விகடன் குடும்பத்தோடு ஒரு சுற்றுலா!

சின்ன வயதில் எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயங்கள் இரண்டு. புதுசு புதுசாக உடைகள் வாங்கி அணிய வேண்டும்; புதுசு புதுசான ஊர்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும்.

அந்த வயதில் இரண்டுமே எனக்கு அளவாகத்தான் கிடைத்தன. என் பேராவலைத் தீர்க்கும் விதமாக இல்லை.

ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும்போது (காணை என்னும் கிராமத்திலிருந்து) பள்ளிச் சுற்றுலாவில் கலந்துகொண்டு சாத்தனூர் டேம் போய் வந்த சுற்றுலாப் பயணம் இன்னமும் எனக்குத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. அதன்பின், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது (விழுப்புரம் மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளி) மீண்டும் பள்ளிச் சுற்றுலாவில் அதே சாத்தனூர் டேம் பயணம். வகுப்பில் பிளெய்ன் கலர் உடையணிந்து, கெடுபிடியாக இருக்கும் எங்கள் கணித ஆசிரியர் திரு.பி.ராஜாப்பிள்ளை, அந்தச் சுற்றுலாவில் ஒரு சினிமா ஹீரோ போல பளீர் பேன்ட்டும், வண்ண மயமான டி-ஷர்ட்டும் அணிந்து, எங்களோடு ரொம்ப ஜாலியாகப் பழகியதை மறக்க முடியாது. விரல்களை மடக்கி வாயில் வைத்து அவர் விசிலடித்ததை முதன்முறையாகப் பார்த்து வியந்தேன்; ரசித்தேன்!

என் இளமை வயதுச் சுற்றுலாப் பயணங்கள் அத்தோடு சரி! பின்னர் நான் சாவியில் வேலைக்குச் சேரும்வரை எந்தச் சுற்றுலாப் பயணமும் எனக்கு வாய்க்கவில்லை.

சாவியிலும் 1991 முதல் 1995 வரையிலான காலங்களில், சாவி சாருடன் இரண்டு முறை பெங்களூர், இரண்டு முறை ஊட்டி, இரண்டு முறை வெலிங்டன் (ஊட்டி) என ஆறேழு தடவை சாவி ஆசிரியர் குழுவோடு சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். கடைசி முறை மட்டும் இன்பச் சுற்றுலா, சாவி பத்திரிகையையே மூடும்படியான துன்பச் சுற்றுலாவாக மாறிவிட்டது.

சுற்றுலா செல்லும் பெருவிருப்பம் என்னுள் அமிழ்ந்து கிடந்ததன் விளைவாகவோ என்னவோ, எனக்குத் திருமணம் ஆன பின்பு, 1994-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். முதல்முறை என் மனைவியை நான் அழைத்துச் சென்றது ஊட்டிக்கு. அப்போது என் மகளுக்கு வயது 8 மாதம்.

அடுத்தது, 1997-ல் என் நான்கு வயது மகளுடனும், இரண்டு வயது மகனுடனும் மீண்டும் அதே ஊட்டிக்கு இரண்டாம் முறையாக மனைவியை அழைத்துச் சென்றேன். அதன்பின், இந்த 12 ஆண்டுகளில் குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளும், சில சூழ்நிலைகள் காரணமாக எனக்கு ரூ.15,000 வரை பண நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு ஆண்டும், ஆக மூன்று ஆண்டுகள் மட்டும் சுற்றுலா போகவில்லை. மீதி 9 முறையும் குடும்பத்தோடு சுற்றுலா சென்று வந்துள்ளேன். ஊட்டிக்கு மூன்று முறையும் (மொத்தமாக 5 முறை), கேரளாவில் திருவனந்தபுரம் (கன்னியாகுமரி), பாலக்காடு, திருச்சூர் என ஒரு முறையும், அதே கேரளாவுக்கு தேனி, கம்பம், குமுளி வழியாக மூணாறுக்கு ஒரு முறையும், பெங்களூர் மற்றும் மைசூர், ஹைதராபாத், கொடைக்கானல், திருவண்ணாமலை மற்றும் சாத்தனூர் எனச் சுற்றுலா போய் வந்திருக்கிறேன்.

