எனக்கு இந்த ஆர்வம் எப்படி வந்திருக்கும் என்று யோசிக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, வகுப்பில் முதல் ரேங்க் வந்தாலோ அல்லது ஒரு பெரிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து, மனனம் செய்து தப்பில்லாமல் எழுதிக் காண்பித்தாலோ, என்னைப் பாராட்டும் விதமாக அப்பா பரிசு தருவார். அந்தப் பரிசு ஒன்றும் காசு போட்டு வாங்கிக் கொடுக்கும் பொருளாக இருக்காது. ஆனால், மிக சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். அதாவது, அவரே கைப்பட கிருஷ்ணன் படம் அல்லது ஏதேனும் இயற்கைக் காட்சிப் படம், பூக்கள் படம் என வரைந்து, அதற்கு வாட்டர் கலர் கொடுத்து, அழுத்தமான நிறத்தில் பார்டர் வைத்து, ஒழுங்காகக் கத்தரித்து, கொஞ்சம்கூடக் கசங்காமல், மடிக்காமல், மொடமொடவென்று தருவார். அதைப் பார்க்கவே அத்தனை ஆசையாக இருக்கும். அதைப் பரிசாகப் பெற்றதில் ரொம்பப் பெருமையாக இருக்கும்.
அப்பா ஓவியர் அல்ல. அவர் வரைந்து தரும் படம் அப்படியொன்றும் பிரமாதமாக இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், அந்நாளில் அந்தப் பரிசு என்னை ரொம்பவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று கவனத்தோடு படித்தது ஞாபகத்தில் இருக்கிறது.
நான் ஐந்தாவது, ஆறாவது வகுப்பு படிக்கும்போது, அப்பாதான் என் வகுப்பு ஆசிரியர். இந்த ஓவியப் பரிசு எனக்கு மட்டுமல்ல; வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவருக்குமே உண்டு. வகுப்பில் முதலாவதாக வந்த மாணவன், கணிதத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவன், அழகான கையெழுத்தில் வீட்டுப் பாடங்களை எழுதி வந்த மாணவன், புத்தகம் நோட்டுகளைக் கண்டபடி கிழிக்காமல் சுத்தமாக அட்டை போட்டு ஒழுங்காக வைத்திருக்கும் மாணவன்... இப்படிப் பல மாணவர்களுக்கும் அப்பா தன் கைப்பட ஏதேனும் படம் வரைந்து, கலர் செய்து, பரிசாகத் தருவார். அதை ஏதோ ரவிவர்மா ஓவியம் போன்று பொக்கிஷமாக ரொம்ப நாளைக்கு எங்கள் புத்தகத்துக்குள் வைத்திருப்போம்.
பின்னர், நான் விழுப்புரம் மகாத்மாகாந்தி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தபோது, அங்கே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தனி நாடகப் போட்டி எனச் சேர்ந்து, எல்லாவற்றிலும் பரிசு பெற்றிருக்கிறேன். பெரும்பாலும் புத்தகப் பரிசுகள்தான்.
ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல் போட்டி என மூன்று போட்டிகளுக்கும் முதல் பரிசு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு முறை என் பெயர் மைக்கில் அறிவிக்கப்படும்போதும் ஓடிப்போய் மேடை ஏறி, பெருந்தலைவர் கையால் பரிசு பெற்றுக்கொண்டு என் இடத்துக்கு வந்து அமர்ந்து கொள்வேன். இரண்டு முறை அடுத்தடுத்து நான் அழைக்கப்படவும், “தம்பி! இருந்து மொத்தமா எல்லாத்தையும் வாங்கிட்டுப் போயிடுண்ணேன்!” என்று காமராஜ் அவர்கள் புன்சிரிப்போடு கூறியது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவர் என் தோளில் கை போட்ட அந்த ஸ்பரிச உணர்வை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
அன்றைக்குக் காமராஜ் பற்றிப் பெருமைகொள்ளும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது. ஒரு பெரிய மனிதர் கையால் பரிசு வாங்குகிறோம் என்கிற பெருமித உணர்வு மட்டுமே! இப்போது போல் போட்டோ வசதிகள் அதிகம் இல்லாத காலம் அது. எனவே, என் நினைவுகளில் மட்டுமே அந்தக் காட்சிகள் புகைப்படமாகப் பதிந்துள்ளன.
