மனித நேயத்துக்கு ஒரு ‘பாலம்’!

‘பாலம்’ கல்யாணசுந்தரம் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர். நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர். அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர். பின்னர் ஒரு ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இவர் விகடன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். பல்வேறு அலுவல்கள் காரணமாக இவர் விகடன் அலுவலகத்துக்கு ஏற்கெனவே பலமுறை வந்து போயிருக்கிறார். என்றாலும், எனக்கு இவரோடு பேசிப் பழகும் பாக்கியம் கிடைத்தது, சமீபத்திய இவரது வருகையின்போதுதான்!

இவரைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்பே, எங்கள் சேர்மன் திரு. எஸ்.பாலசுப்ரமணியன் வாராந்திர ஆசிரியர் குழுக் கூட்டத்தில் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கல்யாணசுந்தரம் செய்து வரும் சேவைகள் பற்றிச் செய்தி வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்துமாறு விகடன் சேர்மனிடம் ஒருவர் வந்து பரிந்துரை செய்தாராம். “இப்படி சிபாரிசோடு வரும் யாரைப் பற்றியும் விகடன் எழுதாது. ஆனால், நீங்கள் சொல்கிற நபர் உண்மையிலேயே சிறந்த சமூக சேவகராக இருந்து, பல நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறவராக இருந்தால், விகடனே தேடிப் போய் அவரைப் பற்றிய விஷயங்களைச் சேகரித்து, நிச்சயம் அவரைப் பெருமைப்படுத்தி எழுதும். விகடனுக்கு யார், எவர் என்கிற பேதம் எதுவும் இல்லை” என்று சொல்லி, வந்தவரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம்.

அதன்பின் பல ஆண்டுகள் கழிந்தன. இந்தச் சம்பவம் முற்றாக மறந்துபோன நிலை.

கல்யாணசுந்தரம் செய்து வரும் சேவைகள் பற்றிக் கேள்விப்பட்டு, விகடன் ஒரு நிருபரை அனுப்பி, அவரைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, அருமையான கட்டுரையை வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்தியது. அதன்பின் சில நாட்கள் கழித்து, மெலிந்த தேகமுடைய ஒருவர் விகடன் அலுவலகத்துக்கு வந்து, சேர்மனைச் சந்தித்து, கட்டுரை வெளியிட்டது குறித்துத் தன் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டாராம். “இப்போது எந்தச் சிபாரிசும் இல்லாமல்தானே அவரைப் பெருமைப்படுத்தினீர்கள்? அவருடைய சேவையில் தங்களுக்கு முழுத் திருப்திதானே?” என்று கேட்டுப் புன்னகைத்தாராம்.

அவர்தான் கல்யாணசுந்தரம். விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் முதன்முறையாக அப்போதுதான் கல்யாணசுந்தரத்தை நேரில் பார்க்கிறார்.

“என் மீதுள்ள அபிமானத்தால் என்னைப் பற்றி எழுதும்படி வேண்டுகோள் விடுத்து உங்களிடம் வந்து கேட்டுவிட்டார் என் சிநேகிதர். நீங்கள் சொல்லியனுப்பிய பதிலையும் சொன்னார். உங்கள் பதில்தான் என்னை இன்னும் தீவிரமாக சமூக சேவையில் ஈடுபடச் செய்தது. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகவே வந்தேன்” என்று கல்யாணசுந்தரம் சொன்ன பிறகுதான், சேர்மனுக்குப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்ததாம்.

விகடன் சேர்மன் பாலசுப்ரமணியனும், ‘பாலம்’ கல்யாணசுந்தரமும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் கொஞ்ச நஞ்சமல்ல.

சமீபத்தில் கல்யாண சுந்தரத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?” என்று கேட்டேன்.

புன்னகைத்தார். “ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!” என்றார்.

“உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்” என்றேன் நான். சிரித்தார்.

பின்பு பேச்சினூடே, “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?” என்று கேட்டார். “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்” என்றேன். “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது” என்று சிரித்தார். “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!” என்றேன். “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே” என்றவர், “நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!” என்றார்.

வேட்டி 100 ரூபாயும், சட்டை 150 ரூபாயும் இருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும், நான் கொஞ்சம் உஷாராகக் குறைத்தே சொல்லுவோம் என்று, “வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்” என்றேன். “தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்” என்றார்.

“என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்றேன் வியப்போடு.

“உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!” என்று கிழிசல்களைக் காண்பித்தார் கல்யாணசுந்தரம்.

என் கண்களில் நீர் தளும்புவதைக் கட்டுப்படுத்திக்கொள்ள ரொம்பப் பிரயாசைப்பட வேண்டியிருந்தது.

