இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தவிர, மற்ற அனைவருமே ஒரே ஒரு பாடலையாவது சரியாகக் குறிப்பிட்டிருந்தார்கள். எனவே, கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, விடை தெரியும் வரை காத்திருக்கவேண்டாம்; உடனடியாக எனக்குத் தங்கள் முகவரிகளை இ-மெயில் செய்யுங்கள் என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அடுத்து மார்ச் 8-ம் தேதியன்று எழுதிய பதிவில் யார், யார் எத்தனைப் பாடல்களைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு எழுதி, சுமார் 20 பேரிடமிருந்து முகவரிகள் வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இன்னமும் சிலரிடமிருந்து அவர்களின் அஞ்சல் முகவரிகள் எனக்கு வந்து சேரவில்லை. மற்றபடி, முகவரிகள் அனுப்பிய அனைவருக்கும் இன்றைக்கு அவரவர்களுக்கு உரிய பரிசுப் புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டேன். இத்துடன் ‘ரசிகன்’ போட்டி தொடர்பான புத்தகப் பரிசுகள் அனுப்புவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படுகிறது. இனிமேல் யாரும் தங்கள் அஞ்சல் முகவரிகளை எனக்கு இ-மெயில் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்; புத்தகப் பரிசு பெற்றோர் பட்டியலில் அவர்களின் பெயர் இருந்தாலும்கூட!
மன்னிக்கவும்! என் மீது தவறில்லை. குறிப்பிட்ட ‘ரசிகன்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானதற்கு மறுநாளே, பரிசு பெற்றோர் அத்தனை பேருக்கும் புத்தகப் பரிசுகள் அனுப்பி வைக்க வேண்டும் என்றுதான் நான் ஆர்வப்பட்டேன். ஆனால், பலர் தங்கள் முகவரிகளைத் தெரிவிக்கவில்லை. எனவேதான், முகவரிகள் அனுப்பாதவர்களையும் அனுப்பும்படி கேட்டு எழுதி மறுநாள் ஒரு பதிவிட்டுவிட்டு, ஆறு நாட்கள் காத்திருந்து, இன்று காலை வரை வந்து சேர்ந்த அத்தனை முகவரிகளுக்கும் பரிசுப் புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டேன். இனி, இது முடிந்துபோன விஷயம். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு புத்தகப் பரிசு பெற்று, ஆனால் தங்கள் முகவரியை இதுவரை அனுப்பி வைக்காதவர்கள் இனிமேல் அனுப்ப வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் பணி நெருக்கடியில் உதிரி உதிரியாக, துண்டுத் துண்டாகப் புத்தகங்களை அனுப்பி வைப்பது என்பது இயலாது.
க.நா.சாந்தி லெட்சுமணன் தனது அந்தமான் முகவரியைத் தந்திருக்கிறார். முகவரி அனுப்பியவர்களில் இவருக்கு மட்டும்தான் பரிசுப் புத்தகங்கள் அனுப்பவில்லை. வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் இந்திய முகவரியைத் தரும்படி கேட்டிருந்தேன். சாந்தி லெட்சுமணன் தனது இந்திய முகவரியைத் தந்தால், வரும் திங்களன்று அவருக்குரிய இரண்டு புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். இரண்டு புத்தகங்களை அந்தமானுக்கு அனுப்ப ஆகிற செலவு புத்தக விலைக்கு நிகராக ஆகிவிட்டால், அதைவிட அபத்தம் வேறு இருக்காதே என்றுதான் யோசிக்கிறேன். கூரியர் செலவு அந்தமானுக்கு அப்படியொன்றும் அதிகம் இல்லையெனில், கட்டாயம் வருகிற புதன்கிழமைக்குள் அவருக்குரிய புத்தகங்களும் அனுப்பி வைக்கப்படும்.
ஆக... ‘ரசிகன்’ போட்டி இத்துடன் மங்களகரமாக நிறைவுற்றது. இனி வேறு ஒரு பதிவில், வேறு ஒரு போட்டி!
***
எழுத்தாளர் திரு. பாக்கியம் ராமசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். வேறென்ன... ‘சக்தி விகடனி’ல் அவரையும் எழுத வைக்க எண்ணம்தான்!
ஏற்கெனவே தொலைபேசியில் அவருடன் பேசி, இரண்டு கட்டுரைகளை வாங்கிவிட்டேன். ஆக, சக்தி விகடனின் கடைசிப் பக்க கலகலப்புக்கு அவர் உத்தரவாதம்! எனினும், மரியாதை நிமித்தமாக இன்று அவரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்.