காமராஜ் கையால் நான் பரிசாகப் பெற்றவை அனைத்தும் பாரதியார் கவிதைகள், திருக்குறள், குழந்தைப் பாடல்கள், காந்தியின் வாழ்வில் போன்ற புத்தகங்கள்தான். எப்படிக் காமராஜரின் மதிப்பு எனக்கு அன்றைக்குத் தெரியவில்லையோ, அப்படிப் புத்தகங்களின் மதிப்பும் தெரியாதிருந்த வயது. மறுபடி மறுபடி புத்தகம்தான் பரிசா, வேற எதுவும் டிபன் பாக்ஸ், ஜாமெண்ட்ரி பாக்ஸ்னு கொடுக்கக் கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன். அந்தப் பரிசுப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் தங்க நிறத்தில் பார்டர் இட்ட ஒரு சதுரச் சீட்டு ஒட்டப்பட்டிருக்கும். தலைப்பில், மகாத்மாகாந்தி மேல்நிலைப் பள்ளி என்று கொட்டை எழுத்தில் போட்டு, இன்ன மாணவன், இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட முதல் பரிசு என்று அச்சடித்திருக்கும். கீழே பரிசு வழங்கியவர் திரு. கு.காமராஜ், விழாத் தலைவர் என்று போட்டு, காமராஜரின் கையொப்பம் இருக்கும். அந்தப் புத்தகங்களை நான் ரொம்பக் காலம் பத்திரமாக வைத்திருந்தேன். சமீபத்தில் 2000-வது ஆண்டில், சாலிகிராமத்தில் புது ஃப்ளாட் வாங்கிக் குடியேறியபோது, அங்கே அலமாரியில் என்னிடமிருந்த புத்தகங்களையெல்லாம் லைப்ரரி போன்று அடுக்கி வைத்தேன். எறும்பு மருந்து, நாப்தலின் உருண்டைகள் என பாதுகாப்பாக வைத்திருந்தபோதிலும், எப்படியோ அலமாரி மொத்தமும் கரையான் குடியேறி, அத்தனைப் புத்தகங்களையும் (கிட்டத்தட்ட 200 புத்தகங்கள்) சில்லுச் சில்லாக அரித்துத் தள்ளிவிட்டது. அவற்றில், காமராஜ் கையால் பரிசாகப் பெற்ற மூன்று புத்தகங்களும் அடக்கம். காமராஜ் கையெழுத்திட்டிருந்த அந்த சதுரச் சீட்டுகூடத் தேறவில்லை. துக்கம் தாளாமல் அனைத்தையும் அள்ளிக்கொண்டு போய், தெருமுக்குக் குப்பைத் தொட்டியை நிரப்பிவிட்டு வந்தேன்.
