலாகித்து எழுதியிருக்கிறார்.
‘கடந்த 20 ஆண்டுகளாக உஷா சுப்ரமணியன் எழுதும் சிறுகதைகளையும் தொடர் கதைகளையும் படித்து வருபவன் நான். எந்த ஒரு படைப்பாளிக்கும் எழுத்தில் வேகமும் ஆழமும் குறைவது இயல்பு. ஆனால், இவர் இன்றைய தலைமுறையினரின் மன ஓட்டத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கிறது’ என்றெல்லாம் பாராட்டியவர் இறுதி வரியில் முத்தாய்ப்பாக,
‘தலைமுறை இடைவெளி தனி மனிதர்களுக்குத்தான். கற்பனைக் குதிரையில் சவாரி செய்யும் எழுத்தாளருக்குக் கிடையாது. இதை நிரூபிக்கிறது உஷா சுப்ரமணியனின் ‘இடைவெளி’ சிறுகதை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சரியான விமர்சனம்!
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் என் நண்பர். சாவி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், அங்கே அவர் எனக்கு சீனியர். அரண்மனை ரகசியம், அரசல் புரசல் போன்ற தலைப்புகளில் அரசியல் கிசுகிசுக்கள் எழுதி வந்தார். மேனகா காந்தி நடத்தி வந்த ‘சூர்யா’ பத்திரிகையிலும் பணியாற்றியிருக்கிறார். சஞ்சய் காந்தியோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டிருக்கிறார். சாவியிலிருந்து விலகிய பின்னர், நியூஸ்கிரைப் வைத்தியநாதனாக பல பத்திரிகைகளில், குறிப்பாக துக்ளக்கில் பல அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறை நான் சாவியிடம் கோபித்துக் கொண்டு விலக முனைந்தபோதெல்லாம், ‘ரவி! அவசரப்படாதே! சாவி எவ்ளோ பெரியவர்! அவருக்கு முன்னாடி நாமெல்லாம் தூசி. அவர் கிட்டே திட்டு வாங்குறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்! இங்கேயே இரு. இவர் கிட்டே சேர்ந்தவங்க யாரும் சோடை போனதில்லே. நீயும் பெரிய ஆளா வருவே!’ என்று என்னைச் சமாதானப்படுத்தி, என் குழப்பங்களைப் போக்கி, மீண்டும் பணி செய்ய வைப்பார்.
அவர் சில சினிமாக்களிலும் தலைகாட்டியிருக்கிறார். ‘மாங்குடி மைனர்’ என்ற படத்தில் ரஜினியுடன் மோதும் அடியாட்களில் அவரும் ஒருவர். நடிகை ஸ்ரீதேவி சிறு குழந்தையாக இருந்தபோது, ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவரை தனது பைக்கிலேயே பல மைல் தூரம் அழைத்துப் போயிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன் சின்ன பிள்ளையாக இருந்த காலத்திலிருந்தே அவரது நண்பனாக இருந்தவர். அந்நாளில், அண்ணா நகரில் தான் குடியிருந்த வீட்டில் ஓர் அறை முழுக்க ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களாக அடைத்து வைத்திருந்தார். ஒரு நாள், அவற்றையெல்லாம் பழைய பேப்பர் கடைக்குப் போட்டு, வந்த பணத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
உண்மையில், அதே உஷா சுப்ரமணியன்தானா இவர் என்ற சந்தேகம் வைத்தியநாதனுக்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அச்சுக்குப் போவதற்கு முன்பு தெளிவுபடுத்திக் கொள்ளச் சொல்லித் தன் உதவியாளர்களுக்கு அவர் சொல்லியிருக்க வேண்டும்.
நேற்று மாலையில், சில மணி நேரம் கழித்து மீண்டும் போன் செய்தார் தினமணி ராணி. “அவர் உஷா சுப்ரமணியனா, உஷா சுப்ரமணியமா?” என்று கேட்டார். “உஷா சுப்ரமணியன்தான்” என்று தெளிவுபடுத்தினேன். “ஆமாம், எதற்குக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டதும், மறுநாள் தினமணியில் வெளியாகவிருக்கும் வைத்தியாநாதனின் விமர்சனக் கட்டுரை பற்றிச் சொன்னார். உஷா சுப்ரமணியனின் போட்டோ கிடைக்குமா என்று கேட்டார். உஷாவுக்கே போன் செய்து அனுப்பச் சொல்கிறேன் என்றேன்.
உஷா சுப்ரமணியனுக்கு போன் செய்தேன். விவரத்தைச் சொல்லி, தினமணி நம்பரையும் கொடுத்தேன்.
விகடனில் ‘இடைவெளி’ சிறுகதையைப் படிக்காதவர்களுக்காக அதை எனது அடுத்த பதிவில் தருகிறேன்.
***
முகஸ்துதி செய்; நம்ப மாட்டான். விமர்சனம் செய்; விரும்ப மாட்டான். உற்சாகப்படுத்து; மறக்க மாட்டான்!
முகஸ்துதி செய்; நம்ப மாட்டான். விமர்சனம் செய்; விரும்ப மாட்டான். உற்சாகப்படுத்து; மறக்க மாட்டான்!
4 comments:
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், எழுத்தாளர் உஷா சுப்ரமணியன் இருவரைப் பற்றியும் ஒரு சிறுகதையில் இணைத்துச் சொன்ன விதம் அருமை!
துக்ளக்கைத் தொடர்ந்து படித்து வருபவள் நான். அதில் நியூஸ்கிரைப் வைத்தியநாதன் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அவர்தான் இன்றைய தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் என்பது எனக்குப் புதுத் தகவல்.
உஷா சுப்ரமணியன் கதைகள் படித்திருக்கிறேன். அருமை!!
உஷா சுப்ரமணியனைப் பற்றி எழுத ஆரம்பித்தில், இடையில் வைத்தியநாதனும் நுழைந்து கொள்ளவே யாரைக் குறித்து ஆரம்பித்தீர்களோ அவரை சுத்தமாக மறந்தே போய்விட்டீர்களோ என்று நினைத்தேன். நல்லவேளை, கடைசியில் அங்கே இங்கே சுற்றி ஆரம்பத்திற்கு வந்து விட்டீர்கள். இருந்தாலும் இது வைத்தியநாதனைப் பற்றிய கட்டுரையாகத்தான் அமைந்து விட்டது.
'ஒரு மனிதன் தீவல்ல' கதை உஷா சுப்ரமணியனின் மாஸ்டர் பீஸ்.
பெண் எழுத்தாளர்களில் இவர் முற்றிலும் வேறுபட்டவர்.
விரைவில் அவரைப் பற்றி என் பதிவில் எழுத்தாளர் பகுதியில் எழுதவிருக்கிறேன்.
Post a Comment