பாக்கியம் ராமசாமியை (இயற்பெயர் ஜ.ரா.சுந்தரேசன்) எனக்கு இருபது வருடங்களாகப் பழக்கம் உண்டு. சாவி சார் கடைசி முறையாக 1995-ல் ‘சாவி’ ஆசிரியர் குழுவினரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றபோது, பா.ரா-வும் உடன் வந்தார். ஆசிரியர் குழு என்றதும், பத்துப் பதினைந்து பேர் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். பணியாற்றுபவர்கள் என்று பார்த்தால், சாவி இதழ் பொறுப்பாசிரியராகிய நான், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் மோகன் (இவர் ஓவியர் ஜெயராஜின் அக்கா மகன்) ஆகிய இருவர்தான். தவிர, ஃப்ரீலான்ஸராக சாவியில் கார்ட்டூன்கள் வரைந்துகொண்டு இருந்த மதிக்குமார் (இன்றைய தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி) மற்றும் பல ஆண்டுகளாக சாவி சாரின் வலக்கரமாகத் திகழ்ந்து வந்த ராணிமைந்தன் இவர்களோடு அந்த முறை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியும் எங்களோடு வந்தார்.
சாவி சார் ஆண்டுக்கு மூன்று முறை இப்படி எங்களை ஊட்டி, குன்னூர், வெலிங்டன், பெங்களூர் என அழைத்துச் செல்வார். சாவி பத்திரிகையில் என்னென்ன பகுதிகள் கொண்டு வரலாம், என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாற்போலவும் ஆச்சு; எங்களுக்கு ஒரு டூர் புரொகிராம் மாதிரியும் ஆச்சு! 1995-ல் அப்படிப் போனபோதுதான் சாவி சார் பெங்களூரில் என் மேல் கடுங்கோபத்துக்கு ஆளாகி, “சாவி பத்திரிகையை நான் இங்கேயே, இந்த க்ஷணமே நிறுத்தறேன். யாரும் என் கண் முன்னே நிக்க வேணாம். ஓடிப் போங்க” என்று சீறி விழுந்தார். அதோடு நிஜமாகவே சாவி பத்திரிகை மூடப்பட்டது. அது பெரிய கதை!
நான் பின்னர் விகடனில் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருவேங்கடம் என்பவர் (இவர் ஒரு தொழிலதிபர்; ‘ஹலோ’ என்று பிரசாந்தை வைத்து ஒரு திரைப் படம் தயாரித்துள்ளார். சிறந்த எழுத்தாளர். இவரின் நான்கைந்து நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.) சாவி பத்திரிகையை எடுத்து நடத்தினார். சாவி அவர்களே ஆசிரியராக இருந்து அதை நடத்திக் கொடுத்தார். அப்போது சாவி இதழைக் கவனித்துக்கொள்ள சாவி சார் எனக்கு அழைப்பு அனுப்பினார். ஆனால், நான் அவரைப் போய்ப் பார்க்கவே இல்லை.
அவர்மீது எனக்குக் கோபம் எதுவும் இல்லை. போய் அவர் முன் நின்றால், மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போன்று அவர் பேச்சுக்குத் தலைசாய்த்து, அவரோடு மீண்டும் சேர்ந்துவிடுவேன். இது என் பலவீனம். ஆனால், நான் விகடன் என்னும் விருட்சத்தின் நிழலில் இடம் கிடைத்து ஒதுங்கியிருந்ததால், மேற்படி நிலையைத் தவிர்க்க விரும்பியே அவர் அழைத்தும் போகாமல் இருந்தேன். விகடனில் ஒருவாறு காலூன்றி, சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியத்தின் அன்புக்குப் பாத்திரமாகி, ஆறு மாத காலத்தில் நிரந்தர ஊழியனாக மாறிய பின்னர்தான் மீண்டும் முதன்முறையாக சாவி அவர்களை, அவரது சதாபிகேஷத்தின்போது நேரில் சந்தித்துப் பேசினேன்.