1984, 85-ல் நான் விழுப்புரத்துக்கு அருகில் உள்ள காணை என்கிற கிராமத்தில், டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி வந்தேன். அங்கே என்னிடம் தட்டச்சு பயின்ற மாணவர்களுக்குப் போட்டி வைத்துப் பரிசுகள் வழங்கியிருக்கிறேன். டைப்ரைட்டர் ரிப்பேர் சம்பந்தமாக நான் சென்னை வந்த சமயத்தில், சென்னைக் கடற்கரை ஸ்டேஷனுக்கு வெளியே இருக்கும் பர்மா பஜாரில் டிஜிட்டல் வாட்ச்கள் விற்றுக்கொண்டு இருந்ததைக் கண்டேன். ஒவ்வொன்றும் தங்க நிறத்தில் பளபளவென்று மின்னின. நான் டிஜிட்டல் வாட்சைப் பார்ப்பது அதுதான் முதல் முறை. ஆசையாக இருந்தது. சும்மா விலை விசாரித்துப் பார்ப்போமே என்று கேட்டதில், நான் எதிர்பார்த்ததற்கும் மலிவாக 90 ரூபாய் என்றார்கள். ஆனால், அன்றைக்கு எனக்கு அந்தத் தொகையே மிக அதிகம். எனவே, வேண்டாம் என்று நான் நகர முற்பட, தடுத்து நிறுத்தி, “என்ன விலைதான் கேக்கறே?” என்றார்கள். தப்பித்தால் போதும் என்று, “30 ரூபாய்” என்றேன். “சரி, எத்தினி வோணும்?” என்றார்கள். நிஜமாகவே தலா 30 ரூபாய் வீதம், ஐந்து வாட்ச்களை வாங்கிக்கொண்டு போனேன்.
என் இன்ஸ்டிடியூட்டின் அறிவிப்புப் பலகையில், இங்கே தட்டச்சு சிறப்பாகப் பயின்று, தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு தலா ஒரு வாட்ச் பரிசு அளிக்கப்போவதாக எழுதி வைத்திருந்தேன். அத்தனை மாணவர்களுக்கும் ஆச்சரியம்! என்னிடம் படித்ததே மொத்தம் 20 மாணவ, மாணவிகள்தான்! அவர்களில் ஐந்து பேர் மட்டும் சிறப்பாகப் பயின்று, தேர்வுக்குத் தயாரானார்கள். அவர்கள் ஐவருக்கும் தலா ஒரு வாட்ச் பரிசளித்தேன். டிஜிட்டல் வாட்ச் அவர்களுக்கும் அப்போது புதுசு! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டார்கள். அந்த ஐந்து பேருமே தட்டச்சுத் தேர்விலும் வெற்றி பெற்றார்கள். அதோடு இன்ஸ்டிடியூட்டை இழுத்து மூடிவிட்டுச் சென்னை வந்துவிட்டேன்.
அங்கே இங்கே பல இடங்களில் சின்னச் சின்ன வேலைகள் செய்து, பின்பு சாவி வார இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். சாவி சார் அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுகள் தந்து ஊக்குவிப்பார். ஒவ்வொரு ஆயுத பூஜையன்றும் தன்னிடம் பணிபுரிபவர்கள் பெயர்களையெல்லாம் எழுதிக் குலுக்கிப்போட்டு எடுத்து, தலா 100 ரூபாய் தருவார். எனக்கும் ஒருமுறை அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.
ஒருமுறை, சாவி வார இதழில் ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ என ஒன்று நடத்தினோம். அதற்கு வந்த சிறுகதைகளையெல்லாம் தேர்வு செய்து, வாரம் ஒன்றாக, மொத்தம் 60 கதைகளை வெளியிட்டேன். பின்பு, அவற்றிலிருந்து 15 கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து (60 கதைகளையும் படிக்க அவகாசம் இருக்காது என்பதால்) நடுவர்களிடம் தந்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தரச் சொன்னேன். நடுவர்கள்: சுஜாதா, சிவசங்கரி, வைரமுத்து, இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் கி.வெங்கடசுப்பிரமணியன்.
பரிசுகளை ஸ்பான்சர் செய்தது பாலு ஜுவல்லர்ஸ் நிறுவனம். நாரத கான சபாவில் நடந்த இந்த விழாவில் நான் என் மனைவியோடு போய் பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தேன். திடுமென்று என் பெயரை மைக்கில் அறிவித்தார் வைரமுத்து. எழுந்து ஓடினேன். சர்ப்ரைஸாக சாவி சார் அங்கே மேடையில், இந்தச் சிறுகதைப் போட்டி சிறப்புற நடப்பதற்கு மூல காரணம் நான்தான் என்பதாகப் பாராட்டிப் பேசி, பாலு ஜுவல்லர்ஸ் அதிபர் கையால் வெள்ளிக் குத்துவிளக்கு பரிசளித்தார். இனிய ஆச்சரியம் அது!