இந்த ஆண்டு, மனைவிக்கு ஹெர்னியா ஆபரேஷன் முடிந்து பெட் ரெஸ்ட்டில் இருப்பதால், எங்கும் போக முடியவில்லையே என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில், திடுமென விகடன் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும் திட்டம் உருவாகி, அதில் நானும் கலந்துகொண்டேன்.

விகடன் குழும ஆசிரியர் குழுவினர் மொத்தம் சுமார் 120 பேர், மூன்று சொகுசுப் பேருந்துகளில் மூணாறு சென்று, பத்திரிகை வேலைகளை அறவே மறந்து, இரண்டு நாட்கள் ஜாலியாகக் கழித்துவிட்டு வந்தோம்.

சென்ற 15.4.2010 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் கிளம்பி, விடியற்காலை 6 மணியளவில் உடுமலைப்பேட்டை போய்ச் சேர்ந்தோம். அங்கே ஒரு திருமண மண்டபத்தில் சிறிது நேரம் தங்கி, குளித்து, வேறு உடைக்கு மாறி, டிபன் காபி சாப்பிட்டு, மீண்டும் கிளம்பி, மூணாறு போய்ச் சேர்ந்தபோது மாலை மணி 4. மினர்வா என்கிறஅருமையான ஒரு ஹோட்டலில் அறைகள் எடுத்துத் தங்கினோம்.

அன்று மாலை 5 மணியளவில், அருகில் உள்ள ஒரு பூங்காவுக்குப் போனோம். இரவு 7 மணியளவில் ‘கேம்ப் ஃபயர்’ கொளுத்தி, சுற்றிச் சுற்றி வந்து குத்தாட்டம் போட்டோம். பின்னணியில், லேட்டஸ்ட் தமிழ்ப் பாடல்கள் ஸ்பீக்கர்களில் முழங்கின. 9 மணி வரை, கால்கள் சலித்துப் போகும் வரைக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.பின்னர், ‘சில்வர் டிப்ஸ்’ என்கிற ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு உணவு உண்ணச் சென்றோம். அங்கே ஒவ்வொரு அறைக்கும் ஒரு பிரபல சினிமாப் படத்தின் தலைப்பையே அறையின் பெயராக எழுதி வைத்திருந்தார்கள். மொகல் இ ஆஸம், அசோகா, ஜோதா அக்பர், லகான் போன்ற இந்திப் படங்களின் பெயர்களும், ப்ரீடேட்டர், டெர்மினேட்டர், சிட்டி லைட்ஸ், பைசைக்கிள் தீவ்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களின் பெயர்களும் கண்ணில் பட்டன. தவிர, அந்தந்தப் படங்களின் ஸ்டில்லை அந்தந்த அறைக் கதவுகளில் அழகாகப் பதித்திருந்தார்கள்.

தவிர, ஒவ்வொரு தளத்திலும் காரிடார்களில் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, முகம்மது ரஃபி, கிஷோர் குமார், அசோக் குமார், திலிப் குமார், சுனில் தத், நர்கிஸ் போன்றோரின் பிரமாண்ட படங்கள் சுவர்களில் பதிக்கப்பட்டு, கீழே கறுப்புச் சலவைக் கல்லில் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்பட்டன. ரசனையோடு பார்த்துக்கொண்டே நாலாவது மாடிக்குச் சென்றதும், இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிவிட்டேன்.