‘பாலம்’ கல்யாணசுந்தரத்தைப் பற்றிய டாகுமெண்ட்டரி படம் ஒன்று தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம், இவரைப் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியாகவிருக்கிறதாம். அந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவதற்கான முழுச் செலவும் யாருடையது என்று நினைக்கிறீர்கள்?

இந்தப் பதிவு எழுதும் நாள் அசந்தர்ப்பமாக ஏப்ரல் முதல் தேதியாக இருப்பதால், நான் சொல்லப்போவது உண்மை, உண்மை என்று நூறு தரம் சத்தியம் செய்து சொல்ல வேண்டியிருக்கிறது.

அவர் வேறு யாருமல்ல, பில்கேட்ஸ்!

***
நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு; நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வது வாழ்வு!
.

23 comments:

Chitra said...

Best wishes! :-)

பத்மநாபன் said...

மனித நேயம் = கல்யாண சுந்தரம். விகடனில் அவர் பற்றி கட்டுரை படித்துள்ளேன். சூப்பர் ஸ்டார் வீட்டில் இருந்தாரா ? புதிய செய்தி.
யார் யாரையோ மகான்,மகான் என்று அழைக்கிறோம். கல்யாண சுந்தரம் போன்றவர்கள் அதன் அர்த்தம் கொண்டு வாழ்கிறார் .. நல்ல மனிதர் பற்றி நல்ல பதிவு.

அமைதி அப்பா said...

//ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை//

இதுதான் உண்மை. இவர் சுகபோகமாக வாழ விரும்பி இருந்தால் அவருக்கு கிடைத்த செல்வத்தை பிறருக்கு அளித்திருக்கமாட்டார்.
ஏழு தலைமுறைக்கு சொத்துச் சேர்க்கும் மனிதர்கள் இவரை போன்றவர்களைப் பற்றி அறிந்திருப்பார்களா?

//இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.//

பிறவிக் குணம் மாறாது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம்.
எனவே ஏற்கனவே இருப்பவர்கள் திருந்த வாய்ப்புக் குறைவு, இனி பிறப்பவர்கள் நல்வர்களாக பிறக்க வேண்டுமாய் ஆசைப்படுவோம்.
நல்ல மனிதரை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.

Kalyani said...

Wow, really a great news. My best wishes to this great man for all the service he is doing to humanity and thanks to you for writing about him.

Jayakumar said...

what a living being!!!

After reading this feeling ashamed of myself!

பாலாஜி சங்கர் said...

பகிர்ந்தமைக்கு நன்றி 
நல்ல பதிவு

வடுவூர் குமார் said...

ஒரு நல்ல மனிதரை பற்றி சொல்லி கவுரபடுத்தியுள்ளீர்கள்.

சித்ரன் said...

திரு.கல்யாணசுந்தரம் போன்றவர்கள் செய்த புண்ணியங்களால்தான் உலகத்தில் நாமும் ஏதோ பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

Bala said...

படிக்கும்போதே கண்களில் நீர் துளிர்த்தது. கல்யாண ராமன், 'டிராபிக்' ராமசாமி போன்றவர்களின் சேவை மிகவும் போற்றத்தக்கது.

அன்புடன் அருணா said...

/இந்தப் பதிவு எழுதும் நாள் அசந்தர்ப்பமாக ஏப்ரல் முதல் தேதியாக இருப்பதால், நான் சொல்லப்போவது உண்மை, உண்மை என்று நூறு தரம் சத்தியம் செய்து சொல்ல வேண்டியிருக்கிறது./

/அவர் வேறு யாருமல்ல, பில்கேட்ஸ்!/
இத்தனை தடவை நீங்கள் சொல்வதால் நம்ப முடிகிறது.பகிர்வுக்கு நன்றி.

R. Jagannathan said...

Ippadiyum Manithargal! Yetho, appappa konjam mazhai thooruvathum ivargalaal thaan. Nandri. - R. Jagannathan

butterfly Surya said...

இவர் பற்றிய பல செய்திகளை படித்திருக்கிறேன்.

பில்கேட்ஸ் மேட்டர் புதுசு.

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

பகிர்விற்கு நன்றி ரவி சார்.

பின்னோக்கி said...

இப்படி ஒருவர் இருக்கிறார் என்ற செய்தி ஏப்ரல் 1ஆம் தேதியினால் நம்ப இயலாத நிலையில் இன்றைய நிலை இருக்கிறது :(

கிருபாநந்தினி said...