விகடனிலும், சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள், அங்கே பணிபுரிபவர்களுக்கு அவ்வப்போது இவ்வித சர்ப்ரைஸ் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவது வழக்கம். ஒருமுறை, திரு.டி.என்.சேஷன் எழுதும் கட்டுரைத் தொடர் விரைவில் ஆரம்பிக்கவிருப்பது குறித்து, விகடனின் கடைசி பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம். என்ன எழுதப் போகிறார் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்காமல், ‘நான் ரெடி... நீங்க ரெடியா?’ என்கிற வார்த்தைகளை மட்டும் போட்டு, கட்டை விரலை உயர்த்திக் காட்டிப் புன்சிரிக்கும் சேஷன் படத்தைப் பெரிதாக வெளியிட்டிருந்தோம்.
அது அச்சுக்குப் போகும் முன் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்த அறிவிப்பு கடைசி பக்கத்தில் இடம்பெறும் என்றால், அதற்கு எதிர்ப்பக்கத்தில், அதாவது பின் அட்டையின் உள்புறத்தில் என்ன விளம்பரம் இடம் பெறப்போகிறது என்று அறிய விரும்பினேன். ஏதேனும் விவகாரமான விளம்பரம் வந்துவிட்டால், வாசகர்கள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துச் சிரிப்புக்கிடமாகிவிடப் போகிறதே என்பது என் கவலை.
நான் பயந்தபடியேதான் ஆனது. உள் அட்டை விளம்பரம் ஒரு காண்டம் விளம்பரம். அதில் கவர்ச்சியாக ஒரு பெண்ணின் படம் இருந்தது. ‘என்ன, நீங்கள் தயாராகிவிட்டீர்களா?’ என்பது போன்று, சேஷன் அறிவிப்போடு பொருந்திப் போகும்படியான ஒரு வாசகமும் அதில் இருந்தது.
கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தி, சேஷன் அறிவிப்பை முதல் பக்கத்துக்கு இடம் மாற்றினோம்.
இது நடந்து பல நாட்களுக்குப் பின்பு, மேற்படி சம்பவத்தை நான் மறந்தே போயிருந்த ஒரு தினத்தில், அப்போது விகடன் இணை ஆசிரியராக இருந்த மதன் சார் என்னை அழைத்தார். போனேன். அவர் கையில் ஒரு கவர். அதை என்னிடம் கொடுத்தார். “என்ன சார்?” என்றேன். “வாங்கிப் பிரிச்சுத்தான் பாருங்களேன்!” என்று புன்னகைத்தார். பிரித்துப் பார்த்தேன். 500 ரூபாய்க்கு ஒரு செக்கும், சேர்மன் (அப்போது விகடன் ஆசிரியர்) பாலு சார் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதமும் இருந்தது.
“தக்க சமயத்தில் தங்களின் சமயோசித புத்தியால், விகடனுக்கு நேரவிருந்த ஒரு தர்மசங்கடத்தைத் தவிர்த்ததற்கு நன்றி! அதற்கு என்னுடைய சிறு அன்பளிப்பாக இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பிரிண்ட் செய்து, அடியில் கையெழுத்திட்டிருந்தார் ஆசிரியர் பாலு சார். 500 ரூபாய் என்பது அப்போது கணிசமான தொகை. என் சம்பளமே அப்போது 2,500 ரூபாய்தான்! குபீரென்று உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி பிறந்தது. என்றாலும், அதை மதன் சாரிடமே திருப்பிக் கொடுத்து, “நன்றி சார்! ஆனால், இது என்னுடைய டியூட்டிதான். இதுக்குத் தனியா பணம் வாங்கிக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கலை” என்றேன்.