சரி, விஷயத்திற்கு வருகிறேன். பாக்கியம் ராமசாமியை இன்று சந்தித்தபோது, இந்தப் பழைய கதைகளையெல்லாம் வெகு சுவாரசியமாகப் பேசிக்கொண்டு இருந்தோம். தவிர, திருவேங்கடம் பொறுப்பில் ‘சாவி’ இதழ் வந்தபோது, ஆசிரியர் சாவியுடன் பணியாற்றியுள்ளார் பாக்கியம் ராமசாமி. அந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். திரு. பா.ரா-வுடன் பேசுவதே ஒரு சுவாரசியமான அனுபவம். நேரம் போவதே தெரியாது. சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டு இருப்பார். பொதுவாக, சிரிக்கச் சிரிக்க நகைச்சுவையாக எழுதுகிறவர்கள் பலர் நிஜத்தில் கடும் கோபக்காரர்களாகத்தான் இருப்பார்கள் - சாவி சார் போல! ஆனால், பாக்கியம் ராமசாமி அவர்கள் தமது எழுத்தைப் போலவே நிஜத்திலும் மிக ஜாலியான நபர். மிக அந்நியோன்னியமாக, அன்போடு, ஒரு தோழன் போல நமக்குச் சரிசமமாக அவர் ஒரு சில மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தால், நமது கவலைகள், துயரங்கள் யாவும் பறந்துவிடும். வேறு யோகா, தியானம், ரிலாக்சேஷன் எதுவும் நமக்குத் தேவைப்படாது.
‘சாவி’ காலத்திலிருந்து பா.ரா-வைப் பழக்கம் என்றேன். ஆனால், நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே குமுதம் பத்திரிகையில் அவரது அப்புசாமி கதைகளை நான் படித்து ரசித்திருக்கிறேன். ‘ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்’ தொடர்கதையை ஒவ்வொரு வாரமும் படிக்கும்போது சிரித்துச் சிரித்து நிஜமாகவே வயிற்று வலி வந்துவிடும். இந்த நகைச்சுவை மேதையை ஒரு நாள் நேரில் சந்திப்போம், பழகுவோம், அவரின் அன்புக்குப் பாத்திரமாவோம் என்று நான் அப்போது கனவிலும் எண்ணியதில்லை.
‘அப்புசாமி-சீதாப்பாட்டி’ என இரண்டு கேரக்டர்களைப் படைத்து, தமது ஜீவிய எழுத்துக்களால் அவர்களுக்கு உயிரூட்டிய பிரம்மா பாக்கியம் ராமசாமி, அப்புசாமி பெயரிலேயே ஒரு வலைத்தளம் தொடங்கி, சுவாரசியமாக அதில் பதிவிட்டு வருகிறார்.
இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்...
http://www.appusami.com
***
நகைச்சுவை உணர்வு நிரம்பியவர், மென்மையான இலவம்பஞ்சுத் தலையணை போல... அவரும் லேசாக இருப்பார்; அடுத்தவருக்கும் இதமாக இருப்பார்!
நகைச்சுவை உணர்வு நிரம்பியவர், மென்மையான இலவம்பஞ்சுத் தலையணை போல... அவரும் லேசாக இருப்பார்; அடுத்தவருக்கும் இதமாக இருப்பார்!
18 comments:
அட! எனக்குப் பிடிச்ச கேரக்டர்ஸ் அப்புசாமிப் பாட்டியும், சீதாப்பாட்டியும்!
WOW! இந்த பதிவை படிக்கும் போதே, எனக்கு அவரை சந்திக்க ஆவலாய் இருக்கிறதே..........அவரது வலைத்தளத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
Thanks for sending the books Sir. I will let you know when my parents receive it in India. Very interesting write-up about Bhakiyam Ramaswamy Sir. I am a big fan of Appusami/Seetha patti and I am not sure how many times I have read the couple of his books I have. I should get more when I come to India next time. Great to know that he will be writing in Sakthi vikatan.
‘புதுமொழி 500’ புஸ்தகம் கிடைச்சுது. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி சார்!அதைவிட சந்தோஷம் புஸ்தகத்துல என் வலைப்பூ பெயரையும் கொடுத்து, நன்றி சொல்லியிருக்கீங்களே, இதுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை!
பாக்கியம் ராமசாமி கதைகளை நான் நிறையப் படிச்சிருக்கேன். அவரோட கிழக்காப்பிரிக்காவில் அப்புசாமி கதை ரொம்ப சூப்பரா இருக்கும்!
சக்தி விகடனில் அப்புசாமியும் சீதா பாட்டியும் வரப்போகிறார்களா ? பக்தியோடு நகைச்சுவையுமாக . ரசகுண்டு , மாதர்சங்கம் எல்லாம் கூடிவர கொண்டாட்டம் தான் . ஜ. ரா. சு . அவர்களை பற்றிய செய்திகள் வழக்கம் போல் ஒன்றுவிடாமல் தெளிவாக பகிர்ந்துள்ளீர்கள் .
நன்றி... புத்தகங்கள் அனுப்பியதற்கு நன்றி. கிடைத்த தகவல் கிடைத்தவுடன் உங்களுக்கு மின்னஞ்சல்.
Received three books. thankyou sir.