திரு.கல்யாணசுந்தரம் பற்றி நான் முன்பே படித்திருக்கிறேன். ரஜினி வீட்டில் அவர் போய்த் தங்கியதைப் பற்றிப் படித்தபோது, திரு.கல்யாணசுந்தரமே சொல்லியிருப்பது போல், ‘ஏழைகளுக்கு உதவுவதாகச் சொல்லிக்கொண்டு இவரென்ன ரஜினி வீட்டில் போய் ஹாயாகத் தங்கிவிட்டார்’ என்று நான்கூட நினைத்தேன். பெரியவர் கல்யாணசுந்தரம் ரஜினி வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும், அங்கிருந்து வெளியேறியது பற்றியும் தங்கள் பதிவில் படித்தபோது, அவர் மீதிருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டது.

ungalrasigan.blogspot.com said...

சித்ரா, பத்மநாபன் இருவருக்கும் நன்றி!

அமைதிஅப்பா! தாங்கள் புதிய வரவென்று நினைக்கிறேன். தங்களின் வரவுக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் என் நன்றி!

நன்றி கல்யாணி!

ungalrasigan.blogspot.com said...

ஜெயக்குமார்! உங்களின் பின்னூட்டம் எங்கள் விகடன் அலுவலக ரிசப்ஷனிஸ்ட்டின் வார்த்தைகளை நினைவூட்டியது. திரு.கல்யாணசுந்தரமும் நானும் பேசிக்கொண்டு இருந்ததையெல்லாம் ஒரு வார்த்தை விடாமல் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு, அவர் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றபின்பு, அந்த லேடி ரிசப்ஷனிஸ்ட் என்னிடம், “சார்! இன்னா மனுசன் சார் அவரு! ரெண்டு ரூபாய்க்கு வேட்டி, மூணு ரூபாய்க்கு சட்டை வாங்கிப் போட்டுக்குவேன்றாரே! சே..! (இது பிரமிப்பில் எழுந்த சே!) இவருக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணுமேயில்ல சார்! இவர் பேசினதைக் கேட்டு அப்படியே மெர்ஸலாயிட்டன் சார்!” என்று சிலிர்த்தார்.

ungalrasigan.blogspot.com said...

நன்றி பாலாஜி!

நன்றி வடுவூர் குமார்!

நன்றி சித்ரன்!

ungalrasigan.blogspot.com said...

நன்றி பாலா!

நன்றி அருணா!

நன்றி ஜெகந்நாதன்!

நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா!

ungalrasigan.blogspot.com said...

நன்றி பின்னோக்கி! இந்தக் காலத்திலும் இப்படியும் ஒருவர் இருக்கிறார் என்கிற செய்தி நம்ப முடியாததாக இருப்பது இயல்புதான்!

நன்றி கிருபாநந்தினி! உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கிற இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு முனிவர் மீது பெரும் பக்தி கொண்டு, அவரைத் தன் அரண்மனையில் கொண்டு வைத்துக் கொள்ள விரும்பி அழைத்தான் ஒரு மன்னன். அவரும் சரியென்று மன்னனின் தேரில் ஏறிக் கொண்டார். அவரின் கையில் இரண்டு செங்கற்கள் இருப்பதைப் பார்த்துப் புரியாமல் குழம்பி, ‘இவை எதற்கு?’ என்று கேட்டான் மன்னன். ‘நான் வழக்கமாக இதில்தான் தலைவைத்துப் படுத்துக் கொள்வேன். உன் அரண்மனையில் இந்த சவுகரியம் எனக்குக் கிடைக்குமோ, கிடைக்காதோ!’ என்றாராம் முனிவர்.

அத்தகைய ஒரு துறவிதான் திரு.கல்யாணசுந்தரம்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஐயா அவர்களைப்பற்றி விகடனில் முன்பே படித்திருந்தாலும் விரிவான உங்கள் பதிவு பயனுள்ள பதிவு

Rekha raghavan said...

ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரை பற்றிய உங்களின் பதிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

Rasigan said...

SUPER..

Manivannan K

சஞ்சயன் said...

உங்கள் பதிவை இன்று தான் பார்க்கிறேன். மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது.

பெரியவர் கல்யாண சுந்தரம் போன்றவர்களின் வாழ்க்கைக்கும், பெரும் அரசியல்வாதிகளின் வாழ்க்கைக்கும் இடையில் தான் எத்தனை வித்தியாசம். எனக்கென்னமோ பெரியவர் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு ஏதோ செய்தி சொல்கிறார் போலிருக்கிறது.
முடிந்தால் எனது பதிவுலகம் பார்த்துப் போங்கள். நன்றி.
http://visaran.blogspot.com/