அவர் வாங்க மறுத்துவிட்டார். பின்பு, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களிடமே அதை எடுத்துப் போய்த் திருப்பிக் கொடுத்தேன். “செய்யும் வேலையை முடிந்தவரையில் சிறப்பாகச் செய்ய வேண்டியது
என் கடமை. அதற்கு இதுபோல் தனியாக அன்பளிப்பு வாங்க விரும்பவில்லை” என்றேன். அதற்கு ஆசிரியர், “வேலையில் பிரத்யேக ஈடுபாடு காட்டிச் செயல்படுகிறவர்களுக்கு என் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கும் விதமாக இப்படி அன்பளிப்பு கொடுப்பது வழக்கம்தான். என்னுடைய மகிழ்ச்சிக்காக இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்திக் கொடுத்தார்.
மொத்தத்தில், பரிசு கொடுப்பதும் பெறுவதும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. அந்த மகிழ்ச்சி, பரிசுப் பொருள் என்ன விலை என்பதில் இல்லை. அதைக் கொடுப்பவரும் பெறுபவரும் எத்தகைய மன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
***
சந்தோஷத்தை வாங்க முயற்சி செய்யாதீர்கள். அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள். அது சுலபம்!
சந்தோஷத்தை வாங்க முயற்சி செய்யாதீர்கள். அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள். அது சுலபம்!
11 comments:
பகிர்வுக்கு நன்றி.
நான் பள்ளியில் படிக்கும் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் மாணவர்களுக்கு ரேங்க் கார்டு தரும் போது எல்லோரையும் கை தட்ட சொல்லி பாரட்டுவாங்க. அதுக்காகவே நாங்க அதிக முற்சியெடுத்து படிப்பேன். பள்ளி நாட்களில் அந்த பாரட்ட நான் ஒரு முறைதான் வாங்கினேன். அன்றைக்கு அந்த தட்டல் எனக்கு கொடுத்த மகிழ்ச்சி இப்போ அத நினைத்துப்பார்க்கும் போதும் கிடைக்கின்றது.
Dear Ravi Prakash,
Rewarding people with books is the very correct and appreciable deed. Even if the book is already read by the receipient, he can donate one to another person and enjoy the happiness.
It is really nice to read about your school days and also about Srimaans Saavi, Madhan, Balasubramanyan who all have encouraged you for your good works and dedication. This article should inspire all young people in all fields - not limiting to journalism. Keep writing.
Regards,
R. Jagannathan
உங்கள் அப்பாவை பற்றி படித்த போது, நெகிழ்ந்தேன். அவரை போல நல்ல ஆசிரியர்கள் உருவாக்கிய அறிவு செல்வங்கள் எத்தனை பேர்கள்!
இறுதியில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நல்ல இடுகை.
அருமையான நடை. அழகான பகிர்வு.
இந்த பதிவிற்கே உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கணும்.
சபாஷ்.. பாராட்டுகள்.
- பி.எஸ்.ஆர்
பதிவிற்கு ஒரு பூங்கொத்து!
/சந்தோஷத்தை வாங்க முயற்சி செய்யாதீர்கள். அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள். அது சுலபம்!/
இதற்கு ஒரு பூங்கொத்து!
சிறந்த நல்லாசிரியர் விருது வாங்குவதற்கான தகுதி உங்கள் தந்தைக்கு இருந்திருக்கிறது. அவருக்கு என் பணிவான வணக்கங்களைச் சொல்லவும். உங்கள் அனுபவப் பதிவுகளிலிருந்து நாங்கள் பல பாடங்களைக் கற்க முடிகிறது, சார்!
நல்ல விஷயம் சார். நன்றி.
பரிசு என்பதே சிறப்பு. அதிலும் புத்தகப் பரிசு என்பது உய்ர் சிறப்பானது
காமராஜர் முதல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரை நினைவுகளைப் பதிந்தது மனதி்ல் நின்றது. நன்று.
இந்தப் பதிவின் மூலம் பரிசுக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டீர்கள்!
இந்தப் பதிவின் மூலம் பரிசுக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டீர்கள்!
Post a Comment