என் அபிமான பாடகர் திரு. டி.எம்.சௌந்தர்ராஜனின் பிரமாண்ட படம் வைக்கப்பட்டு, அதன் கீழே அவரைப் பற்றிய குறிப்பு காணப்பட்டது. அங்கே காணப்பட்ட ஒரே தமிழ்ப் பாடகரின் படம் டி.எம்.எஸ்ஸின் படம்தான். சிலிர்த்துப்போன நான் அப்போதே, அந்த நிமிஷமே டி.எம்.எஸ்ஸுடன் செல்போனில் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைத் தெரிவித்தேன். “அப்படியா! சந்தோஷம்... சந்தோஷம்...” என்றவர், கேரளாவில் தனக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாகவும், கேரள தினசரிப் பத்திரிகை ஒன்றில் (அவருக்குப் பெயர் தெரியவில்லை) சில மாதங்களுக்கு முன் ஒரு முழுப்பக்க அளவில் தன்னைப் பற்றிய கட்டுரை வெளிவந்ததாகவும் சொன்னார்.மறுநாள், லக்காம் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தோம்; மாட்டுப்பட்டி டேம் பார்த்தோம்; அதன் அருகில் உள்ள படகுத் துறையில் மோட்டார் தோணிகளோட்டி விளையாடி மகிழ்ந்தோம்.

மாலை 5 மணியளவில் மூணாறை விட்டுக் கிளம்பினோம். உடுமலைப் பேட்டைக்குச் சில கிலோ மீட்டர்கள் முன்னால் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில், இரவு 9 மணியளவில் பஃபே விருந்துண்டோம். பின்பு, அங்கிருந்து கிளம்பி, ஞாயிறு காலை 8 மணியளவில் தகிக்கும் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

மூணாறுக்கு ஏற்கெனவே குடும்பத்தோடு போய் இரண்டு மூன்று நாள் தங்கி, அந்தச் சுகத்தை அனுபவித்துள்ளேன். ஆனால், இந்த முறை அலுவலக நண்பர்களுடன், அதுவும் சுமார் 120 பேருடன் ஆட்டமும் பாட்டமும் கும்மாளமும் கொண்டாட்டமுமாகப் போய் வந்தது வேறு விதமான சுகம்.

இந்த நாட்கள் இனிய நாட்களாக என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும்.

***
வாழ்க்கையின் நோக்கம் அதை அனுபவிப்பதுதான் என்பது, உலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் தெரிந்திருக்கிறது - மனிதனைத் தவிர!

.

5 comments:

Rekha raghavan said...

மூணாருக்கு உடனே போக வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டது தங்கள் பதிவு. ஹூம்! அது இங்கிருக்கும் வரையில் நடக்காது என்பதால் இந்தியா திரும்பிய பின்பு வைத்துகொள்ளலாம் என்று என் ஆவலை தற்காலிகமாக அடக்கிக்கொண்டேன். தங்களின் வர்ணிப்பும் படங்களும் பதிவுக்கு மேலும் அழகூட்டின.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

Chitra said...

வாழ்க்கையின் நோக்கம் அதை அனுபவிப்பதுதான் என்பது, உலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் தெரிந்திருக்கிறது - மனிதனைத் தவிர!


.....தெரியும் சார். தெரிந்து கொண்டே, பலர் கண்டுக்கிறது இல்லை.

அன்புடன் அருணா said...

/புதுசு புதுசான ஊர்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும்./
எனக்கும் கூட இது பிடிக்கும்.

கிருபாநந்தினி said...

மூணாறுக்கே போயிட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்கு! அப்புறங்ணா... நம்ம மூதாதையர்களோட நீங்க போட்டோவுல நடத்திட்டிருக்கீங்களே ஒரு உரையாடல், அதையும் அடுத்த பதிவுல விரிவா போட்டிங்கன்னா சுவாரசியமா இருக்கும்னு நம்புறேன்! :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..ஒரு பத்திரிகை ஆஃபீஸில் வேலைப் பார்பபது என்பது என்ன ஒரு சந்தோஷமான சமாச்சாரம்!என்னைப் போன்றவர்களுக்கு இந்த மூணாறு ஒரு கானல் நீர் தான்!