அப்புசாமி சீதா பாட்டியை ரசிக்காத தமிழன் இருக்க முடியுமா ரவி... நல்ல பகிர்வு.. நன்றி
பரிசுப்புத்தகங்கள் கிடைத்தன.
நன்றி! சார்!
புத்தகங்கள் கிடைத்த செய்தி கிடைத்து விட்டது ... அதுவும், குடும்பமே விரும்பி படித்து , சிரித்து, மகிழும் அப்புசாமி கதைகள் .
இரட்டை நன்றிகள் பொருத்தமாக இந்த பதிவின் பின்னூட்டம் மூலமாகவே .....
ஆமாம் அருணா, ஆமாம்! எனக்கும்தான்!
நன்றி சித்ரா!
Thanks Kalyani!
என்னது! கிழக்காப்பிரிக்காவில் அப்புசாமியா? அப்படி ஒரு கதையை நான் கேள்விப்பட்டதே இல்லையே கிருபாநந்தினி! ஒருவேளை, அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் என்பதைத்தான் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டீர்களோ?
பத்மநாபன்! பாக்கியம் ராமசாமிதான் எழுதுகிறார்; ஆனால், அப்புசாமி-சீதாப்பாட்டிக்கு சக்திவிகடனில் என்ன வேலை? பா-ரா கடைசிப் பக்கம் நகைச்சுவையோடு ஆன்மிகத்தையும் கலந்து தரப்போகிறார்!
ஸ்வாமி! புத்தகம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி! உங்களைப்போல் ஒரு சிலரின் ‘புத்தகம் கிடைத்த தகவலை’ மட்டுமே இங்கு பதிந்துள்ளேன். பெரும்பாலும் அனைவருக்குமே புத்தகங்கள் கிடைத்துவிட்டிருக்கும் என நம்புகிறேன்.
நன்றி தேனம்மை லக்ஷ்மணன்!
தகவலுக்கு நன்றி க.நா.சாந்திலெட்சுமணன்! உங்களின் இந்திய முகவரிக்குதான் புத்தகம் அனுப்பியிருந்தேன். அதற்குள் உங்களுக்குத் தகவல் வந்துவிட்டதா?!
நன்றி பத்மநாபன்!
ஆஹா....மறுபடியும் அப்புசாமியும், சீதா பாட்டியுமா... பேஷ்..பேஷ் ...ரொம்ப நல்லாயிருக்கு!!அந்த ‘அப்புசாமியும், ஆயிரத்தோரு இரவுகளும்’ மந்திரி ஜப்பார் இத்தனை வருடங்கள் ஆனாலும் மனதுக்குள் ஒரு மூன்று முறை வணக்கம் செய்து கொண்டு நிற்கிறார்.
அது சரி...அப்புசாமி,சீதாப் பாட்டிக்கு ஜீவன் கொடுத்தவர் ஜ.ரா.அதற்கு ஒரு உருவம் கொடுத்து அசத்தி விட்டாரே ஜெ.....
சின்ன வயதில், என்னை’ இவர்கள் அப்புசாமி..சீதா பாட்டியா...இல்லை...அவர்களா..’என்று தெருவில் போகிறவர்,வருகிறவர்கள் எல்லாரையும் பார்க்கத் தூண்டிய ஜீவ சித்திரங்கள் இல்லையா அவை ?
Dear Mr. Raviprakash,
Thank you so much for sending the book. I just got to know from my mother that the book reached her, and I am doubly happy that I got the book I was wishing for, the Appusami one. I am quite excited and thanks again for conducting such a lively competition, and being so honest and sincere in sending the books on time.
Sincerely,
Kalyani
Dear Sir,
I'm aruna,
I wrote two correct answers and got two books too.I'm so happy about it and I'm so proud that we have still people like you to carry out such competitions on their own expenses....Its really great to know people like you sir.I'm honoured.
thank you for the prizes and one among them is my favourite appusaamy and sita paatti.
thanx again sir,
with rgds,
aruna
நன்றி
அழிக்க முடியாத அப்புசாமி, சீதாபாட்டி என்னும் தலைப்பில் நான் எழுதியது இதோ: http://dondu.blogspot.com/2005/11/blog-post_04.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
என் பருவ வயதின் பாதி நாட்கள் அப்புசாமி கதைகளோடு நகரத்து அந்த நாட்களை மீண்டும் நினைவு படுத்தியது உங்கள் பதிவுகள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் தனிமையில் சிரிக்கிறேன் அதற்க்கு காரணமான உங்களை மகிழ்விக்கவே இந்த கனமில்லா வார்த்தைகளை அனுப்புகிறேன்
Post a Comment